அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாடு இன்னும் நாகரிக நிலைக்கு வரவில்லை

“கல்வியின் அவசியத்தைப் பற்றியும் அதிகம் படிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் வாரத்திற்கு ஒருநாள் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றால் அது நாகரிகத்தின் சின்னமாகும். ‘கல்வி தேவை’ என்று எடுத்துச் சொல்கிறோம் என்றால் இந்த நாடு இன்னும் நாகரிகநிலைக்கு வரவில்லை என்று பொருள். ஆனால், இந்த நாட்டில் ‘துர்ப்பாக்கிய’ வசமாகப் படிக்கத்தான் வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

படித்தால்தான் உயர்நிலை அடைய முடியும். அறிவு வளர்ச்சியுடன் இருக்க முடியும். இந்த அடிப்படை உண்மையைச் சிலர் மறுக்கத் துணிந்துவிட்டார்கள். படிக்காமலேயே சிலர் எட்டிப் பிடிக்காத உயரத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்களே என்பதால், ‘நாமும் படிக்காமல் இருந்தால்தான் அப்படிப்பட்ட இடத்திற்குச் செல்ல முடியும்’ என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். அப்படிப்பட்ட நிலைமை வரக்கூடாது. அந்த இடத்திற்குப் படித்தவர்கள் வந்தால்தான் அவர்களுக்கும், அந்த இடத்திற்கும் பெருமை; அவர்களை அந்த இடத்திற்கு அனுப்பிய நாட்டிற்கும் பெருமை.

சாணைக்கல்லுக்குச் சமம்
“ஆனால் படித்தவர்கள் சிலர் மேதைகள் ஆகாமல் இருக்கலாம். படிக்காதவர்கள் சிலர் மேதைகள் ஆகலாம். ஆனால் படிக்காதவர்கள் மேலும் படித்தால் பெரிய மேதையாகலாம். படிக்காதவர்கள் படித்தால் சாதாரணமேதைகள் ஆகலாம். அதனால்தான் நமது பெரியவர்கள் ‘கல்வி என்பது சாணைக் கல்லுக்குச் சமானம்’ என்றார்கள். அதனால் ‘கல்வி தேவை’ என்று குறிப்பிட்டார்கள் என்று அண்ணா அவர்கள் சென்னை கெல்லட் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

சென்னை-திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாக் கூட்டம் 26.11.60 மாலை 5 மணியளவில் தோழர் டி.செங்கல்வராயன் பி.ஏ., எல்.எல்.பி. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பள்ளித் தலைவர் ரெவரண்டு தம்புசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றுகையில் பள்ளியின் நற்பணிகளை விளக்கி, அரசியலார் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தத்துதவ, வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு ஆண்டறிக்கையைப் படித்துக் காட்டினார்.

தலைவர் முன்னுரையில் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் பாடத்திட்டம் இருக்க வேண்டிய முறையையும் ஆங்கிலத்தின் இன்றியமையாமையையும் விளக்கிப் பேசினார்.

இறுதியாக அண்ணா அவர்கள் பேசியதாவது:
“இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் நான் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்தமைக்கு உள்ளபடி மூன்று காரணங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன். ஒன்று வயதான காலத்தில் இந்த மாணவர்கள் மத்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்தமைக்காக; இரண்டாவது காரணம் என்னுடைய அருமை நண்பர் செங்கல்வராயன் அவர்களைச் சந்திக்கச் சந்தர்ப்பமும் ஒரே மேடையில் பேசும் வாய்ப்பும் ஏற்பட்டதற்காக, மூன்றாவது காரணம் என்னை வரவழைப்பதால் எதுவும் கெட்டுவிடாது என்கிற தைரியம் படைத்த ஆசிரியர்கள் இங்கே இருப்பதற்காக.

