அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மக்கட்பணி ஆற்றுவோம்!

“வைதீகம் எவ்வளவுதான் பொருள் பலம் படைத்திருந்தாலும், இன்று பொருள் பலமற்ற நாம் பெருமலையையும் சிற்றுளி தகர்ப்பதுபோல் தகர்த்துக் கொண்டுதான் வருகிறோம்.”

“இந்நிலையில் நாமா இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம் என்று எண்ணினால் ஒருகணம் மயக்கம் ஏற்படத்தான் செய்கிறது. என்றாலும் நாம் செல்ல வேண்டிய இடமோ இன்னும் தொலைவில் உள்ளது. மக்கள் துயர் துடைக்கும் இலட்சியம் வெற்றி பெற வேண்டுமெனில், இதில் நாம் மயங்கிவிடக்கூடாது. ‘மயக்கம் நீக்குவோம்; மக்கட்பணி ஆற்றுவோம்’ என்ற உறுதி கொள்ளுங்கள் தோழர்களே!”

கலைகளின் நோக்கம்
“இந்த நோக்கத்திற்காகவே, கலைகள் பயன்பட வேண்டும் என்று விரும்புபவன் நான்; நாடகமும், நாட்டியமும், இசையும், காட்சியும் எதுவானாலும், நாட்டு மக்கள் நல்லறிவு பெறுவதற்கே துணையாக வேண்டும்; இந்த கலைகளேதான் இதுகாறும் வைதீகத்திற்கு அரணாக, அதைப்பரப்பும் கருவியாக இருந்து வந்துள்ளன.”

“இந்த உண்மையை, மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை நோக்கினாலே நன்றாகப் புரிந்து கொள்ளலாம்; திருமாலின் பத்து அவதாரங்களிலே, எது எது இன்று செல்வாக்குப் பெற்றுள்ளன? வராக அவதாரமும், நரசிம்ம அவதாரமும் எந்த அளவிற்கு இடம்பெற்றுள்ளன? ஆனால், இராமனும், கிருஷ்ணனும் மக்கள் மனத்தில் இந்த அளவு இடம்பெறக் காரணம் என்ன?

இராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மக்கள் மனதில் பதியச் செய்யக்கூடிய முறையில் நாடகத்திற்கும், நடனத்திற்கும், கதைக்கும், காலட்சேபத்திற்கும் அதிகமாகப் பொருந்திய காரணத்தால் தான், இராம-கிருஷ்ண அவதாரங்கள், மற்ற அவதாரங்களைவிட அதிகப் பேரும், புகழும், செல்வாக்கும் பெற்றுள்ளன. மக்கள் உட்கார்ந்தால், ‘இராமா’ எழுந்தால் ‘கிருஷ்ணா’ என்னும் அளவுக்கு அவை இடம்பெறக் கலைகளே கருவியாயின.

விஷத்துக்கு விஷயம்
“எனவே வைதீக விஷயத்தைப் போக்க விரும்பும் நாமும் அதே கலையையே கருவியாகக் கொண்டு செயலாற்ற வேண்டுமென விரும்புகிறேன்; விஷத்தை மாற்று விஷத்தால் தான் போக்க வேண்டும்.”

“எனவேதான், நாட்டிலே ஒருசிலர், என்னை ஒரு நாடகமாடி, கூத்தாடி என்று குறிப்பிட்டாலும் நான் கவலைப்படவில்லை; மாறாக, எனக்கு இன்னும் ஓய்வு கிடைக்குமானால், உலகிலே தோன்றிய உத்தமர்கள் பலரைப் பற்றி, அவர்களது தொண்டையும் தியாகத்தையும், கொள்கையையும், கோட்பாட்டையும் விளக்கக்கூடிய காட்சிகளை, நாடகங்களாக வரைந்து நடித்துக் காட்டவே ஆசைப்படுகிறேன். அதற்கு நமது கலைத்துறை நண்பர்களான, எம்.ஜி.இராமச்சந்திரன், கே.ஆர்.இராமசாமி போன்றவர்கள், ஆர்வத்தோடு முன்வந்து பணியாற்றுவதை நான் வரவேற்கிறேன். கலைத்துறை எதுவானாலும், நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், மறுமலர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்பது எனது ஆசை!”

