அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மனித குரலுக்கு மதிப்பளியுங்கள்

சட்டமன்றத்தில் அண்ணா உரை

சென்னை, மார்ச் 8. இன்று சட்டமன்றத்தில் 1961 – 62ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீது அண்ணா அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் முக்கியப் பகுதிகள் வருமாறு
“இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் மீது என்னுடைய கருத்தைக் கூறுவதற்கு முன்பு அதில் பல குறைபாடுகள் இருந்தாலும், அவைகளைப் பற்றிப் பேசும்பொழுது, இந்த அமைச்சரவை செய்திருக்கின்ற இரண்டொரு நல்ல காரியங்களைப் பாராட்டத் தவறிவிடுவேனோ என்ற அச்சத்தால் முதலில் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டி, பின்னர் குறைகளையும் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

“ஜனநாயக அமைப்பிலே எண்ணிக்கை பலத்தை வைத்திருந்தாலும் இந்த மாநிலத்திற்கத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதைக் காலங்கடந்தாவது ஓரளவு ஒப்புக் கொண்டிருப்பதை நான் பாராட்டுகிறேன். இதை இன்னமும் முழு வடிவத்தோடு செய்திருக்கலாம் என்று எடுத்துச் சொல்வதால் குறை கூறுவதாக எண்ண மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

சலுகையைத் தொடர்ந்து தாருங்கள்

“அடுத்தபடியாக எல்லா ஏழை மாணவர்களுக்கும் இலவசக் கல்வியைப் பதினோராம் வகுப்பு வரை அளிக்கப் போவதாக அமைச்சர் அறிவித்திருப்பதைப் பாராட்டுகிறேன். ஏற்கனவே பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்று வந்த சலுகைகளைத் தள்ளிவிடுவதற்கு இல்லாமல் பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனிச் சலுகை அளிப்பது சமுதாயத்தில் சாதியை நிலைநாட்டிவிடும் என்று எண்ணி விடாமல், தொடர்ந்து அச்சலுகையை அளிக்க வேண்டுகிறேன்.

“இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வரி போடவில்லை என்று கூறலாம். இவர்கள் வரி போடவில்லை என்பது உண்மைதான். ஆனால் இவர்கள் போடவேண்டிய வரிகளையெல்லாம் சேர்த்து மத்திய அரசு விதித்து விட்டது. கன்றுக்குச் சொட்டுப்பால்கூட விடாமல் கறந்து விடுவதைப் போல் கறந்துவிட்டிருக்கிறார்கள்.

“இந்த மன்றத்திலே நிதியமைச்சர் அவர்கள், ‘இப்பொழுது மட்டுமல்ல இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் புதிய வரிகள் இருக்காது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்‘ என்று ஒருமுறை கூறினார். இவர்கள் போடவேண்டிய வரிகளையெல்லாம் மத்திய அரசே விதித்துவிடப் போவதை முன் கூட்டியே அறிந்துதான் கூறினாரா? தற்பொழுது மத்திய அரசு விதித்திருக்கிற ரூ.60 கோடிக்கான வரிகள் ஏழை எளிய மக்களைப் பாதிக்கக் கூடியவையாகும்.

கோழி கூலி பொழுது விடியுமா?

“மக்கள் வயிறார உண்டு நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதுதான் நல்ல அரசுக்கு எடுத்துக்காட்டு. அதை அவர்கள் செய்து முடித்தார்களா என்று எண்ணிப் பார்த்தால் தங்கள் சாதனையைக் கண்டு மகிழ்வதை விடத் தாங்கள் சாதிக்கத் தவறியதைக் கண்டு வருத்தப்படுவார்கள்.

“தமிழ்நாடு என்று பெயர் வந்ததற்குக் காரணம் சட்டமன்றத்திலே நாங்கள் வலியுறுத்திப் பேசியதுதான் என்று சொன்னால் – ‘நாங்கள் விடாமல் எடுத்துச் சொன்னதால் நான் பதினொராவது வகுப்புவரை இலவசக் கல்வி அமலாக்கப்படப் போகிறது‘ என்று எதிர்க்கட்சிகள் கூறினால் – அந்தச் சொற்ப மகிழ்ச்சியை அனுபவிப்பதைக்கூடக் காணப்பிடிக்கவில்லை காங்கிரசு உறுப்பினர்களுக்கு. ‘கோழி கூவி பொழுது விடியுமா?‘ என்று கேட்கின்றனர்.

