அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மந்திரியால் பயன் என்ன?

தி.மு.கழகம் இன்று, ஓங்கி வளர்ந்திருக்கிற ஒரு மக்கள் சக்தியாக விளங்குகிறது. இந்தச் சிறிய ஊரான திருவெண்யெய்நல்லூரைப் போன்ற சிற்றூர்களிலும், பேரூர்களிலும், நாடெங்கும் தி.மு.கழகக் கொள்கைகளையும் இலட்சியத்தையும் தெரிந்து கொள்வதற்காக, ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றார்கள், இந்த மகத்தான வளர்ச்சியைத் தி.மு.கழகம் எப்படிப் பெற்று வருகிறது?

இந்த வளர்ச்சிக்கு யார் காரணம்? எங்களின் தனிப்பட்ட சக்தியா என்றால், நிச்சயமாக இல்லை.

ஏதேனும், ஒரு மதம் தோன்றினால் அந்த மதத்தை ஒரு பெரிய மகான் துவக்கி வைப்பார். இந்த மகானின் மகிமை கருதி மக்களும் அந்த மதத்தை ஏராளமான அளவில் பின்பற்றுவார்கள்.

காங்கிரஸ் காந்தியாரின் தலைமையைக் கொண்டது, அந்த மகாத்மாவின் தலைமையைப் பெற்றிருந்த காரணத்தால், காங்கிரஸ் மக்களால் பெரும் அளவில் பின்பற்றப்பட்டது.

உண்மைதான் முதல் தேவை!

ஆனால் எங்களைப் போன்றவர்கள் ஏதேனும் இயக்கம் ஆரம்பித்தால், இந்த இயக்கத்தில் – லட்சியத்தில் அந்த லட்சியத்தை ஈடேற்றுவதற்கான கொள்கையில் உண்மை இருந்தாலன்றி மக்கள் பின்பற்ற மாட்டார்கள்.

அந்த லட்சியமும், கொள்கைகளும் நமக்கு நல்வாழ்வு தரும் வல்லமை உடையன என்ற நம்பி்கையை மக்கள் பெற்றிருந்தாலன்றி அந்த இயக்கம் வளர முடியாது, மக்களின் ஆதரவைப் பெற்று வலுவடைய முடியாது.

இன்று தி.மு.கழகம் ஓர் மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வலுவடைந்திருப்பதற்குக் காரணமே, அதன் லட்சியத்திலும், கொள்கையிலும், மக்களின் நல்வாழ்வுக்கென வழிவகைகள் உள்ளன என்பதினால்தான்!

பிற்பட்ட மக்களின் இயக்கம்

தி.மு.கழகம் யார் யாருடைய வாழ்விலே ஏழ்மை இருக்கிறதோ, யார் கண்களில் ஒளி இல்லையோ, யார் யார் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் நன்மைக்காகத் தன்னைத்தானே அவர்களிடம் ஒப்படைத்துவிட்ட ஒரு இயக்கம்.

இந்தத் தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர்கள் பிற்பட்ட வகுப்பினராய் இருக்கலாம் இந்தத் தமிழ் நாடெங்கணுமுள்ள மக்களில் பெரும்பான்மையினர் நாடார்களாய் – நாயுடகளாய் – வன்னியர்களாய் – மறவர்களாய் – தேவர்களாய் – இப்படியாய்ப் பிரிந்து பிற்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம்.

இப்படி, பிற்பட்ட மக்கள், தங்கள் தங்கள் முன்னேற்றத்திற்காகக் கட்சிகளும் – சங்கங்களும் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரு பிற்பட்ட சமகத்தில் தலைவருக்கு மந்திரி பதவி கிடைத்து விட்டதாலேயே, அந்தச் சமூக மக்களின் வாழ்வில் முன்னேற்றம் தோன்றிவிடாது!

காமராசர் முதல் மந்திரியாயிருப்பதாலேயே, நாடார் சமூக மக்கள், ‘நமக்கு எல்லாம் கிடைத்துவிட்டது‘ என்றெண்ணிவிட முடியுமா?

வாழ்வும் வளமும் மந்திரிப் பதவியிலா?

பக்தவச்சலம் மந்திரியாகி இருப்பதாலேயே, ‘முதலியார் சமூக மக்களெல்லாம் முன்னேறி விட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா?

அதைப்போலவே தான், கனம் ராமசாமிப் படையாட்சியார் மந்திரியாவிட்டிருப்பதாலேயே வன்னிய மகக்ள் நன்மை அடைந்துவிட்டதாகக் கொள்ள முடியாது!

தோழர் கோவிந்தசாமியோ அல்லது நானோ மந்திரியாகி விடுவதாலேயே நாட்டு மக்களின் வாழ்விலெல்லாம் நன்மை தோன்றி விட்டதெனக் கொள்ள முடியாது.

ஒரு நாட்டு மக்கள் வாழ்வதும், தாழ்வதும் அந்த நாட்டின் சமூகத் தலைவர்களிலே நான்கு பேருக்கு மந்திரி பதவி கிடைப்பதில் இல்லை!

நிர்வாக இலாகா என்ன செய்யும்?

கனம் ராமசாமி படையாட்சி அவர்கள், வன்னியர்குல முன்னேற்றத்திற்கென ஒரு இலாக்கா அமைக்கப்பட்டு அதற்கு மந்திரியாகி இருந்தால்கூட, அதில் அர்த்தம் இருக்க முடியும், ஆனால், அவர் மந்திரியாகி இருப்பது நிர்வாக இலாக்காவிற்கு, இந்த இலாக்காவினால் வன்னிய மக்களுக்கு நன்மை என்ன செய்துவிட முடியும்?

அப்படி ஒரு வன்னியக்குல முன்னேற்ற இலாக்காவிற்கு மந்திரியாகியிருந்தால் வேண்டமானால், கனம் ராமசாமியார், எங்கள் மீது கோபப்படுவதிலே வீரத்தோடு பொருளும் இருக்க முடியும்! இல்லையே?

எனவேதான், யாராவது சிலர் மந்திரியாகிவிடுவதினாலேயே மக்களுக்கு வாழ்வு கிடைத்துவிடாது என்று நாங்கள் சொல்கிறோம்.

(நம்நாடு - 30.8.1954)