அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மூட்டை தூக்கும் மார்வாரியைக் கண்டதுண்டா?

“காங்கிரசு ஆட்சியில் பம்பாயில் நம் தோழர்கள் குப்பை மேட்டில் குடியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவருடைய பாட்டன் சேரன். இன்னொருவனுடைய பாட்டன் சோழன். மற்றொருவனுடைய பாட்டன் பாண்டியன்! அவர்கள் கட்டிய கோபுரங்கள் இங்கே – அவர்கள் வாழும் குப்பைபேடுகள் அங்கே!“

“தமிழர்கள் அங்குக் கூலி வேலை செய்கிறார்கள்! மராத்தியர் குசராத்திகள் இங்கே ‘மேனா மினுக்கி‘ வாழ்வு வாழ்வுகிறார்கள்“

“அங்கே ஆரே என்ற பகுதியில் எருமை மாடுகளை மேய்ப்பவர்கள் நம் தமிழர்கள்) ஆளைப்பார்க்காமல் முகத்தைப் பார்க்காமல், காலை மட்டும் பார்த்து ‘பூட் பாலிஷ்‘ போடுபவர்கள் தமிழர்கள்! துறைமுகத்தில் மூட்டை தூக்கும் கூலிகளும் தமிழர்கள்தான்! ஆனால் உங்களில் யாராவது இங்கே மார்வாரி, குசராத்தி மூட்டை தூக்கியதை கூலி வேலை செய்ததைப் பார்த்தது உண்டா? ‘தமிழர்களைக் கூலிகளாக்கிய கொடிய சர்க்கார்‘ எனக் கூறுவதில் தவறேதேனும் உண்டா?“ இவ்வாறு அண்ணா அவர்கள், சென்னை 96வது வட்டம் மாம்பலத்தில் கடந்த டிச-28இல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வினவினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கமாவது –

சூது அறிய வேண்டும்

“சென்னை – செங்கற்பட்டு ஆகிய இடங்களில் பிப்-24ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கிறது. 17ஆம் தேதியன்று தன்னுடைய தொகுதித் தேர்தலை முடித்துக் கொண்டு காமராசர் தன் படைகளுடன் 24ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் செங்கற்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் வந்து தங்கித் தேர்தல் வேலையில் ஈடுபடப் போகிறார். சென்னைத் தோழர்கள் காஞ்சிக்கு வரமுடியாது தான் காஞ்சியிலிருந்து சென்னைக்கு வர இயலாது. இந்த வகையிலே வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களை அமைத்திருக்கிறார்கள். இதில் உள்ள சூது என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதனால் பலன் பெற முடியுமானால் தாராளமாகக் காமராசர் பெற்றுக் கொள்ளட்டும்.

பொதுத் தேர்தலுக்காக வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்கவும், ஓட்டுச் சாவடிகளைக் கட்டவும், அதிகாரிகளை நியமிக்கவும். போலீசுக்காரர்களை நியமிக்கவும், ஆளுங்கட்சியினர் ரூ.5 கோடி செலவு செய்கிறார்கள்.

வாழத்தக்கவர்களைத் தேர்ந்தெடுங்கள்

ரூ.1000 செலவு செய்யும் திருமணத்திற்கே – பார்க்க வேண்டிய இடத்தில் பெண் பார்த்து, கேட்க வேண்டிய இடத்தில் கேட்டுப் பார்த்துத்தான் திருமணத்தை முடிக்கிறோம். தேர்தல் திருமணத்திற்கு அபேட்சர்களுக்குப் பணம் செலவிடும் கட்சிகளக்கு, அதைவிட அதிகச் செலவாகும். எனவே ஐந்தாண்டுத் திருமணம், என்றாலும் வாழத்தக்கவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதுவரையில் நாங்கள் பணியாற்றியதை எண்ணிப் பார்த்து எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கையேடு – பேரேடு என்ற இரண்டு கணக்கைப் போல், அரசியலில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. ஆளுங்கட்சி சுறுசுறுப்புடன் இருக்க எதிர்க்கட்சி விழிப்பாக இருந்தால் தான் முடியும்

அரசியலில் சபலத்திற்கு ஆட்பட்டவர்களா நாங்கள்? மாணிக்கவேலர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்தவர் தான். ஆளுங்கட்சியினர், நாயக்கரே சவுக்கியமா? என்று கேட்க, ஏதோ இருக்கிறேன்‘ என்று இழுத்தாற்போல் அவர் சொல்ல, ‘அந்தப் பக்கம் இருக்கிறீர்களே, இந்தப் பக்கம் வாருங்களேன்‘ என்று அவர்கள் கூப்பிட வந்தால் கவனிப்பீர்களா?‘ என்று கேட்க, ‘கட்டாயம் கவனிக்கிறோம்‘ என்று அவர்கள் சொல்ல, இவரும் அந்தப் பக்கம் போக அமைச்சர் பதவி கிடைத்தது.

