அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மக்களாட்சி மலர்ந்தும் மக்கள் வாழ்வு மலர்ந்ததா?

சென்னை விக்டோரியா மாணவர் விடுதியின் ஆண்டு விழாவும், பொங்கல் விழாவும் 10.2.60 மாலை 5 மணியளவில் தோழர் கிருட்டிணசாமி தலைமையில் நடைபெற்றது. விருந்தினருக்கு மாணவர்கள் தேநீர் விருந்தளித்தனர். தோழர் கிருட்டிணமூர்த்தி தமிழ் வணக்கத்துடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. தோழர் முகம்மது நபி விருந்தினரை வரவேற்றுப் பேசினார். தோழர் சம்பந்தம் ஆண்டறிக்கை படித்தார்.

மாணவர்கள் நடத்திய இசைப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அண்ணா அவர்கள் பரிச வழங்கினார்.

தலைவர் முன்னுரைக்குப் பின், தோழர் அகிலன் அவர்கள் மாணவர்கள் விஞ்ஞானத்தில் அதிகம் அக்கறை காட்டுதல் வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள், தமிழ் மக்களின் பண்டைச் சிறப்புப் பற்றிப் பேசினார்.

இறுதியாக அண்ணா அவர்கள் பேசியதாவது:
“என்னை இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று அன்போடு அழைத்த மாணவ நண்பர்களையும், அதைத் துணிவோடு அனுமதித்த விடுதி நிர்வாகிகளையும் நான் மனதாரப் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நல்ல பயன் அடைந்தார்கள்!
மாணவர்கள் கல்லூரிக் காலத்தில் தாங்கள் வாழ்கின்ற இத்தகைய விடுதிகள், மாணவர்களிடத்திலே நல்ல மகிழ்ச்சியையும், பல்வேறு இடங்களிலிருந்து வருகின்ற மாணவர்கள் ஒரே இடத்தில் தங்கி ஒருமித்த கருத்துகளைப் பெறுவதற்குள்ள இதுபோன்ற வாய்ப்புகளையும் நாம் அனைவரும் போற்றி வரவேற்க வேண்டும்.

மாணவர் விடுதிகள் நாட்டிலே நல்ல பல சூழ்நிலைகளை உருவாக்கித் திருகின்றன. இப்பொழுது மாணவர் விடுதிகள் நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றன. மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெற இத்தகைய விடுதிகள் நல்ல வசதிகள் உள்ளவைகளாக, அமைய வேண்டுமென்று நான் பெரிதும் விரும்புகிறேன்.

நாங்கள் கல்லூரிகளில் படிக்கும் பொழுது இது போன்ற விடுதிகள் தொகையிலும் வசதியிலும் மிகக் குறைவாகவே இருந்து வந்தன. இப்பொழுது ஓரளவுக்கு விடுதிகள் அதிகரிக்கப்பட்டு நல்ல வசதிகளோடு வளர்ந்து வருகின்ற நிலைமையில் மாணவர்கள் நல்ல பலனடைந்து வருகிறார்கள். அதன் பயனை இங்குள்ள மாணவர்களும் பெற்று மிக்க மகிழ்ச்சியோடு இருப்பதையும், அதிலும் தமிழ் மன்றத்தை நடத்திக் கொண்டு வருகின்ற பண்பையும், அதன் மூலம் பல அறிவாளிகளை அழைத்து நல்ல கருத்துகளைக் கேட்டு, அதனால் நல்ல பலனையும் அடைந்திருக்கிறார்கள் என்பதனையும், ஆண்டறிக்கையின் மூலமாக அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

பூத்துக் குலுங்கிய மரம்
மாணவர்களில் பலர் தங்களுக்குள்ள ஆற்றலை வெளிப்படுத்தி நல்ல எழுத்தாளர்கள் என்றும், பேச்சாளர்கள் என்றும் சொல்லத்தக்க வகையில் அவர்கள் இருப்பது உள்ளபடி நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருகின்ற காரியமாகும்.

பொங்கல் விழா என்பது ஒருநாள் பொங்கல் வைத்து உண்டு மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்ல என்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது. பொங்கல் நாள் கழிந்து பல நாட்களாகியும் தொடர்ந்து நம் தமிழ் மக்கள் பொங்கல் விழாவை நடத்தி வருகிறார்கள்.

