அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மாற்றார் தூற்றுவதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை

சென்னைக் கூட்டத்தில் அண்ணா கருத்துரை

சென்னை 86வது வட்ட அண்ணா படிப்பகத்தின் மூன்றாவது ஆண்டு விழாவும், மேயர், துணை மேயருக்கப் பாராட்டு விழாவும் 11.3.60 மாலை 6 மணியளவில் நடைபெற்றது. தோழர் பி.எல். பதி தலைமை வகித்தார். விழாத் துவக்கத்தில் டி.எம். தங்கப்பன் இயக்கப் பாடல்கள் பாடினார்.

தலைவர் முன்னுரைக்குப் பின் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களான தோழர்கள் டி.கே. கபாலி, துளசிங்கம் ஆகியோர், கழகம் மாநகராட்சி மன்றத்தில் செய்துள்ள பணியினை விளக்கியும், மேயர் துணை மேயர் ஆகியோரைப் பாராட்டியும் பேசினர்.

பின் அண்ணா படிப்பகச் செயலாளர் தோழர் க. சிவானந்தம் படிப்பகம் ஆற்றிவரும் தொண்டினைப் பற்றியும், கழகக் கொள்கைகளை விளக்கியும் பேசினார்.

மாநகராட்சி மன்ற மேயர் அவர்களும், துணை மேயர் அவர்களும் பாராட்டிற்கு நன்றி தெரிவித்தும் இவ்வாண்டு நிறைவேற்றப்படவிருக்கும் திட்டங்களைப் பற்றியும் விளக்கினர்.

பொதுமக்கள் முயற்சிக்க வேண்டும்

பின் துணைப் பொதுச் செயலாளர் என்.வி.நடராசன் அவர்கள் கழகத்திற்கு ஏற்படும் எதிர்ப்பைத் தாங்கிக் கொள்ளவும், நமது கொள்கையை மக்களுக்கு விளக்கிக் கூறவும் கழகத் தோழர்கள் முன் வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

தோழர் மு. கருணாநிதி அவர்கள் பேசுகையில் நமது இலட்சியம் நாளும் வளருகிறது என்றும், ஆனால் இன்றும் வேகமாக வளருவதற்குப் பொதுமக்கள் முயற்சிக்க வேண்டும் என்றும், விரைவில் திராவிடநாடு அடைவது உறுதி என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக அண்ணா அவர்கள் பேசியதாவது –
நான் இந்தக் கூட்டத்திற்கு வருகிற நேரத்தில் நண்பர்கள் பலர் என்னிடத்தில் மாற்றுக் கட்சிக்காரர்கள் கூட்டம் போட்டு நம்முடைய கழகத்தைப் பல்வேறு விதத்தில் தூற்றுகிறார்களே என்று கூறி வருத்தப்பட்டார்களே. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் நம்மைத் திட்டாமல் இருந்தால் இன்றைய தினம் தோழர்கள் கருணாநிதியும் என்.வி.நடராசனும் இவ்வளவு ஆவேசமாகப் பேசியிருக்கமாட்டார்கள்.