சமூகச் சீர்திருத்தம்
“நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களுங்கூட, நமது சமூகப் பணியை, சீர்திருத்த நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்; இப்பொழுதே பலர் புரிந்துகொண்டு வருகின்றனர்; மேலும் பலர் அதிலும் குறிப்பாகக் காங்கிரஸ் இயக்கத்திலுள்ள இளைஞர்கள் நமது கொள்கையைத் தெரிந்து ஒத்துழைக்க விரும்புகிறேன்.”

“வளரும் நமது இயக்கத்தையும், வாழும் இலட்சியத்தையும், கட்டிக்காத்து வளர்க்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு பொதுச்யெலாளர் அண்ணாதுரை அவர்கள், திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டைச் சமாதானபுரத்தில் நடைபெற்ற நெல்லை மாவட்டத் தி.மு.கழக இரண்டாவது மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டார்.

தூத்துக்குடிப் போராட்டம்
தன்னுடைய சொற்பொழிவின் துவக்கத்தில் அண்ணாதுரை அவர்கள் கூறியதாவது:-
“நெல்லை மாவட்டத்திலுள்ள நமது கழகத் தோழர்கள், தங்களுக்கு நேர்ந்துள்ள பலவிதத் தொல்லைகளையும், துன்பங்களையும் பொருட்படுத்தாமல், இவ்வளவு சீருஞ்சிறப்புமாக, இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளதைக் காணப்பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்; எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொல்லைகள் எவ்வளவுதான் நேரிட்டாலும் கடமையாற்றும் போக்கு வளர வேண்டுமென விரும்புகிறேன்.

இந்த மாவட்டத்தில், தூத்துக்குடித் தோழர்கள் அறப்போராட்டத்தில் கலந்து கொண்டது காரணமாகத் தொடரப் பட்டுள்ள வழக்கைப் பற்றி நீங்கள் அறிவீர்கள்.

அந்த வழக்கில், நீதியைப் பெறுவதற்காகச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம், தி.மு.கழகத் தலைமை நிலையம் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

வழக்கு நடந்துகொண்டே இருக்கிறது. எனினும் மாநாடு இங்கு நடைபெறத் தவறவில்லை. இன்று காலை முதல் இதுகாறும் பல நண்பர்கள் சீர்திருத்தத்தின் அவசியத்தை விளக்கிப் பேசி இருக்கிறார்கள்.

கட்டணம் வாங்காத கல்லூரி
அவர்களது பேச்சில் சித்தார்த்தன் முதல் சித்தர்கள்வரையில், ஆண்டவன் முதல் ஆபிரகாம் லிங்கன் வரையில், பலப்பல கருத்துகள், பலப்பல துறைகளைப் பற்றியும் தெளிவுப்படுத்தப் பட்டன. இந்த கருத்துகளை நீங்கள் வேறு எங்கே கேட்டறிய முடியும்? பலப்பல ஏடுகளைப் புரட்டினாலும், படித்தாலும் எளிதிலே அறிய முடியாத அரிய கருத்துகளை, இங்கே தொகுத்தும் வகுத்தும் எடுத்துக் கூறியுள்ளனர் எனது தோழர்கள். உயர்தரக் கல்லூரியில், ஒரு சில ஆண்டுகள் பயின்றால் மட்டுமே பெறக்கூடிய கருத்துகளை இங்கே ஒரு சில மணி நேரங்களில் கேட்டீர்கள்.
இந்த அறிவைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளதால்தான் நான் சொல்கிறேன். தி.மு.கழகம் ஒரு கட்டணம் வாங்காத கல்லூரி. அதுவும் மக்களைத் தேடி வந்து அறிவூட்டும் பல்கலைக்கழகம்.