அப்படியெல்லாம் அரசியல் சபலத்திற்கு ஆட்படாமல் கொள்கையை இழக்காமல். கோணல் வழி செல்லாமல் நல்ல எதிர்க்கட்சியாக நாங்கள் பணியாற்றியிருக்கிறோம்.

உப்பும் புளியும் சரியாகப் போட்டுக் கல்யாணத்திற்குச் சமையல் செய்தவனைச் சீமந்தத்துக்கம் அழைப்பது போல் எங்களை மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்.

அவர்களின் சாதனை என்னவோ?

ஆட்சியிலிருக்கும் கட்சியினர் சாதித்ததுதான் என்ன? ஓலைக் கொத்து வீடுகள் ஓட்டு வீடுகள் ஆயினவா? இங்குப் பிறந்தவர்கள் வாழ முடியாமல் சிங்கள நாட்டில் சீரழியவா எட்டு மந்திரிகள் சட்டசபையில் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள்? கெசம் 6 அணாவாக இருந்த துணியை 2 அணாவாக ஆக்கினார்களா? அலுத்து உழைத்து வருகிற கணவன் மனைவியிடம் சந்தோஷமாக இருக்க விரும்பி வந்தாலும், வீட்டுக்கு வந்ததும் சண்டை உருவாவது விலைவாசி ஏற்றத்தினால் அல்லவா? விலைவாசிக் கொடுமையை உணராதவர் எவருண்டு?

காங்கிரசுக் கட்சி ஆளும் தகுதியை இழந்துவிட்டது! பணக்காரர்களின் பக்கபலத்தை மட்டுமே நம்பி நிற்கிறது! ஏழை எளியவர்களின் கையில் எட்டணா கொடுத்தும், வெற்றிலை பாக்கு வைத்துச் சத்தியம் வாங்கியும் ஒட்டு வாங்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது!

திராவிடம் ஒன்றாக இருந்தபொழுது வருவாய் ரூ.16 கோடி. இப்பொழுது வருவாய் ரூ.98 கோடி. இந்த வருவாயை பி.அண்டு சி மில்லில் மட்டும் வாங்கினார்களா? இராஜா சர். அண்ணாமலை செட்டியார் பிள்ளைகளின் வியாபாரத்தில் பெற்றார்களா – இல்லையே! ஏழைகளும் இந்த வரியில் பாதிக்கப்பட்டார்களல்லவா?

ஆசை உங்களுக்கில்லையா?

நம் நாட்டிலுள்ள தங்கத்தின் மதிப்பு என்ன தெரியுமா? ரூ.5000 கோடி விரலைத் தூக்குங்கள் – உங்களுக்குத் தங்க மோதிரம் இருக்கிறதா? குழந்தைக்கு பட்டுச் சட்டை தைத்துப்போட்டு, பாலும் பழமும்கொடுத்து, பவுன் நகையுடன் அது விளையாடுவதைக் கண்டு மகிழ உங்களுக்கு ஆசை இல்லையா?

நம்முடைய நாட்டில் ஒர விசித்திரத்தை நான் பார்க்கிறேன். ஏழை வீட்டில் தங்க விக்கிரகம் போல கொழு கொழு என்று குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் நான்கு ஆண்டு கழித்தவுடன் வயிறு பெருத்துக் கை கால்கள் சூம்பி வீடுகின்றன. வயது ஏற ஏற உருமாறிப் போகின்றன. ஆனால் பணக்காரர்கள் வீட்டில் குழந்தைகள் கறுப்பாகப் பிறந்தாலும் சிறிது நாட்களில் செம்மண் கலராகி, சில வருடங்களில் ரோஜா நிறமாகி வெள்ளைக்காரக் குழந்தைகள் போல் ஆகிவிடுகின்றன.