காரணம் கண்டு பிடித்துத் திட்டுங்கள்

என்னைப் பொறுத்தவரையில் திட்டினாலும் திட்டாவிட்டாலும் எப்பொழுதும் போலத்தான் பேசுகிறேன். ஆனால் எனது தம்பிமார்கள், மாற்றார்கள் திட்டுகிறார்கள் என்றதும் உடனே மிக உற்சாகத்தோடு பேசுகிறார்கள். ஆவேசமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசுகிறார்கள். ஆகவே எனது தம்பிமார்களுக்கு “ஆவேசம்“ அதிகமாக வருகிறவரையில் திட்டுங்கள் சலிப்பு ஏற்படுகிறது வரையில் திட்டுங்கள். மிகவும் வருந்துகிறேன், என்னிடம் பணம் இல்லாத காரணத்தால், எனவே இலவசமாகத் திட்டுங்கள் என்று மாற்றுக் கட்சியினரைக் கேட்டுக் கொள்ளுகிறேன். ஏன் என்றால் அடித்து வளர்க்காத பிள்ளையும், திட்டி வளர்க்காத அரசியல் கட்சியும் நெடுநாட்களுக்கு நிலைக்காது. மாற்றாருடைய தூற்றுதல் இல்லாமல் வளர்ந்தால் அதில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்க்ளுக்கே வட ஒரு மதமதப்பான எண்ணம் வந்துவிடும். இந்த வகையான எண்ணம் அவர்களை இனி நம்மைப்பற்றி ஒரு கவலையும் இல்லை. நம்மை பற்றிப் பிறருக்கு மாற்று எண்ணம் தோன்றாது என்றெண்ணும் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

மாற்றார்களுக்கு நான் சொல்லுகிறேன் – எங்களைத் திட்ட வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுவது இயற்கை. ஆகையினால் புதிதாகக் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லித் திட்டுங்கள். அண்ணாதுரை தன்னுடைய கால் பூமியில் படாதவாறு நடக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அப்பொழுது மக்கள் கொஞ்சம் என்னைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

சந்து முனையில் கதை சொல்லுவோம்

திருப்பித் திருப்பிக் கதை எழுதுகிறோம் என்பதையே அவர்கள் சொல்லுகிறார்கள். நாம் கதை எழுதுவது என்பது ஊர் அறிந்த உண்மையாகும். கதை எழுதுவது நம்முடைய தொழில். அதிலே நான் வெட்கப்படவில்லை. கள் குடிப்பது கெடுதல் என்றதால் கள்ளுக்கடையை மூடிவிட்டார்கள். அதைப்போல் சினிமா கெடுதல் என்றால் சினிமாவை மூடிவிடலாம். அப்பொழுது சினிமா மூலம் கிடைக்கும் கருத்துக்க்ள் நாடகத்தின் வழியாகப் பரப்பப்படும். நாடகத்தையும் மூடிவிடுகிறார்கள் என்றால் சந்து முனையில் கதை சொல்ல ஆரம்பிப்போம். கூட்டத்தில் இருப்பவர்களிடம் ஒரு அணா, இரண்டனா போடுங்கள் என்று என்னைப் பொறுத்தவரையில் வெட்கம் இல்லாமல் கேட்பேன்.

மகிழ்ச்சியோடு கலந்து அறிவைத் தருகிற காரணத்தினால் பொது மக்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். சிவஞான கிராமணியார் அவர்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டார்கள். பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள்தான் ஆதரவு தரவேண்டும் என்று. தேடிப் பார்த்தால் மொத்தத்தில் என்னிடம் 50 ஆயிரம் ரூபாய் இல்லை. இருப்பதாக நண்பர்கள் கருதுகிறார்கள். மெத்த மகிழ்ச்சி எங்களுடைய காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரையில் ஒரு வேடிக்கை. நான் பணக்காரனாகி விட்டேன் என்று ஊரெல்லாம் பேச ஆரம்பித்தவுடன் இதற்கு முன்னாலே என்னைப் பார்த்தால் மிகச் சாதாரணமாகக் கவனிப்பார்கள். ஆனால் இப்பொழுது காஞ்சிபுரத்திலுள்ள எந்தப் பணக்காரரும் என்னைப் பார்த்தால், நான் உட்காருகிற வரை நின்றுகொண்டே இருக்கிறார்கள். இதற்காக நாங்கள் யாரும் கவலைப்படமாட்டோம்.

வைரம் பாய்ந்த கட்டை

நாங்கள் நடத்துகின்ற பிரச்சாரம் பலன் தருகின்றதா? நேற்றுக் கேட்டதைவிட இன்றைய தினம் அதிக மக்கள் கேட்கிறார்களா? தெளிவு பெறுகிறார்களா? நான்கு பேர் அதிகமாக நமது கருத்தை ஏற்றுக் கொண்டார்களா? என்கின்ற அந்தக் கணக்குத்தான் எங்களுக்கு முக்கியம்.