“பழைய காலத்தில் மகான்கள் கோழி பாஷை குரங்கு பாஷை நாய் பாஷை இவற்றையெல்லாம் அறிந்து வைத்திருந்ததாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில்கூட காங்கிரசு அமைச்சர்களுக்கு கோழி குரங்கு பாஷைகள் தெரிகின்றன. அதிலே செலுத்தும் கவனத்தில், சிறிது மனிதக் குரலுக்கு மதிப்பு அளிப்பதில் செலுத்தினால் நலமாயிருக்கும்.

அங்கும் இருந்தார் – இங்கும் இருக்கிறார்

“நிதியமைச்சர் அவர்கள், ‘சந்தி சிரிக்கிறது‘ என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் இம்மன்றத்திலே கூறினாராம். இந்தஇளம் வயதிலே உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிற – இன்னும் பெறப் போகிற நிதியமைச்சர் அவர்கள் மிகவும் தரங்குறைந்த இப்படிப்பட்ட செயலை விட்டுவிட வேண்டும். வேண்டுமானால் இந்த வேலையை வேறு யாருக்காவது விட்டு விடட்டும். அமைச்சர் இதில் ஈடுபடவேண்டாம். எதிர்வீட்டுச் சன்னலை எட்டிப் பார்க்கும் வழக்கத்தை விட்டுவிட வேண்டும். அதிலும் நிதியமைச்சர் வடநாடு செல்ல இருப்பதால் அங்கு ‘பர்தா‘ முறையும் உள்ளது.

“ஒரு கட்சிக்குள்ளே இருக்கும் சில பல குறைபாடுகளை மன்றத்திலே எடுத்துக் கூறுவது எந்த வகையிலே நியாயம்? ஒரு கட்சியை நடத்திச் செல்கிறவர்களுக்குத்தான் அதன் சிரமம் தெரியும். நல்ல வேளையாகச் சுப்பிரமணியம் அவர்கள் அந்த நிலையில் இல்லை. அவர் முன்பு இந்த மன்றத்தில் முதலமைச்சராக இருந்த ஆச்சாரியார் அவர்களால் ஒரு நல்ல சிஷ்யனைப் பிடித்திருக்கிறேன், சிறந்த கிரிமினல் வழக்கறிஞர் என்று நாடெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னால் கட்சியிலே இருக்கின்ற இடத்திலே யார் பக்கம் பலம் என்று பார்த்து வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டவர். ஆச்சாரியார் காலத்திலும் இருந்தார். இந்திராணியைப் போல் அங்கம் இருந்தார் – இங்கும் இருக்கிறார்.

“என்னுடைய கட்சியிலே என்ன நடந்தது என்பதை அறிய வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள் – வேண்டுமானால் நான் சொல்கிறேன். அமைச்சருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு கவலையில் இதை எங்கு கேட்க நேரமிருக்கப் போகிறது?

எதைச் சொல்லி நிதி கேட்பார்?

“என்னுடைய கட்சி உறுப்பினர் ப.உ.சண்முகம் அவர்கள் எடுத்துச் சொன்ன போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் இந்த மன்றத்திலே அமைச்சர் மாணிக்கவேலர் அவர்கள் அதிகாரிகளை உடனழைத்துச் சென்று தேர்தல் நிதி வசூல் செய்ததாகப் பேசினார். அமைச்சர் வாய்ப்பை அவர் கட்டிக் காட்டிவிட்டார் என்று தான் எடுத்துக் கூறிக் கட்சிப் பிரச்சாரம் செய்துவிடப் போகிறாரா? அல்லது அலிபுரம் சிறையிலே ஆறு மாதம் தண்டனை பெற்றதை எடுத்துக் கூறிப் பிரச்சாரம் செய்துவிடப் போகிறாரா? எதைச் சொல்லி அவர் கட்சிப் பிரச்சாரம் செய்துவிடப் போகிறார்? இந்த மனற்த்திலே அவரைப் பற்றிப் பேசியதன் மூலம் அடுத்த தேர்தலுக்கு அவருக்குச் சீட்டு வாங்கிக் கொடுத்து விட்டாரே என்பதற்காகக் கண்டிக்கிறோம்.

