அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மீண்டும் ஆதிக்கம் பெறவிடுவது
எதேச்சாதிகாரத்தை வரவேற்பதாகும்

மீண்டும் ஆதிக்கம் பெறவிடுவது எதேச்சாதிகாரத்தை வரவேற்பதாகும்

“தேர்தல் முக்கியமானதுதான், அதற்காகத் தேர்தல் நன்மையைக் கருதி எந்தக் கட்சியும் தனது அடிப்படைக் கொள்கைகளை விட்டுவிட முடியாது. தன்னுடைய கொள்கைக்காகக் கட்சி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். எனவே கொள்கையை விட்டுவிட முடியாது.

“திராவிட நாடு அமைக்க வேண்டும் என்ற கொள்கையை எதிர்க்கும் சக்திகள் அனைத்தையும் முழு அளவில் நாங்கள் சமாளித்து விடவில்லை, என்ற போதிலும், எதிர்ப்புச் சக்திகளின் அளவு பெருமளவில் குறைந்திருக்கிறது, தங்களைக் காத்துக் கொள்ளும் நிலைக்குத் தற்போது அச்சச்திகள் வந்துள்ளன.

“தன்னந்தனியாக விடப்பட்டாலும், அடக்குமுறை ஏவப்பட்டாலும், பாலைவனத்தில் கொண்டுவிட்டாலும் எங்களது இறுதி மூச்சு உள்ளவரை திராவிடத்தின் விடுதலைக்காகவே போராடி வெற்றி பெறுவோம். எங்களது திறமை முழுவதையும் அதற்காகத்தான் பயன்படுத்துவோம்“ என்று மதுரை – திருப்பரங்குன்றத்தில், பாண்டியன் நகர் – தியாகராயர் பந்தல் – டி.எம்.நாயர் அரங்கில் நடைபெறும் தி.மு.கழக மூன்றாவது பொது மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்

இலட்சக் கணக்கில் திரண்டிருந்த மக்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே அண்ணா அவர்கள், மாநாட்டுத் தலைமையேற்று 100 நிமிட நேரம் உரையாற்றுகையில் – கழகச் சட்டமன்றப் பணிகளின் நிலையை விளக்குகையில் குறிப்பிட்டதாவது –

“1956ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.கழக இரண்டாவது மாநில மாநாட்டில் கூடியிருந்த மக்கள் தி.மு.கழகம் தேர்தலில் கலந்து கொள்ள வேண்டும்“ என் வாக்களித்தனர்.

“திராவிட முன்னேற்றக் கழகம் சனநாயக எதிர்க்கட்சியாக இருந்து ஆற்றிவந்திருக்கும் அரும்பணிகள் அனைத்தையும், நடுநிலையாளர்கள் அனைவரும் உணர்வர் சட்டமன்றத்தில் நாங்கள் ஆற்றியுள்ள பணிகள் மக்களின் மதிப்பைப் பெற்றிருக்கின்றன.

“கழகம் தனது பாராளுமன்றப் பணியைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலிலும் போட்டியிடும்“.

வடநாட்டு ஆதிக்கத்தை நன்கு உணர்த்தினோம்

தலைமையுரையின் துவக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது “திருச்சி மாநில மாநாட்டில் தலைமை ஏற்க, ‘தம்பி‘ என நாவலரை நான் அழைத்தேன். இந்த முறை இன்னொரு தம்பியைத் தலைமையில் அமரச் செய்ய வேண்டுமென்ற ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை“ என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பின், அண்ணா அவர்கள், தி.மு.கழகத்தின் சாதனைகளை விளக்கியும் திராவிட நாடு லட்சியத்திற்கு ஏற்பட்டுள்ள வலிமையைக் குறிப்பிட்டும் அதன் எதிரொலிகளைச் சுட்டிக் காட்டியும் பேசியதாவது –

இந்தியத் தேசியம் என்பது மாயை. 14 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பின் ஆளும் காங்கிரசுக் கட்சி, தேசிய ஒற்றுமைக் குழுவை நியமித்திருப்பதிலிருந்து தெரிய வருகிறது. 14 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பின் ஆளுங்கட்சி தேசிய ஒற்றுமைக்கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் 12 ஆண்டுக்குள் கன்னட – கேரள – ஆந்திர – தமிழக மக்கள், தங்களது இன ஒற்றுமையை உணரும்படிச் செய்துள்ளது. இதைவிட மேலாக வடநாட்டு ஆதிக்கத்தை நான்கு மாநில மக்களும் உணரும்படிச் செய்திருக்கிறது.

