அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மாவீரர் மணிமொழியார்!

17.5.60 அன்று சென்னை செயிண்ட் மேரி மண்டபத்தில் மட்டற்ற சிறப்புடன் நடைபெற்ற காஞ்சி மணி மொழியார் அவர்களின் மணிவிழாவின்போது மணிமொழியார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பாராட்டுச் சொற்பொழிவு:

“அன்புள்ள தலைவர்கள் அவர்களே! அருமை நண்பர்களே! நம்முடைய மதிப்பிற்குரிய நண்பர் மணிமொழியார் அவர்களுடைய மணிவிழா மிக உற்சாகமான முறையில் இன்று இம் மணிமண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களெல்லாம் வெள்ளம்போல் திரண்டு நின்று இந்த மணிவிழாவில் இத்தகைய பேரார்வம் காட்டுவது கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய தினம் மணிமொழியார் அவர்கள் அறுபது ஆண்டுகள் நிறைந்தவராக நம்மிடையே காட்சி தருகிறார். அவருக்கு அறுபது வயது நிரம்பிவிட்டது என்னும் உண்மையை, அறிந்தவர்கள் எடுத்துச் சொன்னால்தான் நமக்குப் புரிகிறதே தவிர, அவரைப் பார்த்தவுடனே அவருக்கு வயது அறுபது இருக்கும் என்று எவரும் மதிப்பிடத்தக்க இளமைத் தோற்றத்தோடும், உடல் வலிவோடும் பொலிவோடும் இருப்பது, நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அமைந்துள்ளது. நாற்பது ஆண்டுகளாகவும் அதற்கு மேலாகவும் பொதுவாழ்வில் பல்வேறு துறைகளில் அவரோடு ஒன்றுபட்டுப் பணியாற்றிய பலந நண்பர்களும் தாய்மார்களும் தவறாமல் வந்திருந்து, உற்சாகத்தோடு இந்த விழாவில் பங்கேற்றிருப்பது மேலும் பல மடங்கு மகிழ்ச்சியை நமக்கு அளிப்பதாக இருக்கிறது.

நெருக்கடி மிக்க இந்தக் காலத்தில், ஒருவர் அறுபது ஆண்டுகள் வாழ்வதே அரிய செயல் என்று உடல் நூலார் கருதுகின்றனர். அப்படி அறுபது ஆண்டுகள் வாழ்வதே அரிது என்றால், அந்த வாழ்க்கையைப் பயனுள்ள வாழ்க்கையை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வாழ்வது அதைவிட அரிதாகும். அப்படி அறிந்ததை, மற்றவர்கள் எடுத்துச் சொல்லிப் போற்றிப் புகழும் பெருந்தன்மை படைத்தவர்களாக இருப்பதைக் கண்டு மகிழும் நிலையில் வாழ்வது, எல்லாவற்றைவிட அரிதாகும். அத்தகைய தலைசிறந்த நிலையைப் பெற்று அறுபதாண்டு வாலிபராக நம்மிடையே இப்போது காட்சி தருகிறார் மணிமொழியார்.

மணிமொழியார் வரலாறு இடம்பெறும்!
மணிமொழியார் அவர்கள், சென்ற நாற்பது ஆண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற் காகவும் ஆற்றிய அருந்தொண்டு எழிலும் ஏற்றமும் மிகுந்ததாகும். தமிழ் நாட்டின் சென்ற நாற்பதாண்டுக்கால வரலாற்றினை எதிர் காலத்தில் யாராவது எழுதுவார்களானால் அந்த வரலாற்றில் மணிமொழியாரின் தொண்டு சிறப்பானதோர் இடம்பெறும் என்பதில் துளியும் ஐயமில்லை.

