அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாடக மேடை நடிகர்கள் அல்ல அமைச்சர்கள்

சட்டமன்றத்தில் அண்ணா ஆய்வுரை

“தேர்தல் வருவதற்கு ஆறு திங்களுக்கு முன்னால் மூன்று திங்களுக்கு முன்னாலாவது அவர்கள் பதவியை விட்டு விலகவேண்டுமென்ற கருத்து என்னுடைய கழகத்தினாலே அதிகாரப் பூர்வமாக எடுத்துச் சொல்லப்படவில்லை என்றாலும் நாட்டில் அப்படிப்பட்ட ஒரு கருத்து மிக வேகமாகப் பரவிக்கொண்டு வருகிறது.

“இது எந்தச் சனநாயக நாட்டிலும் நடைபெறுவதில்லை என்ற வாதத்தை நீங்கள் தருவீர்கள் என்றாலும் வளர்ச்சியடையாத சனநாயக நாடுகளிலே இருக்கும் சனநாயகத்திற்கம் இந்த நாட்டுச் சனநாயகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற காரணத்தினாலே சனநாயத்தின் தூய்மையைக் காப்பாற்ற – உங்களுடைய நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நீங்கள் தேர்தலுக்கு 6 திங்களுக்கு முன்னால் பதவியிலிருந்து விலகுவதுதான் நாட்டு மக்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்டக்கூடிய மிகச்சிறந்த சனநாயகப் பண்பு என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொள்கிறேன் என்று சட்டமன்றத்தில் 16.3.61இல் மாநித் தலைவர் அமைச்சர்கள், தலைமை அலுவலக ஊழியர்கள் துறை மானியக் கோரிக்கை வெட்டுத் தீர்மானத்தின் மீது பேசுகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அவர் பேசியதாவது – இன்றைய விவாதத்தின் இடையில் ஓரளவுக்குக் கருத்து மோதல்கள் ஏற்பட்டுச் காரசாரமாகப் பேச்சு நடைபெற்றதால் நான் ஒரு பெரிய ஏமாற்றத்துக்கு ஆளானேன்.

குந்தகமாக இருக்குமே(

நிதியமைச்சர் அவர்கள் தம்முடைய கோபதாபங்களையெல்லாம் விட்டுவிட்டதாக நான்க நாட்களுக்கு முன்னாலே நான் தெரிவித்தார்கள். அவராலே அவருடைய சுபாவத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்து நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற பெரிய பணிக்கு இப்படிப்பட்ட கோபதாபங்களை உடனடியாகக் கொள்கிற சுபாவம் அவருக்குக் குந்தகமாக இருக்கும் என்ற முறையிலேதான் மறுபடியும் இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மானியங்களைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் உள்ள குறைபாடுகளை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில் அரசியல் சட்டதிட்டங்களை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்திருக்கிற நிங்கள் அதன்படி நடக்க விருப்பமில்லையானால் வெளியே போய்விடுங்கள் என்று மண்டிக் கடையில் உள்ள குமாஸ்தாவைத் தனக்கப் பிடிக்காத காரணத்தால் மண்டிக்கடை முதலாளி நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தால் இங்கே இரு, இல்லாவிட்டால் கடையை விட்டுக் கீழே இறங்கிவிடு என்ற கூறுகிற பாவனையில் இருக்கிறது. அதே பாவனையில் கீழே இறங்கிப் போகும் குமாஸ்தா சம்மா இருக்கமாட்டான். நடு வீதியிலே உள்ள மண்ணை எடுத்து வீசி எத்தனை நாளைக்கு இந்த வாழ்வு? என்ற கேட்டு விட்டுப் போவான். அப்படிப்பட்ட வகையிலே நம்முடைய அமைச்சர்கள் – அதிலும் நிதியமைச்சர் அவர்கள் அந்த வகையிலே நடந்து கொளள் வேண்டாமென்று நான் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படிக் கருத இயலாது(

சில பேர் உள்ளே இருப்பதால் பெருமையடைகிறார்கள். சில பேர் வெளியே இருப்பதால் பெருமையடைகிறார்கள். சில பேர் உள்ளே வந்தாலே சில கட்டுத் திட்டங்களக்கு அடங்கியிருக்கிறார்கள். இவை அனைத்தும் நிதியமைச்சர் அவர்களுக்குத் தெரியும் தெரிந்தாலும் அவர் திடீரென்று ஆத்திரப்படத்தக்க வகையிலே அவர்க்ளுக்கு ஓர் எண்ணம் இருப்பதைப் பற்றி நான் வருத்தப்படுகிறேன்.

