அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மக்களாட்சி மலர வழிகோலுக!

“முன்பொரு முறை மக்கள் சபையில் அவைத் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரும், துணை அவைத் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை மதிக்கிறது, உண்மையான மக்களாட்சி முறையைக் கடைப்பிடிக்கிறது‘ என்று அப்போது விளக்கம் தரப்பட்டது. மேலை நாடுகளிலும் இது போன்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.

துணைத்தலைவர் பதவி தி.மு.க.வுக்குத் தரப்படுமா?

தமிழகத்தில் ஆளும்கட்சி உண்மையான மக்களாட்சி முறையைக் கடைப்பிடிக்கப் போகிறதா என்று நாட்டு மக்கள், அவைத் தலைவர், துணை அவைத் தலைவர் தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறார்கள். ஆளுங்கட்சி உண்மையிலேயே உளமராக எதிர்க்கட்சியை வரவேற்பதாக – அதை மதிப்பதாக கொண்டிருந்தால், துணை அவைத் தலைவர் பதவியைத் தி.மு.கழகத்திற்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். ‘எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பை ஆளும் கட்சியினர் கோருகிறார்கள்‘ என்பதும் புலனாகும், உண்மையான மக்களாட்சி முறைக்கு வழிகோலுவதாக அமையும். அப்படி ஆளும் கட்சியினர் விட்டுக் கொடுக்காவிட்டால், ‘நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம்‘ என்று பொருள் அல்ல“.

எம்.ஜி.ஆர். – எஸ்.எஸ்.ஆர். பாராட்டு விழா!

இந்தக் கருத்தை அண்ணா அவர்கள் தமிழக மேல் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சி நடிகர் திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களையும், சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன் அவர்களையும் பாராட்டி ‘மேகலா‘ திரைப்பட நிறுவனத்தார் மயிலாப்பூர் உட்லண்ட்சு உணவு விடுதியில் பாராட்டு விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

அண்ணா அவர்கள் மேலும் கூறியதாவது :

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தேவையான இடங்களுக்குக் கலைஞர்களைத் தி.மு.கழகம் அனுப்பிவருகிறது. ‘கலைக்கும் அரசியலுக்கும் தொடர்பு தேவையா?‘ என்று ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசியல் என்பதும் ஒரு கலைதான். கலைக்கு இலக்கணம், எண்ணங்களை ஓர் உருவாக அமைப்பது தான். பலர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தாலும், அரசியல் அவர்களை இணைத்துதான் இருக்கிறது.

அரசியல், கலை தொடர்பு என்ன?

கலைஞர்கள் அரசியல் கட்சிகளில் சேராமல் இருக்கலாம், ஆனால், அரசியல் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தி.மு.கழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்குச் சட்ட மன்றத்திலும் இடம் கிடைக்கும், சிறைச்சாலைக்கு அழைப்பும் கிடைக்கும்.

நம்நாட்டில், கலைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதினால் எந்த விதப் பேராபத்தும் ஏற்பட்டுவிடாது.

தி.மு.கழகத்தைக் கண்டு பலர் அச்சம் கொண்டிருக்கலாம், அவர்கள் அனைவரும் கழகத்தை அணுகவேண்டும், பணியாற்றுவதைப் பார்க்க வேண்டும், பிறகு பிடிக்கவில்லை எனில் ஓடிவிடலாம். தூரத்திலிருந்தே அச்சம் கொள்ளத் தேவையில்லை, “வேடம் போட்ட இராவனைக்கண்டு மிரளுவதைப் போல, தி.மு.கழகத்தைக் கண்டு காங்கிரசுக்காரர்கள் மிரளுகிறார்கள்! நம் கொள்கைகளை அறிந்து அநாவசியமாக இவ்வாறு மிரள வேண்டாம், மிரளுவதை விட்டு, தாராள மனப்பான்மையுடன் நெருங்கி வாருங்கள், எங்களுடைய கொள்கைகளைப் புரிந்து கொள்ளுங்கள்“ என்று அண்ணா அவர்கள், தமிழக மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கும், சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரனுக்கும் நடந்த பாராட்டு விழாவில் பேசுகையில் அன்பழைப்பு விடுத்தார். அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி நேற்றைய இதழில் வெளிவந்திருக்கிறது மற்றொரு பகுதி இங்குத் தரப்படுகிறது.

