அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மிரட்டல்களுக்கு அஞ்சிக் கொள்கைகளைக் கைவிடமாட்டோம்!

சென்னை – திருவல்லிக்கேணியில் அண்ணா முழக்கம்

நாம் எதிர்ப்புகளுக்கு அஞ்சிக் கொண்டு கழகம் ஆரம்பிக்க வில்லை. கூட்டத்தில் வெடி வைப்பார்கள் என்பதும் நாம் எதிர்பார்த்ததே.

இப்பொழுது நம்மீது வீசப்படும் அடக்குமுறை மிகவும் குறைவு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அண்ணாதுரை எங்கே? என்றால் “அலிப்புரம் சிறையில்“ என்று கேள்விப்பட்டாலும் கேள்விப்படுகிறீர்கள்.

நமது போராட்டக் காலத்தில் நம்மில் பலர் உயிரிழக்க நேரிடும். நான் சாகும் நிலையில் இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்குச் சாலையின் மூலம் பயணத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று சொல்லிவிட்டுத்தான் உயிர் நீப்பேன்.

நமது கழகத்தைச் சட்ட விரோதமாக்கி விட வேண்டுமென்ற சிலர் மேலிடத்தில் சொன்ன நேரத்தில் இப்பொழுது இப்படிச் செய்தால் இந்த இயக்கம் காட்டுத் தீயைப் போல் பரவிவிடும் என்று பதில் சொன்னதை நான் அறிவேன்.

எந்த நிலைமைக்கம் தயாராயிருங்கள்!

ஆகவே எப்பெழுதும் எந்த நிலைமைக்கும் நமது தோழர்கள் தயாராக இருக்கவேண்டுமெனக் கேட்டக் கொள்கிறேன், என்று அண்ணா அவர்கள் சென்னை – திருவல்லிக்கேணி இராகவன் நூல் நிலைய நாலாம் ஆண்டு விழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.

இந்த வட்டாரத்தில் மறைந்த மாவீரன் இராகவன் பெயரால் ஒரு நல்ல நூல் நிலையத்தை அமைத்துத் திறம்பட அதனை நடத்திக் கொண்டு வருகிற நண்பர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிற இந்த நல்ல முயற்சியில் உறுதுணையாக இருந்து உதவி வரும் பொதுமக்களையும் கழக ஆதரவாளர்களையும் நான் பாராட்டுவதோடு அவர்களுக்கு என்னுடைய நன்றியறிதலையும் வண்ணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூல் நிலையத்தின் ஆண்டு விழாவினை மிகச் சிறந்த முறையில் நண்பர்கள் நடத்துகிறார்கள். இவ்வளவு நல்ல முறையில் நடக்கின்ற இந்த ஆண்டுவிழாக் கூட்டத்தில் துவக்கத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டதைப் பற்றி நம்முடைய நண்பர்கள் இங்கே பேசிக்கொண்டிருந்தார்கள். நான்தான் அதனைத் தடுத்து நிறுத்தி முதலில் ஏற்பட்ட சில இடையூறுகளைப் பற்றி இப்பொழுது இங்கே பேச வேண்டாம் என்று சொன்னேன்.

மகிழ்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும்

பெண் பார்ப்பதற்காகப் பத்து ஊருக்கு அலைந்து பிறகு நல்ல பெண்ணும் கிடைத்துத் திருமணம் நடக்கின்ற நேரத்தில் “ஆகா எத்தனை ஊர் அலைந்தேன்? எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்று மணவிழாவில் பேசினால் அது திருமண மகிழ்ச்சியை அனுபவிக்கத் தெரியாத பேச்சாகும். ஆகையினால்தான், துவக்கத்தில் ஏற்பட்டதைப் பற்றி நாம் நினைத்தால் இப்பொழுது நாம் அடைய வேண்டிய மகிழ்ச்சிக்கு அது குந்தகமாக இருக்குமென்று நான் சொன்னேன். நம்முடைய நண்பர்களும் அதைப்பற்றி அதிகம் பேசாமல் அந்த அளவிலே நிறுத்திக் கொண்டார்கள்.