14 வருடங்களாக இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளிய காங்கிரசை வீழ்த்த வேண்டாமா?

தெனாலிராமனைப்போல்

தெனாலிராமன் காலத்தில், சித்திரம் வரைபவர்களுக்கு அரசன் பரிசளிப்பது வழக்கம். ஒருநாள் அரசன் தெனாலிராமனைப் பார்த்து, உனக்குச் சித்திரம் வரையத் தெரியுமா? என்றான் ‘ஓ‘ தெரியும் என்றான் தெனாலிராமன் அதற்கு என்னென்ன வேண்டும்? என்று அரசன் கேட்டான். பெரிய மாளிகை ஒன்றும் மூன்று மாதத் தவணையும் வேண்டும் என்று கேட்டான்தெனாலிராமன். அரசனும் அவ்வாறே தந்தான். மூன்று மாதம் கழிந்தது. அரசனைத் தெனாலிராமன் அழைத்து வந்து நிலைச்சுவரில் வரைந்திருந்த ஒரு கண்ணைக் காட்டினார். அது அழகாக இருந்தது. காது எங்கே? என்றான். அரசன் உள்ளே இருக்கும் சுவரில் காது மட்டும் போட்டிருப்பதைக் காண்பித்தான் தெனாலிராமன். மூக்கு எங்கே? என்றான் அரசன். கூடத்துச் சுவரில் வரையப்பட்டிருந்த மூக்கைக் காண்பித்தான் தெனாலிராமன்.

இதனைத் தெனாலிராமனின் அகடவிகடம்‘ என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள்! அதைப்போல இந்த மந்திரிகள், ‘பள்ளிக் கட்டினோம், பாலங்கள் அமைத்தோம்‘ என்கிறார்கள்! இவர்கள் தொட்டது துலுங்குவது இல்லை- தொடர்ந்தது ஒன்றம் இல்லை! தொட்டுத் தொட்டுப் பார்த்து விட்டு விட்டிருக்கிறார்கள்.!

நெய்வேலி நிலக்கரியில் 25 சதவீதம்தான் தமிழ்நாட்டுக்கு! இது நமக்கே இருக்கக்கூடாதா என்று கேட்டால் ரூ.60 கோடி போட்டவன் (மத்திய சர்க்கார்) விட்டு விடுவானா? என்று அவன் கேட்கவில்லை – என்னுடன் அமர்ந்துள்ள காங்கிரஸ்க் கணவான்கள் கேட்கிறார்கள்.

பாங்கிகளைத் தேசிய உடைமையாக்கினால் இலாபம் சர்க்காருக்குக் கிடைக்கும். இவைகள் தேவையென்றால் தி.மு.க.வை ஆளுங்கட்சி ஆக்குங்கள் ‘அடுத்த முறை ஆகட்டும்‘ என்றால் எதிர்க்கட்சியாகவே ஆக்குங்கள் நான் காத்திருக்கிறேன்.

“14ஆண்டுக்காலக் காங்கிரசு ஆட்சியில் வரி அதிகரித்துள்ளதை மறுக்க முடியுமா? விலைவாசி ஏறியுள்ளதை – மறைக்க இயலுமா? வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதை – இல்லை எனக் கூற முடியுமா? தனிப்பட்ட முதலாளிகள் கொட்டம் அதிகரித்துள்ளதே – அதனை இல்லையென்பார்களா? அரசாங்க அலுவலகங்களில் கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது –இல்லையென்று சொல்ல முடியுமா?“

“ஆட்சியிலுள்ள மாமேதைகளே! நீங்கள் செய்த கேடுபாடுகள் எல்லாவற்றிற்கும் விளக்கம் தரலாம். சமாதானம் சொல்லிவிடலாம். ஆனால் மறக்க மடியுமா?“ என்று அண்ணா அவர்கள் சென்னை சேத்துப்பட்டில் கடந்த டிச-25இல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வினவினால். அவரது உரையின் சுருக்கமாவது.

உயிர்ப்புச் சக்திக்கு உறைவிடம் இங்கே!