நண்பர் அன்பழகன் பேசும்போது இந்த அமைச்சர்கள் கவர்னர் வீட்டிலேதான் வேலை செய்யத் தகுதியுள்ளவர்கள் என்றதும் ஆத்திரம் வந்தது. அதிலிருந்து கவர்னர் பதவி கவர்னரிடத்திலே பணியாற்றுவதை எவ்வளவு தாழ்வாகக் கருதுகிறார்கள் என்பதை அறிந்து நான் பெருமைப்பட்டேன். ஆகவே இதிலே இவர்கள் ஆத்திரப்பட்டுச் சில வார்த்தைகள் கடுமையாகப் பேசப்பட்டதால் உண்மையிலேயே சனநாயகம் ‘ஸ்தம்பித்து‘ விட்டதாக யாரும் கருதுவதற்கில்லை.

புரியவில்லையே(

தி.மு.கழகம் தவறான பிரச்சாரத்திலே ஈடுபட்டுள்ளதாக இழித்துப் பேசுகிறார்கள். தரக்குறைவாகப் பேசுகிறார்கள். அடிதடிகளும் நடைபெற்றதாகச் சேலம் வட்டாரத்து உறுப்பினர் ஒருவர் இங்கே குறிப்பிட்டார்.

நான் அறிந்திருக்கிற வகையில் சேலத்தில் தி.மு.கழகத் தோழர்கள் பேரில் போடப்பட்ட எல்லா வழக்குகளி்லும் – சமீபத்தில் போன வாரத்தில்கூட வெளிவந்த கோர்ட்டு நடவடிக்கைகளில் தி.மு.கழகத்தினர் பேரில் அம்மாப்பேட்டையில் போடப்பட்ட வழக்குகளில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நி்ரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சேலத்தில் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாறுமாறாகப் பேசினார்கள் என்ற போலீஸ் தொடுத்த வழக்குகளில், இரண்டு தரப்பினரிடமும் குற்றம் இருப்பதாகக் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறதே தவிர, சேலம் தொகுதி உறுப்பினர் சொன்னதுபோல் அல்ல. தி.மு.கழகத்தினர் அடிக்கிறார்கள், திட்டுகிறார்கள் என்று அவர்கள் பேசியிருப்பது உண்மையிலேயே கோர்ட்டு நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்காமல் பேசுகிறார்களா அல்லது யாரும் எடுத்துக் குறிப்பிட மாட்டார்கள் என்று பேசுகிறார்களா என்று எனக்குப் புரியவில்லை.

ஆசையும் பயமும்(

ஆகையினால் தி.மு.கழகத்தினரைப் பற்றிப் பேசும்போது அவர்கள் தாறுமாறாக நடக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று குற்றம் சாட்டியது மட்டுமல்ல. இவர்களுக்கெல்லாம் அமைச்சர்கள் வெளியிலே சுற்றுப்பிராயணம் செய்வதிலே பயம் ஏற்பட்டுவிட்டது. ஆகையினால் அமைச்சர்கள் வரவேண்டாம் என்கிறார்கள் என்ற உறுப்பினர்கள் இங்குக் குறிப்பிட்டார்கள்.

உண்மையிலே எங்களுக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறதென்று வாதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்குப் பயம் இருக்கிறது என்று வாத்திற்காக வைத்துக் கொள்வீர்களேயானால் காங்கிரசுக் கட்சி வளர்வதற்கு மந்திரிகளுடைய சுற்றுப்பயணம் பயன்படுகிறது என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறது. அந்த ஆசை உண்மையாக இருக்குமானால் இந்தப் பயம் உண்மை என ஏற்றுக் கொள்ளலாம். இந்தப் பயம் உண்மை என்று வாதித்தால் அந்த ஆசையும் இருக்கிறது என்பதை நீங்கள் மறுப்பதற்கில்லை.