இங்கே மின்சார விளக்குகள் எரியாமல் யாரோ தடைசெய்து விட்டார்களென்று நம்முடைய நண்பர்களெல்லாம் சொன்னார்கள். அது நம்மீது அவர்களுக்கு இருக்கும் கோபத்தினால் அல்ல, இவ்வளவு விளக்குகள் எரிந்தால் ஏராளமான பூச்சிகள் வந்து தொல்லை தருமே என்பதனால்தான் அவர்கள் அப்படிச் செய்திருக்கிறார்கள். ஆகவே சில்லறை இடையூறுகளைப் பற்றி நாம் அதிகமான அளவுக்குக் கவலை கொள்ளத் தேவையில்லை. நாம் எடுத்துக் கொண்டிருக்கும் இலட்சியத்தை விளக்கவும் பொது மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய நல்ல ஆதாரங்களை விளக்கி் சொல்லுவதற்குமே நமக்கு நேரமில்லை.

கவலைப்பட்டால் பயணம் நடக்காது

நல்ல மண்காற்று அடித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு செல்லுகிற தாய், தலையில் ஒரு சுமையான கூடையையும் எடுத்துச் செல்லுகிற போது பலமான மண்காற்று அடிப்பதால் ஆடை ஒரு பக்கம் கலையும், கண்ணில் மண்படுவதால் குழந்தை தன்னை மறந்து அழும். தலையில் ஏற்றிவைத்திருக்கிற பாரமான கூடை ஒருபுறத்தில் சாயும், பாதிக் கண்ணை மூடிக்கொண்டு வருவதால் எதிர்புறத்தில் வருகிறவர்கள் மீது மோதிக் கொள்ள நேரிடும். இவ்வளவு இடையூறுகளையும் அனுபவிக்கின்ற தாயார் குழந்தையைக் கீழே போட்டுவிடமாட்டார்கள். கூடையையும் இறக்கி வைத்துவிட மாட்டார்கள். நடக்க வேண்டாமென்று நிற்கவுமாட்டார்கள். இத்தனைத் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு நடந்து வீட்டுக்கப் போய்க் கூடையை இறக்கி ஒழுங்காக வைத்துவிட்டுக் குழந்தைமேல் படிந்திருக்கும் மண்ணைத் துடைத்துவிட்டுப் பிறகுதான் தன்னுடைய முகத்தைக் கழுவிக் கொள்வார்கள். இதைப் போலச் செய்யாமல் கூடையை அங்குப் போட்டுவிட்டாலோ அல்லது ஒதுங்கி நின்றுவிட்டாலோ காற்று அடிக்கிறது என்று கவலைப்பட்டாலோ பயணம் நடக்காது.

தி.மு.க. தாய் குழந்தையை இறக்கமாட்டாள்

இடுப்பிலே குழந்தை இருக்கிறது, தலையில் கூடையிருக்கிறது. போக வேண்டிய தூரம் நெடுந்தூரம் இருக்கிறது. மண்காற்று வேறு அடித்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால் நமது நண்பர்கள், எதை எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அதையே கவனத்தில் வைத்திருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதை நான் சொல்லுவது வெறும் வார்த்தை அலங்காரத்திற்காக அல்ல இடுப்பிலே இருக்கிற குழந்தைதான் நாம் கண்டறிந்த திராவிட நாட்டு இலட்சியம். தலையில் இருக்கிற கூடைதான் இந்தியப் பேரரசின் ஆட்சி மண் காற்று போல தொல்லைகளைத் தருவன, மாற்றுக் கட்சிகள், ஆட்சியின் அடக்குமுறைகள்.

கூடையும் தலையில் இருக்கவேண்டும். குழந்தையையும் அழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆடை நழுவாமல் கவனிக்கவும் வேண்டும். எதிரில்வந்து மோதுபவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேண்டும். பயணத்தையும் நடத்த வேண்டும். இத்தனைக் காரியங்களையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருப்பதால் நம்முடைய தோழர்களுக்குச் சில நேரத்தில் ஆத்திரம் வருகிறது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகமெனும் தாய் யார் மிரட்டினாலும் குழந்தையை இறக்கமாட்டாள். எது திராவிடநாடு என்று காமராசர் சொன்னாலும் குழந்தையைக் கீழே இறக்கமாட்டாள்.

