வேலூர் ஜன 7. “ஜாதிக் கொடுமயைõல்,
நாடு படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல; இந்தப் பொது வியாதியை
ஒழித்துக்கட்டுவதில் எங்களோடு ஒத்துழைக்கும்படி நகராட்சி
மன்றங்களை நான் கேட்டுக்கொள்வேன். அவர்கள், மக்களுடன் நெருங்கிய
தொடர்பு பெறும் நிலையிலிருப்பவர்கள் அன்றாடம் நெருங்கிப்
பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள் நீங்கள், இதையும் உங்கள்
கடமையாகக் கொள்ள வேண்டும்” என்று வேலூர் நகராட்சி மன்றம்
வழங்கிய வரவேற்புக்குப் பதிலளித்த தி.மு.கழகப் பொதுச்செயலாளர்
சி.என்.அண்ணாதுரை அவர்கள் வலியுறுத்தினார்.
அலங்காரப் பந்தலில் பொதுச்செயலாளருக்கு நகராட்சி மன்றத்தலைவர்
தோழர் சீதாபதி பி.ஏ.பி.எல். வரவேற்பிதழை வாசித்தளித்து,
மாலை சூட்டினார். விழா துவங்கியதும் நகர சபைத் துணைத்தலைவர்
தோழர் ஸ்ரீராமலு, நகர சபை உறுப்பினர்களைப் பொதுச் செயலாளருக்கு
அறிமுகம் செய்து வைத்தார்.
வரவேற்பைப் பெற்றுக்கொண்டு பொதுச் செயலாளர் கூறியதாவது:
“இதுபோன்ற வரவேற்புகளை வாங்கிப் பழக்கப் பட்டவனல்ல நான்.
ஏனெனில், நகராட்சி மன்றங்கள், சாதாரணமாகப் பொதுப்பணியில்
ஈடுபட்டோருக்கு, வரவேற்புகள் வழங்குவதில்லை. அதற்குப் பதில்,
ஆளும் அமைச்சர்களுக்கே வரவேற்புகள் வழங்கித் தம்முடைய குறைகளைத்
தெரிவிக்கும்.
வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்கள்
“அந்த வரவேற்பைப் பெறும் அமைச்சரும், ‘ஆகட்டும், கவனிக்கிறேன்!’
என்று சொல்லிச் செல்வார். ஆனால், எனக்களிக்கப்பட்ட இந்த
வரவேற்பிலே, நகர மன்றத்தினர் தம்முடைய குறைகளைக் கூறவில்லை;
அதற்குப் பதில் வேலூர் நகர சபையின் சிறப்பையும், அது ஆற்றிவரும்
பணியினையும் குறிப்பிட்டிருப்பதோடு, பொது வாழ்க்கையில்
நான் ஆற்றி வரும் சிலபல பணிகளின் சிறப்பையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“அவ்விதம் அவர்கள் குறிப்பிட்டிருப்பதன் மூலம், நானும் என்
இயக்கமும் செய்துவரும் தொண்டுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கறார்கள்.
இது எனக்குப் புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
“நான், சிறைச்சாலைக்குள் ஒரு காலையும், வீட்டுக்குள் மற்றோர்
காலையும் வைத்துக்கொண்டிருப்பவன். எனக்கு என் கொள்கைகள்
பாராட்டப்பெறும் காட்சியைக் காணும்போது, ‘நாம் செய்வது,
சரி. நமது கொள்கைகள், நிச்சயம் வெற்றிபெறும்’ என்ற ஊக்கத்தை
இந்த வாழ்த்துரை அளிக்கிறது.
இயக்கத்திற்குத் தரப்பட்ட வரவேற்பு
இந்த வரவேற்பு, தனிப்பட்ட முறையில், எனக்குத் தரப்பட்ட ஒன்õக
நான் கருடமாட்டேன். நான் சேர்ந்திருக்கும் இயக்கத்திற்குத்
தரப்பட்டதாகும். அத கொண்டிருக்கும் கொள்கைகளுக்குத் தரப்பட்டதாகும்.