ஒவ்வொரு நாளும் உங்களைச் சந்திக்கிறேன். பேசிப்பேசி எனக்குச் சலிப்பு ஏற்பட்டிருக்கிறதே தவிர கேட்டுக் கேட்டு உங்களுக்குச் சலிப்பு ஏற்படவில்லை. நாள்தோறும் வந்து கூடுகிறீர்கள். இப்படிக் கூடி நிற்பதற்குக் காரணம் என்ன? அப்படியென்ன நான் புதியன புதியனவற்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன். மீண்டும் மீண்டும் இந்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதைத்தான் கூறப்போகிறேன். இதைக் கேட்கத்தான் நீங்கள் நாள்தோறும் தவறாது வந்து கூடுகிறீர்கள் இதுஏன்? – அதுதான் நமக்குள்ள பற்று – பாசம் – பந்தம் – சொந்தம். இந்தப் பந்தத்தையும், சொந்தத்தையும், ‘போலித் தத்துவம்‘ என்று கூறுபவர்கள் ஓய்வு நேரத்தில் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பந்தத்திலே – சொந்தத்திலே பாசத்திலேதான் உயிர்ப்புச் சக்தி இருக்கிறது. இந்தப் பாச உணர்வோடுதான் நாம் பழகுகிறோம்.

இந்தத் தொகதியிலே – தென் சென்னை பாராளுமன்றத்திற்காக மனோகரன், தமிழ்நாட்டிலே தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர். ஆங்கில அறிவும், விஷயங்களை ஆராய்ந்து அறிந்து தெளிவுபடுத்தும் ஆற்றலும். பாராளுமன்றத்திலே வீற்றிருக்க வேண்டிய தகுதியும் திறமையும் பெற்றவர். அதுபோலவே சட்டமனற்த்திற்கு நிற்கும் தம்பி மதியழகன், சுயமரியாதை இயக்கக் காலத்திலிருந்து இன்றுவரை இயக்கத்தில் இருந்து வருபவர். பல கஷ்ட நஷ்டங்களை ஏற்றவர், இயக்க வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக, மேற்கொள்ளவிருந்த சட்டப்படிப்பை விட்டு, கழகம் தரும் திட்டத்திற்காக உழைத்து வருபவர். எனது அருமைத் தம்பிகளில் ஒருவராகிய மதியழகனைப் பதிதாக அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை. ‘தம்பி‘ என்ற சொல் தரக் குறைவு என்று சிலர் தள்ளி விட்டாலும் இவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ., என்று அழைப்பதைப்போல் எண்ணுகிறார்கள். இந்த நயவஞ்சக உலகத்தில் நன்றி காட்டுபவர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறிந்து அகமகிழ்கிறேன்.

விருப்பத்தை நிறைவேற்றுவீர்!

ஆயிரம் விளக்குத் தொகுதி. இருப்பதை இழப்பது கூடாது சென்ற தடவை குறுகிய சூதுகளினால் தென் சென்னைப் பாராளுமன்றத்தை இழந்தோம். தென்சென்னைப் பகுதியில்- உங்களுக்குத் தெரியுமா – மாநகராட்சித் தேர்தலில் கழகம் பெற்ற வாக்குகள் 89,000. காங்கிரசு பெற்ற வாக்குகள் 70,000. நாம் இந்த 19,000க் காப்பாற்றிக் காண்டாலே மனோகரன் வெற்றி பெற்றுவிடுவார். ஆனால், மேலும் அதிக வாக்குகளில் வெற்றியடையச் செய்ய வேண்டும் அதுதான் என் விருப்பம்.

என் நண்பர்கள் எல்லாம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டதுபோல், நாம் சுறுசுறுப்பாக இருந்தால் வெற்றி நிச்சயம். ஓட்டுப் பெறும்காரியத்தில் பெற வேண்டிய பயிற்சியை இன்னும் நாம் சரியாகப் பெறவில்லை என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் காங்கிரசுத் தொண்டர்களுக்கு ஓட்டுக்களுடைய விவரம் மொத்தமும் தெரியும். எனவே நம் தோழர்கள் தெருத் தெருவாகக் குழுக்கள், வட்ட வட்டமாகக் குழுக்கள் அமைத்துச் சுறுசுறுப்பாகப் பெற்றுவிட்டால் நம்மை அழிக்கக் காங்கிரசால் முடியாது!

முயன்றால் முடியாதா?