எல்லா ஏற்றங்கையும் பெற வேண்டும்
‘இந்தப் பள்ளி நீண்ட பல ஆண்டுகளாக நல்ல பயிற்சியோடு நடத்தப்படுகிறது. இதிலே பயின்றிருக்கிற மாணவர்கள், மாணவ எல்லையைக் கடந்த பிறகு வெளியில் சிறந்ததோர் இடத்தைப் பெற்று நல்லபடி அவர்கள் புகழடைந்திருக்கிறார்கள். அதைப்போலவே இப்பொழுது பயிலுகின்ற மாணவர்களும் நல்ல பண்பினையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்து வாழ்க்கையில் எல்லா ஏற்றங்களையும் பெற வேண்டுமென்ற என்னுடைய நல்வாழ்த்துகளை இந்த ஆண்டுவிழா நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்தப் பள்ளிக்கூடம் கிருத்துவ மதப் பற்றுடையவர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்பதைப் பள்ளியின் ஆண்டறிக்கையைப் படித்த தலைமை ஆசிரியர் அவர்களும் அருமை நண்பர் செங்கல்வராயன் அவர்களும் எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்டபடி, நான் கிருத்துவப் பள்ளிக்கூடங்களில் படித்தவன் அல்ல; ஆனால் நான் நல்ல கிருத்துவர்களுடன் பழகியிருக்கிறேன். சிலர் கிருத்துவப் பள்ளிக்கூடங்களில் படித்திருப்பார்கள். ஆனால் நல்ல கிருத்துவர்களிடத்தில் பழகியிருக்கமாட்டார்கள்.

இந்தப் பள்ளிக்கூடம் இப்பொழுது நல்ல புகழோடு விளங்குவதை மிக முக்கியமான காரணம் நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையில் கிருத்துவர்களைப்பற்றியும் அவர்கள் அறிந்து வந்த கல்வியின் நோக்கத்தைப் பற்றியும் இதுவரையில் இருந்து வந்த சந்தேகங்கள் இப்பொழுது ஓரளவுக்கு நீங்கியிருப்பதுதான்.

நிலைமை மாறியிருக்கிறது
“பொதுவாகக் கிருத்துவர்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறார்கள் என்றால் ‘மாணர்களிடையே தங்களுடைய மார்க்கத்தை வளர்க்கத்தான்’ என்று மிகப்பெரிய தலைவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். ‘அது தவறு’ என்று அவர்களைவிட மிகப்பெரிய தலைவர்கள் இன்றைய தினம் எடுத்துச் சொல்ல ஆரம்பித்த காரணத்தால், நிலைமை மாறியிருக்கிறது. இதனை இப்பொழுது கிருத்துவத் தலைவர்களும் ஓரளவுக்கு நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் கிருத்துவர்கள் புகழோடு நிரந்தரமாகப் பள்ளிக்கூடத்தை நடத்துகிறார்
ள்.

“கிருத்துவர்கள் இந்த நாட்டில் கல்வித் துறையில் தங்களுடைய பணியைத் துவக்கிய நாளிலிருந்து ஆற்றிய பெரும்பணி உண“மையில் அளவிடற்கரியது. ஆங்கில நாட்டிலிருந்து கல்வியறிவைப் பெற்று வந்து பெருமுயற்சியோடு மற்றவர்களுக்கும் அவர்கள் கற்பிக்கிறார்கள். மற்ற மற்ற சமூகத்தினரை ஈர்க்கும் வகையில் பெருமளவில் கல்விக்கூடங்களை ஆங்காங்கு ஏற்படுத்தியதனால் கல்வியின் நிலைமை உயர்ந்திருக்கிறது.

