அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாட்டு நிலை பாரீர்! நல்ல தீர்ப்பு தாரீர்!

வாக்காளப் பெருமக்களுங்ககு அண்ணா வேண்டுகோள்

“இங்குப் பக்கத்திலே இருக்கும் பெண்ணின் படத்தைப் பாருங்கள், அந்த மாதின் கையில் இருக்கும் இரத்தக்கறை படிந்த சட்டையைப் பாருங்கள், ‘இது என்னுடைய கணவரின் சட்டை‘ என்று அந்த மாது சொல்வதையும் பாருங்கள்“.

“இப்போது இங்குத் துறைமுகத் தொழிலாளர்கள் நிதியளித்ததைப் பார்த்தீர்கள், அந்தத் துறைமுகத்திலேதான் ஆறுபேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சொன்னதையும் கேட்டீர்கள்!

அந்த ஆறு பேருக்கும் மனைவியர் இருந்தால் இங்குள்ள படத்திலுள்ளதைப் போல் சட்டையைக் காட்டியிருக்கக் கூட மாட்டார்கள். எங்கள் கணவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள், பாவிகள் அவர்களின் இரத்தம் படிந்த சட்டைகள் இவை என்றுகூடக் காட்டியிருக்க மாட்டார்கள், ஆனால், அந்த இரத்தம்படிந்த சட்டையைக் கண்களிலே ஒத்திக் கொண்டு, எத்தனை நாள் அவர்கள் அழுதிருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள், இரத்தக் கண்ணீர் பொழிந்து பொழிந்து எத்தனை நாள் அவர்கள் புலம்பித் துடித்திருப்பார்கள் என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

எல்லாம் நடந்த உண்மைகளே!

“படத்திலே கவலைகொண்ட மாதின் முகத்தைப் பாருங்கள்! வடிக்கின்ற கண்ணீரையும் பாருங்கள், கறைபட்ட சட்டையைப் பாருங்கள், இதிலிருக்கின்ற முகம்தான் கற்பனையாகப் போடப்பட்டிருக்கிறதே தவிர, மற்றவையெல்லாம் நடந்த உண்மைகள் – கற்பனையன்று! இறந்தவர்களின் மனைவிமார்களையே தேடிப் பிடித்துப் படம் எடுத்துச் சுவரொட்டி போடவி்ல்லையே தவிர, பிற எல்லாம் நடந்த உண்மைகளே!

“ஈவு இரக்கம் உள்ளவர்களே! இளகிய நெஞ்சம் கொண்டவர்களே! தொங்கத் தொங்கத் தாலி கட்டியிருப்பவர்களே – தாய்மார்களே! வாக்குச் சாவடிக்குள் நீவிர் நுழையும் போது இந்தப் படத்தை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்! பிறகு உங்கள் மனம் என்ன கட்டளையிடுகிறதோ, அதன்படி நடந்து கொள்ளுங்கள்“ என்று திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் திராவிடத் தொழிற்சங்கக் குழுச் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு விழாவில் கலந்து கொண்ட அணண்ா அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்கள்.

தேர்தல் என்றால் கட்சிகள் சண்டையல்ல!

இப்போது நடக்கிற தேர்தல், 24ஆம் தேதி காஞ்சியிலே நடக்கிற தேர்தலானாலும் சரி, சென்னையிலே நடக்கின்ற தேர்தலானாலும் சரி ஏதோ கட்சிக்குள் நடக்கின்ற சண்டை என்றெண்ணிவிடாதீர்கள்.

நடக்கிற தேர்தலில் கட்சிகள் போட்டியிடுகின்றனவே தவிர, தனிப்பட்டவர்களுக்குள் நடக்கின்ற சண்டையில்லை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வருகிற இத்தேர்தல், ‘இதுவரை ஆட்சி செய்தவர்கள், நிம்மதியான ஆட்சி நடத்திியிருக்கிறார்களா? இல்லை – கொடிய ஆட்சி நடத்தியிருக்கிறார்களா? இவர்களே இருக்கலாமா? இல்லை மாற்ற வேண்டுமா?‘ என்று வினா எழுப்புகிற ஒரு கட்டமாகும்.

குட்டினால் குனிந்து கொண்டே இருப்பதா?

கடைவீதியிலே ஒருவன் நடந்து செல்கிறபோது எதிரே, வருகிற ஒருவன் குட்டினால், குட்டப்பட்டவன் கோபக்காரனாய் இருந்தால் எதிர்த்துக் கேட்பான், சாதுவாய் இருந்தால் பேசாமல் பொறுத்துக் கொண்டுவிடுவான்.

