அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


இலட்சியத்துடன் வாழ்வோம்!

வாழ்ந்தாலும் தி.மு.கழக இலட்சியத்துடனேயே வாழ்வோம்! வீழ்ந்தாலும் தி.மு.க. இலட்சயித்துடனேயே வீழ்வோம்! எதற்காகவும் இலட்சியத்தைவிட்டுக் கொடுப்பதற்கில்லை!

குற்றவாளி எவனையேனும் சுட வேண்டுமென்றால் ஒருவனை மட்டும் அனுப்பிச் சுடச் சொல்வதில்லை ஒருவரைச் சுடவிட்டால் ஒரு வேளை அவன், பாசத்திற்கோ, இரக்கத்திற்கோ ஆளாகி, சுடாமல் விட்டாலும் விட்டு விடலாம். எனவே, சுடக்கூடிய பத்து இருபது பேரை அனுப்பிச் சுட்டுக் கொல்வார்கள்.

அதைப்போல, நம்முடைய மார்புக்கு எதிரே எதிர்க்கட்சிகளெல்லாம் கூடித் துப்பாக்கிகளை உயர்த்திவிட்டன!

சுவரோரத்தில் நிறத்தப்பட்டு விட்டோம். சுவரை விட்டு இப்படி அப்படிப் பார்ப்பவன் நம் இனத்திற்குத் துரோகம் செய்தவனாவான். சற்றுத் திரும்பிப் பார்ப்போமானால், மார்பிலே பாயவேண்டிய குண்டு முதுகிலே பாயும். எனவே நாம் தயாராகிவிட்டோம்.

எல்லாக் கட்சிகளும் நம்மை எதிர்க்க வாக்குகள் சிதறச், சிதற, நமக்கு மிகுந்த வெற்றிகள் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

இவ்வாறு, சென்னை ஒற்றைவாடைக் கலையரங்களில் துறைமுகத் தொகுதித் தேர்தல் நிதிக்க 6.1.62இல் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அண்ணா அவர்கள், கழகத் தோழர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கமாவது –

துறைமுகத் தொகுதியிலே தி.மு.கழக வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நம்முடைய நண்பர் சி.பி.சிற்றரசு அவர்களுக்கு ஓரளவு நீங்கள் நன்கொடை தர வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் நடக்கிறது.

நம்மவர் நல்லவர்

நண்பர் சி.பி.சிற்றரசு அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடக்கக் காலத்திலிருந்து பணிபுரிபவர். ஏன் திராவிடர் கழகத்திலும், அதற்கு முன்னர் சுயமரியாதை இயக்கக் காலத்திலிருந்தும் பணிபுரிந்து கொண்டு வருபவர் இப்படித் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஒரே அரசியல் கட்சியில் ஈடுபட்டிருப்பது ஒன்றே, நீங்களெல்லாம் அவரைப் போற்றத் தகுந்த ஒன்றாகும். ஏனென்றால், உதவியையும் பணத்தையும் எண்ணி வியாழக்கிழமை ஒர கட்சி. வெள்ளிக்கிழமை இன்னொரு கட்சி, சனிக்கிழமையன்று கூட மற்றொரு கட்சி என்று சிலர் மாறிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில். கடந்து முப்பதாண்டுகளாக வறுமைக்கும் தாங்க முடியாத பல சபலங்களுக்கும் இரையாகாமல் ஒரே இயக்கத்தில் இருந்துவரும் சிற்றரசு அவர்களை யாரும் பாராட்டுவர்! நாம் மட்டுமல்ல பொது வாழ்விலே தூய்மையும், கொள்கையிலே உறுதியும் இருக்கின்றவனவா என்று கவனிக்கிற பொது மக்களுக்குக்கூட, அவர் நல்லவராகவே அமைகிறார்.

தொடர்ந்து 30 ஆண்டுக் காலமாக அரசியல் பணிபுரிகின்ற சிற்றரசு அவர்கள், வேங்கடம் முதல் குமரி வரை போகாத ஊரில்லை. பேசாத பேச்சில்லை. ஆய்ந்தறியாக பிரச்சினையில்லை.

இரண்டாம் வகைப் பேச்சாளர்!

பேச்சாளர்கள் இரண்டு வகைப்படுவர். பொது மக்களுக்காகப் பேசுபவர்கள் ஒருவகை, பேச்சாளர்களுக்காகப் பேசுபவர்கள் இரண்டாம் வகை. இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் சி.பி. சிற்றரசு அவர்கள்,. அவர்கள் வீரமாகப் பேச ஆரம்பித்து விட்டார் என்றால், வீரம் கொள்ளாதவன் வீரத்தை இழத்து விட்டவன் என்று பொருள். அவர் நகைச்சுவையோடு பேசும்போது சிரிக்காதவன் சிரிப்பை மறந்துவிட்டான் என்றுதான் பொருள்.

