அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கல்வி வளர

சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தின் இவ்வாண்டு இறுதிச் சொற்பொழிவு 19.2.60 மாலை 5 மணியளவில், பச்சையப்பன் கலை மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்குத் தோழர் கா.வேழவேந்தன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அவர்களும், பேராசிரியர்களும் வந்திருந்தனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், பிற கல்லூரி மாணவர்களும் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். மண்டபத்தில் இடமின்மையால் மக்கள் வெளியில் இருந்தவாறே அண்ணா அவர்களின் கருத்துரையைக் கேட்டனர்.

அண்ணா அவர்கள் பேசியதாவது: ஆண்டுதோறும் என்னுடைய கல்லூரிக்கு வரும் இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டும் முறைப்படி நடப்பது எனக்கு மெத்த மகிழ்ச்சியையும், பெருமையையும் புதிய உற்சாகத்தையும் தருவதாக அமைந்திருக்கிறது. கல்லூரியில் இறுதியாக இன்றைய நிகழ்ச்சி அமைந்திருப்பது உள்ளபடி தமிழ் மன்றத்தினருக்கு மட்டுமல்லாமல் அவர்கள் என்னிடத்தில் வைத்திருக்கும் அன்பைத் தெரிவிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

பச்சையப்பன் பற்றிப் பெருமிதம்
பச்சையப்பன் கல்லூரிக்கு ஆண்டுக்கு ஒருமுறை வருகிற நேரத்தில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் இந்தக் கல்லூரியைப் பற்றி, நான் இக்கல்லூரியில் பயின்ற காலை முதல் அறிவேன் என்ற வகையில் நான் எப்பொழுதும் பெருமிதம் அடைந்து கொண்டு இருப்பதைப் பல பேர் நன்றாக அறிந்திருந்தார்கள். நான் இதிலே பெருமையும் மதிப்பும் வைத்திருப்பதைப் போலவே காரியத்திலே ஈடுபட்டிருப்பதையும் நான் மறைக்க விரும்பவில்லை.

நல்லபடி இந்தக் கல்லூரி எழுச்சியுற வேண்டுமென்று யாரும் நிச்சயமாகக் கருதுவார்கள் என்று நம்புகிறேன். அதற்கு எந்தக் காரணத்தினாலும் ஊறுசெய்ய யாராவது முற்படுவார்களானால், அதுபற்றி வெட்கப்பட வேண்டும். அதைத் தடுக்க முடிந“தால் தடுக்க வேண்டும். இந்தப் பொதுவான காரணங்களை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லுவது பொருத்தமானதும் தேவையானதுமாகும்.
கல்லூரிப் படிப்பு தேவைதானா?
கல்லூரிப் படிப்பு, இன்றைய தினம் விவாதத்திற்குரிய பிரச்சனையாக ஆக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் கல்லூரியில் படித்த நேரத்தில் “உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுவதற்கு இருக்கின்ற கருவி” என்று கல்லூரி கருதப்பட்டு மதிப்பும் தரப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய தினம் கல்லூரிப்படிப்பு தேவைதானா? என்று அறிவாளிகளும், கல்லூரிப் படிப்பால் சமுதாயத்தில் உயர்ந்தவர்களும் பேசுகின்ற விசித்திரமான காட்சியை நாம் காண்கிறோம். இந்த நிலைமை வளருமானால் வருங்காலத்தில் நிச்சயமாக வருந்த வேண்டிவரும்.

பெரும் மதிப்பும், நல்ல அறிவும் கல்லூரிப்படிப்பின் மூலம் வளர வேண்டுமென்று நான் பெரிதும் விரும்புகிறேன். பத்திரிகையில் பார்த்தால் தமிழகத்தில் ஆறு கல்லூரிகள் மூடப்படக்கூடும் என்கிற செய்தி தரப்பட்டிருக்கிறது. அப்படி மூடப்படும் அளவுக்குக் கல்லூரிப் படிப்பு படித்துப் பட்டம் பெற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்களா என்றால் இல்லை. கல்லூரிப்படிப்புப் பெற்றவர்கள் எண்ணிக்கை நாட்டில் மிகவும் குறைவு. ஆகையினால் கல்லூரிப் படிப்புக்கு எதிர் காலத்தில் நல்ல அவசியம் இருக்கிறது என்றாலும், சில பல கல்லூரிகள் அதிலும் குறிப்பாக ஆறு கல்லூரிகள் மூடப்பட வேண்டுமென்று செய்திகள் வருவதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிலை வளராமல் இருக்க வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன். இதற்குப் பச்சையப்பன் அறநிலையத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்திக் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மூடப்படாமல் இருப்பதற்குக் கல்லூரி முதல்வர் அவர்கள் பெரு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நான் இந்த நேரத்தில் வேண்டிக் கேட்டுக் கொள்வேன்.