பொது வாழ்வில் புகழொளி நிரம்பிய ‘இடம்’ என்று தனக்கு இருந்தாக வேண்டும் என்று அதனைத்தேடி அலைந்தவர் அல்லர் அவர். எப்போதுமே அவர், அவருக்கொன்று ஓர் இடம் தந்தால் ஏற்றுக்கொள்வார். இல்லையேல் அதைப்பற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல், தான் இருக்கும் இடத்திலிருந்தே சிறந்த முறையில் பணியாற்றுவார். அவர் பெரும்பாலும் மேடையின் முன் வரிசையில் இருப்பதில்லை. அவருடைய குரலை நாம் அதிகமாகக் கேட்பதுமில்லை. கூட்டங்களைக் கூட்டி, பிறர் பலரைப் பேசவைத்து அப்படிப் பேசவைப்பதன் மூலம் இயக்கத்தை வளர்த்து, அந்த வளர்ச்சியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்து, அந்த மகிழ்ச்சியால் தன் உடலுக்கு உறுதியும், உள்ளத்திற்கு ஊக்கமும் பெற்றுத் திகழ்பவர் மணிமொழியார் அவர்கள்.

காஞ்சி-களம் கண்ட மறவர்!
இங்கே பேசிய நண்பர்கள் பலர் மணி மொழியார் என்னுடைய ஊராகிய காஞ்சிபுரத்தில் பிறந்தவர் என்பதைப் பெருமிதத்தோடு எடுத்துச் சொன்னார்கள். காஞ்சி என்ற சொல்லுக்கு, போர்க்களத்தில் நின்று மாற்றாரை எதிர்த்துப் போரிடுவது என்பதுதான் பொருள் என்று பிங்கல நிகண்டு தெரிவிக்கிறது. காஞ்சி என்னும் அந்தச் சொல்லின் பொருளுக்கேற்ப, காஞ்சியில், பிறந்த மணிமொழியார் பலமுறை போர்க் களங்களில் நின்று, மாற்றாரை எதிர்த்துப் போராடி அவர்களில் எண்ணற்றோரை வீழ்த்தி, விழுப்புண் பல பெற்று, அப்படிப் பெற்றதன் மூலம் அவருடைய உள்ளத்திற்கு உறுதியையும் அவருடைய குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியையும் நாட்டு மக்களுக்கு நல்ல எழுச்சியையும் தேடித்தந்த பெருமை படைத்தவர்.

இன்றுள்ள போர் எழுச்சி அன்று இல்லை!
1938 ஆம் ஆண்டில் மணிமொழியார் அவர்கள் வேறு நண்பர்களுடன் இணைந்து நின்று இந்தி எதிர்ர்புப் போராட்டத்தைத் துவங்கிய நேரத்தில், தமிழகத்தில் இன்றைய தினம் காணப்படுவது போன்ற மாபெரும் எழுச்சி உருவாகும் என்று அவரும் கருதியதில்லை, நானும் எண்ணியதில்லை. உண்மையிலேயே அந்தக் காலத்தில் மணிமொழியாரும் பிறரும், சென்னைப் பெத்து நாயக்கன் பேட்டையில் உள்ள காசி விசுவநாதர் கோவில் எதிரிலிருந்து ஏழெட்டு வாலிபர்களும், இரண்டு மூன்று தாய்மார்களும் பின் தொடர ஊர்வலங்களைத் தொடங்கி, நடத்தியபோது தமிழகத்தில் இத்தகைய மாபெரும் எழுச்சி ஏற்படுமென்று-அதுவும் இவ்வளவு விரைவில் ஏற்படுமென்று அதிலும் இந்த அளவுக்கு விறுவிறுப்போடு ஏற்படுமென்று யாரும் கருதியதில்லை.

