அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாட்டுப் பிரிவினை வேண்டும்

கோவையில் நடந்த சிறப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்து அண்ணா அவர்கள் ஆற்றிய முடிவுரையின் மற்றொரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே சில பகுதிகள் வெளியாகியுள்ளன. இப்பகுதியில் அண்ணா அவர்கள் கழகம் சட்டமன்றம் நுழையக் காரணம் என்ன என்பதையும், விடுதலை இலட்சியத்தைக் கைவிடும்படிக் கோரும் மற்றாரின் விசித்திரக் கோரிக்கைக்குத் தக்க பதிலளிக்கும் வகையிலும் அரிய விளக்கம் தந்திருக்கிறார்கள்.

நாம் இன்றைய தினம் இன்னொரு முக்கியமான பிரச்சினையைப் பற்றி எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம். மாற்றார்களும் அப்பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். உற்றார்களம் நமக்கு அதை அன்புடன் எடுத்துக் காட்டுகிறார்கள்.

பிரச்சினை என்ன தெரியுமா?

அது எந்தப் பிரச்சினை என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டசபைக்குப் போகத்தான் வேண்டுமா? திராவிட முன்னேற்றக் கழகம் சட்டச்சபைக்குப் போக வேண்டியதன் அவசியம் என்ன? திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட சபைக்குப் போவது எந்த நோக்கத்திற்காக என்று கேட்பது மட்டுமல்ல, ‘திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டு விடுதலைக்காக அமைக்கப்பட்ட கட்சியே தவிர, ‘திராவிட நாட்டை விடுவிப்பதற்காக ஏற்பட்ட கழகமே தவிர அது சட்டசபைபைய் கைப்பற்றி மந்திரிசபை அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வெறும் அரசியல் கட்சி அல்ல‘ என்று நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். அப்படியிருக்கிறபோது சட்டசபைக்கு நீங்கள் போவானேன்? என்றும் கேட்கிறார்கள்.

காங்கிரசுக் கட்சியேகூட அதைக் கேட்கிறது, காங்கிரசு கட்சி அதைக் கேட்கிறபோது, நாம் அதன் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். விரிவாகப் பரவியுள்ள ஒரே கட்சி தி.மு.க.இன்றைய தினம் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக உள்ள மற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இதை நாம் சொல்லித் தீரவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக நாட்டிலே பரவலான அமைப்போடும், உருவான வலிவோடும் இருக்கிற ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

ஒரே கட்சி தி.மு.க. தான்

கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தீவிரமான திட்டங்கள் இருக்கலாம். வீரமிக்க பாரம்பரியம் இருக்கலாம். உழைக்கின்ற தோழர்கள் இருக்கலாம். வீரத் தியாகிகள் இருக்கலாம் இவைகளை எல்லாம் நான் மறுக்கவில்லை. இவைகள் அத்தனையும் அவர்களுக்கு இருப்பதுபோல், எங்களுக்கும் இருப்பதோடுகூட – தமிழ்நாட்டு அளவிலே பார்த்தால் காங்கிரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக எந்த இடத்திலே போனாலும் முன்னேற்றக் கழகம் இருக்கிறது என்று சொல்லத்தக்க அளவுக்கு விரிவாகப் பரவியிருக்கிற ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

நான் கடந்த தினங்களில், பவானிக்கு அருகிலுள்ள பர்கூர் மலைப்பிரதேசத்திற்குப் போயிருந்தேன். ஏறக்குறைய 2000-3000 அடி உயரத்திலே அடர்ந்த காடுகளுக்கு மத்தியிலே இருக்கிற ஒரு மலைப்பிரதேசம் – காடு சூழ்ந்த இடமாகும். அதிலே என்னுடைய நண்பர் எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்கள், பர்கூரிலே இருக்கிற நம்முடைய கிளைக் கழகத் தோழர்களைப் பார்க்க வண்டுமென்பதற்காக என்னை அழைத்துக் கொண்டு போனார்கள்.