நாவலர் பாவனையில் காட்டுவார்

காமராசர் திராவிட நாடு ஏது என்று சொன்னதை நமது நண்பர் அருப்புக்கோட்டை இராமசாமி குறிப்பிட்டுப் பேசுகையில் காமராசரை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். ஆகையினால் அவரைப் பற்றி இங்குச் சொல்லுவதற்கம் கொஞ்சம் அச்சப்பட்டேன் என்று சொன்னார். நண்பர் சொன்னதில் ஒரு சிறு தவறு இருக்கிறது இவ்வளவு நீண்ட காலம் தெரிந்திருக்கும் அவர் இதைத் தவிர வேறு என்ன பேசுவார்? என்பதை எண்ணிப் பார்த்திருக்கவேண்டும். இவ்வளவுதான் அவருக்குப் பயிற்சியிருக்கிறது. நாடும் அந்த அளவுக்குத்தான் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறது.

ஆனால் நாம் “திராவிட நாடு திராவிடருக்கே“ என்று சொல்லுகிற போது காமராசர், ஆந்திரரும், கன்னடியரும், கேரளத்தாரும் தனியாகப் பிரிந்து போய்விட்ட பிறகு இனி திராவிடநாடு பிரிவது எப்படி? என்று கேட்டதாக நான் பத்திரிகையில் பார்த்தேன். நான் இதுபற்றி அவருக்க விளக்க வேண்டுமானால் அரசியல் விளக்கங்கள் அதிகம் தேவையில்லை. நம்முடைய நாவலர் பேசுகின்ற ஒரு கூட்டத்திற்குப் போய் அவர் எங்காவது மாடியிலிருந்து அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும். கேட்காவிட்டால் பார்த்தால் கூட விஷயம் புரிந்துவிடும். மொழி வழிப் பிரிந்து இனவழி ஒன்று சேர வேண்டும் என்பதற்குப் பல ஆதாரங்களை விளக்கிச் சொல்லிவிட்டு இவைகளைச் சிலபேர் புரிந்துகொள்ளாவிட்டால் என்ன செய்வது என்பதனால் காமராசரும் தெரிந்து கொள்ளவேண்டுமென்பதால் அவர் பாவனையில் மொழி வழி பிரிந்து இனவழி ஒன்று சேருவதைக் காட்டுவார்.

மொழிவழி மாநிலத்தை ஆதரித்தவர்கள் நாம்

காலையில் 11 மணிக்கு அலுவலகத்திற்குப் போகும் கணவன் திரும்பி வரவேமாட்டான் என்ற கண்ணைக் கசக்கிக் கொண்டு எந்தத் தாய்மாரும் எங்கும் இருக்கமாட்டார்கள். ஆந்திரக்காரர்கள் ஏதோ எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதைப் போல காமராசர் “அதோ பார் ஆந்திரா“ என்கிறார். நாம் மொழி வழி மாநிலம் பிரிவதை ஆதரித்தவர்கள்.

காமராசர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச மாட்டார். ஏனெனில் அவருடைய உள்ளத்தில் இருப்பதே கொஞ்சம்தான். ஆகையினால் நம்முடைய நண்பர் அவரைப்பற்றி இவ்வளவு ஆயாசப்பட வேண்டிய தேவையில்லை.