“மேல்சபையில் என்ன செய்யமுடியும் – என்று சட்டமன்ற மேலவைக்குச் செல்லும் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு ஐயப்பாடு ஏற்பட்டது. ஏனெனில், அச்சபை பற்றி நாட்டில் பரவலாக உள்ள கருத்து – ஆதரவாக இல்லாததுதான்.

எதையும் ஒரு தடவைக்குப் பல தடவை யோசித்துக் செய்கிறவர் எம்.ஜி.ஆர். உணர்ச்சிவயப்பட்டவன்‘ என்று அவரே கூறிக் கொண்டார். அவருடைய அந்த உணர்ச்சிகளைத் தணியச் செய்ய மேல்சபை.
மேலும் கலைஞர்கள் வேண்டும்!

நம்முடைய கழகத்தின் சார்பில் மூன்று கலைஞர்கள் தமிழகச் சட்டமன்றங்களில் இடம் பெற்றுள்ளனர், ‘இவர்கள் மட்டும் போதும்‘ என்று நான் கருதவில்லை, மேலும் பல கலைஞர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பது என் அவா.

எழுத்தறிவு அதிகம் இல்லாத ஒரு நாட்டில் கலை மூலமே அதிகமாக – மக்களுக்குத் தேவையானவற்றைச் சாதிக்க முடியும் நல்ல கருத்தக்களை மக்களிடையே பரப்பக் கலை உலகில் நல்ல வாய்ப்பு உள்ளது. அதைப்போல், சட்டமன்றத்தில் கலைஞர்கள் இடம் பெறுவதால் இதை இன்னும் செம்மையாக நடத்திக்காட்ட முடியும்.

சினிமாவும் நாடகமும் இசையும், நாட்டியமும் மட்டுமே கலை அல்ல, அரசியலும் ஒரு கலைதான், எண்ணுகின்ற எண்ணங்களை ஒருமுகப்படுத்திச் செயல்படுத்துவது என்பதுதான் கலைக்கு இலக்கணம்.

அதைப்போல, தற்கால வாழ்க்கைக்கு அரசியல் மிக அத்தியவாசியமான ஒரு கலையாகும். அடுப்பறையிலிருநது மயான பூமிவரையில் யாரும் அந்த அரசியல் கலையிலிருந்து தப்பிவிட முடியாது. இதற்குக் காரணம் இன்றைய அரசியல் எல்லாத் துறைகளிலும் நுழைந்துவிட்டது. இதன் சர்வ வல்லமையிலிருந்து யாரும் தப்பிவிடமுடியாது.

சர்வ வல்லமை படைத்த அரசியல்!

‘என்ன சாப்பிடலாம்‘ என்பதிலிருந்து, ‘எத்தனை குழந்தைகளைப் பெறலாம்‘ என்பதுவரை அரசியல் நுழைகிறது. அதனால் தான் சொன்னேன்‘ – இதன் சர்வ வல்லமையிலிருந்து யாரும் தப்பிவிட முடியாது‘ என்று! ஒருவர் அரசியல் கட்சி எதிலும் சேராமலிருக்கலாம், அதற்காக அரசியலில் இல்லை என்பது ஆகாது.

தமிழகக் கலையுலகில் துவக்கக் காலத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகக் கம்பெனி நடத்தி வந்தபோது ஒரு நல்ல காரியத்தைச் செய்து வந்தார்கள், கலைஞனுக்கு நடிக்க மட்டும் தெரிந்தால் போதாது, உலகமும் தெரிந்திருக்க வேண்டும்‘ என்பதற்காகக் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார்கள். ஆகவே, கலைஞனுக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வி, 1962 ஆம் ஆண்டுக்கு ஏற்றது அல்ல!