எவராலும் இயலாது(

ஆகையினால்தான் அமைச்சர்களுடைய சுற்றுப் பிராயணத்தைப் பற்றி எடுத்துச் சொல்கிற நேரத்தில் அவர்கள் தங்களுடைய அதிகார வரம்பிற்கு உட்பட்டு நடத்துகிற காரியங்களையும், கட்சி வரம்புக்கு உட்பட்டு நடத்துகிற காரியங்களையும் இரண்டையும் அறுதியிட்டுக் காட்டிப் பாகுபாடுபடுத்தத்தக்க அளவுக்கு அமைச்சர்களாலும் முடியாது-பொதுமக்களாலும் முடியாது.

அமைச்சர்கள் நாடக மேடையில் உள்ள நடிகர்கள் அல்ல. வெளியில் இருந்து பேசுகிற நேரத்தில் அண்ணன் – தம்பி, மாமன் – மச்சான், காதலன் – காதலியாகப் பேசிவி்ட்டு, உள்ளே போனவுடன் அவர்க்ளுக்கு இருக்கிற இயற்கைப் பெயரிலே பேசிக்கொண்டிருப்பது போல அமைச்சர்க காலை 6 மணியிலிருந்து 8 மணிவரையில் அலுவல்களைப் பார்ப்பார்கள். 8 மணியிலிருந்து 10 மணிவரை அவர்கள் கட்சிப் பணிகளைப் பார்ப்பார்கள் என்று கோடிட்டுக் காட்டுவதற்கு முடியாத நிலையில் இருப்பதால் தான் அமைச்சர்கள் தங்களுடைய தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கின்ற காலத்தில் கட்சி்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பற்றி இங்கே குற்றம் குறையாக எடுத்துக் காட்டப்பட்டது. ஏதோ பயப்பட்டுக் கொண்டு செய்கிறார்கள் என்று நம்முடைய உறுப்பினர்கள் சொல்லியிருப்பதைக் குறித்து அமைச்சர்கள் பேசினால் காங்கிரசுக் கட்சி வளரும் நீங்களெல்லாம் பேசினால் காங்கிரசுக் கட்சி வளராது என்று நீங்களே உங்களைத் தாழ்த்திக் கொள்கிறீர்களே என்றுகூட வருத்தப்படுகிறேன்.

வாதாடும் சாமர்த்தியம்(

நான் இன்னொரு விஷயத்தைப் பற்றிச் சற்று விரிவாக இங்கே பேச ஆசைப்படுகிறேன். நமது அமைச்சர் அவர்கள் இதைபப்ற்றி முன்னால் குறிப்பிட்டார்கள். தேர்தலுக்கான செலவினங்களுக்கு அமைச்சர்கள் அதில் ஈடுபட்டுப் பணத்தை வசூலித்தால் அது கறை அல்ல, அது குற்றம் அல்ல என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சிறந்த கிரிமினல் வழக்கறிஞராக இருந்தவர்கள். குற்றம் செய்யவில்லை என்று சொல்வதைவிட செய்ததாகச் சொல்லி ‘அது குற்றம் அல்ல‘ என்று வாதாடுவது சாமர்த்தியத்தின்பால் பட்டது.

மூன்று வகைக் குற்றங்கள்

அந்த வகையில் சில பேர் தாங்கள் வசூல் செய்யவில்லை என்று நடந்ததை மறுத்திருப்பார்கள். ஆமாம், அப்படித்தான் நடந்தது. அது எப்படிக் குற்றமாகும்? நாங்கள் கட்சிக்காரர்கள் அல்லவா? கட்சித் தலைவர்கள் அல்லவா? தேர்தல் என்றால் செலவு இல்லையா? செலவுக்குப் பணம் வசூலிக்க வேண்டாமா? அந்த வசூல் காரியங்களில் அமைச்சர்கள் ஈடுபட்டால் அது என்ன குற்றம்? என்று அமைச்சர் அவர்கள் கேட்டார்கள் அதில் மூன்று வகையான குற்றங்கள் இருக்கின்றன.