இரண்டுமில்லாமல், குட்டியவன் கையைப் பிடித்துப் தன் கையில் வைத்துக் கொண்டு, அந்தக் கையில் வைத்துக் கொண்டு அந்தக் கைமோதிரத்தில் இருக்கும் பச்சைக்கல்லைப் பார்த்து விட்டு ‘இந்தப் பச்சை கல்லை என்ன விலைக்கு வாங்கினாய்?‘ என்று கேட்டால் இவன் என்ன இவவ்ளவு பைத்தியக்காரனா?‘ என்றெண்ணி, போடா, போ! இதன் விலை எட்டேமுக்கால் ரூபாய்‘ என்று சொல்லிக் கொண்டே இன்னும் இரண்டு குட்டுக்குட்டிவிட்டுப் போய்விடுவான்!

அதைப் பொறுத்துக் கொண்டிருந்தாலும் தேவலை! - ‘ஆகா, கை என்ன பிரமாதமாய்க் குட்டுகிறது?‘ என்றா இரசிப்பது?

குட்டுகின்ற அரசாங்கத்துக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் இதுதான்! 24ஆம் தேதியன்று நீங்கள் விழிப்போடிருந்தால் தான் இதனிடமிருந்து தப்பிக்கமுடியும்!

முறுக்கில்லாத கயிறு இழுப்பைத் தாங்குமா?

முறுக்கு ஒழுங்காக இல்லாத கயிறு, இழுப்பைத் தாங்காது! கயிற்றை முறுக்குகிற நேரம் வருகிற 24ஆம் தேதியாகும் கைவலிக்கிறதே, நோகிறதே‘ என்று பாராமல், இந்த 24ஆம் தேதியன்று நன்கு முறுக்குங்கள். அப்போது முறுக்க வேண்டிய முறையில் முறுக்கினால்தான் கட்ட வேண்டியதைக் கட்ட, இழுக்க வேண்டியதை இழுக்க முடியும்!

‘காங்கிரசுக் கட்சி ஒன்றுதான் ஆளக்கூடிய கட்சி‘ என்கிறார்கள், மற்ற கட்சிகளெல்லாம் ஆட்சிக்கு உதவாது, என்றால் அவற்றை விட்டு வைத்திருப்பது ஏன்?

‘உள்ள எட்டு தறிகளில் ஒரு தறிதான் நல்லது, மீதி ஏழு தறிகளும் கெட்டவை‘ என்றால், அவற்றை வைத்துக் கொண்டிருந்து என்ன பயன்?

காங்கிரசு எனும் ஒரு கட்சியால்தான் ஆள முடியுமென்‘றால் இவ்வளவு செலவு எதற்காகச் செய்ய வேண்டும்? எந்தக் கட்சி வந்தாலும் ஆளாது என்று சொல்வதற்குத்தானா ஐந்தரைக் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யவேண்டும்?

அந்தப் பேச்சைப் பேசுகிறவர்கள் – ‘காங்கிரசு ஒன்றுதான் ஆளமுடியும்‘ – ‘காங்கிரசு ஒன்றுதான் ஆளமுடியும்‘ என்பவர்கள் ஒன்று அரசியல் அறியாதவர்களாக இருக்க வேண்டும்., அல்லது, வேறு வழிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அந்த அரசியல் அகங்காரத்துக்கு, 24ந் தேதி நீங்கள் முடிவுகட்ட வேண்டும், இல்லாவிட்டால் நாட்டில் சர்வாதிகாரம்தான் நிற்கும்!

மாநகராட்சியில் குறை என்ன கண்டீர்?

‘வேறு யாரும் ஆளமுடியாது‘ என்றெண்ண வேண்டாம். சென்னை மாநகராட்சியைப் பற்றிக் கூட அப்படித்தான் சொன்னார்கள். அதிலேதான் பழங்குடி நண்பர் சிவசங்கரன் துணைமேயராக வீற்றிருந்தார், என்ன குறை கண்டீர்? அ.பொ. அரசு மேயராக இருந்து ஆண்டதிலே என்ன கஷ்டம் கண்டீர்? ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள உத்தமச் சமுதாயத்தைச் சேர்ந்த குசேலர் மேயராக இருக்கிறாரே – அவருக்கு ஆளத் தெரியாமல் போய்விட்டதா?

எது நடந்தாலும் சரி 24 ஆம் தேதிக்குப் பிறகு எது ஏற்பட்டாலும் சரி – யார் ஆண்டாலும் சரி – கவர்னர் ஆட்சி ஏற்பட்டாலும் சரி – சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டாலும் சரி – காங்கிரசு ஆட்சியை விட வேறு எந்த ஆட்சியும் நல்லதே!