‘கலைஞனுக்கு அரசியல் தேவை தானா?‘ என்ற கேள்வியில் ‘கலைஞன் இப்படிப்பட்ட அரசியலில் !தி.மு.க. அரசியல்) நுழையலாமா?‘ என்ற கேள்விதான் தொக்கி நிற்கிறது, அண்ணாதுரையின் அரசியலில் 6 மாதம் சிறைச்சாலை, இந்த அரசியல் நல்லதா?‘ என்ற கேள்விதான் தொக்கி நிற்பது தெரிகிறது.

அது அல்லவோ அரசியல்!

அமைச்சருக்குப் பக்கத்தில் மாலை போட்டுக் கொண்டு கவானரோடு கைகுலுக்கி போட்டோ பிடித்துக் கொள்ளும் அரசியலை இங்கு எதிர்பார்க்கமுடியாது. ‘அது அல்லவோ அரசியல் என்று எண்ணுகிறவர்களுக்கு இந்த !தி.மு.க.) அரசியல் பிடிக்காது.

எங்கள் கலைஞர்களுக்குச் சட்டசபையிலும் இடம் கிடைக்கும் – சிறைச்சாலைக்கும் அழைப்பு கிடைக்கும்.

எங்களுடைய கழகத்தை ஒரு விடுதலை இயக்கம் என்று கருதிக் கொண்டு பணிபுரிந்து வருகிறோம். இன்னும் புரிகிற பாஷையில் சொல்ல வேண்டுமானால், இது ஒரு தேசிய இயக்கம். இதில் கொத்துவேலை செய்கிறவருக்கும், தச்சு வேலை செய்கிறவருக்கும் தொழிலாளிக்கும், கலைஞனுக்கும் இடம் உண்டு.

நண்பர்கள் இராமச்சந்திரனும், இராசேந்திரனும், கலை உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கழகத்தின் புனிதத் தன்மையை அதிகரிக்கிறது.

அரசியல் தெரியாதவர் பேச்சா இது?

‘இலட்சக் கணக்கானவர்களுக்கு வேலையும் அரசாங்கத்திற்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருமானமும் கொடுக்கும் இந்தக் கலைக்கு அரசாங்க ஆதரவு இல்லை‘ என்று இங்குப்பேசிய நண்பர் ஏ.எல்.சீனிவாசன் குறிப்பிட்டார்.

‘நான் அரசியல்வாதி அல்ல‘ என்று அவர் சொல்லிக் கொண்டார் என்றாலும், அவர் பேசியதைவிட ஆபத்தான அரசியல் வேறு எதுவும் இல்லை.‘

இன்னும் சொல்லப்போனால் சர்க்காருக்கு எதிராகத் தூண்டிவிடுகிற குற்றத்தை அவர் செய்தார் என்று கூட சொல்லலாம்! ஆகவே, அரசியல் தெரியாது என்று யாரும் சொல்லிவிட முடியாது!

இராமச்சந்திரனும், இராசேந்திரனும் அவர்கள் அடைய வேண்டிய இடத்தை அடைந்துவிட்டார்கள். அதேபோன்ற நிலையைக் கலைத்துறையில் அவர்கள் அடையாவிட்டால் நான் வெட்கப் படுவேன். அவர்கள் நல்ல பெயரோடும், புகழோடும் விளங்க வேண்டும்.

பணத்தைவிட தருகின்ற கருத்து பெரிது!

இந்த இயக்கத்தில் (தி.மு.க.) சேருவதால் கலை உலகத்தில் அவர்களுக்கு சில பெருத்த நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கலாம் கொண்ட கொள்கைக்குப் புறம்பான கருத்துக்கள் அமைந்த படத்தில் நடிக்கத் தங்களை ஆட்படுத்திக் கொள்ளாததால் அவர்கள் பல நஷ்டங்களை அடைந்துள்ளதையும் நான் அறிவேன். பெறுகின்ற பணத்தைவிட தருகின்ற கருத்து பெரிது என்று உறுதியான கொள்கை படைத்தவர்கள் இவர்கள். இந்த இருவரும்புதுமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மக்கள் வாழ்க்கையில் புதுமை காணப் பாடுபடவேண்டும்.

(நம்நாடு - 29-3-1962)