நாம் எடுத்துக் கொண்டிருக்கின்ற காரியம் காமராசர் சொல்லுவதைப் போல ஏதோ கோபத்தில் விளைந்ததல்ல, காமராசர் “கன“ மானத்திற்குப் பிறகுதான், சுப்பிரமணியம் ‘கண்‘ மானத்திற்குப் பிறகுதான் அவர்கள் கனமானதைப் பார்த்து மன எரிச்சலினாலோ, அழுக்காற்றினாலோ, இந்த அரசியல் திட்டம் வகுக்கப்பட்டதென்று காங்கிரசுக்காரர்கள் உள்ளபடியே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு தீர்மானம் நிறைவேற்றினோம்

அவர்களுக்கு நான் விளக்க விரும்புகிறேன் – காங்கிரசு ஆட்சிக்கு வந்த பிறகு மட்டுமல்ல, ஆட்சிக்கு இவர்கள் வருவார்கள் என்பதே ஆராய்ச்சிக்காரர்களின் வேலையாக இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சிக்கு வருவதே முடியாதென்று காங்கிரசுக்காரர்கள் அச்சப்பட்டுக் கொண்டும். ஆயாசப்பட்டுக் கொண்டுமிருந்த நேரத்தில் சுதந்திரம் வருமா? என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் திருவாரூரில் கூடிய நம்முடைய மாநில மாநாட்டில் திராவிட நாடு திராவிடருக்கே என்பதற்கு முதற்படியாகத் தமிழ்நாடு தமிழருக்கே என்ற தீர்மானத்தையும் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆந்திர நாட்டில் தெலுங்கு ஆட்சி மொழியாகவும், கன்னடத்தில் கன்னட மொழியிலும், கேரளத்தில் மலையாள மொழியிலும் ஆட்சி நடக்க வேண்டுமென்ற இந்த இரண்டு தீர்மானத்தையும் நாம் நிறைவேற்றினோம். இது காமராசர் கனமானதற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட திட்டமல்ல. இந்தியாவுக்கு எப்படிப்பட்ட சுயராஜ்ஜியத்தைத் தருவது என்று வெள்ளைக்கார நாட்டிலிருந்தவர்கள், நிபுணர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருந்த நேரம், அப்படிப்பட்ட நேரத்தில் இந்தியாவின் மாநில அமைப்பை எப்படி ஏற்படுத்த வேண்டுமென்று நாம் யோசனை சொல்லிக் கொண்டிருந்த நேரம், இது உண்மையான காங்கிரசுக்காரர்களுக்குத் தெரியும். இவர்களில் சிலர் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

அன்றே பிறந்தது இந்தத் திட்டம்

ஆனால் தேர்தல் காங்கிரசுக்காரர்களுக்கு நான் விளக்கம் சொல்ல விரும்பவில்லை. மற்ற நல்ல காங்கிரசுக்காரர்கள் இந்த திருவல்லிக்கேணிப் பகுதியில் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்கள், உழைத்தவர்கள், தியாகத் தழும்புகள் பெற்றவர்கள், இப்படிப்பட்டவர்கள் மிச்சம் மீதம் இருப்பதனாலே அவர்கட்கும் சொல்லுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்பட்ட பின்னர்தான் திராவிட நாடு திராவிடருக்கே என்ற திட்டம் வகுக்கப்பட்டதல்ல. ஜஸ்டிஸ் கட்சி சீமான்களின் கைப்பாவை யாகிறது என்று தெரிந்தவுடன் பெரியார் அவர்களும் எங்களைப் போன்ற இளைஞர்களம் சேர்ந்து திராவிடக்கழகம் ஆரம்பித்தோம். அன்று முதல் ‘திராவிடநாடு திராவிடருக்கே என்ற திட்டம் எங்களிடத்தில் இருக்கிறது. ஆகையினால் பெரியாரின் கோபத்திலோ, கொந்தளிப்பிலோ பிறந்ததல்ல இந்தத் திட்டம். இந்த நாட்டு மக்கள் நன்குவாழ வேண்டுமானால் எப்படிப்பட்ட அரசியல் அமைப்பு இருக்கவேண்டுமென்பதை நன்றாகச் சிந்தித்துப் பார்த்து நாங்கள் அமைத்ததுதான் இந்த திட்டம். ஆனால் எங்களைவிட மெத்தபடித்தவர்கள் “இந்த திட்டம் தீதானது“ என்று எங்களிடத்தில் வாதிடுவதானால் அதனை நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.‘

நான் கல்லூரிக்குப் போனதால் மட்டுமே காமராசர் ஏன் போகவில்லை என்று நான் கேட்கவில்லை. எனக்குக் கல்லூரியில் பூகோளம், பொருளாதாரம், சரித்திரம் இவைகளையெல்லாம் ஆசிரியர்கள் குறைவின்றிக் கற்றக் கொடுத்தார்கள். அதனால்தான் நான் இது போன்ற திட்டங்களைப் பற்றிப் பேசுகிறேன். ஆனால் காமராசருக்கு நல்ல வேளையாக இவைகளெல்லாம் புரியாது. அவரைப் பொறுத்தவரையில் அது நல்லதுகூட.