“சர்வக் கட்சிக் கூட்டங்களிலே நாங்கள் கட்சிப் பிரச்சாரம் செய்வோம் என்று கருதி எங்களை அழைக்கவில்லை என்று அமைச்சர் கக்கன் அவர்கள் இந்த மன்றத்தில் கூறியதாக நான் கேள்விப்பட்டேன். நானும் அவரும் சமீபத்தில் ஒரு கைத்தறி விழாவிலே கலந்து கொண்டோம். அப்பொழுது முதலில் நான் பேசினேன் – எனக்குப் பின்னாலே பேசிய அமைச்சர் கக்கன் அவர்கள் ‘அண்ணாதுரை இந்திய ஒற்றுமைக்குப் பாடுபடவேண்டும்‘ என்று அவருடைய கட்சிப் பிரச்சாரத்தைச் செய்வதாக இருந்தால் ஆயிரம் காரணம் காட்டிப் பிரிவினையை வலியுறுத்திப் பேசமுடியும். ஆனால், நான் எதையும் பேசவில்லை. அமைச்சர் பேசினார். அங்கு வந்திருந்த பொதுமக்களே இதைக் குறித்துப் பேசிக் கொண்டு சென்றனர்.

‘நான் இங்கு ஓர் ஆங்கிலப் பழமொழியை நினைவூட்ட விரும்புகிறேன். நிதியமைச்சருக்குத் தெரியும் என்ற காரணத்தால் சீசருடைய மனைவி சந்தேகத்திற்கு இடமின்றி இருக்க வேண்டும் என்பதுதான் அந்தப் பழமொழி. அந்தப் பழமொழிப்படி அமைச்சர்கள் முதலில் மாசு மறவற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

நான் துவக்கத்தில் சொல்லியபடி இவர்கள் சாதித்து இருக்கின்ற காரியங்கள் ஒப்பிட்டுப் பார்த்து மற்றவர்கள் அதிகம் சாதித்திருக்கிறார்களா என்று எடுத்துச் சொல்லுகின்ற விதத்தில் ஓர் ‘ஆல்ட்டர்னேட்டவ்‘ கவர்ன்மெண்ட் இல்லாத காரணத்தினால் சாதிக்க வேண்டியவை எவ்வளவு அதில் எந்த அளவு சாதித்திருக்கிறோம் – இன்றைக்கு நம்முடைய மக்களுக்குக் கொடுக்கத்தக்கது எவ்வளவு – மக்க்ளக்குக் கிடைத்தது எவ்வளவு என்ற காட்டக்கூடிய முறையில் கொடுத்திருந்தால் சாதனைகள் எவ்வளவு என்று ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதைவிட்டு ‘வெள்ளைக்காரன் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி காலத்தில் நடநத்வைகளை விடச் சாதித்திருக்கிறோம். ஜஸ்டிஸ் கட்சி காலத்தில பொலி காளைகளை வாங்கிக் கொடுத்தார்கள். நாங்கள் தாலுக்காவிற்கு 120 பொலி காளைகளை வாங்கிக் கொடுக்கிறோம் என்று தற்பெருமை அடித்துக் கொள்வதில் அர்த்தமில்லை.

சனநாயகப் பண்பு வளர.....

நாட்டுக்கு நம் ஆட்சியின் மூலமாக என்ன கிடைத்தது? என்ன முற்போக்குத் திட்டங்களால் இந்த நாட்டு மக்களுக்கு வசதி ஏற்பட்டிருக்கிறது. வறுமையை ஒட்டி இருக்கிறோமா? வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கியிருக்கிறோமா? பயங்கர விலைவாசி ஏற்றத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறோமா அல்லது கட்டுப்படுத்தியிருக்கிறோமா? எல்லா மக்களுக்கும் தொழில் வாய்ப்பு தேடிக் கொடுத்திருக்கிறோமா? இயற்கைக் செல்வங்களை விஞ்ஞான முறையில் பயன்படுத்த செயல் முறைகளைக் கைக்கொண்டிருக்கிறோமோ? வெளிநாட்டு ஏற்றுமதியைப் பெருக்கியிருக்கிறோமா? உழவர்கள் மனதில் சந்தோஷத்தை உண்டு செய்திருக்கிறோமா? தொழிலாளர்களின் துயரத்தைத் துடைத்திருக்கின்றோமா? இதைப்பற்றியெல்லாம் எண்ணிப்பார்த்து எந்த அளவு சாதித்திருக்கிறோம் என்ற கணக்கை அடக்க உணர்ச்சியோடு எடுத்துக்காட்ட வேண்டும். எங்களால் இவ்வளவுதான் சாதிக்க முடிந்தது இன்னும் எவ்வளவோ சாதிக்க விரும்பினோம் ஆனால் முடியவில்லை என்ற அப்படிப்பட்ட ஜனநாயகப் பண்பு வளரவேண்டும்.