ஒரு மரத்தில் மலர் உதிர்ந்துவிட்ட நேரத்தில் அதைப் பார்க்கும் பொழுது இன்ன மாதத்தில் இதிலே மலர் பூத்துக்குலுங்கும் என்று அறிந்து கொள்வதைப் போல் ஒரு காலத்தில் பூத்துக் குலுங்கிய மரத்தைப் போல் நல்ல பண்புகள் நம்மிடத்தில் அந்தக் காலத்தில் இருந்ததை நாம் அறிதல் வேண்டும். அரசியல் கண்ணோட்டத்துடன் இந்த இடத்திலே இதை நான் ஆராயவில்லை.

சின்ன விசயத்தில் பெரிய மாறுபாடு!
15 ஆண்டுகளுக்கு முன்னால் நானும், மற்றும் சிலரும் வடநாட்டிலுள்ள அலிகார் நகரத்திற்குச் சென்றிருந்தோம். அங்குத் திரு.எம்.என்.ராய் அவர்களின் விருந்தினர்களாகத் தங்கியிருந்த பொழுது, அவ்வூரிலுள்ள ஒரு மசூதியைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவைகளைச் சுற்றிக் காண்பிக்க இரண்டு மாணவர்களை எம்.என்.ராய் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். மசூதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டுவரும் பொழுது அதிலே சிறு ஓட்டைகள் இருப்பதை நான் கண்டேன். உடன் என்னுடன் வந்த மாணவரைப் பார்த்து இந்தக் கட்டிடத்தில் இப்படி ஓட்டை இருப்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன்.

மொகலாயர்கள் பாதுஷாக்களாக வாழ்ந்த காலத்தில் இதில் நவரத்தினக் கற்களை வைத்து இழைத்திருந்தார்கள். பிறகு இந்துக்கள் கைப்பற்றிய பிறகு அந்த நவரத்தினங்களை எடுத்துப் போய்விட்டார்கள். அதுதான் நீங்கள் பார்க்கின்ற இந்த ஓட்டை என்று சொன்னார். அந்த மாணவர் இலக்கியம் படித்தவர். ஆனால் எங்களுடன் வந்த மற்றொருவர், என்னுடன் வந்த இன்னொருவருக்கு வேறு பக்கத்தில் மசூதியைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் தனியாக இந்த ஓட்டைகளுக்கு என்ன காரணம்? என்று கேட்டேன். அவர் மொகலாயர்கள் அரசர்களாக இருந்தபொழுது அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு வந்தது. இப்பொழுது பழுது பார்க்கப்படவில்லை. அதனால்தான் ஓட்டை விழுந்திருக்கிறது என்று சொன்னார். முன்பு சொன்னவர் ஒரு முஸ்லீம். பின்பு சொன்னவர் ஒரு இந்து. இவர்கள் இருவரும் எம்.என்.ராய் அவர்கட்கு நெருங்கிய நண்பர்கள்தான். அதிலும் படித்தவர்கள்தான். நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்ல வேண்டியவர்கள் தான். அவர்களிடத்தில் இந்த சின்ன விஷயத்தில் பெரிய மாறுபாடு இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த நாள் உதைபடுவது யார்?
நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்-நாங்கள் அசாமுக்குச் சென்று கொண்டிருந்தோம். அசாமுக்குச் செல்வதற்குப் பிரம்மபுத்திரா நதியைக் கடக்க வேண்டும். நதியைக் கடப்பதற்கு ஒரு படகு இருக்கிறது. அது பெரிய கல்லூரி மணி மண்டபம் போல் இருக்கும். அதில் இரண்டு தாழ்வாரத்திலும் தேநீர்க் கடை இருக்கிறது. நாங்கள் தேநீர் குடிப்பதற்காக ஒரு கடைக்குச் சென்றோம். மற்றொரு பிரயாணி என் சட்டையைப் பிடித்திழுத்து என்ன வேண்டுமென்று கேட்டார். பேச்சில் அல்ல-எல்லாம் சாடையிலேயே நீங்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும். நாங்கள் இருப்பது ஒரு படகு-அதிலிருப்பவர்கள் எந்த வகையிலும் எங்களுக்குத் தொடர்பில்லாதவர்கள் அவர் எங்களைப் பார்த்து “உங்களைப் பார்த்தால் இந்துக்கள் போல் தெரிகிறது. நீங்கள் ஒரு முஸ்லீம் கடையிலா டீ அருந்துவது?” என்றார். “எங்களுக்குத் தெரியும் எந்த கடையில் டீ அருந்தினால் நன்றாக இருக்கும் என்பது” என்று சொல்லிவிட்டு, அந்த முஸ்லீம் கடைக்குச் சென்றோம் நீங்கள் கேட்டால் வியப்படைவீர்கள் அந்த முஸ்லீம் நண்பர் எங்களுக்கு டீ கொடுக்க மறுத்துவிட்டார், “ஏன்?” என்று கேட்டோம். நீங்கள் ஒரு நாளைக்குக் குடித்துவிட்டுப் போய் விடுவீர்கள்; அடுத்த நாள் உதைபடுவது யார்? என்றார். இது போன்ற நிலைமை 15 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது.