ஊரெல்லாம் இதே பேச்சு
அறநிலையத்தில் உள்ளவர்களைக் கேட்டுக் கொள்ளாமல் அண்ணாதுரை என்னைக் கேட்டுக் கொள்கிறானே என்று முதல்வர் என்னைக் கேட்கக்கூடும். அதற்குக் காரணம் அவரிடம் இந்தப் பொறுப்பு இருக்கிறது என்பதினாலே சொல்கிறேன்.

நான் பல ஊர்களுக்குச் செல்கையில் அங்குள்ளவர்கள் “உங்கள் ஊரில் கல்லூரி மூடப்படுகிறதா, உங்கள் ஊரில் இருக்கிறவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டார்கள். ஊர் மக்களுடைய மனப்பான்மை இப்படி இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டு அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள்.
பொதுவாக எந்த ஊரிலும் உள்ளவர்கள் கல்லூரிகள் பற்றி அதிகமான அளவுக்கு அக்கறையற்றவர்களாக இருப்பதற்குக் காரணம் வருங்கால வாழ்க்கையில் பிற துறைகளில் பெறுகின்ற வசதியைவிட கல்லூரிக்குப் போகிறவர்கள் அதிகம் பெறாததை அவர்கள் பார்க்கிறார்கள். அதனால் தான் பலர் இப்படி “கல்லூரிப் படிப்பு தேவையில்லை” என்கிற வகையில் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

படித்த மக்களிடத்தில் அக்கறையும் ஆர்வமும் எழவில்லை என்றாலும் கல்லூரி மூடப்படும் என்ற செய்தி பற்றி அந்த ஊரிலே உள்ளவர்கள் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் உள்ளவர்களும் இந்தச் செய்தி உண்மைதானா? ஏன் மூடுகிறார்கள்? என்றெல்லாம் கேட்கின்ற ஆர்வத்தைப் பார்க்கின்ற நேரத்தில், “கல்லூரிப் படிப்புத் தேவை” என்ற எண்ணம் பரவலாகப் பலரிடத்தில் இருக்கிறது என்பதும் நமக்கு நன்றாகத் தெரிகிறது.

கல்வியில் மாறுதல் தேவை
இது இப்படி இருக்கவேண்டும் என்று கருத வேண்டியவர் யார் என்பதையும், கலந்து பேச வேண்டியவர் யார் என்பதையும் நீங்கள் அறியவேண்டும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்று கருதலாம், அதிகாரத்தில் இல்லாதவர்கள் கலந்து தான் பேச வேண்டும் என்று கருதலாம்.

நாம் “கல்வியில் மாறுதல் தேவை” என்பதைச் சொல்லி விட்டு வரலாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்னுடைய காலத்தில் இந்த மாறுதல் இல்லாவிட்டால் நான் அதிகாரத்தில் இருந்து என்ன பயன்? என்று சொல்வார்கள். ஆகையினால் இந்தக் கட்டத்தை உங்களிடத்தில் நான் கலந்து பேச விரும்புகிறேன்.

திருவள்ளுவர் கல்வியைப் பற்றி அழகாக எடுத்துக்காட்டியிருக் கிறார். மற்றவர்கள் அந்த அளவுக்குச் சொல்லவில்லை. “கற்றதனால் ஆய பயனென்கொல்” என்றார் திருவள்ளுவர்.