நகர சபைக்கு, நாட்டின் நல்வாழ்வில் பெரும்பங்கு இருக்கிறது.
நகரசபை அனுபவம் பெற்றோரே நாடாள வேண்டும் என்ற கொள்கையை
நான் ஏற்கிறேன். எப்படி ஓர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்ட
பிறகுதான் கல்லூரிக்குச் செல்ல முடிகிறதோ, அதேபோல இதுபோன்ற
நகர மன்றங்களில் பணியாற்றிய பின்னர், நாட்டு நிர்வாகத்தை
ஏற்று நடத்தினால் நிர்வாகம் சீர்பெற்று வளரும். திடீரென்று,
அமைச்சர்களாகிவிடுவதால், பலர்நாட்டு நிர்வாகத்தை ஏற்று நடத்தும்போது
திக்குமுக்காடித் திண்டாடுவதை நமது நாட்டு அரசியல், தெளிவாக
எடுத்துக்காட்டி வருகிறது. ஆகவே, வேலைநகர் ஆட்சி மன்ற உறுப்பினர்கள்
தமது நிர்வாகத்தைக் கூட்டு முறையில் செவ்வனே நடத்திவரும்
செய்தி கேட்டு மகிழ்கிறேன். இந்தத்திறமை, வளர வேண்டுமென
விரும்புகிறேன்.”
காரியங்கள் பல சாதிக்கலாம்
“மக்களின் வாழ்வைச் செப்பனிட்டு அமைப்பதில் நாடாளும் மந்திரிகளை
விட, நகர மன்றத்தினர்களால் பல காரியங்களைச் செய்யமுடியும்.
மந்திரிகள், ஒரு மாகாணம் முழுமையையும் கண்காணிக்க வேண்டியவர்கள்.
ஆனால், நகரமன்ற உறுப்பினர்கள். ஒரு குறிப்பிட்ட சில ஆயிரம்
மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள். இவர்கள்
அடிக்கடி மக்கள் மன்றத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்.
அவ்விதம் தொடர்புகொண்டு, அடிக்கடி பழகவும் வேண்டும். அங்ஙனம்
பழகினால் ஆட்சியாளரால் சாதிக்க முடியாத பல காரியங்களை நீங்கள்
சாதிக்கலாம்.
“உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன் நமது சமுதாயத்தில் தாண்டவமாடும்
ஜாதிக் கொடுமையை ஒழிக்க நீங்கள் முயற்சிக்கலாம். அதற்கு
முதல் நடவடிக்கையால் ஆங்காங்கு கலப்பு மணங்கள் பெருக உதவி
செய்யலாம். கலப்புமணம் பெருகினால், ஜாதிகள் ஒழிய வழி ஏற்படும்.
இவ்விதம் கலப்பு மணம் செய்வதில் பார்ப்பன மக்கள் வழிகாட்டியாக
இருக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் வழிகாட்டுகிறார்கள்
“அன்பர் ஆச்சாரியார், அந்தணர் குலத்துதித்தவர்; வேதகர்மானுஷ்டானங்களை
அனுசரிப்பவர். ஆனால் அவருடை திருக்குமாரியைக் காந்தியாரின்
புதல்வருக்குக் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார். திருமண
ஏற்பாடு செய்யும்போது, ‘அம்மா லட்சுமி! உன் ஆசைப்படி செய்து
கொள்’ என்றாரேயொழிய, வேதம் தடுக்குமா என்றெல்லாம் அவர்
பார்க்கவில்லை.
‘அதேபோல குடந்தைக்கும் பக்கத்திலுள்ள ஊரில் வாழ்ந்த விதவைப்
பெண் ருக்மிமணி, இன்று அருண்டேல் ருக்மிணியாகி, அகில உலக
அரங்கில் மிளிர்கிறார். பாரிஸ்நகரில் அவர் நடனம் ஆட, அதற்கு
சச்சிவோத்தம் சர்.சி.வி.ராமசாமி அய்யர் தலைமை வகிக்க-அதைக்கண்ட
சர்.எஸ்.ராதாகிருஷ்ணன் பாராட்ட ‘இதோ படம், காணீர்!’ என்று
பத்திரிகைகளில் வருகிறது.