எனவே, நீங்கள் இங்குப் பேசப்பட்ட கருத்துகளைச் சிந்திக்க வேண்டும்.

முற்போக்கும் பிற்போக்கும்
சிந்தனைச் சிற்பி சாக்ரடிஸ் முதலாக இன்றைய சுயமரியாதை இயக்கம் வரையில், மக்களின் நல்வாழ்வுக்காக ஆற்றியுள்ள அரும் பணிகளை எண்ணுங்கள்.

ஆனால், நம் நாட்டிலோ, படித்தவர்களிலேயே பலர், இயல்பாக வளர்ந்துள்ள அறிவியக்கக் கருத்துகளையும், பழங்காலக் கொள்கைகளையும் கலந்தேதான் பேசியும், எழுதியும் வருகின்றனர். மனுமாந்தாதா காலத்தில் தோன்றிய சனாதன் தர்மத்தைக் கைவிடாதபடியே இருபதாவது நூற்றாண்டின் விஞ்ஞான வாழ்வையும் கைகொள்ள முயல்கின்றனர்.

“மேல் நாட்டிலே இன்று காணப்படும் முற்போக்கு படிப்படியே வளர்ந்ததாகும். சிந்தனைச் சிற்பி சாக்ரடீஸ் சிந்தனையை வெளியிடும் உரிமைக்காக, உயிரையே இழக்கத் துணிந்தபின், ஏற்பட்ட விழிப்புணர்ச்சி, மேல் நாட்டிலே வளர்ந்தபடி இருந்தது.

பொதுவுடைமை மலர்ந்தது
அதன் பயனாகப் பழமைக் கருத்துகள் தகர்க்கப்பட்டன. அடுத்து, புரோகித ஆட்சி, மத ஆதிக்கம் வீழ்த்தப்பட்டது. பாவமன்னிப்புச் சீட்டு விற்று, மக்களை ஏய்த்துப் பிழைத்த பாதிரிமார்களின் ஆதிக்கம் விரட்டப்பட்டது. அதன் பின்னரே, மன்னர் ஆட்சி ஒழித்து மக்களாட்சி ஏற்படுத்தப் பட்டது. ஜனநாயகம் படிப்படியே வளர்ச்சியடைந்தது. இறுதியாகவே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கார்ல் மார்க்ஸ் கண்ட பொதுவுடமை நெறி, லெனின், ஸ்டாலின் போன்ற செயல் வீரர்களால் இடம்பெற்றது.

பாதிரிகள் ஒழிப்பு, மத ஒழிப்பு, மன்னர் ஒழிப்பு, மக்களாட்சி, பொதுவுடமைத் திட்டம் என்று வளர்ந்த இந்த முறைகள், இந்நாட்டில் எவ்வகையில் இடம் பெறுகின்றன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வருணாச்சிரம தத்துவத்தையும் மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்த ஆளும் மனப்பான்மையையும், விடுதலை காரணமாக, 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஜனநாயக முறையையும், 20ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பொதுவுடமைத் திட்டத்தையும் ஒன்றாக அல்லவோ நிலைநிறுத்த விரும்புகின்றனர்?

கலகலத்த வண்டி
இந்தக் காட்சி எப்படி இருக்கின்றதெனில், பழங்காலத்தில் பொது கலகலத்துப் போன வண்டியொன்றில், ஒரு பக்கத்தில் அராபி குதிரையையும், மற்றொரு பக்கத்தில் தார்த்தாரி புரவியையும் பூட்டி, அதை ஓர் எஸ்கிமோவை ஓட்டச்செய்து, பின்னாலே நான்கு நீக்ரோக்கள் பிடித்துக்கொண்டுவர, அதில் நாம் ஏறி அமர்ந்து கொண்டுள்ளது போல் தெரிகிறது.