“கல்வியின் தரத்தைப் பற்றி இன்னும் விவாதத்தில் இறங்கவில்லை. நான் சொன்ன வாக்கியத்தை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்களென்று நம்புகிறேன். கல்வியின் நிலைமை உயர்ந்திருக்கிறதே தவிர தரத்தைப் பற்றி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், இந்த அளவுக்குக் கிருத்துவப் பாதிரிமார்கள் கல்வியை வளர்த்தமைக்குக் கோடான கோடி மக்கள் அவர்களுக்குத் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

பைபிளும் நிலமும் நம் கையில்
“இதே முறையில் கல்வியைப்பரப்புவதற்குக் கிருத்துவப் பாதிரிமார்கள் வெள்ளைப் பாதிரிமார்கள் பல நாடுகளிலும் தொண்டாற்றுகிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒரு கிருத்துவப் பாதிரியாரை அங்கேயுள்ள விடுதலையார்வம் படைத்த தலைவர் ஒருவர் சந்தித்துப் பேசிய செய்தியை ஓர்ஆங்கில இதழில் நான் படித்தேன். அந்தப் பாதிரியாரை ஆப்பிரிக்க மக்கள் தலைவர் சந்தித்த நேரத்தில், அவரிடம் ‘முதலில் பைபிளோடு நீங்கள் உள்ளே வந்தீர்கள்; அப்பொழுது எங்கள் கையில் நிலபுலன்கள் இருந்தன. ஆனால் இன்று எங்கள் கையில் பைபிளும் உங்கள் கையில் நிலபுலன்களும் இருக்கின்றன’ என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அங்குள்ள நிலத்தைப் பாதிரிமார்கள் பறித்துக் கொண்டார்கள்.

“ஆனால், நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையில், வெள்ளைக்காரப் பாதிரிமார்கள் கொண்டு வந்த பைபிளும் நம்மிடத்தில்தான் இருக்கிறது; நிலமும் நம்மிடம்தான் இருக்கிறது.

இந்த நாட்டில் கிருத்துவப் பெருங்குடி மக்கள் கல்வி அறிவைத் தந்திருப்பது மார்க்கத்தைப் போதிக்க அல்ல; கல்வியில் ஒரு புதிய திருப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

படித்தவர்கள் தொகை கூடவில்லை
“இந்தப் பள்ளியைச் சீரிய முறையில் நடத்துவதையும் இப்பள்ளியின் அறிக்கையில், மாணவர்கள் நூற்றுக்கு 55 பேர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கூறியிருப்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இதிலே உள்ள தலைமை ஆசிரியர் அவர்களையும் மற்ற ஆசிரியர்களையும் ஒழுங்குற கற்றுத்தேறிய மாணவர்களையும் பாராட்டுகிறேன்.

“நானும் நண்பர் செங்கல்வராயன் அவர்களும் படித்தவர்கள் என்ற குற்றத்தைச் செய்தவர்கள். இந்த நாட்டில் பல பேர் ‘படிப்பு இன்னின்ன முறையில் இருக்க வேண்டும் என்பது வரையில் கருத்துரைகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது அவரவர்கள் இருக்கும் இடத்திற்குத் தகுந்தபடி சில பல கருத்துகளைத் துணிந்து செல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த இடத்தில் இல்லையென்றால் இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்ல மாட்டார்கள். மக்களும் பொறுமையோடு அதற்கு இடமளிக்கவும் மாட்டார்கள்.

“நம்முடைய நாட்டில் கல்விக்காகத் துரைத்தனத்திற்கு ஆண்டுக்கு ஆண்டு செலவு அதிகமாகிக்கொண்டே போகிறது. நாங்கள் அமர்ந்திருக்கும் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் அவர்கள் மிகப்பெருமையோடும் காரணத்தோடும் ‘கல்விக்காக’ நாங்கள் ஆண்டுக்கு ஆண்டு தொகையைக் கூட்டிச் செலவழிக்கிறோம். முன்னேற்றத்தைக் காட்டுகிறோம் என்று எடுத்துச் சொல்கிறார். இப்படிப் பெருந்தொகை செலவாகிறது. செலவாகிறதே தவிர, இன்னமும் நம்முடைய நாட்டில் நூற்றுக்கு இருபது பேர் படித்தவர்கள் என்கிற கணக்கைக் கூட நம்மாலே காட்ட முடியவில்லை.