நிபுணர்களே குழம்புகின்றனர்்

இந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? நமக்குக் கிடைத்த ரிட்டர்ன் – அதாவது பலன்கள் என்ன? செலவழிக்கப்பட்ட தொகை ஒரு சீராகச் செலவழிக்கப்பட்டதா? அல்லது இடத்திற்கு இடம் பேதம் இருக்கக் கூடிய முறையில் செலவழிக்கப்பட்டதா? இப்பொழுது கிடைத்துள்ள பலன் என்ன? இவைகளைப் பற்றி நிபுணர்களே தங்கள் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவைகளிலெல்லாம் தெளிவு கிடைத்துவிட்டது போல் எல்லாத் திட்டஙக்ளும் வெற்றி பெற்றுவிட்டது போல் ‘டார்ஜெட்‘டுகளை எடுத்துக் காட்டி இவ்வளவு சாதிகக் விரும்பினோம் அதைவிட அதிகம் சாதித்து விட்டோம்‘ என்று எடுத்துக்காட்டுவதில் பயன் இல்லை. திட்டங்களை ஆராய்ந்து பார்த்த அத்தனைப் பேர்களும் சொல்கிறார்கள், திட்டங்கள் மூலமாக எதிர்பார்த்த பலன் இன்னமும் பெறவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை இன்னமும் உயர்த்த முடியவில்லை. தனி மனிதன் வருவாயை நம்மால் இன்னும் பெருக்க முடியவில்லை என்று.

உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல(

தேசிய வருமானத்தை ஓரளவு பெருக்கியிருக்கின்றோமே தவி, தனிமனித வருமானத்தைப் பெருக்க முடியவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் புள்ளி விவரக் கணக்கோடு எடுத்துக் காட்டுகிறார்கள். அரசியல் அனுபவம் படைத்தவர்கள் ‘எங்கே சோரம் போய்விட்டது‘ என்று தேடிக் கொண்டிருங்கள். எண்ணிக்கை பலத்தை வைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் இந்தத் திட்டங்களால் இவ்வளவு சாதித்திருக்கிறோம் என்று எடுத்துப் பேசுவதினால் அது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல – மக்களை தவறான பாதையில் திருப்பி விடுவதாக ஆகும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏழை மக்களுக்கு ஆர்வம் எங்கே ஏற்பட்டது?

மக்களைத் தவறான பாதையில் எதிர்க்கட்சிகள் அழைத்துச் செல்வதாகச் சொல்லப்படுவதை நாம் பார்க்கிறோம். இன்று நாட்டில் நிறைவேற்றப்படுகின்ற திட்டங்களைச் சற்றுக் கூர்ந்து கவனிக்கும்படி நிதியமைச்சர் அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் திட்டங்களில் – இந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளிலே இந்தியத் துணைக் கண்டத்தில் எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்திருக்கின்றன என்பதைக் கணக்கில் எடுத்தப்பார்க்க வேண்டம். அப்படிப் பார்த்தால் பெரும்பாலான தொகைகளைக் கட்டிடங்கள் கட்டுவதிலே செலவழித்து இருப்பது தெரியும். அப்படிக் கணக்கெடுத்துப் பார்த்து அந்தக் கட்டிடங்கள் எல்லாம் யாருக்குக் பலனளித்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கணக்கெடுத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது இந்தத் திட்டங்களினாலே ஏழை மக்களுக்கு ஆர்வம் ஏற்படக்கூடிய விதத்திலே இந்தத் திட்டங்கள் அமைக்கப்படவில்லை. ஆகவே நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தினால், இந்தத் திட்டங்கள் விஷயத்திலே மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று நாங்கள் எடுத்துச் சொல்கிறோம்.

ஆர்வம் எப்படி ஏற்படும்?