ஆகவே தோழர்கள் யாரும் திட்டுகிறார்களே என்று வருத்தப்படவேண்டாம். நாம் வளர ‘வேண்டுமானால் மாற்றார்கள் நம்மைத் திட்ட வேண்டும் தூற்றத் தூற்றத்தான் நம்முடைய உள்ள உணர்ச்சிகள் நல்ல முறையில் இயங்கும்.

நம்முடைய நண்பர்களுக்குப் பல தடவை சொல்லியிருக்கிறேன். இன்றைய தினம் யார் தூற்றினாலும் ரோஷம் வரக்கூடிய வயது இல்லை. எனக்கு வயது 51 ஆகிறது. இதுவும் எனக்குப் பெரியார் தந்த பாடந்தான். சேலத்தில் “ஜஸ்டிஸ்“ கட்சயாக இருந்தனர். திராவிடர் கழகமாக மாற்றுவதற்காக ஒரு முயற்சி நடந்ததை அரசியலைத் தொடர்ந்து படிக்கின்றவர்கள் தெரிந்திருக்கலாம். அப்பொழுது நகரத்தூதன் என்ற பத்திரிகை ஆசிரியர் திரு. மலைசாமி என்பார், என்னைப் பற்றி அந்தப் பத்திரிகையில் 12 பக்கம் திட்டி எழுதியிருந்தார். அப்பொழுது நான் பெரியாரிடத்தில் போய்ச் சொன்னேன். ஒரு கூட்டத்திலாவது அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டேன். பெரியார் எனக்குச் சொன்னதெல்லாம் கேட்க வேண்டிய திட்டுகளையெல்லாம் 40 வயதுக்குள்ளாகவே கேட்டுவிடவேண்டும். அப்பொழுதுதான் பின்னால் அதிகமாகக் கோபம் வராது என்று. அவர்கட்குத் திட்டுவதற்குப் பிறகு என்ன இருக்கிறது என்றும் சொன்னார்கள். ஆனால் இப்பொழுது அவரிடமே திட்டுக் கேட்டு இது வைரம் பாய்ந்த கட்டையாகி விட்டது.

கலந்து கொள்ளாதது குற்றமல்ல!

சொன்னதையே திருப்பித் திருப்பி அவர்கள் சொல்லுவது அரரசியல் பேதமை, புதிதாக ஏதாவது சொல்லட்டும். திருத்திக் கொள்ள வேண்டியது இருந்தால் நிச்சயம் திருத்திக் கொள்வேன். உண்மையிலேயே கழகத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதை எடுத்துச் சொன்னால் திருத்திக் கொள்வோம்.

சென்னைச் சட்டமன்றத்தில் கவர்னர் உரையின்போது கழகம் கலந்து கொள்ளாதது ஒழுங்கு முறைக்கு விரோதம் என்ற பிரச்சினையை திரு.லாசர் என்பவர் கொண்டு வந்தார். அதன் பேரில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் நிதியமைச்சர் சுப்பிரமணியமும் எதிர்க்கட்சித் தலைவர் வி.கே. இராமசாமி !முதலியாரும்) கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் திரு.சின்னதுரையும், இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்கான கட்சித் தலைவன் என்ற முறையில் நானும் கருத்துக்களைத் தெரிவித்தோம். நிதியமைச்சர் அவர்கள் நாங்கள் கலந்துகொள்ளாதது ஒழுங்குமுறைக்கு விரோதமானது என்று வாதாடினார்கள். மற்ற கட்சித் தலைவர்களெல்லாம் கவர்னர் உரையில் கலந்து கொள்ளாதது சபையில் ஒழுங்கு முறைக்குப் பாதகமானதாகாது என்று வாதாடினார். அதற்குச் சபாநாயகர் அவர்கள் தனது தீர்ப்பினைச் சொன்னார்கள். கவர்னர் பேசும்போது கலந்து கொள்ளாதது குற்றமல்ல என்று தீர்ப்பளித்தார்கள்.