படிப்பதனால் பலன் என்ன?
“இப்பொழுது செலவழிக்கப்படுவதைவிடப் பணவசதிகள் அதிகம் நமக்குத் தேவை. ஆளும் கட்சியில் உள்ளவர்கள் அந்தப் பணத்தை ஒதுக்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் இதற்குரிய யோசனையைக் கேட்கிற நேரத்தில் அருமை நண்பர் செங்கல்வராயன் அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“செலவிட்ட பணக்கணக்கை அடிக்கடி பார்க்கிறார்கள். பார்க்கிற நேரத்தில் அவர்கள் அதன் பலனை அடையவில்லை என்று தெரிகிறது. அதனால் ‘படிப்பதினால் என்ன பலன்?’ என்று கேள்வி எழுகிறது.

“நம்முடைய பழந்தமிழ் மக்கள், ‘கல்வி என்பது அறிவுக்கண்ணை திறக்கக் கூடியது’ என்றார்கள். அதனால் தான் நம்முடைய நாட்டில் கல்வியைச் ‘சாணைக்கல்’ என்றார்கள். அப்படிச் சொன்னதன் நோக்கம், இயற்கையாக இருக்கின்ற அறிவைத் தீட்டிக் கொள்ளவும் தக்க தாக்கிக் கொள்ளவும் கல்வி தேவையென்று நெடுங்காலத்திற்கு முன்னாலேயே எடுத்துப் பேசியிருக்கிறார்கள்.

கல்வியின் தரம் உயர வேண்டும்
“ஆகையினால், இங்கே நீங்கள் பெறுகிற கல்வியை எந்த நோக்கத்திற்காகப் பெறுகிறோம் என்ற அடிப்படைக் கேள்வியையும் பல்வேறு விதமான கருத்துகளையும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த நாட்டுக்கானாலும் சரி வேறு எந்த நாட்டுக்கானாலும் சரி கல்வியின் அளவும் நிலையும் வளர்ந்து கொம்டே போகவேண்டும். அந்த வகையில் கல்விக்குப் பெரும் பொருள் செலவழிகிறது. இதை நல்ல விதத்தில் பரிமாறக் கூடியவகையிலும் ஆசிரியர்களுக்குத் தரப்படுகிற ஊதியம் போதுமானதாகவும் இருக்க வேண்டும்.
“ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், கல்வி இப்பொழுது வளர்ந்திருப்பதைவிட அதன் தரம் அதிகரிக்கத் தக்கவகையில் அந்தக் கல்வித் துறைக்குப் பெரியவர்களாக இருக்கின்ற ஆசிரியர்களின் நிலை உயருவதற்கான பெருமுயற்சியில் ஈடுபட வேண்டும். அப்பணத்திற்கு எங்குப் போவது எந“தச் செலவைக் குறைப்பது எந்தச் செலவைக் கூட்டுவது என்று பேசுவது, வேண்டுமானால் அரசியலுக்குப் பொழுது போக்கிற்காகப் பயன்படலாமே தவிர, உண்மையை அது மறைத்துவிடாது என்பதை நாம் இந்த நேரத்தில் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையினால் அந்த அளவுக்குக் கல்வியின் தரம் உயர வேண்டும். அதற்கு ஆசிரியர்களின் நிலை உயரவேண்டும்.

ஆசிரியர் தொகை அருகிவிடும்
“பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னால் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அதனை நீங்களும் பார்த்திருக்கலாம். ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு (பியூன்) காவலன் வேலைக்குப் போவதற்கு ஆசைப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. அதைப் படித்த அத்தனை பேரும் வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அந்த அளவுக்கு ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்கே பலர் அச்சப்படுகிறார்கள்.

“காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் ஆங்கில வகுப்பு ஆசிரியர், கணக்கு வகுப்பு ஆசிரியர்கள் இல்லாமலேயே பள்ளிக்கூடம் மூன்று மாதங்களாக நடைபெற்றுக் கொண்டு வந்தது. இப்பொழுதுதான் ஒருவரை அதுவும் ஆசிரியர் பயிற்சி இல்லாத ஒருவரை நியமித்திருப்பதாக நான் அறிகிறேன்.

“ஏன் இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால், ஆசிரியர் தொழிலுக்கு வந்தால் தங்களுடைய வாழ்க்கை முட்டுப்பாடு இல்லாமல் நடக்கும் என்கிற தைரியம் அவர்களுக்கு இல்லை. இதை உணர்ந்து கொள்ளாமல் ஆசிரியர்களிடத்தில் நல்லுரை வழங்குவது உண்மைக்குப் புறம்பானதாகத்தான் இருக்கும். ஆகையினால் தகுதி படைத்தவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருவதற்கு வகை செய்ய வேண்டும். இதிலே சுணக்கம் காட்டினால் நாளுக்கு நாள் ஆசிரியர்களின் தொகை அருகிவிடும்; கருகிவிடும்.”

ஊதியத்தை உயர்த்த வேண்டும்
“அவைத் தலைவராக இருக்கும் எனது நண்பர் ஒரு கல்லூரியில் சில காலம் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அதில் போதுமான வருவாய் இல்லாததால் அவர் இப்பொழுது வழக்கறிஞராகி விட்டார்.

“எனவே ஆசிரியர்கள் நல்ல மன நிம்மதியாக இருப்பதற்கு ஊதியத்தை உயர்த்துவதை நாடடை ஆளுகிறவர்கள் தங்களின் தலையாய கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

“பள்ளியில் மாணவர்களுக்குப் பகல் உணவு அளிக்கப் படுவதைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தாலும், ஒரு புறத்தில் வருத்தப்படுகிறேன். மாணவர்கள் பகலில் வீட்டிற்குச் சென்றால் ‘வீட்டில் தகுந்த உணவு இல்லையே’ என்று சொல்லத்தக்க ஏழ்மை நம்முடைய நாட்டில் இருக்கிறது என்றால் இதைப்பற்றி வருத்தப்படாமல் இருக்க முடியாது.
“நான் சார்ந்திருந்த நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோது ஆதி திராவிடப்பெருங்குடி மக்களுக்கும், தொழிலாளர் வீட்டுக்குழந்தைகளுக்கும் பகல் உணவுக்கென நிதி ஒதுக்கினார்கள். இன்று எல்லோருக்கும் பகல் உணவு அளிக்கிறார்கள் என்றால் நாட்டில் ஏழ்மை வறுமை அதிகமாயிருக்கிறது என்று பொருள்.

படிப்பதனால் பலன் இல்லையா?
“நம்முடைய நாடு இன்றைய தினம் விடுதல பெற்றிருக்கிறது. ஆனால் நல்ல கல்வித் தொழில் இவைகளைத் தரத்தக்க அளவுக்கு நம்முடைய ஆட்சி இன்னும் சட்டத்திட்டங்களை வகுக்கவில்லை என்பது உண்மையாகும்.

“பள்ளிக்கூடத்துப் படிப்பு பயனில்லையென்று கவலைப் படும் நண்பர்கள், பொது நிலைமை வளர வளர அதுவும் வளரும் என்பதை உணர்ந்து கல்வியில் பயனிருக்கிறது என்று கருதுதல் வேண்டும். அப்படிக் கருதினால் ‘படிப்பதனால் என்ன பலன்?’ என்று கேட்க மாட்டார்கள்.
“உலகத்தில் மற்ற நாடுகளிளெல்லாம் படிப்பது மேன்மை என்று கருதுகிறார்கள். நாங்கள் படித்த காலத்தில் கொஞ்சம் விவரம் புரிந்தவர்கள், தங்கள் குழந்தைகள், குறைந்தது பி.ஏ.வரையாவது படித்திருக்க வேண்டும் என்று கருதினார்கள். ஆனால் இப்போது ‘பள்ளிப் படிப்பு அவசியம் இல்லை’ தொழில் படிப்புதான் அவசியம்’ என“று கருதுகிறார்கள். படித்தவர்கள் தொகை நாளுக்கு நாள் அருகிவருகிறது.

