அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


இலப்பை கண்டிகையில் அண்ணா!

காஞ்சிபுரம் பிப். 12 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருக்கும் பரந்தூருக்கு அருகிலுள்ள இலப்பை கண்டிகைக் கிராமத்தில் 10-2-60 அன்ற மஜீத் நினைவு மன்றம் துவக்கப்பட்டது.

இம்மன்றம் தி.மு.கழக உட்கிளையாகும். துவக்க விழாவில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தாரை தப்பட்டை முழங்க ஊர்வலம்!

மாலை 6.30 மணிக்குத் தோழர் காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள். கொடிகளை ஏந்திக் கொண்டு தாரைதப்பட்டைகள் முழங்க ஊர்வலம் வந்தனர்.

தோழர் ஏ.எஸ். வேணு பி.ஏ. அவர்கள் மஜீத் மன்றப் பணிமனையைத் திறந்து வைத்துக் கழகக் கொடிய ஏற்றிவைத்தார்.

பின் தோழர் அப்துல்கரீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர்கள் குலசேகரன், சம்பந்தம், சீனிவாசன், சி.வி.எம். அண்ணாமலை, எஸ். வேணு ஆகியோர் கழகக் கொள்கைகளை விளக்கிப் பேசினர்.

அடுத்து, தோழர் காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்கள் மறைந்த மாவீரர் மஜீத் அவர்களின் அரும் தொண்டினை விளக்கியும், இன்று தென்னக மக்கள் வடவர் ஏகாதிபத்திய அரசின் படிப்பில் சிக்குண்டு சீரழிந்து வருவதையும் எடுத்துரைத்து மஜீத் நினைவு மன்றம் சீராகக் கழகத் தோழர்கள் கடைப்பிடித்து வரவேண்டிய முறைகளையும் விளக்கினார்.

இறுதியாக அண்ணா அவர்கள் பேச எழுந்தவுடன் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அவருக்கு மலர்மாலைகளும், கைத்தறித் துண்டுகளும் அணிவிக்கப்ட்டன.

காங்கிரசுத் துரைத்தனம்

பின் அவர்கள் பேசுகையில், காஞ்சித் தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் கழகத்தின் கிளைகள் இயங்க வேண்டுமென்றும், கழகத் தோழர்கள் கிராம மக்களின் குறைகளைக் கண்டறிந்து இயன்ற அளவு அவற்றைக் களைந்தெறிய நாள்தோறும் பாடுபட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

குடிமக்களின் குறைகளைப் போக்கிட காங்கிரசுத் துரைத்தனம் வாய்ப்பும், வசதியும் பெற்றிருந்தும், வாளாயிருந்து வருகின்றது என்பதைத் “தண்டலம் மாநாட்டு“ நிகழ்ச்சியைச் சான்றாக கூறி விளக்கினார்.

கழகத்தில் ஈடுபாடு கொண்டு மஜீத் ஆற்றிய தன்னலமற்ற தொண்டினை உருக்கமாக எடுத்துரைத்தார். மறைந்த மாவீரருக்கு வீர வணக்கம் செலுத்தினார்.

சமூக நாடகம்!

இறுதியாக அண்ணா அவர்கள் தற்கால அரசியல் நடப்புகளை எடுத்துரைத்து, கழகத்தின் நாட்டுப் பிரிவினை இலட்சியத்தை வலியுறுத்திப் பேசினார்.

இரவு 11 மணிக்குச் சமூக நாடகம் ஒன்றும் நடைபெற்றது.

மஜீத் மன்றத் துவக்க விழாவில் ஏராளமான தாய்மார்கள் உட்பட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

(நம்நாடு - 12.2.60)