அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கழகக் கருத்தறிய மாநாடுகளுக்கு வருக...

(சிதம்பரம் தி.மு.க. மாநாட்டிலே, தோழர் அண்ணாதுரை, குன்றக்குடி ஆதீனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூற வேண்டி நேரிட்டபோது கீழ்க்காணும் விளக்கம் தந்தார்)

“நண்பரொருவர் தஞ்சைக் கரந்தைக் கல்லூரியை இதுகாறும் நடத்தி வந்த மடாதிபதி, இனி நடத்த இயலாது என்று கூறி விட்டார் என்ற செய்திகைக் கூறி, அந்தக் கல்லூரியைத் தொடர்ந்து நடத்துமாறு மடாதிபதியை வற்புறுத்த வேண்டுமென்று கடிதத்தில் எழுதி இருக்கிறார்.

வருந்தக்கூடிய விஷயம்தான், என்ன செய்வது? இந்த மடாதிபதிகளிடம், மாடமாளிகை, கூட கோபுரம், வயல் வாய்க்கால் இருக்கின்றன. ஏராளமான தங்கம். வெள்ளி. பவளம். வைரம், வைடூரியம் இருக்கின்றன. தங்க பஸ்பமும், முத்து பஸ்பமும் இருக்கிறதாம்.

இதுவா துறவியின் இலட்சணம்?

இவ்வளவு செல்வத்துக்கு அதிபதிகளாகவும் இருக்கிறவர்கள் கூறுகிறார்கள், இவர்களை யார் என்ன கேட்க முடியும்! சர்க்காரையோ, இவர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர். தங்கச் செங்கோல் செய்து அனுப்பினாரல்லவா, ஆதீனகர்த்தா! பொதுமக்களில் விளக்கமற்றவர்களையே தங்கள் துறவுக் கோலத்தைக் காட்டி மிரட்டி விடுகிறார்கள். இது துறவு அல்ல வெறும் களவு என்று எடுத்துரைக்கும் நம்மையோ நாத்திகர்கள் என்று நிந்திக்கிறார்கள். இந்த மடாதிபதிகளின் போகப் போக்கியம் ததும்பும் வாழ்க்கையும், அவர்களால் பாமரருக்கு ஏற்படும் பல்வேறு விதமான தழும்புகளும், யாருக்குத் தெரியாதவை? தெரிந்தும் யார் கேட்கிறார்கள், இதுவா துறவியின் இலட்சணம் என்று?

பட்டினத்தடிகளும் துறவி – பத்ரகிரியாரும் துறவுக் கோலம் பூண்டிருந்தனர். பரமசிவன் இவர்களைச் சோதிக்க வந்தாராம் ஓர் நாள், பிச்சைக்கார வேடத்தில் பட்டினத்தாரிடம் சென்று பிச்சை கேட்ட போது. அவர் சற்றுத் தொலைவில் இருந்த பத்ரகிரியாரைக் காட்டி, “நான் சன்னியாசி, என்னிடம் பிச்சை கேட்கலாமா, அதோ பார் சம்சாரி அவனிடம் போய்க் கேள்“ என்று சொன்னாராம். சகல போகங்களையும் துறந்த நம்மை, சம்சாரி என்று சொன்னாரே என்று பத்ரகிரியார் பதறிப் போனாராம்.

உடைமை, ஆனடிமை எனும் இரு இலட்சணம், சம்சாரிக்கு உண்டு, பத்ரகிரியாரிடம் பிச்சை வாங்கும் ஓடு இருக்கிறது – அது அவர் உடைமை, அவர் தின்றது போக மிச்சமிருப்பதைப் போட்டு ஒரு நாய் வளர்க்கிறார், அது அவரிடம் வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கிறது. அது பத்ரகிரியாருக்க உள்ள ஆளடிமையாகும் – எனவே, அவர் துறவி அல்ல, சம்சாரி என்று விளக்கம் தரப்பட்டதாம்.

மடாதிபதிகள் தேவைதானா?

