அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாட்டை நானே ஆளவேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை

அண்ணா அவர்களும் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி எம்.எல்.சி. அவர்களும் மதுரை மாவட்டத்தில் டிச. 29,30,31 ஆகிய நாட்களில் பல கிராமங்களில் மின்னல் வேகச் சுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

டிச.29ஆம் நாள் காலையில் மதுரை திருநகர் பாண்டியன் கூட்டுறவுப் பயிற்சிப்பள்ளி மாணவர் கூட்டத்தில் பேசிவிட்டு மேலூர் வட்டாரத்தில் நரசிங்கம்பட்டித் தெற்கு தெரு, செம்மணிப்பட்டி ஆகிய ஊர்களில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசினார்கள்.

மாலை 3 மணியளவில் மலம்பட்டி கிராமத்திற்கு வருகை தந்தார்கள், தி.மு.க. செயலாளர் பெரி. பொசலான், வட்டக் கழகப் பிரதிநிதி மா,செல்லையா, கா.நெ.அண்ணாமலை ஆகியோர் அண்ணா அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றார்கள்.

மலம்பட்டியில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக் கூட்டத்திற்கு மதுரை மாவட்டத் தி.மு.க. செயலாளர் எஸ்.முத்து தலைமை வகித்தார்.

தோழர் பெரி. பொசலான் வரவேற்றுப் பேசினார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமியும் பேசினார்.

டில்லிக்கு மூட்டை கட்டக் கூடாது

இறுதியில் அண்ணா அவர்கள் பேசுகையில் கூறியதாவது –

“கடந்த பொதுத் தேர்தலில் தி.மு.கழகத்திற்கு மலம்பட்டியில் அதிக வாக்குகள் கிடைத்தன என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. வரப்போகும் தேர்தலில் மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

“நாட்டை நானே ஆளவேண்டும் என்ற எண்ணம் எனக்க இல்லை. ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ ஆக வேண்டும் இங்குள்ள மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை டில்லிக்கு மூட்டை கட்டி அனுப்பக்கூடாது. சிறு காரியத்திற்குக்கூட சென்னை மந்திரிகள் டில்லி நோக்கிக் காவடி தூக்கும் இழிநிலை இருக்க்ககூடாது. இந்தக் கொள்கையைக் காமராசர் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அவரே தொடர்ந்து முதலமைச்சராக இருக்கட்டும்.

“13 ஆண்டுக் காலமாகக் காங்கிரசு ஆட்சி நடத்துகிறார்கள். ஆனால் மக்கள் கண்ட பலன் என்ன? வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தைவிடக் காங்கிரசு ஆட்சிக் காலத்தில் அதிக நன்மை ஏற்பட்டிருப்பதாக யாராவது சொல்ல முடியுமா?

குண்டுமணி தங்கமாவது உண்டா?
“இங்குப் பல தாய்மார்கள் கூடி இருக்கக் காண்கிறேன். ஒருவரிடத்தில்கூட குண்டுமணி அளவேனும் தங்கத்தைக் காண முடியவில்லை. தாலிக் கயிற்றில்தான் தங்கம் இருக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் தங்கச் சுரங்கம் திராவிட நாட்டில் தான் இருக்கிறது. அப்படியிருந்தும் தரித்திரம் தாண்டவமாடுகிறது.

“தமிழ் நாட்டில் பூமிக்கு அடியில் நிலக்கரியும், இரும்பும் இருக்கின்றன. அவைகளை வெட்டி எடுக்கும் அதிகாரம் சென்னை மந்திரிகளுக்கு இல்லை. அதிகாரமற்ற ‘பொம்மை‘களாக இருக்கும் மந்திரிகளுக்கு ஓட்டுப் போட்டு ஏமாற்றம் அடைந்திடாமல் தி.மு.கழகத்திற்கு ஆதரவு தரவேண்டும்னெக் கோருகிறேன். காங்கிரசு ஆட்சியில் நல்லது செய்து இருப்பதாகத் தோன்றினால் அவர்களையே ஆதரியுங்கள். நாங்கள் இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.

அண்ணா அவர்க்ளுக்கும் கே.ஆர்.இராமசாமி, எஸ்.முத்து மதுரை வழக்கறிஞர்கள் காவேரி மணியண், மணியன், திருப்பதி மலைராசன், காஞ்சி இராசகோபால் ஆகியோருக்கும் மற்றும் மேலூர் வட்டத் தி.மு.கழக முக்கியத் தோழர்களுக்கும் மலம்பட்டி தி.மு.க. செயலாளர் பொசலன் அவர்கள் சிறப்பான பகல் விருந்து அளித்தார்.

அண்ணா அவர்களிடம் தேர்தல் நிதியாக மலம்பட்டி தி.மு.கழகத்தின் சார்பாக ரூ.25 செயலாளரால் அளிக்கப்பட்டது.

(நம்நாடு - 11.01.1961)