அச்ச மனோபாவம் நீங்க வேண்டும்
தமிழர்களுக்கு என்று பண்புகள் பல உண்டு. அந்தத் தனிப்பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய தினம் தமிழர்கள் அதனை ஏன் மறந“திருக்கிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும் அப்படி ஆராய்கின்ற நேரத்தில், நெஞ்சத்தில் கொஞ்சமும் அச்சம் இருக்கக்கூடாது.
அணுகுண்டால் உலகத்திற்குக் கேடு விளையும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தார்கள்; எனினும், இந்த ஆராய்ச்சியினால் பிறகு உலகத்தில் நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் அந்த ஆராய்ச்சியில் துணிந்து ஈடுபட்டார்கள்.

அதைப் போலச் சமுதாயத்தில் இருக்கக்கூடிய பண்புகளை ஆராய்ந்து பார்க்கின்ற நேரத்தில் நல்ல நெஞ்சுறுதி நமக்கு வேண்டும். எதைச் சொன்னால் யார் என்ன கருதூர்களோ என்கின்ற மனோபாவத்தை நீங்கள் நீக்க வேண்டும்.

இந்த எண்ணம் இருந்ததை 5,6 ஆண்டுகளுக்கு முன்னால் கூர்ந்து கவனித்திருக்கலாம். ஒருவர் மற்றொருவரைப் பார்க்கின்ற நேரத்தில், “வணக்கம்” என்று சொன்னால் அவர் கொஞ்சம் புருவத்தை நெறித்து “என்ன வணக்கம் வேண்டியிருக்கிறது? “நமஸ்காரத்திற்கு என்ன வந்தது” என்பார். ஆனால் இப்பொழுது நமஸ்காரம்” என்று தவறிச் சொல்லிவிட்டால் கூட உடனே வணக்கம் என்று சொல்லித் தன்னைத் திருத்திக் கொள்ளுவார். ஒன்று போய் மற்றொன்று வந்துவிட்டது என்கிற மகிழ்ச்சியிலே நான் பேசுவதாக யாரும் எண்ணி விடக்கூடாது. ஒன்றோடு இன்னொன்று வந்து இருக்கிறது என்றுதான் நான் சொன்னேன். “இந்த மாற்றம் நமக்கும் சமுதாயத்திற்கும் தேவையென்பதை ஆராய்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அஞ்சாமை நமக்கு இல்லாத காரணத்தினால்தான் நாம் நெடுங்காலமாக அறிவீனத்தில் உழன்று கொண்டு இருக்கிறோம்.

மாணவர்களுக்கு அழகல்ல!
அக்காலத்தில் நல்ல சமுதாயத்தைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணம் இருந்தது மட்டுமல்ல. அத்தகைய சமூக அமைப்பு எண்ணம் நம்முடைய தனிச் சிறப்பாகவும் இருந்தது.

வேறுபல கருத்துகள் வந்து புகுந்துவிட்டதை நீக்க நம்மால் ஆகுமா என்ற அச்சம் இருக்கக் கூடாது; அப்படி இருப்பது ஆசிரியர்களுக்கு அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு அழகல்ல! மாணவர்கள் வருங்காலத்தில் ஆசிரியர்களாகவும்; வேறு துறையில் முன்னுக்கு வரலாம். ஆனால் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாணவர்கள் கொள்ளுவார்கள் என்று நான் கருதுகிறேன்.