பதவியில் இருந்து இருந்து காங்கிரசுக்கு மதமதப் பேறியிருக்கிறது. பதவி பறிக்கப்பட்டடால்தான் காங்கிரசின் மதமதப்பு அடங்கும்!

தொடர்ந்து பதினைந்தாண்டுக் கால ஆட்சியில் இருக்க அனுமதிக்கப்பட்டதால் நாம் வைத்ததுதான் சட்டம், போட்டது தான் வரி, காட்டியதுதான் பாதை, என்ற மமதையில் – மதமதப்பில் காங்கிரசார் இருக்கின்றனர்.

முனிவர்களே வேண்டுமானாலும் ஆளட்டும், ரிஷிகளே வேண்டுமானாலும் ஆளட்டும், மும்மலம் அடக்கியவர்களே வேண்டுமானாலும் ஆளட்டும் – ஆனால் காங்கிரஸ் தொடர்ந்து ஆள அனுமதிக்கப்படலாமா?

ஆட்சியிலுள்ள அழுக்கை நீக்கும் நாள்!

ஆட்சியில் அழுக்கேறியிருக்கிறது! வருகிற பிப்.24ஆம் நாள் அழுக்கை நீக்குகிற நாள்! நாங்கள் சொல்லுகிறோம் ‘ஆம் அழுக்கடைந்திருக்கிறது, அதை எங்களிடம் தாருங்கள், நல்ல சோப்புப் போட்டுத் துவைத்துப் பெட்டிபோட்டுத் தருகிறோம், என்று! இல்லை, அழுக்கைத் தான் கட்டுவேன்‘ என்றால் நல்லது, அழுக்கே வாழ்க! அழுக்கைக் கட்டியிருப்போரே, நீங்களும் வாழ்க என்று சொல்லவிட்டுப் போகிறோம்.

துல்லியமாக வெளுத்துத் தருகிறோம், சலவை முடிந்தபின் கூலி கொடுங்கள்! துணி கிழிந்தால் கூலி கொடுக்காதீர்கள்!

தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் கூடஎன்னைப் பற்றிப் பாராட்டி எழுதிய பாட்டு ஒன்றில், ‘அண்ணாதுரை அழுக்கெடுக்கும் வண்ணான்‘ என்று கூறியிருக்கிறார்.

சுகமான ஆட்சி தருகிறோம்! ஆட்சியில் ஓராண்டு எங்களை வைத்துப் பாருங்கள்! பிடிக்கவில்லை என்றால் திரும்ப அழையுங்கள், வந்துவிடுகிறோம்!

பெரியார், ‘கட்சியையும், ஆட்சியையும் பார்க்காதே, ஆளைப்பார்‘ என்கிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும், ஒரு தனிமனிதர் நல்லவரா – கெட்டவரா என்பதை எதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

செட்டியாரை வைத்தா சரக்கைக் கணிப்போம்?

செட்டியார் நல்லவரா, கெட்டவரா என்பதை, எதைப் பார்த்துத் தெரிந்து கொள்வது? அவர் திண்டுக்கல் சந்தனம் பூசியிருக்கிறார், மதுரை மீனாட்சியம்மன் குங்குமம் வைத்திருக்கிறார், அவற்றைப் பார்த்தா அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்து கொள்ள முடியும்.

அதை அறிந்து கொள்ளவேண்டுமென்றால் ‘சரக்கு நல்லதா? அதை நிறுத்துகின்ற தராசு நல்லதா? அதன் முள் முனை நல்லதா? அதுவும் சுண்டுவிரலால் தள்ளப்படாது இருக்கிறதா?‘ என்று பார்க்க வேண்டும்.

ஆட்சியில் இருப்போரைப் பார்த்து, நாம், ஆட்சியைக் கணிக்க முடியாது! செட்டியாரை வைத்துச் சரக்கைக் கணித்து விட முடியாது!

காமராசர் ஆட்சியில் இருக்கிறார், அவர் நல்லவர்தான், ஆனால், அவருடைய சுண்டுவிரல் பொல்லாதது. அது 20 பலத்தை ஒரு வீசையாகக் காட்டுகிறது.

தனிப்பட்டவர்கள், நல்லவர்கள் என்றால் பாராட்டுவோம்! ஆனால் தனிப்பட்டவர்களால் நாடு குட்டிச்சுவராக விடமாட்டோம்.

(நம்நாடு - 19-2-62)