இது இரண்டாவது இலாபம்

இன்னொரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் நமது மாநிலத்தைப் பொறுத்தமட்டில் எவ்விதமான புதுவரியும் போடப்போவது இல்லை என்று சர்க்கார் அறிவித்திருக்கிறது. வரி போட்டால் எதிர்க்கட்சிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாது என்ற அச்சத்தினால் இந்த ஆண்டு வரி போடவில்லை.

இதை நான் உங்களுக்குச் சொல்லுகின்ற நேரத்தில் அமைச்சர்கள் எதி்ர்க்கட்சிகளுக்குப் பயந்து கொண்டு நாங்கள் வரி போடாமல் இல்லை. எங்களுக்கு மக்களிடத்தில் உள்ள ஆசை, பற்று இவைகளின் காரணமாகத் தான் வரிபோடவில்லை என்று சொல்லலாம். எப்படியோ புதிய வரிகள் இல்லை.
இது மக்களுக்கு மகிழ்ச்சி. சென்ற ஆண்டு போட்டிருந்த அழகுப் பொருள் வரியை இந்த ஆண்டு நீக்கிவிட்டார்கள். இதற்க எதிர்க்கட்சிகள்தான் காரணம். இதை இல்லை என்று சொல்ல முடியாது. சென்ற ஆண்டில் இந்த வரி போட்ட நேரத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாங்களெல்லாம் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டம் போட்டுக் கண்டித்தோம்.

அப்பொழுது இந்தச் சர்க்கார் இந்த வரியை வியாபாரிகள் கட்ட முடியும் – தாங்க முடியும், என்று கூறியது. ஆனால் இப்பொழுது ரத்து செய்திருக்றிது. இதற்கு எதிர்க்கட்சிகள் காரணமில்லை என்று காங்கிரசுக்காரர்கள் கூறி உண்மையை மறைத்து விடமுடியாது. இது இரண்டாவது இலாபம்.

மூன்றாவது மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் இப்பொழுது சட்டசபையில் பட்ஜெட் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. பலர் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். இம்மாதம் 17-30 தேதி வரையில் சட்டமன்றத்திலே கருத்துக்களைச் சொல்லுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இதை நான் உங்களிடத்தில் சொல்லுகிற நேரத்தில் நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். என்ன கேள்வி என்றால் நாம் எடுத்துக் கொண்டிருக்கிற இலட்சியம் – அதிலிருக்கின்ற உண்மை – நாம் கேட்கின்ற திராவிட நாட்டை அடையத்தான் வேண்டுமா என்பதை யெல்லாம் ஒவ்வொருவரும் எண்ணவேண்டும்.

எண்ணிப்பார்க்க வேண்டும்

16 வயதுடைய ஒரு வாலிபனுக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். ஆனால் அவன் திருமணம் தேவைதானா? நாம் எதிர்பார்க்கின்ற குணங்கள் பெண்ணிடம் இருக்கின்றனவா? நமக்கு மனப்பக்குவம் இருக்கின்றதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமே.