இப்பொழுது படிப்புக்கும், பரிட்சைக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்று சிலரும், படிப்பு என்பது நிம்மதியாக வாழ்வதற்கே என்று சிலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

கற்றதனாலாய பயனென்?
பத்திரிகையில் ஒரு செய்தியைப் பார்த்தேன். வடக்கே ஒரு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் சரசுவதி பூஜை கொண்டாடினார்கள். அந்த மாணவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு சாரார் சரசுவதி படத்தை யானை மேல் வைத்து ஊர்வலமாகவும் மற்றொரு சாரார் குதிரைமேல் படம் வைத்து ஊர்வலமாகவும் வந்தார்கள். இரண்டு பேரும் எதிர்ப்படும் பொழுது ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு, பிறகு போலீசார் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதாகச் செய்தி தரப்பட்டிருந்து. இதிலே “கற்றதனால் ஆயபயனென்?” என்பது தொனிக்கிறது. ஆகையினால் கல்வியினால் இருக்கின்ற பயன் என்ன என்பதை எண்ணிப் பார்க்க இன்றைய தினம் கூடிக்கலந்து பேசுவது தேவையாக இருக்கிறது. அவரவர்கள் தங்கள் தங்கள் கோணத்திலிருந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் உருவான பலனை மாணவர்கள் பெற முடியாமல் குழப்பம் இருந்து வருகிறது.

இப்பொழுது படிப்பவர்களைப் பார்த்து, “கல்லூரியில் படித்து விட்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்கிறார்கள். அப்படிப் பெற்றோர்களும் நண்பர்களும் கேட்கத்தக்க அளவில் 100க்கு 80 பேர் பட்டம் பெற்றவர்களா என்றால் இல்லை.

கல்லூரிப் படிப்பினால் ஆகும் செலவைத் தாங்கக் கூடிய குடும்பங்களின் எண்ணிக்கையே குறைவு. இன்றைய தினம் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார வசதியுடைய குடும்பத்தினர் அல்ல. நடுத்தரக் குடும்பங்களில் உள்ளவர்கள்தான் இன்றைய தினம் கல்லூரிக்கு வந்திருக்கின்றார்கள். அவர்களிடம் இந்தக் கேள்வி எழுப்பட்டவுடனே அவர்களையும் அறியாமல் “தொழிற்கல்வி படிக்க விரும்புகிறோம்” என்று கூறும் நிலையைக் காண்கிறோம்.

படிப்பதில் நம்பிக்கை இருக்க வேண்டும்
தொழிற் கல்வி படித்தவர்களுக்கும், வேலையில்லை என்ற காலம் வெகு விரைவில் வரக்கூடும். ஆகையினால் எந்த வேலைக்குச் செல்வதானாலும் படித்துவிட்டுச் செல்வதுதான் நன்மை. கார் ஓட்டுபவராகவோ, கணக்காயராகவோ சென்றாலும் படித்துவிட்டுச் செல்வதுதான் நல்லது. ஆகவே, படிப்பு விஷயத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

படிக்காதவர், படித்தவர்களைப் பார்த்து, “இவருக்கு என்ன தெரியும்? இவ்வளவு படித்து என்ன பிரயோசனம்ய நானல்லவா குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்? என்று சொல்வதால் படித்த படிப்பு பயன்படாமல் போகிறது என்பதல்ல.

படிப்பதை ஒரு பண்பாகக் கருதவேண்டும். ஆனால் இன்றைய தினம் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட தலைகீழ்ப் பண்பு நம்மிடத்தில் வளர்ந்திருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு நான் ஒன்று சொல்கிறேன். தலைமை வகித்திருக்கும் மாணவர், “அண்ணாவை பேசும்படி வேண்டுகிறேன்” என்று சொன்னால் பண்பு கெடும். அதேபோல் “அவர்கள் என்னை வேண்டிக் கொண்டதினால் வந்தேன்” என்று நான் சொன்னாலும் பண்புகெடும். அதைப்போல் படிப்பு அறியாதவர்களைப் படித்தவர்கள் கேவலமாகக் கருதுவதும், படிக்காதவர்கள் படித்தவர்களை மதிக்காததும், பாராட்டாததும் இன்றைய தினம் நீங்கி வருகிறது.

படிக்காதவர்களும் நல்ல கருத்தைச் சொல்லலாம்; சிலர் கேட்கலாம், “ஏக முகம்மது நபி” போன்றவர்கள் எந“தக் கல்லூரியில் படித்தார்கள்? என்று அவர்கள் இதில் விதிவிலக்கு நாம் எல்லோரும் அப்படியிருக்க முடியாது.

