அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மக்களுக்குக் காட்டட்டும்

“ஆதிதிராவிட மக்களுக்கு என்ன நன்மையைச் செய்தது இந்தக் காங்கிரசு ஆட்சி? எவ்வளவு பணம் ஆதித்திராவிடர்களுக்கு இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் செலவழித்தார்கள் என்பதை ஈவு போட்டுப் பார்த்தால் – வகுத்துப் பார்த்தால் 44 காசு ஆகிறது. இது ஒரு ஆளுக்கு – ஒரு நாளைக்கு அல்ல – ஒரு மாதத்திற்குக் கூட அல்ல – ஒரு வருடத்திற்கு! வெட்கம் வேண்டாமா இந்த அமைச்சர்களுக்கு?

நந்தனால் காலத்திலிருந்து, நொந்து கிடக்கும் இந்தக் காலம் வரை நாம் அவரை அடிமைப்படுத்தி வந்திருக்கிறோம். கோழி உலாவும் போது சிறு தீனி தூவுவது போல் ஆதிதிராவிடர்களுக்கு வருடத்திற்கு 44 காசு செலவு செய்கிறார்கள். மாதத்திற்குக் கணக்குப் போட்டால் 3 காசு வருகிறது. அதை ஒரு நாளுக்கு வகுத்தால் காசு கிடைக்காது. அதன் மேலுள்ள தூசுதான் கிடைக்கும்! இவ்வளவுக்குப் பிறகும் நாம் பொறுமையாக இருப்பது, தமிழ் இனத்தின் பெருமையைத்தான் காட்டுகிறது. இந்த ஆட்சியை ஆட்சிப் பீடத்திலிருந்து இறக்குவது உங்கள் கடமையாகும்.“

இவ்வாறு அண்ணா அவர்கள் சென்னை – சிந்தாதிரிப்பேட்டையில், ராகுவேல் நினைவுமன்றச் சார்பில் கடந்த டிச.26இல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கமாவது.

சென்னையில் பழங்குடி மக்கள் வாழுகின்ற பகுதிகளிலும் குறிப்பாக இந்த வட்டாரத்திலும் சிறந்த தொண்டராக – நெஞ்சுரம் படைத்த தீரராக நமது கொள்கைகளை நாடெங்கும் பரப்ப வேண்டும் என்ற கவலையில் தமது நேரத்தையும், நினைப்பையும் செலவிட்டவர் மறைந்த ராகுவேல் அவர்கள் ஆவார்கள், நீண்ட பல நாட்களாக வாழ்ந்து நம்முடைய இயக்கப் பணியாற்றிய நேரத்தில் உழைத்து அவர் வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறார். எனக்குப் பல காலமாக நெருங்கிய நண்பராகவும், தி.மு.கழகம் இந்தப் பகுதியில் பரவலாகப் பரவியதற்குக் காரணமாகவும் இருந்தவரான ராகுவேல் அவர்களின் பெயரால் இந்த அமைப்பினைத் துவக்கி இருப்பது கண்டு மெத்த மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்த அமைப்பினைத் திறந்து வைக்கிறேன். அவரது பெயராலே அமைந்த இந்த மன்றம், அவர் விட்டுச் சென்ற சிறந்த பணியைத் தொடர்ந்து செய்து பல சிறப்பான வெற்றிச் செயல்களைப் புரிய வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்காளர்களைச் சந்தியுங்கள்

நாம் விழிப்போடு இன்றைய தினமே வாக்காளர்களைச் சந்தித்து ஓட்டு கேட்கும் பணியினை உடனடியாகத் துவங்கியாக வேண்டும். பொதுக் கூட்டங்களில் நாம் நாள் தோறும் விளக்கம் கூறிக் கொண்டு வருகிறோம். இனிமேல் துவக்கத்தில் இருந்தா கூறப் போகிறோம்? சுருக்கமாகக் காங்கிரசு ஆட்சியில் மக்கள்படும் அவதியை விளக்கி, கழகக் குறிக்கோளை விளக்கினால் போதும்.

கூட்டம் முடிந்த பிறகு வீட்டுக்குச் சென்று, ‘இவர் இப்படிப் பேசினார் – அவர் அப்படிப் பேசினார்‘ என்று 12 மணி வரை பேசிவிட்டுப் பிறகு தூங்கி, காலை 10 மணிக்கு எழுந்து வேலைக்குப் போய்விட்டால், ஓரிரண்டு தெருக்களைப் பார்ப்பதுகூடக் கடினமாகும்.

காலத்தை வீணாக்காதீர்!