“எஞ்சினீயர் ஆவதென்றாலும், டாக்டர்கள் ஆவதென்றாலும், தச்சுப்பட்டறை வேலை செய்வதென்றாலும் கொல்லுப் பட்டறையில் வேலை செய்வதென்றாலும், படித்துவிட்டுத் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு நியதி இருக்க வேண்டும்.

கல்வியின் தரம் எப்படி உயரும்?
“தொழிலைக் கருதி மாணவர்கள் படிப்பதனால் புதிய புதிய கல்லூரிகள் வேக வேகமாகத் திறக்கப்பட்டாலும் போதுமான மாணவர்கள் இல்லாமல் சில கல்லூரிகள் பெரும் நட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி பெரும் நட்டத்தில் பணியாற்றுகிறது என்ற செய்தியைப் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியும் பெரும் நட்டத்தில்தான் நடக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இதற்குக் காரணம் வெறும் படிப்பினால் பயன் இல்லை. தொழிற்படிப்பு வேண்டுமென்பதேயாகும். இதனால் பட்டத்தைக் கருதி, படிப்பதையே கெடுத்து விட்டார்கள்.

“நாங்கள் படிக்கும்போது போதுமான அளவுக்கு இலக்கியம் படிக்கவில்லை. அதைச் சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. ‘இலக்கிய அறிவு பெற்றிருக்கிறார்கள்’ என்கிறார்கள். அவர்கள் துணிந்து பொய்யுரைக்கும் தன்மைக்கு நாம் வாழ்த்தலாமே தவிர, பெரும்பாலோர் இலக்கிய அறிவு பெற்றுவிட்டார்கள் என்று நம்ப முடியவில்லை. இந்த நிலைமையை மாற்றாவிட்டால் கல்வியின் தரம் உயராது.

ஆங்கிலம் அவசியம் வேண்டும்
“அருமை நண்பர் செங்கல்வராயன் அவர்கள் ஆங்கிலத்தில் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவர்கள் பேசும்போது நான் சில கருத்துகளை ஒட்டியும் சில கருத்துகளை வெட்டியும் பேசுவேன் என்றார்கள். அவர் இப்படிச் சொன்னதும் அவர் ஒட்டிக் கொண்டிருக்கும் கட்சியிலிருந்து எங்கே அவரை வெட்டி விடப் போகிறார்களோ என்ற பயந்தான் எனக்கு ஏற்பட்டது.

“ஆங்கிலத்தைப் பற்றி அதன் பெருமையைப் பற்றி இந்தியாவின் தலைமை அமைச்சர் நேரு அவர்கள் அடிக்கடி எடுத்துப் பேசிக்கொண்டு வருகிறார்கள். அதனால்தான் இன்னமும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் ஒரு மாபெரும் தலைவரும் அதிகாரத்திற்கு வர இருக்கும் மற்றொரு தலைவரும் இந்தக் கருத்தை வைத்திருக்கிறார்கள் என்கிற இந்த நம்பிக்கை நமக்கு ஆதரவாக இருக்கிறது.

“நாங்கள் படிக்கும்போது ஆசிரியரிடம் எந்தக் கருத்தையும் கேட்க முடியாது. ஆனால் இப்பொழுது ஆசிரியர்களிடம் மாணவர்கள் மனம் விட்டு பேசலாம். ஆசிரியர்கள் மாணவர்களுடன் அன்பாகப் பழகுகிறார்கள்.

