காஞ்சி மணிமொழியார் மணிவிழா நேற்று
மாலை 6 மணிக்குப் புலவர் பு.செல்வராசன் அவர்கள் தலைமையில்
செயிண்ட் மேரி மண்டபத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பேராசிரியர் வாழ்த்து!
தோழர் க. அன்பழகன் எம்.ஏ, எம்.எல்.ஏ. அவர்கள் பேசுகையில்
குறிப்பிட்டதாவது:
“மணிமொழியார் அவர்களை வாழ்த்துவதில் எனக்கு வயது இல்லாவிட்டாலும்,
நல்ல உள்ளம் இருக்கிறது. மணிமொழியார் இன்னும் இளமையாக இருப்பதற்கு
அவர் உள்ளத்தில் நீங்காதிருக்கும் தமிழ்தான் காரணம். தமிழ்நாட்டுக்கும்,
தமிழ் மொழிக்கும் அவர் செய்த தொண்டு மிகவும் அதிகம். அவர்வழி
நாமும் செல்லுவதற்கு நமக்கு நல்ல ஊக்கத்தையும் ஆக்கத்தையும்
தந்தவராவார். மணிமொழியார் அவர்களும் அவர் குடும்பத்தாரும்
நீடுழி வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
பின் தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் என்.வி.நடராசன் அவர்கள்
பேசுகையில் குறிப்பிட்டதாவது:
எதிர்ப்புக்கு அஞ்சாமல் உழைத்தவர்
மணிமொழியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்து வக்கத்திலிருந்தே
சீர்திருத்தப் பிரச்சாரம் செய்வதில் வேட்கை கொண்டு மனத்
துணிவுடனும், எதிர்ப்புக்கு அஞ்சாமலும் உழைத்தவராவார்.
இந்தி எதிர்ப்பில் அவர்தான் சிறந்த வழிகாட்டியாக இருந்தார்.
அவரும் அவர்தம் குடும்பமும் நீண்ட காலம் வாழவேண்டுமென வாழ்த்துகிறேன்
என்று கூறினார்.
அண்ணா வாழ்த்து
திரு.மணிமொழியார் அவர்களுக்கு அண்ணா அவர்கள் பொன்னாடை
போர்த்தி வாழ்த்து கூறிப் பேசியதாவது:
“மணிமொழியார் அவர்களைப் பற்றிப் பலரும் புகழ்ந்து பேசினார்கள்.
அத்துடன் காஞ்சி நகரத்திற்குப் பல சிறப்புகள் இருப்பதையும்
எடுத்துக்காட்டினார்கள். பழம் புலவர்கள் சோழ நாட்டைப் பற்றிப்
பாடுகையில், சோழநாடு சோறுடைத்து, என்றார்கள். பாண்டிய
நாட்டைப் பற்றிப் பாடுகையில் ‘பாண்டிய நாடு முத்துடைத்து;
சேரநாடு வேழமுடைத்து என்றுதான் பாடினார்கள். தொண்டை நாடாகிய
காஞ்சியைப் பாடுகையில் “தொண்டை நாடு சான்றோருடைத்து” என்று
பாடினார்கள். இதனால் காஞ்சி நகரம் அன்று தொட்டு இன்று வரை
சான்றோருடைய நகரமாக இருப்பதை நீங்கள் அறீவீர்கள்.
தொண்டு பெற்றுத்தந்த சிறப்பு
“மணிமொழியார் அவர்கள், நான் கல்லூரியை விட்டு நின்றதும்,
என்னுடைய தொண்டினை இந்த நாட்டுக்குப் பயன்படுத்த எண்ணி,
என்னை ஆசிரியராகக் கொண்டு ‘நவயுகம்’ என்ற செய்தித்தாளை
மிகவும் இடையூறுகளுக்கிடையே நடத்திச் சீர்திருத்தக் கருத்துக்களை
நாட்டுக்கு எடுத்துக்காட்டினார்.
“மணிமொழியா“ர அவர்கள் கட்டிக் காத்து வளர்த்த இரண்டு குடும்பமும்
இன்று மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றன என்பதை எவரும்
ஒப்புக்கொள்வர். அவருக்குப் பிறந்த செல்வங்களில் ஒருவரான
நண்பர் இளஞ்செழியன் அவர்கள், இன்று பச்சையப்பன் கல்லூரியில்
பேராசியராகப் பணியாற்றுகிறார். மற்றவர்கள் சிறப்பான பணிகளில்
இருக்கிறார்கள்.
“முன்பு அவருடைய மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த என்னை நகர
மன்றத்தின் உறுப்பினராக்க முயற்சித்து, முடியாமல் வேதனைப்பட்டார்.
அவரும் தேர்தலுக்கு நின்று தோற்றார். ஆனால் இன்று அவரின்
மணிவிழாவில் வாழ்த்துரை வழங்குவதில் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
சிலர் எம்.எல்.ஏக்களாகவும், சிலர் எம்.பி.க்களாகவும், 45
தோழர்கள் மாமகராட்சி மன்றத்தில் இருந்தும், பலர் நகராட்சி
ஊராட்சி மன்றங்களிலிருந்தும், வந்திருந்து வாழ்த்துகிறார்கள்.
இது உள்ளபடியே அவரின் தொண்டு பெற்றுத் தந்த பெரும் சிறப்பாகும்.
கோட்டையைப் பிடிப்போம்
ஒரு காலத்தில் நாங்கள் கோட்டையில் இருக்கக்கூடும். அடக்கத்தின்
காரணமாக ஒரு காலத்தில் என்று குறிப்பிட்டேன். விரைவில் கோட்டையையும்
பிடித்து விடுவோம், என்று மருட்சியினால் மற்றோர்கள் சொல்கிறார்கள்.
அந்த அளவிற்குத் தமிழகம் இப்பொழுது விழிப்புற்றிருக்கிறது.
இப்படி இவர்கள் செய்த தொண்டின் பலன் இருக்கிறது.
“இத்தகைய தொண்டிற்கு மணிமொழியாருக்கு உறுதுணையாக இருந்த
அவர் துணைவியாரையும் அவர்கள் குடும்பத்தையும் நான் மனதார
வாழ்த்துகிறேன்.
இறுதியில் காஞ்சி மணிமொழியார் அவர்களின் நன்றியுரையுடன்
விழா இனிது முடிவுற்றது.
(நம்நாடு - 18.5.60)
|