பொதுக் கூட்டங்களை நீண்ட நேரம் நடத்தாமல் குறைந்த நேரத்தில் முடித்தால் நேரத்தில் வீடு செல்லவும், அதிகாலையில் எழுந்து தேர்தல் அலுவலைக் கவனிக்கவும் முடியும். ஆகவே, இருக்கின்ற காலத்தை வீணாக்காதீர்கள், நாட்கள் அதிகம் இல்லை – வேலைகள் அதிகம் – வசதி வாய்ப்புக்களோ மிகவும் குறைவு. மாற்றாருக்கோ வாய்ப்புக்கள், வசதிகள் அதிகம். ஆகவே சுறுசுறுப்போடு பணியாற்றி, இந்தத் தொகுதியில் சென்ற தேர்தலில் வெற்றி தேடி தந்தது போல் இம்முறையும் தோழர் க. அன்பழகன் அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்.

கேள்விக்குறியாக இருந்தவர்!

சென்ற 5 ஆண்டுகளாகச் சட்டமன்றத்திலே அன்பழகன் அவர்கள் மிக திறமையாகப் பணியாற்றியவர். அவருடைய பேச்சை அமைச்சர்கள் பயத்தோடுதான் கேட்பார்கள். ‘எந்தப் புகாரைக் கூறப் போகிறாரோ? எந்த ஊழலை அம்பலப்படுத்தப்போகிறாரோ? எந்த அதிகாரியைச் சந்திக்கு இழுப்பாரோ?‘ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் கேட்பார்கள். அவர் பேசி முடிந்ததும்தான், ‘அப்பாடா, இன்றைய கண்டம் தப்பியது. என்பது போல் பெருமூச்சு விடுவார்கள். அத்தகைய நிலையில், அன்பழகன் அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஒரு கேள்விக்குறியாக இருந்து திறம்படப் பணியாற்றி இருக்கிறார். ஆகவே அத்தகைய திறமைபடைத்த அன்பழகனை மீண்டும் சட்டமன்றத்திற்கு வெற்றிவாகை சூட்டி அனுப்புங்கள்.

அதைப்போலவே, மதிப்புமிக்க நண்பர் மனோகரன், தென் சென்னை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரையும் வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமையாகும்.

குழப்பமும் இல்லை – தடுமாற்றமும் இல்லை

இந்த வீதி வழியாக நான் வந்த பொழுது நான் பணியாற்றிய ‘விடுதலை‘ அலுவலகத்தைப் பார்த்தேன். எனக்குப் பெரியார் கொடுத்த சம்பளத்தைவிடப் போலீசுக்காரருக்கே அதிகம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நாம் அன்று ‘விடுதலை‘யில் எழுதியதை இன்று நாட்டிலே பரப்புகிறோம். நமக்குக் கொள்கையிலே குழப்பம் இல்லை. அதில் எந்தவிதத் தடுமாற்றமும் இல்லை. நாட்டு மக்களுக்கு அதனைத் தெள்ளத்தெளியக் கூறி வருகிறோம். இந்த நிலைமையை ஒழிக்க வேண்டுமெனக் காங்கிரசுக்காரர்களும், காங்கிரசுக்குத் துணை போகிறவர்களும், காங்கிரசுக்கு இனி போக இருப்பவர்களும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் – காங்கிரசுக்காரர்கள் – மக்களுக்குச் செய்த நன்மைகளின் பட்டியலைப் படித்துக் காட்டி ஓட்டுக்களைப் பெறட்டும் – நாம் கவலைப்படவில்லை! ஆசிரியருக்குச் செய்த நன்மைகளின் அட்டவணையைப் படித்துக்காட்டி ஓட்டுப் பெறட்டும் – நான் ‘வேண்டாம்‘ என்று சொல்லவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்திவிட்டு, நோய் நொடியை உண்டாக்கி விட்டு மீண்டும் காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

‘விடுதலை‘ அலுவலகத்தில் பணியாற்றிய நேரத்தில் எனக்குக் கிடைத்த ரூ.60 சம்பளத்தில் ரூ.35 வாடகைக்குச் சாமி நாயக்கன் தெருவில் வீடெடுத்து நிம்மதியாக வாழ முடிந்தது. ஆனால் ரூ.200 சம்பாதித்தாலும் இப்பொழுது நல்லபடி வாழ முடியாமல் விலைவாசிகள் ஒன்றுக்குப் பத்து மடங்காக ஏறிவிட்டன?

இதற்குப் பெயர் ஆட்சியா?