நண்பர் மனோகரன், ‘வெற்றி தோல்வியைப் பற்றி எனக்குக் கவலையில்லை‘ என்று சொனன்தைப்போல் நீங்களும் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்துவிடக்கூடாது. அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தாக வேண்டும். பாராளுமன்றத்திற்கு நிற்கும் தம்பி மனோகரன் கேரளத்தைச் சேர்ந்தவர். அவர், பாராளுமன்றத்திலே உறுப்பினராக வீற்றிருந்து தமிழர்களின் பிரதிநிதியாக மட்டுமல்லாமல்-திராவிடநாடு இலட்சியத்தைக் கேரளமும் கேட்கின்றது என்ற வகையிலும், கன்னடம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் எழுச்சி பெறும் வகையிலும் தி.மு.கழகத்திற்கு நடமாடும் நற்சான்றாகவும் விளங்க வேண்டும்.

அதுபோலவே, ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் மதியழகன் சட்டமன்றத்தில் அமருவதற்கு நீங்கள் வெற்றித் தேடித் தரவேண்டும். மதியழகன் நல்ல மாணவர். பட்டப்படிப்பு பெற்றுப் பதவி தேடாமல் ‘சட்டக் கல்லூரியில் படிப்பதை விடக் கழகத்தின் திட்டத்திற்கு உழைக்க வேண்டும்‘ என்று வந்தவர். குடும்பப் பணத்தை இழந்தவர். அடிபடி வேண்டிய நேரத்தில் அடிபட்டு, சிறை செல்ல வேண்டிய நேரத்தில் சிறை சென்று அருந்தியாகங்கள் செய்தவர். ஆகவே, அவரைச் சட்டசபைக்கு அனுப்புவதற்கு அயராது அரும்பணியாற்ற வேண்டும். நீங்கள் முயன்றால் முடியாத காரியம் இல்லை.

உண்மை உழைப்பு உள்ள கட்சி

சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் சைக்கிளில் காஞ்சிபுரத்திற்கு வந்தார்கள். நான் அவர்களுக்கு சோடா கூட வாங்கித் தரவில்லை, களைத்துப்போய் வந்தவர்களுக்கு அது கூடவா செய்யவில்லை. அவ்வளவு கல்மனமா என்றால் இல்லை. நான் வரவேற்று உணவளித்தால், எங்கே அவர்களுடைய மதி்ப்புக் குறைந்து விடுமோ என்றுதான் நான் சும்மா இருந்தேன். வயணமாகச் சோறு போட்டால் சாப்பிட யார்தான் வரமாட்டார்கள் என்று அந்த மாசற்ற மாணிக்கங்க்ள் மீது காங்கிரசுக்காரர்கள் மாசு கற்பிக்கலாம்.

கடையில் சோடா என்று அவர்கள் கேட்க, ‘இல்லை‘ என்று கடைக்காரன் சொல்ல தண்ணீராவது கொடுங்கள் என்று அவர்கள் கிடைத்த தண்ணீரைக் குடித்துவிட்டுக் கிடைத்ததை உண்டுவிட்டு, 120 மைல் சுற்றளவு தொகுதியை சைக்கிளிலேயே எதை எண்ணிச் சுற்றி வந்தார்கள்? நம் உழைப்பு தி.மு.கழக வெற்றிக்குப் பயன்படட்டும் என்று எண்ணித்தான் தட்டாமல் தயங்காமல் வந்தார்கள். பூவிருந்தவல்லி, திருப்பெரும்பதூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் சுற்றி வீடுவீடாக ஓட்டுக் கேட்டுவிட்டு அந்தச் சைக்கிள்படை சோர்ந்துபோன நிலையில் திரும்பிவந்து கொண்டிருக்கிறது. வரும்பொழுது நான் அவர்களைப் பார்த்தேன். ‘கோட்டையைப் பிடித்துவிட்டுப் திரும்பும் வெற்றிப் படையைப்போல் களைத்து-ஆனால் களிப்புடன் உற்சாகம் இழக்காமல் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இதைப் போன்றோர் பணியை ஈடுசெய்ய காங்கிரசு ரூ.15,000 செலவு செய்ய வேண்டும். இத்தகைய உண்மை உழைப்பு உள்ள கட்சியின் இடத்தை எனக்குக் காட்டுங்கள்.

அந்த நிலை நமக்கேது?