முதலாவதாக – அமைச்சர்கள் என்றால் பொது மக்களுடைய அமைச்சர்களே தவிர, காங்கிரசுக் கட்சிக்கு அமைச்சர்கள் அல்ல. அவர்களுக்குத் தரப்படுகின்ற சம்பளங்கள் – கொடுக்கப்படுகின்ற அந்தஸ்துகள் – அவர்கள் பெற்றிருக்கின்ற அதிகாரங்கள் யாவும் எல்லா மக்களுக்கும் சேர்த்துத் தரப்பட்டனவே தவிர, காங்கிரசுக் கட்சியுனுடைய வளர்ச்சிக்குத் தரப்பட்டதல்ல. ஆகையினால் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் வரையில் எல்லாக் கட்சியினருக்கும் உட்பட்டவர்கள் அல்லது மேற்பட்டவர்கள் என்று கருதலாமே தவிர, கட்சிப் பிரச்சாரம் செய்வதற்க – கட்சித் தேர்தலுக்குப் பணம் திரட்டுவதற்குப் போவது என்பது அமைச்சர்கள் தங்களுடைய தரத்தைக் குறைத்துக் கொள்வதாகும். அது என்னுடைய முதல் காரணம், ஆகவே அமைச்சர்கள் அதிலே ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாகரிக முறை

இரண்டாவது காரணம் – நாங்கள் போய்க் கேட்டால் பணம் கிடைக்குமா? என்று நமது அமைச்சர் அவர்கள் வாதாடுவதைப் போல – இங்கே பேசுகிறார்கள். ஒரு கட்சிக்குப் பொதுமக்கள் எதனால் ஆதரவு தருகிறார்கள்? தேர்தல் நிதிக்கு ஏன் பணம் தருகிறார்கள்? ‘அநத்க் கட்சி நமது அபிலாஷைகளை நிறைவேற்றுகிற கட்சி. அதன் கொள்கைகள் நம்முடைய கொள்கைகள். அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நாம் வாழ முடியும் என்ற நம்பிக்கையின் பேரில் பொதுமக்கள் தாங்கள் விரும்புகிற கட்சிக்குப் பணத்தைத் தருவார்கள். அது உண்மையாக இருக்குமானால் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கான அறிக்கையில் இதை வெளியிடலாம். எங்களுக்குத் தேர்தலுக்குச் செலவு இருக்கிறது, பணம் கொடுங்கள் என்று வசூலித்துக் கொள்வது மிக நாகரிக முறையாகும்.

கனம் நிதியமைச்சர் அவர்கள் என்னைக் கேட்கப் பிரியப்படலாம் – “அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? நீங்கள் ஊர் ஊராகப் போய்ப் பணம் வசூல் செய்யவில்லையா? என்ற கேட்கக்கூடும். அவர்கள் அப்படி என்னைக் கேட்பது என் வாதத்தை வலுப்படுத்துவதாகும். அறிக்கை மூலம் பணம் கிடைக்காது என்று தெரிந்து அமைச்சர்கள் ஊர் ஊராகச் சென்று தேர்தலுக்குப் பணம் திரட்டுகிறார்கள் என்றால் மந்திரிகள் கேட்டால் பணம் அதிகமாகக் கொடுப்பார்கள் என்ற என்னுடைய வாதத்தை அவர்கள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறார்கள் – ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள்.

செல்வாக்கு பெற்றதால்?

மந்திரிப் பதவியின் செல்வாக்கைக் கட்சிக்காகப் பணம் திரட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடாது. மந்திரி என்ற காரணத்தினால் சில செல்வாக்கு ஏற்படுகிறது. சிலருக்குச் செல்வாக்கு இருப்பதனால் மந்திரிகள் ஆகிறார்கள். சிலர் மந்திரிகள் ஆனதினால் செல்வாக்கு பெறுகிறார்கள். எந்த விதத்தில் செல்வாக்கு வந்தாலும் அந்தச் செல்வாக்கை நாட்டு மக்களுக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர அந்தச் செல்வாக்கை வைத்துக் கட்சித் தேர்தல் நிதிக்குப் பணம் திரட்டுவது மிகமிகத் தரக்குறைவாகன காரியமாகும்.