அப்பொழுதுதான் அரசியல் நிலைக்கும்

நாங்கள் படித்த காரணத்தால் உலகத்தில் இப்படிப்பட்ட நாடுகளெல்லாம் வாழுகின்றனவே, மிகச் சின்னநாடுகள் வாழுகின்றனவே என்பதைப் பற்றியெல்லாம் சிந்தித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே நாம் வாழ்ந்த பெருமை, ஆண்ட விதம் இவைகளைப் பற்றியெல்லாம் பேசி வருகிறோம்.

இப்பொழுது இருக்கும் இந்த இரண்டு விதங்களில் ஒன்று நடக்க வேண்டும். அதாவது நான் படித்ததெல்லாம் ஏதாவது மாய மந்திரத்தினால் என் மனத்திலிருந்த நீங்கிவிடவேண்டும் அல்லது காமராசர் கல்லூரியில் பெற வேண்டிய அறிவை வீட்டில் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அரசியல் நிலைக்கும் இப்பொழுது இந்தப் பிரச்சினை நாட்டு மக்கள் தீர்ப்பளிக்க வேண்டிய பிரச்சினையாகிவிட்டது. அந்த பிரச்சினையை உங்கள் மத்தியில் நான் வைக்கிறேன்.

நீங்கள் எண்ணிப் பாருங்கள். சிந்தி்த்துப் பாருங்கள். ஆராய்ச்சி நடத்திப் பாருங்கள். அதற்குப் பிறகு இந்தியா ஒன்றாகத் தான் இருக்க வேண்டுமென்றால் காங்கிரசில் இருங்கள். இல்லை, இந்தியா ஒன்றல்ல என்பதற்கு நாங்கள் சொல்லும் காரணம் உங்களுக்குச் சரியென்றுபட்டால் நீங்கள் எங்கள் பக்கத்தில் வரவேண்டும். இப்படிச் செய்யாமல் இவனுக்குத் தெரிந்ததை இவன் சொல்லுகிறான். அவனுக்குத் தெரிந்ததை அவன் சொல்லுகிறான் என்று ஒரு தீர்மானத்திற்கு வராவிட்டால் நாட்டிலிருக்கிற அரசியல் சிக்கல் தீராது.

எந்தப் பொண்ணும் பிடிக்கவில்லையாம்!

ஆகையினாலே அறிவாளிகள் நிரம்பி இருக்கும் இந்தப் பகுதியில் இங்கே இவன் எப்படி வந்தான்? என்ற கோபப்படுவதைவிட நான் சொல்லுவதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது நல்லதாகும்.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் காங்கிரசிற்கு இந்தப் பகுதியில் நல்ல வீரர்கள் இருந்தார்கள். அதைப்போல நமது போராட்டத்திற்கும் நல்ல வீரர்கள் இந்தப் பகுதியில் ஏற்பட வேண்டு மென்று நான் விரும்புகிறேன்.

ஆளுங்கட்சியாகிய காங்கிரசுக் கட்சியும், அதனுடைய தலைவர்களும் எந்த அளவுக்கு எதிர்க்கட்சியை மதிக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஒரு வீட்டில் ஐந்து பெண்கள் இருக்கிறார்கள். பெண் பார்க்க வருபவர் மூத்த பெண்ணைக் காட்டினால் அது வேண்டாம் “கருப்பாக இருக்கிறது“ என்கிறார். அடுத்தப் பெண்ணையும் மற்ற பெண்களையும் பிடிக்கவில்லை என்றால் என்ன பொருள்? இவன் வேறு இடத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டான் என்று அர்த்தமே தவிர பெண் பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. அதைப் போல நாட்டிலிருக்கிற எதிர்க்கட்சிகளில் ஒரு கட்சியையும் பிடிக்கவில்லை என்கிறது காங்கிரசு.