அந்தக் கிராமத்துக்குப் பாதையில்லை
நான் இங்குப் பேசிவிட்டு ஒரு கிராமத்திற்குச் செல்லவிருக்கிறேன். அந்தக் கிராமம் பாதையில்லாத கிராமம். அந்தக் கிராமத்தில் மனிதர்கள்தான் வசிக்கிறார்கள். ஆனால் பாதையில்லை. வரி கொடுக்கும் மக்கள்தான் வாழ்கிறார்கள். இருந்தும் அந்தக் கிராமத்திற்குச் சாலை இல்லை. சுதந்திர நாட்டில்தான் வாழ்கிறார்கள் ஆனாலும் அந்தக் கிராமத்திற்குப் பாதையில்லை. நானும் சட்டசபைக்கு வந்து ஆண்டுகள் மூன்று ஆகின்றன ஆனாலும் அந்தப் பாதையில்லாத கிராமத்திற்கு என்னாலேயே பாதை அமைத்துத் தர முடியவில்லை.

அரசியல்வாதிகளுக்கு உள்ள ஆற்றலே அவ்வளவுதான் என்றால் எதுவும் இல்லாத தனிமனிதர்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அரசியல் என்றால் ஆபத்தானது என்று பலபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட மக்கள் அரசியலில் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது நாம் மக்களாட்சிக காலத்தில் வாழ்கிறோம். இப்பொழுது அரசியல் மக்களிடத்தில் எல்லா வகையிலும் தொடர்பு கொண்டிருக்கிறது. “எத்தனைக் குழந்தைகளைப்பெறலாம்” என்கின்ற அளவு வரை அரசியல் தொடர்பு உள்ளது. ஆனால் அதில் எங்களுக்குக் கவலை இல்லை, தேவையில்லை, அது வேறு யாருக்கோ உரியது என்று விட்டு வைப்போமானால் நிலைமை என்ன ஆகும்.

இது பொதுநல அரசு
முன்பு காவல் அரசு இருந்தது, இப்பொழுது அரசு பொதுநல அரசு!
முன்னால் இருந்த அரசின் வேலை காட்டு மிருகங்களின் தொல்லையை அடக்குவதும், கொடியவர்கள் நாட்டில் புகுந்து கொள்ளையிட்டால் அவர்களைப் பிடித்துத் தண்டிப்பதும் தான். ஆனால் இப்பொழுது இருக்கும் அரசு, பாடங்களை இப்படி இப்படிப் படிக்க வேண்டுமென்று ஆறு திங்களுக்கு ஒரு முறை பாடத்தை மாற்றித் தரத்தக்க உரிமையைப் பெற்றிருக்கிறது.

கல்வித் துறையில் சீர்த்திருத்தங்கள் வேண்டுமென்ற காரணத்தால், புதுப்புது மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன. அதைப் போலவே எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன.

அரசியலில் அக்கறை காட்டுபவர்கள் சமுதாயத்தில் எந்த இடத்திலும் இருக்கத் தகுதியுடையவர்கள்.

கலந்துகொள்ள வேண்டாம்
சில தங்களுக்கு முன்னால் எல்லாக் கட்சிகளும் கூடிப் பேசிய நேரத்தில், நான்தான் முதன்முதல் மாணவர்கள் அரசியலில் கலந்து கொள்ள கூடாது என்ற கருத்தினை வலியுறுத்தினேன். ஆனால் மாணவர்கள் அரசியலைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலை நீங்கள் தொடாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் உங்கள் நிழல் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலிருந்து யாராலும் தப்ப முடியாது.

இன்றைய தினம் என்ன காண்கிறோம்? பெரிய வணிகர்களைச் சந்திக்கிற நேரத்தில், நீங்கள் ‘வியாபாரத்தில் மட்டும் அக்கறை காட்டுங்கள்; அரசியல் உங்களுக்கு வேண்டாம்’ என்கிறார்கள். அதைப்போலத் தொழிலாளர்களையும் அரசியலில் ஈடுபடாதீர்கள் என்கிறார்கள்! விவசாயிகளைப் பார்க்கிற நேரத்தில் அவர்களையும் அரசியலில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறிப்பெரிய சமூகத்தையே ஒதுக்கி வைக்கிறார்கள். ஆசிரியர்களையும் ஒதுக்கி வைக்கிறார்கள். மாணவர்களிடத்திலும் அரசியல் ஒரு மாயா உலகம். இந்த மாயா உலகத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படிச் சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு பகுதியினரையும் பிரித்து விட்டால் எதிர்காலத்தில் அரசியலில் யார் இருப்பார்கள்?