கட்டடச் செலவைக் குறைக்கலாம்
இப்பொழுது கல்விக்காக ஒதுக்கப்படும் பணம் பெரும் பகுதி கட்டடம் கட்டுவதற்கே செலவாகி விடுகிறது. கட்டடத்திற்குச் செலவிடும் பணம் கொஞ்சம் அதிகம் என்றே நான் சொல்வேன். இதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

எனது வட்டத்திலுள்ள தொழூர் என்ற கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டவேண்டுமென்று துரைத்தனத்தாரிடம் அனுமதி கேட்டேன். அனுமதி நீண்ட நாள் கழித்துத் தந்தார்கள். அதில் துரைத்தனத்தார் ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களாம். மீதம் 800 ரூபாயைக் கிராமத்து மக்கள் போட்டுப் பள்ளிக்கூடம் கட்டிக் கொள்ள வேண்டும் என்றார்கள். அந்தக் கிராமத்தில் 25,30 வீடுகள்தான் இருக்கும். அந்தக் கிராமத்தில் இருப்பவர்கள் வசதியைத் துரைத்தனத்தார் அறிந்திருக்க மாட்டார்கள்.

நான் அந்தக் கிராமத்து மக்களிடம் போனதும் “நாங்கள் ஏன் பள்ளிக்கூடம் கட்டப்பணம் தரவேண்டும்?” என்று என்னைக் கேட்டார்கள். “ஐயா, இப்பொழுது இருக்கும் துரைத்தத்தாரின் சனநாயக முறை அப்படியிருக்கிறது. ஆகவே, நீங்கள் கொடுக்கத்தான் வேண்டும் என்று நான் சொன்னேன். அவர்களும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு பொது இடத்தைக் குறிப்பிட்டு இந்த இடத்தில் கட்டுவதென்று முடிவு செய்யப்பட்டது.

இப்பொழுது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு ஏழாயிரம் ரூபாய்ச் செலவில் பள்ளிக்கூடம் கட்டுவதானால் அனுமதி தருகிறேன். இதில் பாதிப் பணத்தைக் கிராமத்தார் போடவேண்டும் என்று சொல்கிறார்கள். அந்தக் கிராமத்தில் ஏழாயிரம் ரூபாய் செலவு செய்து பள்ளிக்கூடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? இது கல்வி வளருவதற்கு வழியா என்பதைச் சற்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

துரைத்தனத்தார் திருந்துவார்களா?
அரசியல் கட்சிகளை இந்த அரங்கில் நான் இழுக்க வில்லை. அதனால்தான் பொதுவாகத் “துரைத்தனத்தார்” என்று குறிப்பிட்டேன்.

இன்னும் இதிலே இருக்கின்ற வேடிக்கை என“ன வென்றால் பிப்ரவரி திங்கள் எட்டாம் நாள் உத்தரவு கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் இந்தப் பள்ளிக்கூடத்தை மார்ச் 31 ஆம“ தேதிக்குள் கட்டிமுடிக்க வேண்டும். இல்லையேல் துரைத்தனத்தார் பணம் தரமாட்டார்கள் என்பதுதான்.

ஆகையினால் ஆரம்பப் பள்ளிகளுக்குப் போடப்படும் மூலதனச் செலவை எந்த அளவுக்குக் குறைக்க முடியும் என்பதை எண்ணிப் பார்த்து, அந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். இது ஒரு கட்சிக்குரிய கருத்து என்று யாரும் கருத்த தேவையில்லை.

பண்டிதநேரு அவர்கள் சொன்னார்கள், “மரத்தடியில் மாணவர்களை உட்கார வைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு ஆசிரியர்கள் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்று எனவே, ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை மூலதனச் செலவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

ஆசிரியர் நிலை உயர வேண்டும்
ஆனால் ஆசிரியர்கள் வாழ்க்கை நிலை உயர வேண்டும். மனிதன் ஒவ்வொருவனும் நிறைய வசதிகளோடு வாழ வேண்டுமென்று விரும்புவது இயற்கை. இருப்பினும் ஆசிரியர் தொழில் சிறப்பானது.

ஆனால், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர் தொழிலில் ஈடுபடுத்துவதில்லை. ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த வேலையில் ஈடுபடுத்த மாட்டார்கள். காரணம், அந்த வேலையிலுள்ள கஷ்டத்தை அவர்கள் அறிந்திப்பதேயாகும். எனவே வாழ்க்கை நிலை உயரவேண்டும். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நாம் தாய்மொழியில் கல்வி பயில வேண்டும். நாம் இப்பொழுது பிறமொழிகளைக் கலந்து எழுதுவதால் தவறு ஒன்றும் இல்லை. அது காலப் போக்கில் மாறிவிடும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். அந்த வழியில் நீங்கள் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 22.2.60)