எதிர்க்கட்சிகளை வசைபாடும் காமராசர்

திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் போன தேர்தலில் பதினேழு இலட்சம் அல்லவா, வாக்களித்தார்கள்? சட்டசபையில் பதினைந்து பேர் இருக்கிறார்கள். பாராளுமன்றக் இரண்டு பேர் இருக்கிறார்கள். சென்னை மேயர் பதவியும் அவர்கள் வகிக்கிறார்கள். அது ஒரு நல்ல எதிர்க்கட்சி அல்லவா? என்று கேட்டால் காமராசர் பேசுகிறார். அவர்கள் அரசியல் அப்பாவிகள் அவர்கள் பத்திரிக்கை நடத்துவதெல்லாம் பொருள் சேர்ப்பதற்கென்று. ஏதோ அவர்கள் பத்திரிக்கை எழுதி, அச்சிட்டுப் படித்துவிட்டு நேரே கொத்தவால் சாவடி பழைய பத்திரிக்கை கையில் போட்டு விடுபவர்கள் போல அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

சரி எங்களைத் தள்ளிவிடுங்கள், சோஷலிஸ்டுக் கட்சி நல்ல எதிர்க்கட்சியா? என்றால் அவர்களுக்குக் கொள்கையில்லை என்கிறார்கள். சரி பிரஜா சோஷலிஸ்டு என்றால் அவர்களுக்கு ஆகஸ்டில் இருக்கும் கொள்கை செப்டம்பரில் இல்லை என்கிறார்கள். அதையும் விட்டுத்தள்ளுஙக்ள். பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு ஆட்சி நடத்திவரும் கம்யூனிஸ்டுக்கட்சி நல்ல எதிர்க்கட்சியா? என்ற கேட்டால் சே, சே அவர்கள் மாஸ்கோ விற்கல்லவா அடிமைகள்? என்கிறார்கள். ஐயா இத்தனை ஆண்டுகள் ஞானாசியிராக இருந்தவர். அரசியல் வழிகாட்டி என்று நாங்களல்ல – நீங்கள் பல முறை சொன்னீர்களே அந்த ஆச்சாரியார் ஆரம்பத்திருக்கும் சுதந்திராக் கட்சி நல்ல கட்சியா? என்று கேட்டால் அது “கிழவர்கள் கட்சி“ என்கிறார்கள். சரி பெரியார் நடத்தும் திராவிடர் கழகம் நல்ல எதிர்கட்சியா? என்றால் நல்ல கட்சிதான். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன் என்கிறார்கள். சரி திருப்பதி வரை உரிமை – இமயம் வரை உறவு என்று சொல்லும் நண்பர் சிவஞானக் கிராமணியார் நடத்தும் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சியா? என்றால் சிவஞானக் கிராமணியாரைப் பார்த்து இனி நீங்கள் ஏன் கட்சி நடத்துகிறார்கள் என்று இப்பொழுது சொல்லுகிறார்.

இப்படியிருக்கின்ற எதிர்க்கட்சிகளையெல்லாம் நல்ல எதிர்க்கட்சி அல்லவென்று சொன்னால் இதனுடைய உட்பொருள் என்ன? எங்களுக்கு ஒரு எதிர்க்கட்சியும் வேண்டாம். நாங்கள் ஒரே கட்சிதான் ஆட்சி நடத்தப் போகிறோம் என்றுதானே அர்த்தம்?

நீங்களே எதிர்க்கட்சி அமைப்பீர்களா?

அப்படியானால் இரஷ்யாவில் அறிவித்ததைப் போல அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்று அறிவித்துவிட்டால் நாங்கள் இப்படி மேடை அமைத்துக் கூட்டங்கள் போட்டுப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லையே. இப்படிச் செய்யாமல் நாங்கள் நடத்துவதுதான் சனநாயகம் இதுதான் மக்களாட்சி என்று பேசுகிறார்கள்.

