அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘கத்திக் குத்து‘ கழகத்தை அழிக்குமா?

குன்னூர் நகரத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் நிதி அளிப்புப் பொதுக்கூட்டம் 14.10.61 அன்று சவகர் திடலில் தோழர் டி.பி.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது.

‘நான் உதகைக்குச் சென்ற சமயம், என்னிடம் கழகத் தோழர்கள், “சென்னையில் இருக்கிற நகராட்சிமன்ற உறுப்பினர் கபாலி காங்கிரசுக்காரர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு, குடல் சரிந்த நிலையில், அவரிடம் மரண வாக்குமூலம் வாங்கப்பட்டதாகச் செய்தி கிடைத்தது“ என்று கூறினார்கள். உடனே நான் கூட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுச் சென்னைக்குத் திரும்ப எண்ணினேன்“.

“இதுபோன்ற செய்கைகளால் கழகத்தை அழித்து விடலாம் என்று எண்ணினால், அது மிகவும் தவறான செயலாகும்.“

“இந்த 14 ஆண்டுகாலக் காங்கிரசு ஆட்சியில் மக்கள்பட்ட துன்பத்தை யாரும் மறந்துவிட முடியாது.“

“காங்கிரசால் பொதுமக்களாகிய உங்களுக்கு நன்மை கிடைத்திருந்தால், வரும் தேர்தலில் காங்கிரசுக்கே நீங்கள் ஓட்டுப் போடுங்கள்.“

கத்திக்குத்தைவிடப் பயங்கரம்

“நாட்டுப் பிரிவினைகோரும் எங்கள்மீது – தாயகத்தை மீட்க எண்ணும் எங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்.“

“மதுரை காங்கிரசு மாநாட்டில் பேசிய நேரு அவர்கள், நம்மைக் கத்தியால் குத்தவில்லையே தவிர, அதைவிடப் பயங்கரமாய்ப் பேசிச் சென்றுள்ளார். “வெளிநாட்டுப் படையெடுப்பு வந்தாலும் சரி – அதைப் பற்றிக் கவலையில்லை. உள்நாட்டுப் பிரிவினையைச் சகிக்க மாட்டேன்‘ என்ற முறையில் கூறியுள்ளார்.

“சட்டசபையில் நான் ஒரு சமயம் அரிசி விலை ஏறிவிட்டததைப் பற்றிக் கூறினேன். அதைக் கேட்ட நிதியமைச்சருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. ‘விலையொன்றும் அதிகமாக இல்லை‘ என்று சொன்னார். பிறகு அவர் மேல்நாடுகளுக்குச் சென்றுவிட்டு வந்தார். திடீரென ஒருநாள் சென்னையிலுள்ள பலசரக்குக் கடைகளுக்குச் சென்று படி அரிசி என்ன விலை என்று விசாரித்தார். கடைக்காரன், அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களை யாரென்று புரிந்து கொள்ளாமல், ‘என்னிடம் இரண்டு வகையான அரிசி இருக்கிறது, முதலாவது மூட்டையிலுள்ள அரிசியைக் சாதமாக்கினால் அதை மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் சாப்பிட வேண்டும். அந்த அரிசியை நீரில் போட்டாலே போதும் தானாகவே கூழாகிவிடும். அதில் எது வேண்டும்? என்று கேட்டார்.

அரிசிவிலை ஏறிவிட்டது.

அமைச்சர் சுப்பிரமணியம், ‘பிறகு வருகிறேன்‘ என்று கூறி வந்து விட்டார். பின்னர், அவர் திடீரென பத்திரிகை நிருபர்களையெல்லாம் அழைத்து, ‘உங்களிடம் நல்ல செய்தியொன்று தருகிறேன் எழுதுங்கள்‘ என்றார். அனைவரும் ‘மேல்நாட்டு விபரங்கள் ஏதேனும் கூறப்போகிறாரோ‘ என்ற ஆவலில் தயாராகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர் சொன்னார், ‘அரிசி விலை ஏறிவிட்டது‘ என்று. நிருபர்களுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. ’10 ஆண்டுக் காலமாக அரிசிவிலை ஏறியிருக்கிறது( இது இப்போதுதான் அமைச்சருக்குத் தெரிந்ததா?‘ என்று அவர்கள் வியந்தனர்.

“கூட்டத்திலுள்ள தாய்மார்களாகிய உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் விலை என்ன? தற்போது என்ன விலைக்கு விற்கிறது? ஆகவே, நீங்கள் நன்றாகச் சிந்தித்து, வரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.“

அது நம்முடைய பணம்

தேர்தலின் போது உங்களிடம் பணத்தைக் கொண்டு வந்து ஓட்டு கேட்க வருவார்கள்( பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்( ஏனென்றால் அது நம்முடைய பணம்( ஆனால் ஓட்டு மட்டும் அவர்களுக்குப் போட்டுவிடாதீர்கள்(“

“நாங்கள் உங்களிடம் ஓட்டு மட்டும் கேட்கவில்லை. அத்துடன் பணமும் கேட்கிறோம். பொதுமக்களாகிய உங்களுக்கும் நாட்டுப்பிரிவினைக்கும் பாடுபடுகின்ற நாங்கள் நீதிமான்களோ, பணக்காரர்களோ அல்ல( தேர்தலின் போது சுவரொட்டிகள் ரூ.5 லட்சம் செலவாகும்( ஆனால் பணம் இல்லையென்று யாரும் தராமல் இருந்துவிடவில்லை. ‘அண்ணா நீங்கள் நேரில் வாருங்கள் தருகிறோம்‘ என்று அழைத்துத் தருகிறார்கள்.

நீண்ட நாளைய விருப்பம்

“தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று நம் மக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைக் காண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய எண்ணம். ஆனால் எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிட்டவில்லை.“

“தேர்தல் நிதிக்கு நீங்களெல்லாம் உங்களால் முடிந்ததை அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நகரத் திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் கே.பி.முருகேசன் அண்ணா அவர்களிடம் தேர்தல் நிதியாக நகரத் தி.மு.கழகத்தின் சார்பில் ரூ.401 அளித்தார்.

கழக உட்கிளைகளின் சார்பில் ர.500 தரப்பட்டது. கூட்டத்தில் சுமார் 5000 பேருக்கு மேல் வந்து கூடியிருந்தார்கள். அண்ணா அவர்க்ளுக்கு ஏராளமான மலர் மாலைகளும், கைத்தறித் துண்டுகளும் அணிவிக்கப்பட்டன.

கூட்டம் மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது( நிகழ்ச்சிகள் அதிகமிருந்ததால் 7.30 மணிக்குத்தான் அண்ணா அவர்கள் வர முடிந்தது. பொது மக்கள் கலையாமல் வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்டப் பொருளார் தேவசகாயம் நன்றி கூறினார்.

(நம்நாடு - 26.10.61)