இந்தத் துறவி இலட்சணத்துக்கும், விருந்தும், மருந்தும் மாறி மாறி உண்டுகொண்டு, கொலு விற்றிருக்கும் தம்பிரான்களின் இலட்சணத்துக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால், மடாதிபதிகள் தேவைதானா, என்பது தானாகத் தெரிந்துவிடும். மதி பெற்ற மக்கள், மடாதிபதிகளை, நாட்டின் நிலையை உணரச் செய்ய வேண்டும். மடாதிபதிகளுக்கு, அறிவுரை தரும் வகையிலே, குன்றக்குடி ஆதீன கர்த்தா என்பவர் இப்போது பிரச்சாரம் செய்துவருவதாகக் கேள்விப்படுகிறேன். பகுத்தறிவுப்பணி, குன்றக்குடியர்களை, பிரச்சாரத் துறைக்குத் துரத்துகிறது – பெரு மகிழ்ச்சி – சுயமரியாதை இயக்கத்துக்கு இதுவும் பெரும் வெற்றிதான். கரந்தைக் கல்லூரியை நடத்த மறுத்துக் கொண்டு வாழும் மடாதிபதிகளுக்கு, குன்றக்குடிகளார் புத்தி கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

“இல்லையே, அவர் தங்களையல்லவா சவாலுக்கு அழைத்தாராம்“ என்று தோழரொருவர் கேட்டார்.

குன்றக்குடி ஆதீனத்தார், பெரியாருக்கும் எனக்கும், ஏதோ கடிதம் எழுதி சவால் விட்டதாகவும், நாங்கள் சும்மா இருந்து விட்டோம் என்றும், குன்றக்குடியார் பேசினதாகத் “தினத்தந்தி“ யில் ஒரு செய்தி வெளிவந்தது. அடிகள் சவால் விட்மாட்டார். செய்திக்குப் பரபரப்பு ஊட்ட “தினத்தந்தி“ அவ்வாறு வெளியிட்டிருக்கக்கூடும்.

சவால் விட்டவர்கள் மாநாட்டுக்கு வரட்டும்!

குன்றக்குடி அடிகளார். பெரியாருக்கு என்ன எழுதினாரோ எனக்குத் தெரியாது – ஆனால். எனக்கு ஒரு கடிதம் வந்தது, ஆதீனத்திலிருந்து. அதில், நான் எழுதிய ‘புராண மதங்கள்‘ என்ற புத்தகத்தை அடிகள் படித்துப் பார்த்ததாகவும், அதிலே உள்ள கருத்துக்கள் பெரும்பாலும் அவருக்கு உடன்பாடானவை தானென்றும் சமூகத் தொண்டர்க்ளும், சமயத் தொண்டர்களும் ஒன்றுபட்டுப் பணியாற்ற இயலும் என்று தான் நம்புவதாகவும், விழைவதாகவும் எங்கு அது போலக் கலந்து பேசலாம் என்று கேட்டும் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

எனது ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு என்னுடன் கலந்து பேச அவர் விழைவது கண்டு மகிழ்ச்சிதான் – எனினும் பொதுவாகவே. தி.மு.கழகக் கருத்துக்களை அவர் தெரிந்துகொள்ள என்னுடன் மட்டும் கலந்து பேசினால் பயன் இல்லை – எனவே இங்கு நடைபெறுவது போன்ற மாநாடுகளிலே, அவர் வந்து நமது கருத்துரைகளை எல்லாம் கேட்டால், நல்லது. இது பற்றிக் கடிதம் நான் எழுதுவதற்குப் பதிலாக, இந்த மாநாட்டிலேயே கூறிவிடுகிறேன் – குன்றக்குடி அடிகளார் ஆகட்டும், மற்றவர்களாகட்டும் நமது மாநாடுகளிலே வழங்கப்படும் கருத்துரைகளைக் கேட்டால் நிச்சயமாக நமது பணியின் மேம்பாட்டினை உணர்வர்.

(நம்நாடு - 9-7-1953
)