“எதுவும் நல்ல எதிர்க்கட்சியல்ல என்று சொன்னால் அதனுடைய பொருள்தான் என்ன? கொஞ்சம் பொறுத்துக் கொண்டிருங்கள். அடுத்த தேர்தலில் காமராசர் ஆளுங்கட்சியாகவும், சுப்பிரமணியம் எதிர்க்கட்சியாகவும் இருக்கப் போவதாகச் சொல்லுகிறாகர்களா“

ஒரே கட்சிதான் இருக்கவேண்டும் எதிர்க்கட்சி ஒன்றும் இருக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் இன்றைய தினம் என்ன ஆனார்கள். போன வாரம் துருக்கியில் நேரு பிரானுக்கு விருந்திட்டுச் சிறப்பாக ஊர்வலம் வருகையில் நேரு அந்நாட்டு முதலமைச்சரிடம் என்ன கலவரமாமே? என்று கேட்க ஒன்றுமில்லை ஒரு நாலுபேர் கூச்சல் போடுகிறார்கள். அவ்வளவுதான் என்று அவர் சொல்ல உங்கள் நாடு எப்படி? என்று அவர் கேட்க இவரும் அதையே திருப்பிச் சொல்லிவிட்டு வந்தார். ஆனால் அந்த நாட்டு முதலமைச்சராகிய மெண்டரீஸ் இன்றைய தினம் எங்கே இருக்கிறார்? இராணுவ முகாமில் அல்லவா சிறை வைக்கப்பட்டிருக்கிறார்?

நல்ல எதிர்க்கட்சி வேண்டும்

மக்கள் பிரதிநிதிகள் நிரம்பிய மன்றத்தில் அதிகப் பலத்தைப் பெற்றவர் மெண்டரீஸ். சிறுபான்மைப் பலத்தைப் பெற்றவர் எதிர்க்கட்சித் தலைவராகிய இனனு என்பவர். மக்கள் சக்தியை மதிக்காமல் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டதின் விளைவு இன்று மெண்டரீசும் அவருடைய சகாக்களும் இராணுவப் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டிருப்பது.

நான் இதை சொன்ன உடனே அரசாங்கத்தை மிரட்டுவதாக காங்கிரசுக்காரர்கள் தப்பாக நினைக்கவேண்டாம். இப்படியும் முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். இரண்டு திங்களுக்குமுன் இந்திய இராணுவத் தலைவர் திம்மையாவுக்கும். பாதுகாப்பு அமைச்சர் கிருட்டினமேனனுக்கும் ஏற்பட்ட தகராறினால் அப்படியொரு இராணுவ ஆட்சி வருமோ என்ற அச்சம் நாட்டில் இருந்தது. சந்தேகமிருந்தால் நாசரைப் பார், இந்தோனாஷியாவைப் பார், பாகிஸ்தானைப் பார், என்று பேசினார்கள். எனக்கு அப்படிப்பட்ட பயம் இருந்ததில்லை.

நான் துருக்கியில் நடந்ததைப் போல நடக்கத் தூண்டுவதாக யாரும் எண்ண வேண்டாம். அப்படிப்பட்ட நிலைமை நமது நாட்டுக்கு வரக்கூடாது என்கிற பொறுப்புணர்ச்சியினாலேதான் இதைச் சொல்லுகிறேன். ஆகையினாலே நல்ல எதிர்க்கட்சி நாட்டிலே வளர வேண்டும் என்பதில் ஆட்சியில் இருப்போர் அக்கறை காட்ட வேண்டும்.

காமரசாரின் உழைப்பைப் பொறுத்தவரையில் நான் அவருக்கு வணக்கம் செலுத்த தயாராக இருக்கிறேன். பக்தவச்சலமும். சுப்பிரமணியமும், ஊட்டியில் குளு குளு என்று இருக்கும் நேரத்தில், காமராசரும், கக்கனும் தஞ்சை மாவட்டத்தில் 21 நாள் சுற்றுப் பயணம் செய்தார்கள்.

