அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மாநகராட்சி மன்ற நிர்வாகம் – காங்கிரசுக்காரர்கள் குற்றச்சாட்டு!

சட்டமன்றத்தில் அண்ணா தந்த விளக்கம்

சென்னை மார்ச் 16 – சென்னைச் சட்டமன்றத்தில் அரசாங்க வரவு – செலவுத் திட்டத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது சில காங்கிரசு உறுப்பினர்கள் மாநகராட்சியின் நிர்வாகத்தினைக் குறை கூறியது குறித்து அண்ணா அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாவது –

மாநகராட்சி மன்றத்திற்கு இப்பொழுது புதிதாக வந்திருக்கும் புண்ணியவான்களால் சென்னை நகரம் இப்படியாகிவிட்டது, அப்படியாகிவிட்டது என்றெல்லாம் சில காங்கிரசு உறுப்பினர்கள் குறிப்பாகத் திருவாளர்கள் சி.ஆர்.இராமசாமி, ஹாஜாசெரீப், கே.வினாயகம் போன்றவர்களெல்லாம் பேசினார்கள்.

குறிப்பாகப் பூந்தமல்லி சாலையும் மவுண்ட் ரோடும் பராமரிக்கப்படா மலிப்பருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சாலைப் பராமரிப்புக்காக சென்னை மாநகராட்சிக்கு மாநில அரசாங்கம் தருவது 32 ஆயிரம் ரூபாய்தான். வெறும் 32 ஆயிரம் ரூபாய் மட்டும் ஒதுக்கிவிட்டுச் சாலைகள் அப்படி இருக்கின்றன இப்படியிருக்கின்றன என்றால் என்ன பொருள்?

பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன

அரசாங்கம் வசூலிக்கும் மோட்டார் வெகிக்கிள் டாக்சில் பெரும் பகுதியை அரசாங்கமே எடுத்துக் கொண்டு பிச்சைக் காசு போலக் கொஞ்சம் மாநகராட்சிக்குத் தந்தால் அதைக் கொண்டு சாலைகளை எப்படிப் பராமரிக்க முடியும்? இதை மாநகராட்சியில் காங்கிரசுக்காரர்கள் இருந்த காலத்திலேயே பலமுறை சுட்டிக்காட்டி, அந்த வரியில் அதிகப் பங்கு வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள். அநத் வரியில் 60 சதவிகிதம் – கொஞ்சம் தாராளமனமுடைய சர்க்காராயிருந்தால் 75 சதவிகிதம் மாநகராட்சிக்குக் கொடுத்தால் அதைக் கொண்டு சாலைகளைச் சரியாக வைத்திருக்க முடியும்.

மாநகராட்சி மன்றம் தருகின்ற எந்தத் திட்டத்திற்கும் உடனடியாக அரசாங்கம் பதில் தராததால் பல திட்டங்கள் நிறைவேறாமல் அப்படியே நிறுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மேற்கு மாம்பலத்தில் 1000 ஏக்கர் நிலத்தை ஊர்ஜிதம் செய்து வீடுகட்டத் திட்டமிட்டிருப்பதாக நேற்று கூட அமைச்சர் சொன்னார். அந்தப் பகுதியில் இந்தத் திட்டம் வருமென்று தெரிந்தததும், நிலத்தின் சொந்தக்காரர்கள் நிலங்களைப் போலியாக விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றினால் இப்படி நடக்காது – பிரதமர் நேரு கூட அண்மையில் சொல்லியிருக்கிறார். நகரங்களுக்கருகில் உள்ள கண்ணுக்கெட்டிய தொலைவுவரை நிலங்களை இப்பொழுதே – விலையேறுவதற்கு முன்பே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று. அதையாவது இந்த ஆட்சியர் உடனடியாகச் செய்தார்களா என்றால் இல்லை.

மாநகராட்சி என்ன செய்ய முடியும்?

சென்னை நகரில் மோட்டார் வாகன வரியாகச் சென்னை அரசாங்கம் ரூ.85 இலட்சம் வசூலிக்கிறது. ஆனால் அதிலிருந்து மாநகராட்சிக்கு அரசாங்கம் கொடுக்கும் பங்கு ரூ.2 இலட்சம் தான். மாநகராட்சி மன்றம் தனது வாகனங்களுக்காக அரசாங்கத்துக்கட்டும் வரி ரூ.29 இலட்சம், ஆகையால், இந்த நிலையில் மாநகராட்சி என்ன செய்யமுடியும்?

(நம்நாடு - 17.3.1960)