அதைப் போலவே, நம்முடைய மூலாதாரக் கொள்கையை இலட்சியத்தை அடைவதற்கு நாம் நித்தம் நித்தம் எண்ணிப் பார்க்க வேண்டும். இது நடைமுறைப் பிரச்சினையல்ல. நான் நின்று கொண்டு பேசுவது, நீங்கள் உட்கார்ந்து கொண்டு கேட்பது நடைமுறைப் பிரச்சினை. ஆனால் அடிப்படையான மூலதாரமான “திராவிடநாடு திராவிடருக்கே“ என்கின்ற கொள்கை இப்பொழுது எப்படி இருக்கிறது? போன ஆண்டு இருந்ததைவிட அந்த நம்பிக்கை இப்பொழுது வளர்ந்து இருக்கிறதா, குறைந்து இருக்கிறதா? என்று நாம் அடிக்கடி நம்முடைய மனதை நாமே கேட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆராய்ந்து பார்க்கின்ற அந்த அடிப்படையான இலட்சியம் வெற்றி பெறுவதற்காக உழைக்கவேண்டும். அப்பொழுது தான் மக்கள் வாழ முடியும்.

அச்சமோ குழப்பமோ ஏற்படவில்லை

இதைச் செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டு்ம். இதைச் செய்வதற்குக் கழகத்தில் ஏதோ பத்து பேர் இருக்கிறார்கள் என்று இருந்து விடக்கூடாது. நாம் ஒவ்வொருவரும் இந்தச் சக்தியை வளர்க்க வேண்டும்.

அவ்வப்போது இது பற்றி ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படி ஆராய்ந்து பார்த்திதல் என்னைப் பொறுத்தவரையில் திராவிட நாட்டுப் பிரிவினை என்ற இலட்சியம் நாளுக்கு நாள் வளருகிறது. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ஒரு துளியும் எனக்கு அச்சமோ, குழப்பமோ ஏற்படவில்லை.

பத்திரிகையில் நீங்கள் செய்திகளைப் படிக்கின்ற நேரத்தில் இவைகளில் நம்முடைய கருத்து ஊடே எங்கே வருகின்றது என்று நீங்கள் தேடிப்பார்க்கவேண்டும்.. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிச் செய்கிள் தினமும் பத்திரிக்கையில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால் தெரியும். மாநிலச் சட்டசபையிலும் சரி, டெல்லி பாராளுமன்றத்திலும் சரி, நமது கட்சி அல்லாத மற்ற உறுப்பினர்களும் நமது கொள்கையை வலியுறுத்துவதைக் காண முடியும்.

உரியதைக் கொடுத்துவிடுங்கள்

டெல்லியில் பாராளுமன்றத்தில் சுப்பாராவ் என்ற கம்யூனிஸ்டு உறுப்பினர், தன்னுடைய மாநிலத்திற்கு மத்தியச் சர்க்கார் வாழ்வுக்கு வழிவகை செய்யவேண்டுமென்று கேட்கிற நேரத்தில் வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்ற எண்ணம் பரவலாகப் பரவியிருக்கிறது. அது உண்மை என்ற சொல்லத் தக்க வகையில் மத்தியச் சர்க்கார் தென்னாட்டைத் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டுதான் வருகிறார்கள். எனவே அந்தப் பிரிவினை உணர்ச்சி வெற்றி பெறும். ஆகையால் தென்னாட்டுக்கு உரியதைத் தயவு செய்து உடனடியாகக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இப்பொழுது நீங்கள் இதை ஆராயுங்கள். இங்கு இருக்கிறவர்கள் வடக்கு – தெற்கு என்ற பேதம் தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நீங்கள் பத்திரிகையைப் பார்த்தால் நம்முடைய கழகக் கருத்து மற்ற பல கட்சிக்காரர்களிடம் இருப்பதைக் காணலாம். டெல்லியிலே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆந்திரச் சட்ட சபையிலே இதுபற்றிப் பேசுகிறார்கள். மைசூரிலும் இந்தக் கருத்து பரவுகிறது. கேரளத்தில் உள்ள நம்பூதிரிபாத் நமது கருத்தை வலியுறுத்துகிறார். எனவே திராவிட நாட்டில் இந்தக் கருத்து பரவுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆகையினால் அவர்களுக்கும் சேர்த்து நான் சொல்லுகிறேன். இந்த எண்ணத்தை இனி யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது.

