அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கதிர் முற்றி அறுவடைக்குக் காத்திருக்கிறது

“நமக்கு இப்போது நல்ல வெற்றிச் சூழ்நிலை எங்கும் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலை பாழ்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வது தான் இருக்கின்ற இரண்டொரு நாட்களில் நமது தோழர்கள் செய்ய வேண்டிய வேலையாகும்.“

கதிர் முற்றி அறுவடைக்குக் காத்திருக்கிறது. இந்த நேரத்தில் வயலுக்குக் காவல்கட்டு இல்லாமலிருந்து விட்டால், காட்டு எலியோ, மேட்டு எலியோ, ஓட்டு எலியோ கதிர் நெல் மணிகளைப் பாழ்படுத்திவிடும்.

“எனவே, சென்னைத் தோழர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். மிகவும் கண்காணிப்பாக இருங்கள். இதுவரை நீங்கள் ஆற்றிய பணிகளையெல்லாம் விட இப்போது கண்காணிப்பாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல், நீங்கள் இதுநாள் வரை பம்பரைம்போல் சுழன்று, தேனைச் சேகரிக்க வண்டுகள் பறந்து தேடுவது போல் பறந்து பறந்து பணியாற்றியிருக்கிறீர்கள்.

நம்பிக்கையோடு பணியாற்றுக!

இப்பணிகளெல்லாம் பயன்தரும் என்று நம்பிக்கையிருக்கிறது. இந்த நம்பிக்கை பாழ்பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை என்று அறிஞர் அணண்ா அவர்கள், நேற்று இரவு சென்னைத் திருவல்லிக்கேணித் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில் சென்னை நகரத் தோழர்கள் அனைவருக்கும் பொதுவான வேண்டுகோளாக விடுத்தார்கள்.

கழகத் தோழர்களே! நீங்கள் இந்த நேரத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்!

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் – உங்கள் உற்சாகம் குறைந்து போகட்டும் என்று – பீதியூட்டக்கூடிய செய்திகளைப் பரப்புவார்கள்! தயவு செய்து நம்பாதீர்கள்!

எந்த இடத்திலும் காங்கிரசு ‘ராஜநடை‘ போட முடியவில்லை.

‘எங்கே நம்மை வீழ்த்திவிடுவார்களோ‘ என்ற அச்சம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது‘.

நமது தோழர்கள் உற்சாகமாகப் பணியாற்றுவதைக் காணும் போது, அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது! வேகத்தைத் தடுத்து, திசை திருப்பிவிட பீதிகளைக் கிளப்பிவிடுவார்கள்!

மரண நிலையில் காங்கிரஸ்!

இறக்கப் போகும் நோயாளி நிலையில் காங்கிரசு இன்று இருக்கிறது.

ஆகவே, இந்த நேரமாகப் பார்த்து அவர்கள், 24ஆம் தேதி தேர்தலில் நம்முடைய உற்சாகத்தைக் குறைக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள்! அவர்களைத் துச்சமாக மதித்து, ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தொடர்ந்து வெற்றிச் சூழ்நிலை உருவாகத் தொண்டாற்றுங்கள்.

(நம்நாடு - 19, 20-2-1962)