ஆனால், இன்றோ, நாமே கண்டு மலைக்கும் அளவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் நாங்கள் தமிழர்கள் என்று மார்தட்டிக் கூறுமளவுக்கு விழிப்புணர்ச்சி உருவாகியிருக்கிறது. நாம் யாரையாவது பார்த்து, “உங்கள் பேச்சு ஒரு மாதிரியாக இருக்கிறதே! உங்கள் நடை என்னவோ போல் இருக்கிறதே! ஐயன“மீர்! நீவீர் தமிழர் அல்லரோ?” என்று கேட்டால், உடனே அவர்கள் சீறியெழுந்து “நாங்கள் தமிழர்கள் அல்ல, எப்படிக் கூறலாம் அப்படி?” என்று கேட்கிற அளவுக்குத் தமிழ் மொழிக்கும் தமிழன் என்ற சொல்லுக்கும் நல்லதோர் ஏற்றமும் செல்வாக்கும் ஏற்பட்டிருக்கின்றன. தமிழகம் இத்தகைய எழில்மிகு நிலையைப் பெறுவதற்காக உழைத்தவர்களில் முன்வரிசையில் இருப்போரில் முதலிடம் பெற்றவர் நம் மணிமொழியார் அவர்கள். சென்ற நாற்பது ஆண்டுகளாக நற்பணி ஆற்றியுள்ள மணி மொழியார் அவர்கள், அப்படிப் பணியாற்றியதால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக இன்னமும் நாற்பது ஆண்டுகள் உடல்வளத்தோடும் திகழ்ந்து தொடர்ந்து பணியாற்றக்கூடிய நிலை பெற்றிருக்கிறார்.

பொது வாழ்வு தரும் வயதின் பெருமை!
தனி வாழ்வில் உள்ளோருடைய வயதைச் சொன்னால் அதனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடும். ஆனால் பொது வாழ்வில் உள்ளோருடைய வயதைச் சொன்னால் அதனால் பொது வாழ்வுக்கு இலாபம் உண்டு. இந்த வகையில் மணிமொழியாருடைய வயது அறுபதை முடித்துவிட்டது என்னும் உண்மை, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இலாபம் தரும் உண்மையே ஆகும். இந்தக் கழகத்தில் இருப்பவர்கள் எல்லாம் இளைஞர்கள் அனுபவம் இல்லாதவர்கள் இளம் பருவத்தில் ஏற்படக் கூடிய ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டவர்கள் என்னும் ஒரு குற்றச் சாட்டு நம் கழகத்தின் மீது சில சமயங்களில் வீசப்படுகிறது. அத்தகைய குற்றச்சாட்டுக்குத் தானும் இலக்காகாமல் நம் இயக்கத்தையும் அக் குற்றசாட்டிலிருந்து காப்பாற்றுகிறார் மணிமொழியார் அவருடைய வயதின் மூலம்.

நானும் அவரும் தொடங்கிய ‘நவயுகம்’
இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மணிமொழியார் அவர்களும் நானும் இணைந்து நின்று நவயுகம் என்னும் வார இதழ் நடத்தியது பற்றி நண்பர்கள் பலர் இங்கே தங்கள் சொற்பொழிவுகளில் குறிப்பிட்டார்கள். அப்போதுதான் நான் கல்லூரியிலிருந்து வெளிவந்த காலம். மணிமொழிந்தார் அவர்களும் அப்போதுதான் புதிதாக அச்சகம் ஒன்றைத் தொடங்கி வேறு ஓர் அமைப்புக்காக அதை நடத்தி வந்த நேரம், அந்தக்காலம் என்னிடம் எழுதும் ஆற்றல் இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியாத காலம். அவரிடமோ பண வசதி இல்லாத நேரம். இப்படிப்பட்ட நாங்கள் இருவரும் சேர்ந்துதான் நான் ஆசிரியராகவும், மணிமொழியார் வெளியிடுபவராகவும் இருந்து பத்திரிகையைத் தொடங்கினோம். அதுவும் நாங்கள் அந்தக்கிழமை இதழைத் தொடங்கிய நேரம், காங்கிரஸ் கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று வீர உலா வந்துகொண்டிருந்த நேரம்.