கொள்கை உறுதியைப் பாராட்டுகின்ற பொது மக்கள் அத்தனை பேரும சிற்றரசைப் பாராட்டுவார்கள்.

துறைமுகத் தொகுதியில் நம்முடைய கழகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகம் என்பதாலும், அவரை அறிந்த பொது மக்கள் அத்தொகுதியில் அவர் தொண்டை விரும்புகிறார்கள், என்பதாலும், அவரை அங்கே நிறுத்தி வைத்திருக்கிறோம்.

பேசியது என்ன தெரியுமா?

அவரை எதிர்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஹாஜா ஷரீப், ஒரு கப்பல் வியாபாரி, கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகச் சட்டமன்றத்திலே இடம் பெற்றிருந்தவர். சட்டசபையிலே அதிகம் பேசாத அவர், ஒருமுறை பேசியதை எடுத்துக் கூறினால் அவர் எப்படிப்பட்டவர் என்பது விளங்கிவிடும். அப்படிப்பட்டவர் சட்டசபைக்கு வரவேண்டுமா என்பதும் விளங்கிவிடும்.

ஒருமுறை, தொழிலை எப்படிப் பெருக்குவது என்பது பற்றிச் சபையிலே பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து துணை விவாதமும் நடந்தது. அவரவர்கள் எழுந்து தத்தம் கருத்துக்களைச் சொன்னார்கள். நண்பர் ஹாஜா ஷரீப்பும் எழுந்தார். அவர் தொழில் அனுபவம் மிக்க வியாபாரியாயிற்றே. பயனுள்ள கருத்துக்களைச் சொல்லக்கூடுமே என்று எதிர்பார்த்தோம். இந்த நாட்டிலே ஏற்பட வேண்டிய தொழில் பெருக்கத்துக்கான வழிவகைகளைச் சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? இங்கே வந்திருக்கிற என்னுடைய நண்பர் சின்னதுரை (பி.சோ.) அவர்கள் கூட அதை அறிவார்கள்.

ஹாஜாஷரீப் பேசினார் உற்பத்தி் பெருகாதது, தொழில்கள் பெருகாதது, ஏன் என்றால் முதலாளிகளுக்கு இலாபம் இல்லை. இலாபம் ஏன் இல்லை என்றால் தொழிலாளர்க அடிக்கடி கூலி உயர்வு கேட்கின்றனர்! அதனால் தான் இலாபம் இல்லை! எனவே இந்தக் காருண்யமிக்க சர்க்கார், தொழிலாளர் கூலி உயர்வு கேட்காமல் செய்துவிட்டால் உற்பத்தியைப் பெருக்குவோம்! தொழிலை வளர்ப்போம்.

அவர்தான் இவர்!

இப்படிப் பேசிய தர்மவான்தான் ஈவு இரக்கம் உள்ளவர்தான் மன்றத்தி்லே கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் இதைச் சொன்னவர்தான் துறைமுகத் தொகுதியிலே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார். அத்தகைய புண்ணியவானுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பித்தான் நிறுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட விநோதமானதோர் அரசியல் பொருளாதாரத் தத்துவத்திற்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்தான் ஹாஜாஷரீப். அவர் தான் நம்முடைய சிற்றரசை எதிர்த்து நிற்கிறார்.

வரவேற்பவர்கள் எவர்!

ஹாஜா ஷரீப் படகுபோன்ற தம் காரிலிருந்து இறங்குவாரானால் அவரை வரவேற்கச் சீமான்கள் காத்து நிற்பார்கள். நம்முடைய நண்பர் சிற்றரசு வந்தால் மண்ணடியிலும் ஹார்பரிலும் உள்ள சாதாரண மக்கள்தான் வரவேற்பார்கள்.

துறைமுகத்தில் உள்ள முஸ்லீம்கள் எல்லாரும் இடையக் கோட்டையைச் சார்ந்தவர்கள். ஹாஜா ஷரீப்பும் இடையக்கோட்டையைச் சேர்ந்தவர். எனவே முஸ்லீம்கள் ஓட்டெல்லாம் அவருக்கே கிடைத்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்கிறார்கள். அது நடக்காது முஸ்லீம்கள் வாக்கு கிடைக்காது. ஏனென்றால் இன்றைய முஸ்லீம்கள் அநத் நிலையில் இல்லை.