திராவிட உணர்ச்சியை எதிர்த்தீர்கள்

மைசூரிலிருந்து தான் காவிரி தண்ணீர் நமக்குக் கிடைக்கிறது. பாலாற்றுக்குத் தண்ணீர் வரவேண்டும். நாம் அதிகமாகக் காவிரி நீரைப் பயன்படுத்துகிறோம் என்று மைசூர் சர்க்கார் ஒரு புகார் கிளப்பி இருக்கிறார்கள், என்று இந்தச் சட்டமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது நிதி மந்திரி பதில் சொன்னார். ஆந்திர நாட்டிலிருந்து கிருஷ்ணாப் பெண்ணாறு தண்ணீரை இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம் என்றும் சொன்னார். இதைச் சொல்லுகிற நேரத்தில் எல்லாம் திராவிடத் தொல்லைதான். அகில இந்தியத் தொல்லை இல்லை என்று சொன்னார். இதற்குப் பதில் சொல்லுகிற வாய்ப்பு எனக்குச் சட்டசபையில் கிடைத்திருந்தால் இதைத்தான் அப்பொழுது சொல்லியிருப்பேன். அதை இப்பொழுது உங்களிடத்தில் சொல்லுகிறேன்.

திராவிட உணர்ச்சி ஆந்திரம், மைசூர் ஆகிய இடங்களில் பரவியிருக்குமேயானால் மைசூர் சர்க்கார் காவிரித் தண்ணீரைக் கொடுப்பதில் இவ்வளவு கஞ்சத்தனம் காட்டி இருக்க மாட்டார்கள். எனவே இந்த உணர்ச்சியை நீங்கள் பரப்பினீர்களா? மாறாக எதிர்த்தீ்ர்கள்.

உணர்ச்சி பரவாததால் வந்த தொல்லை

தமிழர்களும், தெலுங்கர்களும், கன்னடியர்களும் மலையாளிகளும் மொழி அடிப்படையில் வேறாக இருந்தாலும் இன அடிப்படையில் ஒன்று என்ற உணர்ச்சியைப் பரப்பினீர்களா? இல்லையே. பரப்பியிருந்தால் அவர்கள் ஒரு போதும் இப்படிச் செய்யமாட்டார்கள். அப்படி இந்த உணர்ச்சியைப் பரப்பாத காரணத்தினால்தான் இப்பொழுது இந்தத் தகராறு வருகிறது? திராவிட உணர்ச்சி மற்றவர்களுக்குக் பரவாததால் வந்த தொல்லை.

அமைச்சர்கள், அண்ணாதுரை ஏன் மைசூருக்கும், ஆந்திராவுக்கும் போய்ப்பிரச்சாரம் செய்யவில்லை? என்று கேட்கிறார்கள். நான் அவர்க்ளுக்குச் சொல்லுவேன். அவர்கள் என்னைவிடப் பெரிய கட்சி அல்லவா நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட பெரிய கட்சியைச் சேர்ந்தவர்கள் அகில இந்தியா, ஏகபாரதம் என்று அந்த உணர்ச்சியைப் பரப்பினார்கள். அகில பாரதம் என்ற உணர்ச்சி பரவியிருக்குமானால் மைசூர்க்காரன் தண்ணீர் கொடுப்பதில் இவ்வளவு கஞ்சத்தனத்தைக் காட்டியிருப்பானா? நாமெல்லாம் இந்தியர்கள் என்ற உணர்ச்சியைப் பரப்பினீர்கள் – வெற்றி பெறவில்லை.

ஒரு ஐந்தாண்டுக் காலத்திற்கு – பத்தாண்டுக் காலத்திற்கு அப்பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு எனக்க வழிவகை கிடைக்குமானால் நியாத்திற்ககாக உண்மையை எடுத்துச் சொல்லி, ஆந்திரரையும், கன்னடியர்களையும் கேரளத்தார்களையும் நிச்சயமாக ஒன்றாக இணைக்க முடியும்.