நாங்கள் சேர்“ந்திருந்த நீதிக் கட்சியோ, பிழைத்திருக்கிறதா இல்லையா என்று ஐயுறத்தக்க நிலைக்கு ஆட்பட்டுத் தத்தளித்த நேரம். இத்தகைய பரப்புவதற்காகக் கிழமை இதழ் ஒன்று தொடங்கவேண்டும் என்றும், அதற்கு நான் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நானும் இணங்கினேன். ஒரு பத்திரிகையை நடத்துவதற்குத் தேவையான அளவு பணம் அவரிடம் அப்போது இல்லை. ஆனால் அதை நான் உணர முடியாத வகையில் அவர் நடந்து கொண்டார். பண நெருக்கடி பலமுறை பத்திரிகையின் வரவு செலவுக்கணக்கு எப்படி இருக்கிறது என்று நானாகக் கேட்ட நேரங்களிலும் ஒரே ஒரு புன்னகையைத்தான் விடையாக அளிப்பார்.
இப்படியெல்லாம் நிதிநிலையைப் பற்றி அவர் என்னிடம் தெரிவிக்காமல் இருந்ததற்குக் காரணம், அதனைத் தெரிவித்தால் இளைஞனாகிய நான் பத்திரிக்கை நடத்தும் ஓர் ஆர்வத்தை இழந்து விடுவேனோ என்கிற அச்சம் அவருக்கு இருந்ததுதான்.

மகிழ்ச்சியும் பூரிப்பும்!
இந்த உண்மையினை நான் இப்போது எடுத்துக் கூறுவதற்குக் காரணம், அந்தக் காலத்திலேயே பத்திரிகை நடத்துவதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பதை எடுத்துக்காட்ட அல்ல. கடன் வாங்கியாவது பத்திரிகை நடத்துவது என்பது தமிழகத்தில் நெடுநாட்களாக இருந்து வருகிற வழக்கம். ஆகவே, அது அல்ல இங்கே கவனிக்கப்பட வேண்டிய உண்மை. அப்போதுதான் கல்லூரியை விட்டு வெளிவந்த என்னைப் பத்திரிகைத் துறையிலும், பொது வாழ்விலும் ஈடுபடுத்தி முன்னேற்றமடையச் செய்வதில் அவர் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை எடுத்துக் காட்டத்தான் இந்த உண்மையைக் கூறுகிறேன். அவர் அந்தக் காலத்தில் எனக்கு ஊட்டிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எண்ணினால் இப்போதுகூட எனக்குப் பெரியதோர் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அவரும் நானும் சேர்ந்து பத்திரிகை நடத்திய அந்நாட்கள், நம் அருமை நண்பர் இளஞ்செழியன் அவருடைய இல்லத்தில் சின்னஞ்சிறு பாலகனாக உலவிக் கொண்டிருந்த காலம் இளஞ்செழியனின் தம்பியோ தொட்டிலிலோ, கட்டிலிலோ தவழ்ந்து கொண்டிருந்த நேரம். அவ்வளவு நீண்ட காலத்திற்கு முன்னாலேயே நாங்கள் இருவருமாகச் சேர்ந்து பத்திரிகை நடத்தினோம் என்கிற செய்தியை இன்றைய தினம் உங்களிடம் தெரிவித்துக் கொள்வதில் உண்மையிலேயே நான் பூரிப்படைகிறேன்.

அவரது குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு!
மணிமொழியார் அவர்கள் பத்திரிகை ஒன்றை நடத்தி அதன் மூலம் தன் கைப்பொருளை இழப்பது கண்டு அவர்களுடைய வாழ்க்கைத் துணைவியார் அந்த நாட்களில் ஓரளவுக்காவது மனவருத்தம் கொண்டே இருப்பார்கள். எந்தப் பெண்மணியும் தன் துணைவர் இருக்கும் பொருளை மேலும் வளர்த்து, வீட்டை மாளிகையாக்கி, தோட்டத்தை நிலபுலமாக்கி, நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கை. அந்த ஆசைக்குத் தன் துணைவரின் பொது வாழ்வால், இடையூறு நேரிடும் போது வருத்தப்படுவதும் இயற்கை. அந்த நாட்களில் மணிமொழியாரின் வாழ்க்கைத் துணைவியாரோ, குடும்பத்தாரோ, எந்தக் காலத்திலும் அவருடைய பொதுவாழ்வுக்கு இடையூறாக இருந்ததில்லை; அவருடைய அருமைத் துணைவியார் கூடப் பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பல நற்பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தாரிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்க வில்லை என்றால், அவர்கள் பெருந்துயரத்திற்கு ஆளாகித் திண்டாட வேண்டியிருக்கும். ஆனால், நம்முடைய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கெல்லாம் அவரவர்களுடைய குடும்பத்தாரிடமிருந்தும் மகளிரிடமிருந்தும் மிகச் சிறந்த ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. அத்தகைய ஒத்துழைப்பு மணிமொழியாருக்கும் கிடைத்திருக்கிறது. அப்படிக் கிடைத்திருப்பதால்தான் இத்தகைய அரும்பணிகளையெல்லாம் அவரால் ஆற்ற முடிந்திருக்கிறது. இந்தத் துறையில் மணிமொழியாருடைய குடும்பம் தலை சிறந்ததோர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திருக்கிறது.