இரட்டிப்பு ஆற்றலுடன் இனிப் பணியாற்றுவோம்

இந்திய அரசு உருவாக்கும் ஐந்தாண்டுத் திட்டங்களில் தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது எனத் திராவிட மாநிலங்கள் நான்கிலும் உள்ள பொறுப்பு மிக்க தலைவர்கள் அடிக்கடி எடுத்துக் கூறி வருவது திராவிட நாடு கொள்கைக்கு வலுவூட்டுவதாக அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் இரட்டிப்பு ஆற்றலுடன் பணியாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

இந்திய அரசின் அதிகார ஆசை, நான்கு மாநிலங்களிலும் மத்திய அரசினால் இழைக்கப்படும் அநீதிகள், பொருளாதாரத் துறையில் புறக்கணிப்பு ஆகியவை திராவிட நாடு விடுதலைக்கான தூண்டுகோல்களாகும். இந்தத் தூண்டுகோல்கள் இருட்டடிப்பு மூலமாகவோ, எதிர்ப்பு மூலமாகவோ அல்லது அடக்கு முறை மூலமாகவோ அடக்கி ஒடுக்கிவிட முடியாது. இந்த நான்கு மாநிலங்களை விடுதலைப் பாதையை நோக்கி நடைபோடச் செய்யும் சக்திகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் குக்கிராமங்களில்கூடத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுவதைக் காண்கிறோம். கிராம மக்கள் திராவிட நாடு விடுதலை பெற வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்து முன்னேற்றக் கழகத்தை உறுதியான முறையில் ஆதரிக்கின்றனர்.

திராவிடத் தேசிய உணர்வு கிராமப் பகுதிகளில் இருக்கும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தைக் கூடக் குறைத்திருக்கிறது.

இனியும் நாடாளுவதா?

காங்கிரசு ஊழல்கள் குறி்த்து முன்னேற்றக் கழகம் புள்ளி விவரங்கள் மூலம் விளக்க வேண்டியதில்லை காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்க வேண்டியது மக்களின் கடமையாகும். காங்கிரசுக் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

மக்களை மயக்குவதற்காகக் காங்கிரசுக் கட்சி சோசலிசம் என்ற குரலை எழுப்புகிறது. ஆனால் தொழிலதிபர்களுடனும் – நிலக்கிழார்களுடனும், நேர்மையற்ற கூட்டுச் சேர்ந்து, மக்களை மறைமுகமாகச் சுரண்டுவதற்கு வகை செய்திருக்கிறது. தொழிலதிபர்கள்தான் காங்கிரசுக் கட்சியின் ஆதரவாளர்களாகவும் நிதி சேர்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். அனுமதிகள், கடன்கள் கொடுப்பதன் மூலம் காங்கிரசுக் கட்சி தொழிலதிபர்களுக்கு அரசியல் சலுகை காட்டுகிறது.

இத்தகு கட்சி மீண்டும் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது எதேச்சாதிகாரத்தை வரவேற்பதாகும். மக்கள் கிளர்ந்தெழுத்து இத்தக எதேச்சாதிகாரச் சக்தியை வாக்குகள் மூலம் முறியடிக்க வேண்டும்.

இது அரசியல் நேர்மையா?

சென்ற பொதுத் தேர்தல் முடிவுகளை ஆராய்பவர்கள் காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தும் பெரும்பாலான வாக்குகள் பெறாதிருப்பதை உணர முடியும். இன்றைய தேர்தல் முறையில் பெரும்பாலான வாக்குகளைப் பெறாத கட்சி சிறுபான்மை வாக்குகள் மூலம் பெரும்பாலான இடங்களைப் பெறும் அளவில் இருக்கிறது. காங்கிரசுக் கட்சி பெரும்பாலான மக்களின் வாக்குகளைப் பெறவில்லை.