பிரச்சினை நாளுக்கு நாள் வளருகிறது

எனவே திராவிட நாடு கிடைக்கக்கூடிய நாடுதானா? என்ற ஆராய்ச்சி ஒவ்வொரு நாளும் சட்டசபை நடக்கும்போதெல்லாம் நடத்தப்படுகிறது. ஆகவே இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் வளருகிறது, என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வேன்.

நான்காவதாக நான் ஆயிரம் கோடி ரூபாய் ஐந்தாண்டுத் திட்டத்திலே நமது தமிழகத்திற்குச் செலவிட வேண்டுமென்று கேட்டேன். இதை நிதி அமைச்சர் அவர்கள் பண்டாரத்தின் திட்டம் போல் இருக்கிறது என்று சொன்னார்.

ஒரு தெருவிலே மூன்று பண்டாரங்கள் படுத்திருந்தார்களாம். அப்பொழுது அடுத்த தெருவிலே ஒரு வீடு நெருப்பு பிடித்து எரிந்தது. உடனே ஒரு பண்டாரம் எழுந்து அய்யய்யோ, நெருப்பு பிடித்து எரிகிறது. வாருங்கள் போய் அணைக்கலாம் என்றான். இன்னொரு பண்டாரமும் எழுந்தான். மூன்றாவது பண்டாரம் எழுந்து நெருப்பா! பிடித்துக் கொண்டால் நமக்கென்னப்பா? என்றானாம்.

நிதியமைச்சர் மூன்றாவது பண்டாரம்

அதே போல மத்திய சர்க்கார் ரூ.10 ஆயிரம் கோடி செலவிடுவது என்று சொன்னார்கள். எனக்குச் கொஞ்சம் ஆசை இருந்தது. நான் ஆயிரம் கோடி கேட்டேன். நான் முதல் பண்டாரம் நிலையில் இருக்கிறேன். நிதியமைச்சர் மூன்றாவது பண்டாரம் நிலையில் இருக்கிறார்.

நமது நாட்டில் தொழில் வளர வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டுமென்கிறார்கள். இதை இந்தப் பன்னிரண்டு ஆண்டில் காங்கிரசு சர்க்கார் ஆட்சியில் செய்தார்களா என்பதை நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

அண்ணாதுரை கேட்கின்ற ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டாம். செய்வதற்குத் தொழில் இருக்கவேண்டும். நியாயமான கூலி கிடைக்க வேண்டும். விலைவாசி எட்டிப்பிடித்தால் கட்டுக் கடங்க வேண்டும். இந்த மூன்று காரியத்தைச் செய்யுங்கள் என்று அவர்களைப் பார்த்து நீங்கள்கேட்க வேண்டும். இது காங்கிரசு ஆட்சியால் முடிந்ததா? முடிகிறதா?

பார்த்துக்கொண்டா இருக்கமுடியும்?

விலைவாசி உயருகிறதே என்றால் ஆமாம் உயருகிறது என்று அவர்களும் சொல்லுகிறார்கள். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் உற்பத்தி பெருகித்தான் இருக்கிறது என்கிறார்கள். இது இப்படித்தான் இருக்கும், இதை எங்களால் தடுக்க முடியவில்லை என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தபின் இரண்டு ஐந்தாண்டுத் திட்டம் நிறைவேற்றியாகிவிட்டு. இப்பொழுது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற இருக்கிறார்கள்.

இத்தனைக்குப் பிறகும் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. மக்களுக்குச் செய்வதற்குத் தொழில் இல்லை. கூலி இல்லை. மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை இல்லை என்றால் 12 வருடத்திற்குப் பிறகும் பார்த்துக் கொண்டா இருக்கமுடியும்?