இரு குடும்பம் பெற்ற மணிமொழியார்!
மணிமொழியார் அவர்கள் அறுபது வயது நிறைந்தவராகக் காட்சி தரும் இந்த நேரத்தில், அவரால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட இரண்டு குடும்பங்களில் அவருடைய தனிப்பட்ட குடும்பத்தைப் பார்த்தாலும் சரி, திராவிட இயக்கம் என்கிற பெரிய குடும்பத்தைப் பார்த்தாலும் சரி, அவருக்குப் பூரிப்பும் பெருமையும்தான் ஏற்படுமே தவிர, ஒரு துளி கவலையும் ஏற்பட நியாயமில்லை. மணிமொழியார் கல்லூரியிற் பயி“ன்றதில்லை. ஆனால், அவருடைய அருமைத் திருமகனார் இளஞ்செழியனோ கல்லூரிப் பேராசிரியராகப் புகழ் பெற்று விளங்குகிறார். அதுமட்டுமல்ல, மணிமொழியாரைப் போலவே இளஞ்செழியனும் அவருடைய இளமையிலிருந்தே சிறந்த அறிவாற்றலைப் பெற்றுத் திகழ்கிறார். மற்றோர் மகனும் கல்லூரிக்கல்வி பெற்று அரசாங்க அலுவலில் அமர்ந்து நன்முறையில் வாழ்கிறார். இப்படிப்பட்ட தலைசிறந்த நிலையில் தன் குடும்பம் விளங்குவதைக் காணும் போது மணி மொழியாருக்குப் பூரிப்பு ஏற்படாமலா இருக்கும்?
மணிமொழியாரால் வளர்க்கப்பட்ட மற்றொரு குடும்பமும் திராவிடர் இயக்கம் என்கிற குடும்பமும் மிகச்சிறந்த நிலையிலேயே உள்ளது. இன்றைய தினம் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் நான் வெற்றி பெறுவதற்காக அவர் அரும்பணி ஆற்றினார். ஆனால், அப்போது அவரால் என்னை வெற்றி பெற வைக்க முடியவில்லை. பிறகோர் சமயம் அவரே அத்தேர்தலுக்கு நின்றார். அப்போது அவராலும் வெற்றி பெற இயலவில்லை.

சீமான்கள் பெறாத பேறு!
ஆனால், இந்நாளிலோ, மணிமொழியார் அவர்களே, மணிவிழாக் கோலத்தில் உள்ள தங்களை வாழ்த்த, சென்னை நகர மேயரும் துணைமேயரும், நாற்பத்தி ஐ“நது தி.மு.க உறுப்பினர்களும், நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளைப்போல்-உங்களுடைய அடையாளச் சின்னங்களைப் போல் உங்களுடைய ஓயாத உழைப்பின் விளைவாக நகராட்சி மன்றத்தின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதைவிடச் சிறந்த பேற்றை, அறுபது வயது நிரம்பிய சீமான்கள்கூடப் பெற்றதில்லை. உங்களுடைய ஆற்றலின் துணையால், நம் இயக்கத்தைச் சேர்ந்த பல சாதாரண உறுப்பினர்கள் பிறரைத் தோற்கடித்திருக்கிறார்கள். மணிவிழாக் கோலத்தில் நீங்கள் வீற்றிருக்கும் இந்நேரத்தில் நான் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்ள விழைகிறேன் நீங்கள் வளர்த்த பிள்ளைகள் ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆள இருக்கிறார்கள். ஒரு காலத்தில்... என்று நான் குறிப்பிட்டேன் அடக்கம் காரணமாக, மிக விரைவில் என்று கருதுகிறார்கள் மாற்றார்-மருட்சி காரணமாக.