வெய்யிலில் கா்்ந்து – பசியால் வாடி – தாகத்தால் நாவறண்டு கழகத்தோழர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்கும் போது காங்கிரசுக்காரர்கள் – அதன் தலைவர்கள் மாடி வீ்ட்டிலுள்ள சீமான்களையும், சீமாட்டிகளையும், சிரித்த முகத்துட்் அழைத்து ஓட்டுக் கேட்பார்கள். சீமாட்டிகள் கைக்கடிகாரத்தைக் காட்டி மணி ஆகிறதே சாப்பிட்டுவி்்டுப் போங்கள் என்று கூறித் தலை வாழையிலை விரித்து, அதில் பத்துவகைப் பலகாரங்கள் வைத்துச் சீரகச்சம்பா அரிசிச் சோறுபோட்டு, அதில் திருப்பத்தூர் பருப்பைப் போட்டு, மணப்பாறை நெய்யை ஊற்றி விருந்து கொடு்ப்பார்கள். இப்படி அவர்களுக்கு உபசரிப்பு! ஆனால் நம் தோழர்களோ, சோடகூடக் கிடைக்காமல் தண்ணீரைக் குடித்தார்கள்! அதைப் பார்க்க எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

நாம் சிந்துகின்ற இரத்தம் – கொட்டுகின்ற வியர்வை – விடுகி்ன்ற கண்ணீர் அனைத்தும், தி.மு.கழகத்திற்கு வெற்றியைப் பெற்றுத் தரும்! எல்லோருக்கும் நல்வாழ்வைத் தேடித் தரும்!

தூற்றலைத் தள்ளுவோம்

கழகத் தோழர்கள் அனைவரும் சரிவரப் பணியாற்றினால் வெற்றி இல்லையென்று எ்்தப் பித்தனும் சொல்ல முடியாது. இன்று வெற்றி என்பது நாம் எட்டிப் பிடிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதை எட்டிப் பிடிக்கும் போது தூற்றல் என்ற காற்று அதைத் தட்டிவிட முயலும். காலைச் சுற்றுப் பலமாகச் சாய்ந்து விடாதபிி ஊன்றிவிட்டால், தூற்றல் என்று காற்று நம்மை ஒன்றும் செய்யாது.

எங்களுரில் பேசிய காங்கிரசுக்காரர் ஒருவர் என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘எங்கள் சுப்பிரமணியம் சட்டமன்றத்தில் பேசும் பொழுது அண்ணாதுரை பெஞ்சுக்கு அடியில் புகுந்து கொள்வார்‘ என்றாராம். எதிரே உட்கார்ந்திருந்த தோழர் ஒருவர், கொஞ்சம் உரக்க ‘சுப்பிரமணியம் பேசினால் எச்சில் தெறிக்குமா?‘ என்று கேட்டாராம்.

பந்து விளையாட மைதானத்துக்கு வந்தவர்கள் பந்தை உதைத்து யாருக்குத் தந்தால் வெற்றி கிடைக்கும் என்று பார்க்க வேண்டுமே தவிர அங்கு வந்திருப்போரின் ஆடைகளையும் மற்றவைகளையும் பார்த்துக் கொண்டிருந்தால் வெற்றி பெற முடியாது. வெற்றி என்ற களத்தில் வீசப்பட்டுள்ளது. அதைப்பார்க்க பலர் வந்துள்ளார்கள். ஆகவே மிகவும் உன்னிப்பாகப் பந்தை அடித்து வெற்றிப் பெற முயல வேண்டும்.

மன்னி்ப்போம் மறப்போம்!

தேர்தலில் நம்முடைய வெற்றியை மடக்க மாற்றுக் கட்சிக்காரர்கள் கண்டபடி திட்டுவார்கள். இந்த 25 ஆண்டுகளில் நான் எவ்வளவு திட்டு வாங்கியிருக்கிறேன் தெரியுமா? இந்தியத் துணைக்கண்டத்திலே அதிகமான திட்டுகளைப் பெரியார் அவர்கள் தான் வாங்கியிருக்கலாம். அதற்கு அடுத்தபடியாக அண்ணாத்துரை யாக இருக்குமே தவிர, வேறு எவரும் இந்த அளவுக்குத் திட்டுக்களை வாங்கியிருக்க முடியாது. ஆகவே, திட்டுபவர்கள் திட்டட்டும், அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். முன்பே உங்களுக்கும் கூறியதைத்தான் மீண்டும் சொல்கிறேன். திட்டுபவர்கள் வேறு யாருமல்ல நம் முன்னாள் தோழர்கள். எனவே ‘மன்னிப்போம் மறப்போம்‘.