“இது எந்த வேதத்துக்கு உடன்பாடு? சாஸ்திரம் ஒத்துக்கொள்ளக்கூடிய
காரியமா? எந்த உபநிஷத்தில் ஆதாரம் காட்ட முடியும்? எனினும்,
அவர்கள் செய்கிறார்கள். ஆனால் நம்மில்தான் கலப்பு மணம் என்றால்
‘அரிவாளைத் தீட்டிக் கொண்டும், ஆகா, விடமாட்டேன்’ என்று
கூவிக்கொண்டும் கிடக்கிறோம். இதனால், நாட்டில் கலப்பு
மணங்கள் செய்துகொள்ளப் பலர் பயப்படுகிறார்கள். இந்தப் பயத்தை,
மக்கள் மத்தியில் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற நகரசபைகள்
போக்கவேண்டும்.
நீங்கள் கௌரவிக்க வேண்டும்
“யாராவது இரு தம்பதிகள் உங்களுக்குப் பக்கத்திலிருந்தாலும்
சரி ஓர் உறுப்பினரின் தொகுதியிலிருந்தாலும் சரி-உங்கள்
நகரில் எந்தப் பாகத்திலிருந்தாலும் சரி கலப்பு மணம் செய்து
கொள்ள விரும்பினால், அவர்கள் அங்ஙனம் செய்து கொள்வதற்கு
வேண்டிய வசதிகளை நீங்கள் செய்து தரவேண்டும். அவர்கள் அங்ஙனம்
செய்து கொண்டால், நகர மன்றத்தின் சார்பில் அவர்களுக்கு
வரவேற்பளித்து, நீங்கள் கௌரவிக்க வேண்டும்.
“அரசியலில் ஆளும் கட்சிக்கு மாற்றுக் கட்சிக்காரனாகிய எனக்கு
இந்த வரவேற்பை அளிக்கும் பண்பை நான் வரவேற்கிறேன். இந்தப்
பண்பு சாதாரணமாக, நம் நாட்டில் காண்பதற்கரியதொன்று, எதிர்க்கட்சிகளை
மாற்றுக் கட்சிக்காரர்கள் உபசரிக்கும் அரசியல் நாகரிகம்,
நமக்கு மிகமிகத் தேவை. எதிர்க்கட்சிகள் என்ன கூறுகின்றன?
என்பதை அறியும் ஆசை, ஒவ்வொருவருக்கும் ஏற்படவேண்டும். அவைகள்
கூறும் கருத்துகளைக் கேட்காமல், எதிர்க்கட்சிகள் என்றாலே
எரிச்சல் கொள்வது வளரும் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
மக்களுக்காகவே கட்சிகள்
“அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன். அணு குண்டினை ஆஸ்திரேலியாவில்
பரிட்சை செய்து பார்த்தது சம்பந்தமாக பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ்
கட்சி அறிக்கையொன்றைத் தயாரித்தது. அந்த அறிக்கை ரகசியம்
ஒன்றைத் தன் கட்சிக்கு வைத்துக்கொண்டது. இன்னொன்றை ராணியாருக்கு
அனுப்பியது. மற்றொன்றை, எதிர்க்கட்சியான அட்லியின் கட்சிக்கு
அனுப்பியது. இவ்விதம் நாட்டின் நன்மை தீமைகளைப் பாதிக்கும்
பிரச்சனைகளில், எல்லாக் கட்சிகளும் ஒத்துப்போக வேண்டும்.
கட்சிகள் யாவும் மக்கள் நன்மைக்காகவே ஒழிய, மாச்சரியத்தை
வளர்த்துக்கொண்டு, தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்காக
அல்ல”
இந்த அரசியல் பண்பை வளர்க்கும் அறிகுறியாக எனக்கு அளித்த
வரவேற்புக்கு என்னுடைய நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
(நம்நாடு - 6.8.54)
|