டில்லியிலுள்ள அமைச்சர் அவர்கள் – திருமதி தாரகேசுவரி சின்கா என்று கருதுகிறேன். தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி வடநாட்டில் பல நகரங்களுக்குச் சென்று சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பணத்தை அங்காடிக்குச் சென்று சேர்த்தார்கள் என்ற பத்திரிகையிலே பார்த்தேன். நம்முடைய மந்திரிகளும் ஒவ்வோர் அங்காடிக்கும் வரட்டும், வீட்டுக்கு வீடு ஏறி இறங்கட்டும், மாளிகைகளைப் பார்க்கட்டும் – மண்டிக் கடைக்குப் போகட்டும் – பொதுமக்களுக்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்க அந்த வகையில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவார்களயோனால் அவர்களை உச்சிமேல் வைத்துக் கொண்டாடும் சனநாயக உலகம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதை விட்டுவிட்டு மந்திரிகள் என்ற காரணத்தினால் ஏற்படக்கூடிய செல்வாக்கை வைத்துக் கொண்டு கட்சித் தேர்தல் நிதிக்குப் பணம் திரட்டுவது என்பது மிகமிகக் குறைவான காரியம் என்பதை நான் மறுபடியும், மறுபடியும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

வெகுவிரைவிலே வரும்

ஆகையினால் தேர்தல் நிதி திரட்டுவது என்ற காரியத்திலே இனியாவது நமது அமைச்சர்கள் ஈடுபடாமல் இருப்பார்களேயானால் தான் அவர்களைப் பற்றிப் பொதுமக்கள் கொண்டிருக்கின்ற சந்தேக உணர்ச்சி குறைக்கப்படுமே தவிர, இல்லை அப்படித்தான் செய்வோம் என்று சொன்னால் உண்மையிலே அமைச்சர் அவர்கள் எங்களைப் பார்த்துச் சொன்னது போல் – அப்படியானால் வெளியிலே போங்கள் என்று சொன்துபோல் – சொல்லத்தக்க அரசியல் பொறுப்பற்ற தன்மையும் எனக்கு இல்லை. அப்படிப்பட்ட அதிகாரத்திலும் நான் இல்லை, ஆகையினால் நான் அப்படிச் சொல்லமாட்டேன். பொது மக்கள் பார்த்து – நீங்களே வெளியே போங்கள்‘ என்று சொல்லக்கூடிய காலம் வெகு விரைவிலே வரும் என்று நிச்சயமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தீர்ப்புகளைப் பாருங்கள்

இன்னொன்றும் அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வாங்குகிற பணம், காங்கிரஸ் கட்சித் தேர்தல் நிதி யார் யாரிடமிருந்து திரட்டப்படுகிறது என்பதற்குப் பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்களில் தரப்பட்ட தீர்ப்புகளை படிக்கின்ற நேரத்தில், உண்மையிலே அரசியல் நாகரிக உணர்ச்சி படைத்த யார்தான் இதனை விரும்புவார்கள்.

டாடா கம்பெனியிடம் – தனிப்பட்ட முதலாளிகளிடம் எஃகுத் தொழிற்சாலை நிரந்தரமாக இருக்க வேண்டுமானால் இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் முடியும் என்று கருதி காங்கிரசுக் கட்சி தேர்தல் நிதிக்குப் பணம் கொடுக்கிறோம் என்று டைரக்டர்கள் சார்பிலே பம்பாய் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்களே? காங்கிரசுக் கட்சிக்குப் பணம் கொடுக்கிற மக்கள் யார்? காங்கிரசுக் கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்புகிறவர்கள் யார் என்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

தலைவருக்கு இல்லாத அதிகாரமா?