தனிநாட்டு வரலாறு இருக்கிறது
“நமது மாணவர்கள் வரலாற்று அறிவுபெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ‘இந்தியா’ என்ற ஒரு வரலாறு இல்லை. இந்தியா ஒன்றாக இருந்ததில்லை. ஆகையினால் தான் ஒருபுறத்தில் அசாம் கலகம்! மறுபுறத்தில் மராட்டியர்கள் கோபம். ஆண்டுக்கு இரண்டு நாள் மட்டும் ‘இந்தியா ஒன்று’ என்று பேசி மகிழ்கிறார்கள். ஆகஸ்டு 15 ஜனவரி 26 தவிர மற்ற நாட்களில் எவரிடமும் இந்த உணர்ச்சி இல்லை. ஆனால் அவரவர்களுக்கு என்று தனித்தனி நாட்டு வரலாறு இருக்கிறது.
“நான் எடுத்துக்காட்டுக்குச் சொல்வேன்-இந்தத் தமிழகத்திற்கு மட்டுமே சேரன் செங்குட்டுவனைப் பற்றித் தெரியும். வடக்கே டில்லியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வடநாட்டில் தோன்றிய தலைவர்கள் பற்றி மட்டும்தான் அறிந்திருக்கிறார்கள்.

“நமது நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த வைதீகக் கருத்துகள் இப்பொழுது கொஞ்சம் குறைந்திருக்கின்றன. நீங்கள் பள்ளியில் ஒழுங்கு பெறவேண்டும். உண்மை பெறவேண்டும். உங்கள் கல்வி இதற்குப் பயன்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

புதுமைகள் நடக்கின்றன
“இக்காலத்தில் அதிசயிக்கத் தக்க மாறுதல் உண்டாகி இருக்கிறது. நாங்கள் இதுபோல் மாலையில் கூட்டம் கேட்கும்போது மேலே பறக்கும் பறவைகளைப் பார்த்தோம். நீங்கள் இன்று விமானத்தைப் பார்க்கிறீர்கள், சந்திரமண்டலத்தில் மனிதன் என்றால், ‘பைத்தியம்’ என்றார்கள். இப்பொழுது, ‘அங்கும் மனிதன் உண்டு’ இது உண்மை என்கிறார்கள். ஆகவே நாம் எதிர்பார்க்காத புதுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது உங்களின் மனக்கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் இடமளித்தால் பெற வேண்டியதைப் பெறுவது எளிதாகிவிடும்.

“கல்வியின் பாடத்திட்டத்தில் புதிய மாற்றம் வேண்டும். இதற்குப் பல கட்சிகளும் சேர்ந“து குழு அமைத்துச் சாதிக்கொடுமைகளை ஒழிக்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப் பட வேண்டும். இப்பொழுது சாதி ஒழிப்பு மேடையோடுதான் இருக்கிறது. தேர்தல் காலத்தில் எல்லாரும் அந்தச் சாதிக்கு அடிமைப்படுகிறார்கள். இதையும் போக்க வேண்டும்.

“ஆசிரியர்கள் நிரந்தரமானவர்கள். அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால் தான் கல்வியின் தரம் உயரும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

மாணவர்களாகப் படிக்க விடுங்கள்
“நான் பல இடங்களில் சொல்வதை இங்கும் சொல்லா விட்டால் எங்கே அந்தக் கொள்கையிலிருந்து விலகி விட்டேனோ என்று சந்தேகப்படுவார்கள். அது என்ன வென்றால், ‘மாணவர்களை அரசியலுக்கு அழைக்காதீர்கள்’ என்பதுதான். முன்பெல்லாம் இதை மற்றவர்கள் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். இப்பொழுதுதான் அவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டியிருக்கிறது. ‘மாணவர்களைக் கட்சி சுயநலத்திற்குப் பலியிடாதீர்கள்; மாணவர்களை மாணவர்களாகப் பயில விடுங்கள்’ என்று இதை மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்.

(நம்நாடு - 28.29.11.60)