கலகலத்துப்போன வண்டி, படுவேகமாகச் செல்லும் கட்டுக்கடங்காத முரட்டுக் குதிரைகள், ஓட்டத் தெரியாத ஆள் என்பது போன்ற நிலையிலேதான், இன்றைய நம் நாட்டின் நிலைமை உள்ளது.

சமூகச் சீர்திருத்தம் முதலில்...
எனவேதான், முதலில் பழமையினால் படிந“து போயிருக்கிற மூடநம்பிக்கைகளை தவறான கருத்துகளை நீக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகிறது.

மேல்நாட்டில் தோன்றிய ஜனநாயகத்திற்கு அடிப்படையான, பிரஞ்சுப் புரட்சி, ரூசோ, வால்டேர் எழுத்துகளினின்றும் மலர்ந்ததாகும். அவர்கள் வெளியிட்ட எண்ணங்களும், கருத்துகளுமே, ‘மனிதன் பிறக்கும்போது உரிமையோடுதான் பிறக்கிறான். பிறந்த பின்போ அடிமையாகவே இருக்கிறானே, ஏன்?” என்ற கேள்வியையும் மன்னர் ஆட்சியையும் மாற்றியமைக்கும் துணிவையும், வளர்த்தன. அதனால் தான் நாமும், சமூகச் சீர்திருத்தம், அரசியல் பொருளியல் சீர்திருத்தத்திற்கு முன்னாலே நிகழ வேண்டும் என்று விரும்பிப் பாடுபடுகிறோம்.

அதற்காக நாம் அடைந்துள்ள இன்னல்களும் தொல்லைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. என்றாலும், பெற்றுள்ள வெற்றியும் பெருமிதம் அளிப்பதேயாகும்.

சீர்திருத்தத் திருமணங்கள்
நமது கொள்கை வெற்றி பெற்றுவருகிறது என்பதற்கு, இன்று நடைபெற்று வரும் சீர்திருத்தத் திருமணங்களின் எண்ணிக்கையே சான்றாகும்.

கடந்த பத்து அல்லது இருபதாண்டுக் காலத்தில் இந்த நாட்டில் எத்தனைப் பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன; எத்தனைப் பஜனை மடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று கணக்கெடுத்துப் பாருங்கள்.

கட்டப்பட்ட மடாலயங்கள் எத்தனை? மருத்துவமனைகள் எத்தனை? எழுப்பப்பட்ட ஆலயங்கள் எத்தனை? அநாதை விடுதிகள் எத்தனை? என்று இவைகளைக் கணக்கிட்டால் தெரியும், எது வளர்கிறது, எது தேய்கிறது என்ற உண்மை. நமது முயற்சி நாளும் வெற்றி பெற்றுத்தான் வருகிறது.

வைதீகம் பெற்ற வாய்ப்பு
என்றாலும் வைதீகம் இன்று பெற்றுள்ள வாய்ப்பையும் வசதியையும், மறந்துவிடக்கூடாது, ஆலயங்களிலும் மடாலயங்களிலும், முடங்கிக் கிடக்கும் செல்வத்தின் மதிப்பு எவ்வளவு? அவற்றில் நடைபெறும் விழாக்களும், கொண்டாட்டங்களும் எவ்வளவு பொருட்செலவோடு நடைபெறுகின்றன? கோயில் விழாக்களிலே கேட்கும் பொருட்டு முழக்கும், காணும் வாணவேடிக்கையும் போதுமே, பாமரமக்களை அப்பக்கம் இழுக்க என்றாலும் அந்த மக்கள் எண்ணத்திலும் மாற்றம் ஏற்படத்தான் செய்கிறது. கோயிலுக்குச் சென்றாலும், அங்கேயே கோயிலுள்ள குறைகளைச் சாமானியரும் பேசுகின்றனர்; திருவிழாவில் குறை காண்கின்றனர்.”