வைத்தியரிடம் பலநாள் மருந்து சாப்பிட்டும் நோய் குணமாகவில்லை. இதைத் தெரிந்துகொண்ட வைத்தியர். ‘எனக்குத் திறமைஇல்லை, அடுத்த தெரு கந்தப்பிள்ளையை அழையுங்கள்‘ என்றால், அவன் உண்மையான வைத்தியன், அதைவிட்டு விட்டுச் சாவுக்கும் பாலுக்கும் உடனிருந்து காரியக்கருமாதிவரை நடத்தினால் அவன் வைத்தியனா? அதுபோல, இவர்கள் ஆட்சியில் மக்கள், குடல் சுருங்கி, கண்பார்வை மங்கி, கன்னம் குழி விழுந்து இளைத்திருக்கிறார்கள். இதற்குப் பெயர் ஆட்சியா?

நம்மில் ஒருவரைக் கல்யாணச் சாப்பாட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிடச் சொன்னால் சிறிது சாப்பிட்டு விட்டு, ‘வயிறு கொள்ளவில்லை‘ என்று கூறுவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். இதற்குக் காரணம் – பட்டினி கிடந்து வயிறு – சுருங்கிவிட்டதுதான்!

இரத்தத்தை உறுஞ்சி...

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காக்கிச் சட்டைதான் பாக்கி, துப்பாக்கித்தான் பாக்கி – பட்டாள வீரனைப்போல் இருந்தார்கள். இப்பொழுது, அவர்களின் கரைந்த சதையின் எடைமட்டும் எவ்வளவு என்று எனக்கு கணக்கெடுக்கத் தெரிந்திருந்தால் ‘எவ்வளவு சதையை இந்த அரசாங்கம் பிய்த்துத் தின்றிருக்கிறது‘ என்று கணக்குக் காட்டுவேன். நீங்கள் இழந்த இரத்தத்தைக் கணக்கெடுக்க முடியுமானால் ‘இந்த அரசாங்கள்ம எத்தனை டன் இரத்தத்தை உறிஞ்சி இருக்கிறது‘ என்று சொல்லுவேன்!

கூலி உயர்வு கேட்ட துறைமுகத் தொழிலாளர் மீது துப்பாக்கியால் சுட்டதால் பலபேர் இறந்தார்கள். அவர்களில் எத்தனை பேர் மணம் ஆனவர்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்களுடைய மனைவி மார்கள் இன்று தாலியிழந்து கைம்பெண்ணாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசுக்காரர்களே! நீங்கள் ஆட்சிப் பிணங்கள் எத்தனை? தற்கொலைகள் எத்தனை? – கணக்குக் கொடுங்கள்.

கண்காணாச் சீமைக்கு ஓடி கடின வேலையில் – இழி தொழிலில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு? – முதலில் இந்தக் கணக்கைக் காட்டிவிட்டுப் பிறகு ஓட்டு கேளுங்கள்.

உணருவரா, காங்கிரசார்?

உண்மைக் காங்கிரசுக்காரர்களே! குப்பைமேட்டில் தமிழர்கள் – ஆறடுக்கு மாளிகையில் வடநாட்டான்! எண்ணெய் தகட்டை விரித்து நாலு மூங்கிலைபோட்டு, வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள் தமிழர்கள்! இங்கே ஒரு மார்வாடி மாடு ஓட்டிப் பிழைக்கிறானா? குப்பை கூட்டும் குசராத்தியைப் பார்த்திருக்க முடியுமா? ஒரு கையிலே பாலிஷ் மற்றொரு கையில் பிரஷ் – வடநாட்டான் காலிலுள்ள பூட்சை துடைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்! ஆனால் காமராசர் கக்கன் ஆகியோர் விஷ்ணுகோவில் துவாரபாலகர்களைப்போல் ஆஜானுபாகுவாக ஆட்சியிலே இருக்கிறார்கள் – நான் வெட்கப்பட்டேன், துக்கப்பட்டேன்! எட்டு மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?

மடிப்பிச்சை கேட்கிறான் தமிழன் – சிங்களத்திலே, நெட்டாலிலே, மோரிசிலே!

சி்ங்களத்திலே தமிழர்களை வெறிநாயைப்போல் விரட்டினார்கள். கடைகளைச் சூறையாடினார்கள். பெண்ணைக் கற்பழித்தார்கள் – யார் கேட்டார்கள் இதைப் பற்றி? அந்த நேரத்தில் அன்பழகன் ஒருவர்தான் அது குறித்துச் சட்டமன்றத்தில் கேட்க வேண்டியதாயிற்று, காலஞ்சென்ற டாக்டர் கிருஷ்ணராவ் அவர்கள், தனியாக அன்பழகனை அழைத்து, அந்தப் பிரச்சினையை விவாதிக்க இந்தச் சட்ட மன்றத்திற்கு உரிமை இல்லை என்றார். எனவே, அன்பழகனுடைய தொண்டு உங்களுக்கு வேண்டாமா?

(நம்நாடு - 25.1.62)