தமிழகம் இன்றைய தினம் எழுச்சி பெற்றிருக்கிறது என்பதை மட்டுமல்ல. அந்த எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் யார் காரணம் என்பதைக் கண்டறிந்து போற்றி மகிழ்கிற சிறந்த பண்பையும் பெற்றிருக்கிறது என்பதைத்தான் இந்த மணிவிழா எழில்பட எடுத்துக் காட்டுகிறது.

மறக்க முடியுமா மயிலை சிவமுத்துவை?
இந்த மணிவிழாவை நடத்தும் குழுவின் தலைவராக இங்கே வீற்றிருக்கும் என் அருமை நண்பர் மயிலை சிவமுத்து அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது கையிலே ஒரு சிறு சாக்கட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வீதிதோறும் சென்று பலகைகளில் தமிழ் முழக்கங்களை எழுதி எழுதித் தமிழ்ப் பற்றை ஊட்டிய பெருமகனார ஆவார். இங்கே அமர்ந்திருக்கின்ற பல தாய்மார்கள், அந்தக் காலத்தில் ஆற்றிய அரும்பணியின் விளைவாக, இன்றையதினம் சட்டமன்றத்தின் தலைவர் கன்னட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர்கூட அழகு தமிழில் பேசுகிற அரிய காட்சி உருவாகியிருக்கிறது. இவ்வாறு மணிமொழியாரொடு சேர்ந்து நின்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அரும்பணி புரிந்தவர்களெல்லாம் இங்கே வீற்றிருப்பதைக் காணும்போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயர்ந்த பண்பாளராகிய மணிமொழியார் என்னுடைய நீண்ட கால நண்பர் என்பதால் மட்டுமல்ல, நாட்டின் நல்வாழ்வுக்காகத் தலைசிறந்த தொண்டாற்றியிருப்பவர் என்பதால் மட்டுமல்ல, என்னுடைய ஊராகிய காஞ்சிபுரத்தில் பிறந்தவர் என்பதாலும் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
தொண்டை நாடு சான்றோருடைத்து!

பல நூற்றாண்டுகட்கு முன்னாலேயே ஒரு தமிழ்ப் பெரும் புலவர், தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளைப்பற்றிப் பாடத் தொடங்கியவன், சோழநாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்று இயம்பினார். பாண்டியநாட்டைப் பற்றிப் பாடுகையில் பாண்டிய நாடு முத்துடைத்து’ என்று கூறினார். சேர நாட்டைப் பற்றிக் கூறுகையில், ‘சேரநாடு வேழமுடைத்து’ என்று பாடினார். ஆனால், காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்ட தொண்டை நாட்டைப்பற்றிக் கூறும்போதோ ‘தொண்டை நாடு சான்றோருடைத்து’ என்று இயம்பினார்.

இதிலிருந்து காஞ்சி மாநகரம் பண்டைக் காலத்திலிருந்தே சான்றோர்களை உடையதாக இருப்பதை நாம் காண்கிறோம். நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகிற அந்தச் சான்றோர் வரிசையைச் சேர்ந்த அருமை நண்பர் மணிமொழியாருக்கு, அவருடைய மணிவிழா மாண“புற நடைபெறும் இந்த நேரத்தில், இந்தப் பொன்னாடையை அணிவித்து, அப்படி அணிவிப்பதன் மூலம் நானும் மகிழ்ச்சியடைந்து உங்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறேன்” வணக்கம்.

17.5.60