‘மதியழகன் சட்டமன்றத்திற்குச் சென்றால், மனோகரன் பாராளுமன்றம் சென்றால் என்ன செய்வார்கள்?‘ என்று கேட்பார்கள். இப்படிப்பட்ட கேள்விகளைக் காங்கிரசுக் காரர்கள் கேட்பது, இந்த நாட்டு மக்கள் இன்னும் அரசியல் அரிச்சுவடியே தெரியாமல் இருக்கிறார்கள் என்ற அவர்களின் எண்ணத்தினால்தான்!

எதிர்க்கட்சியின் வேலை

ஒலிபெருக்கியின் வேலை – ஒலியைப் பெருக்குவது, ஒளி தரும் விளக்கு ஒளியைப் பெருக்கும் ஆனால் ஒலி பெருக்கியால் ஒளியைத் தரமுடியாது!

பிள்ளை பெறுபவள் கர்ப்பிணிதான். மருத்துவச்சிக்கு வேலை இடுப்பு வலி எடுக்கும்போது இடுப்பைத் தடவி ஆசுவாசப்படுத்திப் பார்த்தாய குழந்தையை, தங்க விக்கிரகம்போல் எவ்வளவு அழகாக இருக்கிறது?‘ என்று கூற வேண்டும். அதை விட்டு விட்டு ‘நீயா பிள்ளை பெற்றாய்? நீயா பிள்ளை பெறுவது?‘ என்று கேட்பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும்.

அதைப்போல ஆளுங்கட்சியின் வேலை சாதனைகளைச் செய்வது, எதி்ர்க்கட்சியின் வேலை ‘செய்யப்படுகின்ற காரியங்களை இப்படிச் செய்திருக்கலாம் – இப்படிகூடச் செய்திருக்கலாம் – இப்படிச் செய்தால் நன்றாய் இருக்கும்‘ என்று யோசனைகூறுவதும் ‘இப்படிச் செய்ததால் இந்தத் தீங்குவிளைகிறது – இப்படிச் செய்தால் இந்தத் தீங்கு விளையும்‘ என்று திட்டத்தில் உள்ள குறைகளை எடுத்துக் காட்டி விளக்குவதும்தான்!

ஆளும் கட்சியும் சட்டம் போட்டு, எதிர்க்கட்சியும் சட்டம் போட்டு நடத்துவது அரசியல் அல்ல. அது காட்டு முறையாகும்.

தொல்லைகள் நீங்கிற்றா?

‘எதி்ர்க்கட்சி என்ற முறையில் சட்டசபை நடவடிக்கைகளில் அக்கறை காட்டியிருக்கிறீர்களா?‘ என்று கேட்பது நல்ல கேள்வி நல்ல பிரச்சனைகளைப் பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம்.

ரூ-16 கோடி வசூலான இந்த மாநில அரசில், இன்றைய தினம் 100 கோடியாக வரி பெருக்க்கபட்டிருக்கிறது.

ஆனால், அரசினர் தீட்டிய திட்டங்கள் எத்தனை? வெட்டிய வாய்க்கால்கள் எத்தனை? கட்டிய பள்ளிக்கூடங்கள் எத்தனை? வேலையில்லாத் திண்டாடட்டத்தைப் போக்கியதா? விலைவாசியைக் கட்டுப்படுத்தியதா? என்பதைக் குறித்துப் பேசாமல், விவரம் தெரியாமல் மனைவியிடம் பேசுவதை மாமியாரிடமும் மாமியாரிடம் பேசுவதை மனைவியிடமும் பேசும் வெறிச் செயலைப் போல், அரசியலில் பேசுவது அயோக்கியத்தனம்!

முடியுமா இது முடியுமா?

படி அரிசியை 10 அணாவுக்கு விற்றார்கள் வெள்ளையர்கள். பாரதப் புத்திரர்கள் அதனை ஐந்தணாவ ஆக்கியிருந்தால் மதியழகன் பேச முடியுமா?

வீசை எண்ணெய் 8 அணாவுக்கு விற்றார்கள் வெள்ளையர்கள். இரண்டணாவாக இவர்கள் ஆக்கினர் என்ற நிலை இருந்தால் மனோகரன் பேச முடியுமா?