நல்ல காளைமாட்டிற்கு மூக்கணாங்கயிறு அவசியம் தேவை, அதைப்போல “இந்திய ஒற்றுமை“ என்ற கயிற்றால் காமராசர் “இந்திய அரசியல் சட்டம்“ என்கிற புளியமரத்தில் கட்டப்பட்டிருக்கிறார். கயிறும் நைந்து கொண்டு வருகிறது. விரைவில் அறுந்துவிழும் என்பது நமக்குத் தெரிகிறது. கயிறு கொஞ்சம் நன்றாக இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டுப் இந்த கயிறு அறந்துவிடாது என்ற அவர்கள் கூறுகிறார்கள்.

நம்மைக் காட்டித்தான் வாங்குகிறார்

நைந்து போகிறது என்பதற்கு ஆதாரம் வேண்டுமானால் பம்பாய், குஜராத்தைக் காட்டலாம். அதை உறுதிப்படுத்துவதுதான் நம்முடைய இயக்கத்தின் வளர்ச்சி.

நாங்கள் சட்டசபையில் பேசி முடித்தவுடன் என்ன சொல்லுகிறோம்? உங்களுக்கு வடநாட்டுடன் போராடத் திராணியில்லை, திறமையில்லை, தைரியமில்லை என்றெல்லாம் பேச ஆரம்பித்தவுடனே, சட்டசபைக் கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனே காமராசர் டெல்லிக்குப் போய் நேருவைப் பார்த்து, சாடையிலேயே பேசி, நமது கழகத்தை முன்காட்டித்தான் எதையும் கேட்கிறார்கள். ஏதோ கொஞ்சம் கிடைத்ததை வாங்கிக் கொண்டு வருகிறார்.

நான் சட்டசபையில் சொன்னேன் – நீங்கள் ஒவ்வொரு தடவையும் டெல்லிக்குப் போகும்போது, உங்களோடு நான் வருகிறேன் என்பதை நீங்கள் மறந்துவிட மாட்டீர்களென நம்புகிறேன் என்று.

பெரியாரே திராவிட நாடு வேண்டாமென்று சொல்லிவிட்டார். இந்த அண்ணாதுரை மட்டும் திராவிடநாடு வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாரே? என்று காமராசர் கேட்கிறார்.

அவர் சேர்ந்தால் நான் சேருகிறேன்

விவாதத்திற்காகக் கூட இதனை ஒப்புக் கொள்ள முடியாது அப்படியே ஒப்புக் கொள்வதானால், நான் அவரைத் திருப்பிக் கேட்கிறேன். ஆச்சாரியார் காங்கிரசை விட்டு விலகிவிட்டாரே. காமராசார் மட்டும் ஏன் காங்கிரசில் இருக்கிறார். அவர் “சுதந்திரா“ கட்சியில் சேரட்டும் உடனே நான் திராவிடர் கழகத்திலே சேருகிறேன்.

காமராசர் அவர்கள் நாம் சேர வேண்டிய இடம் திராவிடர் கழகம் என்று பேசி வருகிறார். நான் அவருக்குச் சொல்லிக் கொள்ளுவேன். திராவிடர் கழகம் நான் கட்டிய வீடு. அதன் கதவு எனக்காகத் திறந்துதான் இருக்கிறது. அந்த வீட்டிற்குப் போக வேண்டுமானால் எப்படி, எப்பொழுது போக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பெரியார் நடத்தும் திராவிடர் கழகத்திற்குக் காமராசர் கூர்க்கா வேலை பார்ப்பது போலவும் என்னிடம் ஏதோ இலஞ்சம் வாங்கிக் கொண்டு உள்ளே போங்கள் என்று சொல்வதைப் போலவும் காமராசர் பேச்சு இருக்கிறது.

இந்த நிலையில் கழகத் தோழர்கள் அனைவரும் நான் துவக்கத்தில் சொன்ன வடைக் கதையை நினைவு படுத்திக்கொண்டு மேன்மேலும் பணியாற்றி வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 1, 2-6-60)