இதற்குப் பெயர் அரசியல் அல்ல!
முன்பு மந்திரியாக இருந்தவர்கள்; இப்பொழுது மந்திரியாக இருப்பவர்கள், எதிர்காலத்தில் மந்திரியாகலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களிடம்தான் இப்பொழுது அரசியல் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதற்குப் பெயர் அரசியலும் அல்ல. முழு ஆட்சியாகவும் இருக்க முடியாது.

மாணவர்கள் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ளுகிறார்கள் என்று அரசியலிலுள்ள பெருந்தலைவர்கள் பேசுகிறார்கள். 23 ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள செய்தித் தாள்களை எடுத்துப் பாருங்கள். மாணவர்கள் எதற்காகக் கிளர்ச்சி செய்கிறார்கள் என்பது தெரியும்.

மாணவர்கள் அரசியல் கிளர்ச்சிகளில் கலந்து கொள்வது மிகமிகக் குறைவு என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எத்தற்காகக் கிளர்ச்சி செய்கிறார்கள்
மாணவர்கள் எதற்காகக் கிளர்ச்சி நடத்தியிருக்கிறார்கள். இரண்டு திங்களுக்கு முன்னாலே பச்சையப்பன் கல்லூரியில் கிளர்ச்சி நடைபெற்றது. எந்த அரசியல் கட்சியில் சேருவது என்பதற்காகவா அக்கிளர்ச்சி நடைபெற்றது? இல்லை. என்ன வகையான சாப்பாடு போடப் போகிறீர்கள் அதைச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கிளர்ச்சி செய்தார்கள். இன்னும் சில பள்ளிக்கூடங்களில் பரிட்சைத் தான் கடினமாக இருக்கக்கூடாது என்று கிளர்ச்சி செய்வார்கள். இது உண்மையா, அடுக்குமா? என்று கேட்கத்தான் தோன்றும்.

பரிட்சை மூலமாக மாணவர்களின் திறமையைக் கண்டுபிடிக்க முடியாது-என்று பெரிய அறிவாளிகள் பேசுகிறார்கள். அதே நேரத்தில் வினாத்தாளையும் கடினமாக்குகிறார்கள். மாணவன் நான் எல்லாம் படித்திருக்கிறேன். ஒரே ஒரு இடம் தெரியாது. அதில் கேள்வி கேட்டுவிட்டாரே என்பான்.

எந்த அரசியல் கட்சித் தலைவரும், மாணவர்களை, தங்கள் கட்சியில் வந்து சேருங்கள் என்று அழைப்பதில்லை.

மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபின், ஆதரவு வேண்டுமென்பதற்காக அரசியல் தலைவர்கள் அழைக்கிறார்கள்.

மாணவர்களைப் பார்த்துச் சிலர் அரசியல் கட்சிகளில் சேராதீர், கெட்டுப்போவீர்கள் என்று சொல்லுகிறார்கள். மாணவர்கள் அவ்வாறு அரசியலில் இல்லை என்பதை அரசியல் உலகத்தை ஊடுருவிப் பார்த்தால் தெரியும்.

சாதிப் பிடிப்பு நீங்க வேண்டும்
நமது நாட்டில் இப்பொழுது அந்நியர்கள் நுழைகிறார்கள் அவர்களை விரட்டவேண்டும், என்கிறார்கள். ஒரே நாளில் அவர்களை விரட்டி விட முடியும். ஆனால் நம்மிடத்திலுள்ள நெடுநாள் விரோதியை நாம் முதலில் விரட்ட வேண்டும்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்று நாம் சொல்லுகிறோம். அதற்காகப் பெயருக்குப் பின்னால் வரும் சாதியை நீக்கிவிட்டால் சாதி ஒழிந்துவிடுமா?

நமது நாட்டில் இன்னும் சாதிப்பித்து நீங்கவில்லை. இந்த 1960 ஆம் ஆண்டிலும் சாதிக்கொடுமை நீடிக்கிறது. இந்தச் சாதிப்பிடிப்பை நீக்கினால்தான் நாடு நலம் பெறும்.

எனவே மாணவர்கள் சாதிப்பிடிப்பிலிருந்து நாடு விடுபடவும் நல்லதோர் சமுதாயம் அமையவும் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”

(நம்நாடு - 12.2.60)