அவர்களை அண்டுவதற்கும் – பேசுவதற்கும் மந்திரிகள் போனால்தான் முடியும் என்ற காரணத்தினால் அமைச்சர்கள் போகிறார்கள் தவிர, இல்லையென்றால் காங்கிரசுக் கட்சிக்குத் தேர்தல் நிதி திரட்ட, தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைவரால் முடியாதா? தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைவருக்கு உங்களுக்கு இருக்கிற செல்வாக்கு இல்லை என்று சொல்கிறீர்களா? கனம் சுப்பிரமணியம் அவர்கள் கேட்டால் ரூ.1000 கொடுப்பவர்கள் திரு.அழகேசன் அவர்கள் கேட்டால் தரமாட்டார்கள் என்று கருதுகிறீர்களா? ஏன் என்னுடைய மாவட்டத்திலுள்ள பெரியவரை அவ்வளவு தரக்குறைவாக – செல்வாக்கற்றவராக நீங்கள் கருதி அவரைத் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவராக வைத்துக் கொண்டு இந்தச் சாதாரணத் தேர்தல் நிதி திரட்டும் காரியத்தில்கூட நீங்கள் குறுக்கிடுகிறீர்கள்?

மாவட்டத்தில் இருக்கிற காங்கிரசுத் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? மாவட்டத்தில் இருக்கிற பழம் பெரும் காங்கிரசுத் தியாகிகள் என்ன செய்கிறார்கள்? உங்கள் எட்டு பேர்கள் நீங்கலாகத் தேர்தல் நிதி திரட்டுவதற்கு ஆள்பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா? காங்கிரசு என்றால் நீங்கள் எட்டு பேர்தானா? நிங்கள் எட்டு பேர்கள் கேட்டால்தான் காங்கரசுக்குப் பணம் தருவார்களா? ஏன் உங்கள் கட்சியை இப்படி இழிவுபடுத்துகிறீர்கள்?

ஈடுபட வேண்டாம்

உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டாம் என்று நான் சொல்லவில்லை அந்த உயர்ந்த எண்ணத்திலே இருந்து தான் நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் சொன்னார்கள் ‘இஷ்டம் இருந்தால் இரு, இல்லையானால் போ என்று(“ அந்த உயர்ந்த பண்பு வளரட்டும் ஆனால் தேர்தலுக்கு நிதி திரட்டுகிற அளவுக்குக் கூட காங்கிரசுத் தலைவர்களுக்குச் செல்வாக்கு இல்லை என்றா கருத வேண்டும்? ஆகிய காரணங்களினால் இந்த தேர்தல் நிதி திரட்டுகிற காரியத்தில் அமைச்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

இல்லாததை இழுத்ததேன்?

கவர்னரைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் பேசியதிலே நாங்கள் ஏதோ வெளியிலே ஒன்று பேசுகிறோம் – உள்ளே ஒன்று பேசுகிறோம் என்று மதிப்புக்குரிய காங்கிரசு கொறடா எடுத்துச் சொன்னார்.

கொறாடா என்று சொன்னாலே எது அகப்படுகிறதோ அதைப் பிடித்து இழுப்பது என்பது பொருள். எதோ கிடைத்ததை வைத்துக்கொண்டு அவர் இழுத்திருக்கிறார். அவருக்குத் தகக சமயத்தில் – தக்க இடத்தில் நான் தனியாகப் பதில் சொல்லிக் கொள்கிறேன்.

அவருக்குச் சொல்வேன் – இந்தத் தடவை கொறடா இல்லாதைப் பிடித்து இழுத்து இழுத்து கொறடாவும் கையுமாகச் சண்டை போடுவது என்ற முறையில் ரூ.9 லட்சம் கவர்னருக்காக ஆகின்ற செலவா என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அவசரத்திலே ‘நாலடியார்‘ என்ற தமிழ்ப் புலவர் ஏதோ சொன்னதாகச் சொன்னார். ‘நாலடியார்‘ என்ற தமிழ்ப் புலவர் இல்லை ‘நாலடியார்‘ என்று புத்தகத்துப் பெயர் இருக்கிறது. ஆகவே அவருடைய ஆர்வத்தைப் பாராட்டி அவசரத்திற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டு நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.