சிற்றரசு அவர்கள் யாரிடத்திலும் அஞ்சாதவர்! தவறு கண்ட போது துணிந்து கண்டிக்கக்கூடியவர். அவர் சட்டசபையில் இருந்தால் அஞ்சாமல் பேசுவார். எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் போனாலும் மனதில் பட்டதை எதிர்ப்புக்கு அஞ்சாது எடுத்துச் சொல்பவர்கள் போனால் தான் மக்கள் ஆட்சி உருப்படும்.

முயற்சியின் எதிரொலி!

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குக் காரணங்கள் என்ன? எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையின்மையும் காங்கிரஸாரிடம் உள்ள பணபலமும்தான் அதற்குக் காரணங்கள். ஆக இப்படிப்பட்ட நேரத்தில் நாம் தேர்தலிலே ஈடுபடுகிறோமென்றால் எதிர்க் கட்சிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்று கருதினேன். நான் காங்கிரசை எதிர்க்க எல்லா எதிர்க்கட்சிகளையும் சேர்க்க முனைந்தேன். அந்த முயற்சி தோற்றுவிட்டது. இப்போது எல்லா எதிர்க்கட்சிகளும் தி.மு.கழகத்தை எதிர்க்கின்றன!

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வரலாற்றில் இப்படிப்பட்ட ஓர் எதிர்ப்பை நான் மகத்தானதாகக் கருதுகிறேன். இதனால் நான் ஒற்றுமையை எதிர்ப்பவன் என்று கருதிவிடாதீர்கள்.

அயராது பணிபுரிவோம்

இதற்காக என்னைக் குறை கூறாதீர்கள்! என்னைப் பழித்தாலும் நான் பொறுத்துக் கொள்கிறேன்! தனிப்பட்ட முறையிலே என்னை எதிர்ப்பவர்களிடம் கூடப் பற்றுப் பாசம் காட்டுபவன் நான். எனவே, ஒற்றுமை தோற்றதற்காக என்னைக் குறை கூறினால் அதற்காக நான் கோபப்படப் போவதில்லை. எவர் எதிர்த்தாலும் நாம் அயராது பணி புரிவோம். அழுத்தமான நம்பிக்கை இருந்ததால், எங்களால் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால் போட்டியிடாது வி்ட்டுக்கொடுத்த தொகுதிகளில் பிறர் வெற்றி பெற முடியுமென்றால் எங்களக்கு மகிழ்ச்சிதான்.

காங்கிரசுக்கு அடுத்தபடியாக கிராமங்கள் ஒவ்வொன்றிலும் இலட்சம் இலட்சமாக மக்களைச் சந்தித்து நித்தம் நித்தம் மக்களோடு தொடர்பு கொள்கின்ற ஒரே கட்சி தி.மு.கழகம்தான். காங்கிரசுகாரர் கொடி நட்டால் போட்டிக்கு ஒன்பது கொடி நடுவது நாங்கள்தான்! அது அலை கடலோரமானாலும் சரி மலையுச்சியானாலும் சரி அங்கேயெல்லாம் பறப்பது எங்கள் கொடிதான்!

இவ்வளவு வேலை செய்த எங்களைக் கடையிலிருக்கும் சின்னக் குமாஸ்தாவை போல்நடத்தி உனக்கு இவ்வளவு போதும் என்று சொன்னால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை இலாபம் யாருக்கு என்பதைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒப்புக் கொள்ளாததேன்?

காங்கிரசுக்கு அடுத்தபடியாகக் கட்டுப்பாடாக இன்று வளர்ந்திருக்கிற ஒரே கட்சி தி.மு.கழகம்தான். மற்ற கட்சிகளெல்லாம் எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கக் கடமைப்பட்டவை.

உங்களுக்கு இந்த இடத்திலே வாய்ப்பில்லை! உங்களக்கு இந்த இடத்திலே பலமில்லை என்று அவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் காங்கிரசுக்கு அடுத்த கட்சி தி.மு.கழகம்தான் என்ற அடிப்படை உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டாமா?

யாருடைய உதவியும் கிடைக்கவில்லையே என்று கழகத் தோழர்கள் கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும்!

முன்பாகிலும் சுதந்தராக்கட்சி, பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றின் உதவி கிடைக்கும் என்றிருந்தோம். இப்போது தனியாக நிற்கும் நமக்கு நாமேதான் உதவ வேண்டியிருக்கிறது என்ற கருத்துடன் முன்னிலும் பன்மடங்கு அதிகமாகப் பாடுபடுங்கள்.

(நம்நாடு - 8.1.62)