பல கட்சிகள் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுகின்றன. வாக்குகள் சிதறுவதால் காங்கிரசு பதவிக்கு வந்து விடுகிறது. இந்த நிலை சனநாயத்திற்கோ அரசியல் நேர்மைக்கோ ஏற்றதல்ல.

மேலும் மக்கள், நிதி வசதிகள் அதிகம் உள்ள கட்சியின் தயவை நாட வேண்டிய நிலைக்கு வந்து விடுகின்றனர். இந்த வகையில் சனநாயகம் பொருளற்றதாகவும் உயிரற்றதாகவும் ஆகிவிடுகிறது.

நடைமுறைக்கு ஏற்றதா?

‘சனநாயகம் குழப்பம் நிறைந்தது – பொருளற்றது, எனவே சர்வோதயமும் சுயாட்சியும்தான் வேண்டும்‘ என் வினோபா பாவே கூறுகிறார். ‘கட்சிகளற்ற சனநாயகம் வேண்டும்‘ என ஜெயப்பிரகாஷ் நாராயணன் வலியுறுத்துகிறார். அயூப்கான் கூறுகிற மாதிரியில் அமைந்த அடிப்படைச் சனநாயகம் வேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர்.

தத்துவார்த்தமாகப் பார்க்கும்போது இந்தத் திட்டங்கள் அனைத்திலும் சில நன்மைகள் இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் நடைமுறைக்கு ஒத்து வராதவை.

குறைந்த அளவுத் திட்டத்தில் எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும் எனப் பொதுவுடைமையர் சிலர் கூறுகின்றனர். ஆனால், சுதந்தர கட்சியை முற்போக்கான கட்சி என ஏற்றுக் கொள்ள முடியாது என நிபந்தனை விதிக்கின்றனர்.

பொதுவுடைமையரில் இன்னும் தீவிரமானவர்கள், “திராவிட முன்னேற்றக் கழகம் தனது திராவிட நாடு கொள்கையை விட்டுத் தேர்தல் கூட்டணியில் சேர வேண்டும்‘ எனக் கூறுகின்றனர். ‘தேர்தல் நேரத்திலாவது திராவிட நாடு கொள்கையைக் கைவிட வேண்டும்‘ என வலியுறுத்துகின்றனர். அதேபோன்று சுதந்தரா கட்சிக்காரர்கள் ‘பொதுவுடைமையாளரைச் சேர்க்கக்கூடாது‘ என்றனர்.

புதிய சிக்கல்கள் வந்தன

கூட்டணிக்கான திட்டங்கள் பழைய சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

“காங்கிரசு ஆட்சியைப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் போட்டியிடுவதைத் தவிர்த்துக் காங்கிரசை முறியடிப்பதில் முழுக் கவனமும் செலுத்த வேண்டும். இதற்காக, தொகுதிகளைப் பிரித்துப் போட்டியிடலாம். அல்லது தொகுதி அடிப்படையில் ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.

பலதிறப்பட்ட கொள்கைகள் கொண்ட சக்திகள் நிலவிவரும் இந்தியா போன்ற நாடுகளில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும். அப்படி இருந்தால் தான், உண்மையான சனநாயகம் மலரும். பிற கட்சித் தலைவர்களும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம் என்றால், நிலைமைகளுக்கு ஏற்றபடி தொகுதி ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

பாராளுமன்றக் குழு

தேர்தல் கூட்டு பற்றியும் மற்றும் தொகுதி நிலை குறித்தும் இப்போது ஏதும் கூறமுடியாது.

தொகுதி நிலைகளைக் கண்டறிய ஆணையாளர் ஒருவருடன் மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய பாராளுமன்றக் குழு அமைக்கப்படும். அக்குழு, மாவட்டந்தோறும் சுற்றிப் பார்த்துத் தொகுதி நிலைகளை ஆகஸ்ட் திங்கள் இறுதிக்குள் என்னிடம் அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கையைப் பொதுக்குழு கூடி விவாதி்த்து முடிவு செய்யும்.

(நம்நாடு - 15.7.61)