அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மக்கள் மண்டியிட்டது அந்தக்காலம்!

தன்மான இயக்கச் சாதனைபற்றிப் பொதுச்செயலாளர்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்டத் தி.மு.கழகத்தின் இரண்டாவது அரசியல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகையில், பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்கள் கம்யூனிஸ்டுகள், தி.மு.கழகத்திற்கும், காமராசருக்கும் தொடர்புள்ள கற்பிப்பதைக் கண்டித்துப் (விவரம் நேற்றைய இதழில் வெளிவந்துள்ளது) பேசியதைத்தொடர்ந்து மேலும் அவர் குறிப்பிட்டதாவது:
“இதுவரையில் நாம் செய்து வந்திருக்கிற சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் என்ன பலனைத் தந்துவிட்டது என்று சிலர் நினைக்கிறார்கள்.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கட்டப்பட்ட புதிய கோயில்கள் எத்தனை; பள்ளிக்கூடங்கள் எத்தனை?

நடத்தப்பட்ட சமாராதனைகள் எத்தனை? துவக்கப் பட்ட பிரசவ விடுதிகள் எத்தனை?

ஆதினங்களுக்கு மானியங்கள் புதிதாக எவ்வளவு தரப்பட்டன?

பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் கட்ட எவ்வளவு பணம் தரப்பட்டது?

கணக்கெடுத்துப் பார்க்க வேண்டும்
இவைகளை எல்லாம் கணக்கெடுத்துப் பார்த்தால் எத்தனை கோடி ரூபாய், மதக் காரியங்களுக்கு விரயமாகி இருக்கக் கூடியவை, மக்களுக்கு வாழ்வு தருவதற்காகச் செலவிடப் பட்டிருக்கின்றன என்று தெரியவரும்.

சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலை கோயில் ஒன்றிலிருந்து அறிக்கை ஒன்று வெளிவந்தது. கோயிலில் நடைபெறும் அர்ச்சனை போன்ற காரியங்களுக்காக நாள் தோறும் ரூ.50 தேவைப்படுவதாகவும், அந்தச் செலவை ஏற்றுக்கொள்ள யாரேனும் பக்தர்கள் முன்வரவேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பத்திரிகையில் விளம்பரம் செய்து பக்தர்களைத் தேடி அலைந்து, தினசரிச் செலவு செய்யப்பட வேண்டிய அளவுக்கு மக்களிடம் மதத்துறையில் அக்கரையற்ற தன்மை ஏற்பட்டு விட்டிருக்கிறது என்பதுதானே அதற்குப் பொருள்? அந்த நிலைக்கு மக்களை இழுத்து வந்திருப்பது சுயமரியாதை இயக்கம்தானே!

மக்களிடையே மடாதிபதிகள்
முன்பெல்லாம் கோயில் காரியங்கள் பத்திரிகையில் விளம்பரம் செய்தா நடைபெறும்?

இன்று மடாதிபதிகள் எல்லாம் மக்களை நாடி வருகிறார்களே!

குன்றக்குடி அடிகளார் இப்பொழுதெல்லாம் மக்களிடம் பிரச்சாரம் செய்ய முன்வருகிறாரே!

அப்படி மடாதிபதிகள் மக்களை நோக்கி எப்பொழுது வர ஆரம்பித்திருக்கிறார்கள்?

தருமபுரி ஆதீனகர்த்தா சமீபத்தில் பெண்களுக்கான பிரசவ விடுதி ஒன்றிற்கு ஏராளமான மானியம் தந்திருக்கிறாராம்!
முன்பெல்லாம், மக்கள் மடங்களுக்கு மானியம் தந்தார்கள். இப்பொழுது மடாதிபதிகள் மக்களுக்குக் காணிக்கை கொடுக்கிறார்கள்.

மாற்றத்திற்கு யார் காரணம்?
சுயமரியாதை இயக்கத்தவர் பெருமைப்பட வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை.

பெண்களின் நன்மை கருதி இருதார மணத்தடைச் சட்டம் வந்திருக்கிறதே. அது யாரால்? சுயமரியாதை இயக்கப்பிரச்சார வலிமையினால்தானே! எனவேதான், நாம் தொடர்ந்து சமுதாயச் சீர்திருத்தம் குறித்துப் பேசியாக வேண்டியவர்களாக இருக்கிறோம்.

(நம்நாடு - 26.8.54
)