ஆனால் நீங்கள் தப்புப் பிரச்சாரம் செய்கிறீர்கள். அதனால் மக்களுக்குத் திட்டத்தின் பேரில் அவநம்பிக்கை ஏற்படுகிறது என்று எங்கள் பேரில் குற்றம் சாட்டப்படுகிறது. திட்டங்களைப் பொறுத்த வரையிலே அலுவலர்கள் செய்யக்கூடிய ஒரு பொதுபோக்குக் காரியம்தான் இது என்று கிராமத்திலுள்ள மக்கள் கருதுகிறார்கள். நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் விறகுக் கடைக்கும் அரிசிக் கடைக்கும் போவதற்குப் பதிலாகத் திட்டத்தின் பேரால் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று அந்தக் கிராமத்திலே உள்ள ஒரு பெரியவரை அழைத்துத் தான் மந்திரி என்பதை அவரிடத்திலே கூறாமல், அந்தக் கட்டிடத்தைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன கட்டிடம்? என்று கேட்கப்பட்டு, அதற்கு அவர் இது சர்க்கார் கட்டிடம் என்று பதில் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் நீங்கள் தெளிவாக அந்தக் கட்டிடத்தின் மீது சமுதாயக் கட்டிடம் என்று எழுதியிருக்கிறீர்கள். எல்லாச் சமுதாய மக்களுக்கும் என்று கட்டியிருக்கிறீர்கள். எல்லோருடைய உழைப்பும் அதிலே இருக்கிறது. ஆனால் கிராமத்திலுள்ள மகக்ள் அதைப் பார்க்கின்றபோது எப்படி சிவப்புக் கட்டிடத்தைப் பார்த்தால் – போலீஸ் ஸ்டேஷன் அல்லது கோர்ட் என்று சொல்கிறோமோ அதைப்போல – கிராமத்திலுள்ள இந்தக் கட்டிடங்களைப் பார்த்தவுடனேயே இது சர்க்கார் கட்டிடம் என்று சொல்கிறார்கள். இது இன்னும் சர்க்காருடைய வேலையாகக் கருதப்படுகிறதே தவிர மக்களுடைய மனதிலே ஆர்வத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை. அப்படி இந்தத் திட்டத்திலே மக்களுக்கு ஆவல் ஏற்பட வேண்டுமானால் இது மக்களுக்கு எப்படி நேரடியாகப் பயன் தருகிறது என்பதை நாம் விளக்கிக் காட்டினாலொழிய எப்படி இதிலே மக்களுக்கு ஆர்வம் ஏற்படமுடியும்.

பழியை எவர் ஏற்பது?

கட்டிய கட்டிடங்கள் இடிந்து விழுவதைப்பற்றி நான் ஏற்கனவே கனம் கக்கன் அவர்களிடத்திலே சொல்லியிருக்கிறேன். அதற்கு அவர் ‘அண்ணாதுரை அவர்கள் கண்களுக்கு இடிந்த கட்டிடங்கள் தானா படவேண்டும்? வேறு நல்ல கட்டிடங்கள் படவில்லையா? என்று குறைபட்டுக் கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில் இந்தக் கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு என்ன காரணங்கள் என்பதை அறியும் வகையிலே நம்முடைய கோபதாபத்தைத் திருப்பிவிட்டிருப்பாரேயானால் நன்றாய் இருந்திருக்கும். என்னுடைய பகுதியிலே கட்டப்பட்டுள்ள ஒரு கட்டிடத்தை வந்து பாருங்கள் என்று அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டதால் ஒன்றும் பயனில்லை.

இப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மழைப்காலத்தில் நல்ல மழை பெய்து. வெயில் வந்தவுடன் பாளம் பாளமாக வெடித்து விடுகிறது. அந்த வகையிலே எவ்வளவு பணம் – எத்தனை கோடிக்கணக்கான ரூபாய் பாழாக்கப்பட்டு இருக்கிறது – விரயமாக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்ப்பார்களேயானால், எவ்வளவு பணத்தை ஏழை எளிய மக்கள் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி – பகல் சாப்பிட்டு இராத்திரியில் சாப்பிடாமல் – மகள் சாப்பிட்டுத் தாய் சாப்பிடாமல் – கணவன் சாப்பிட்டு மனைவி சாப்பிடாமல் மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு பணத்தை விரயமாக்கி இருக்கிறார்கள் என்பது புரியும். இந்தப் பழி யார் தலையில் விழும்? இதற்கு எத்தனைக் காலத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற பயங்கரமான உண்மைக்கு உங்கள் நெஞ்சி்லே ஏன் தயக்கம்? அப்படிச் சொல்லப்பட்டுள்ள காரியங்கள் எல்லாம் நடந்திருக்கிறதா என்று பார்த்தழலம் அதுவும் நடக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

(நம்நாடு - 28, 29.3.61)