நான் ஆயிரம் கோடி ரூபாய் கேட்டது முன்னேற்றக் கழகத்துக்காக அல்ல – நாட்டுக்காக இரும்புத் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை அமைப்பதற்கும் இன்னும் மற்ற தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் மக்களுக்கு வேலை வாய்ப்புத் தருவதற்கும் ஆகும். நம்முடைய சேலத்து இரும்பு நிபுணர்கள் பலர் சொல்லியும் இன்னும் எடுபடாமல் இருக்கிறது.

அதிகாரம் நமக்கு வேண்டும்

நம்மிடத்தில் மக்கள் இருக்கிறார்கள். தேவையான மூலப் பொருள்கள் இருக்கின்றன. ஏன் தொழிற்சாலை அமையவில்லை என்றால் பணம் இல்லை என்கிறார்கள்.

பணம் பண்ணுகிற வேலை டெல்லியிலே இருக்கிறது. அங்கு இருக்கும் சர்க்கார் துண்டுவிழும் பட்ஜெட்டைச் சமர்ப்பித்தாலும் அவர்கள் உடனே நோட்டடித்துக் கொள்ளுவார்கள். நமது சர்க்கார்கள் ரூ.34 இலட்சம் துண்டுவிழுந்த பட்ஜெட்டைத் தயாரித்திருக்கிறது, ஆனால் இவர்கள் நோட்டடிக்கமுடியாது. டெல்லியிடம்தான் கேட்க வேண்டும்.

ஆகவே முன்னேற்றக் கழகம் சொல்லுவதெல்லாம் அதிகாரம் நமக்கு வேண்டும் என்பதுதான்.

நான் ஒரு உதாரணம் சொல்லுவேன் – என்னுடைய வீட்டில் மின்சார விளக்கை எரியச் செய்யும் பித்தான் எனக்கு எட்டாத உயரத்திலே வைக்கப்பட்டிருக்கிறது. என்னிடம் நண்பர்கள் பேசிவிட்டுச் சென்றபிறகு விளக்கை அணைக்க வேண்டுமென்றால் எனக்கு அந்தப் பித்தான் எட்டுவதில்லை. எனவே என்னுடைய நண்பர்களிடத்தில் விளக்கை அணைத்து விட்டுச் செல்லுங்கள் – நான் படுத்துக் கொள்கிறேன் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

நாடு பிரிவதால் என்ன நட்டம்?

என்னுடைய நிலையில் சென்னை மாநிலச் சர்க்கார் இருந்தால் என்ன காரியங்களைச் செய்யமுடியும்? அந்த வகையில் இல்லாமல் எல்லாவற்றையும் தாங்களே செய்து கொள்ளும் அளவுக்கு சென்னைச் சர்க்கார் அதிகாரம் பெற்றிருக்க வேண்டுமென்பதைத் தான் நாம் பலமுறை வற்புறுத்திச் சொல்லி வருகிறோம்.

திராவிடநாடு பிரிவதால் என்ன இலாபம்? என்று கேட்கிறார்கள், அமைச்சர்கள்! நான் அவர்களைக் கேட்கிறேன் – திராவிடநாடு பிரிவதால் உங்களுக்கு என்ன நட்டம்? அதை முதலில் சொல்லுங்கள் என்று!

எங்களுடைய நாடு எங்களுக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு மனத்திருப்தி. காந்தியாரும் இதைத்தான் வெள்ளைக்காரனிடத்தில் சொன்னார். திராவிடநாடு பிரிந்தால் நாம் மனத்திருப்தியோடு வாழமுடியும்.

எனவே தனியாகத் திராவிடநாடு பிரிந்திருந்தால் நமக்க எல்லா வகையிலும் இலாபமிருக்கிறது. நீங்களெல்லாம் திராவிடநாடு பிரிவினைக்கு ஒத்துழைக்கிறீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இந்த வகையில் மேலும் மேலும் அயராது உழைக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

(நம்நாடு - 5, 6.4.60)