ஊசிப்போன குழம்பைப் போட்ட ஓட்டல்காரன் கூப்பிட்டால் கூட மீண்டும் போய்ச் சாப்பிடுவார்களா? தெருக்கூத்து ஆடும்போது ஒட்டு மீசை கீழே விழுந்துவிட்டால் மீண்டும் ஆட அழைப்பார்களா? முதல் பெண்ணைக் கன்னம் வீங்க வைத்தவனுக்கு மறு பெண் கொடுப்பார்களா? கல்யாணி இராகம் பாடச் சொன்னால் காம்போதி இராகத்தைப் பாடும் பாகவதரைக் கச்சேரிக்கு அழைப்பார்களா?

கருத்தும் விளக்கமும்

‘விலைவாசி ஏறியிருக்கிறது‘ என்பதைக் கழகமே சொல்லுகிறது. இதைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சொல்லுகிறது சோஷலிஸ்டு கட்சியும் சொல்லுகிறது. இவர்களோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் இதையே சொன்னால் என்ன அர்த்தம்?

‘கவர்னர்‘ என்பதற்கு நேர்தமிழ் – ‘ஆளுபவர்‘ என்று பொருள் இந்த ஆண்டு கவர்னர் அறிக்கையில் ‘மழை அதிகம்,‘ விளைச்சல் அதிகம். ஆனால் விலைவாசி ஏறியிருக்கிறது‘ என்று அவரே நம்மிடம் சொன்னால் என்ன பொருள்? இவர்கள் இனி எந்த ஆண்டுதான் விலைவாசி ஏறற்த்தைக் குறைக்கப் போகிறார்கள்?

இந்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால், 25 ஆண்டுக் காலத்திற்கு அதனை அசைக்க முடியாது! இன்னும் 25 ஆண்டுகளுக்குச் சனநாயகத்திற்கு வேலை இருக்காது. மக்கள் ஆட்சியின் மாண்பைக் காண முடியாது. அவர்கள் ஆளுவார்கள் – மக்கள் மாளவார்கள்.

வரிகள் எவர் தலையில் விழும்?

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சென்னை மாநிலத்திற்கு ரூ.35 கோடி புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.7 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது யார் தலையில் விழும் தெரியுமா? ஏழைகள் தலையில் இவ்வரி விழாமல் இருக்க வேண்டுமானால் தி.மு.கழகத்திற்கு ஓட்டுப்போடுங்கள். எங்களை நீங்கள் பெருவாரியாகச் சட்டமன்றத்திற்கு அனுப்பினால் அந்த வரிகளைப் ‘பெர்மிட்‘காரர்களிடமும், சினிமா முதலாளிகளிடமும், ஆலை, அரசர்களிடமுமம், தொழில் அதிபர்களிடமும், மிட்டாமிராசுகளிடமும், பெரும் பெரும் வியாபாரிகளிடமும் வசூலிக்கச் செய்வோம்.

எங்களுக்கு வாக்களிப்பீர்!

நாங்கள் சட்டமன்றத்திற்குப் போகாவிட்டால், காமராசர் வரி போடுவதைக் கக்கன் கண்டிப்பாரா? கக்கன் கட்டிய பாலத்தை, ‘சரியாக இல்லை‘ என்று வெங்கட்ராமன் சொல்லுவாரா? ‘வெங்கட்ராமனுடைய தொழில்துறை சரியாக இல்லை‘ என்று மாணிக்கவேலர் கேட்பாரா? எனவே கொள்கை மாறாமல் கோணல் வழி செல்லாத என் தம்பிமார்களுக்கு ஓட்டுப் போடுங்கள்.

விலைவாசிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க வேண்டும் – என்று நீங்கள் விரும்பினால் முன்னேற்றக் கழகத்திற்கு ஓட்டுப் போடுங்கள்! இல்லையென்றால் காங்கிரசிற்கு ஓட்டுப் போடுங்கள்!

நீங்கள் நல்லமுறையில் வாழ வேண்டுமானால் கழகத்திற்கு ஓட்டுப் போடுங்கள் – நத்திப் பிழைக்க வேண்டுமானால் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்.

இரண்டு பாதைகளையும் காட்டிவிட்டேன் – எந்தப் பாதை தேவை என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையதேயாகும்“.

(நம்நாடு - 23.1.62)