உச்சத்தில் கழகக் கொடி

அடர்ந்த காட்டுக்கு மத்தியில்தான் நாங்கள் காரை ஓட்டி செல்ல நேரிட்டது. அந்தக் காட்டிலே செல்லுகின்ற பாதையில் நாங்கள் மோட்டாரை எந்தப் பக்கம் திருப்பினாலும், மோட்டாரைச் சற்று நிறுத்திச் சத்தம் கொடுத்து விட்டத்தான் திருப்ப வேண்டும். ஏனென்றால் எதிர்பாராத வகையில் மிருகங்கள் அங்கே வந்து விடக்கூடும். மதம் பிடித்த யானைகள் வரலாம் – இரத்தவெறி கொண்டலையும் சிறுத்தைகள் வரலாம். கரடிகள் வரலாம். இப்படி காட்டு மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்ற இடம் பர்கூர் மலைப் பிரதேசமாகும்.

இவைகளையெல்லாம் தாண்டிப் பர்கூர் மலைக்குப் போனோம். அந்த இடத்திலே நான் பார்த்துப் பெருமைப்படும் அளவுக்கு நம்முடைய கழகக்கொடி உச்சமான ஓர் இடத்திலே பறந்து கொண்டிருந்தது. நண்பர் சுப்பிரமணியத்தைக் கேட்டேன் ‘இங்குகூட நம் கழகம் இருக்கிறதா?‘ என்று அதற்கு அவர் சொன்னார். ‘இதே கேள்வியைத்தான் இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்த மராமத்து அமைச்சர் அவர்களும் கேட்டார். நீங்களும் கேட்கிறீர்களே‘ என்று.

கக்கனுக்குச் சங்கடம்

இரண்டு திங்களுக்கு முன்னாலே அடியெடுத்து வைத்திருக்கின்ற மராமத்து அமைச்சர் அவர்கள், இந்தக் கொடியை பார்ததவுடனே, ‘இங்கேயும் இருக்கா?‘ என்று சலிப்போடு கேட்டு, ‘அண்ணாத்துரை இங்கு வந்து போயிருக்கிறானா?‘ என்று விசாரிக்க, காங்கிரஸ் தொண்டர்களே ஆவலோடு சொன்னார்கள். ‘இன்னும் வரவில்லை, ரொம்பத் தடவை அழைத்தார்கள், எப்போது வருவாரோ தெரியவில்லை? என்று அவர்களே சொல்லியது, கக்கனுக்குக் கூடக் சங்கடமாயிருந்தது‘ என்று நண்பர்கள் சொன்னார்கள்.

ஆகையால்தான் காங்கிரசுக்கு அடுத்தபடியாக இன்றைய தினம் காங்கிரசினுடைய இடத்தைக் கைப்பற்றத்தக்க அளவுக்கு- ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய நிலைமை ஏற்படுமானால், அதற்கேற்ற அளவுக்கு நாட்டிலே விரிவாகப் பரவியிருக்கின்ற அமைப்புகளை வைத்துக் கொண்டிருக்கின்ற கழகம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்!

உட்பொருள் என்ன?

அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சட்டசபைக்கு ஏன் போகவேண்டும் என்று காங்கிரசு கட்சி கேட்பதன் உட்பொருள் என்ன வென்றால், ‘நீங்கள் தேர்தலில் ஈடுபட்டால் தொல்லை அதிகம், நீங்கள் தேர்தலில் ஈடுபட்டால் உங்களிடத்திலே பலமான பிரச்சார இயந்திரம் இருக்கிறது. சுதந்திரக் கட்சியென்றால், அதனிடத்திலே பிரச்சார இயந்திரம் இன்னமும் சரியான முறையிலேஅமையவில்லை. கம்யூனிஸ்டுக் கட்சி என்றால், அவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் வாழ்கின்ற இடத்தில்தான் செல்வாக்காக இருப்பார்கள். மற்ற இடத்தில் இருக்கமாட்டார்கள். ஆகையால் நடுத்தர மக்களிடத்திலேயும் எல்லா விதமான மக்களிடத்திலேயும் வரவலாகச் செல்வாக்கு பெற்றிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடுவதென்பது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய தலைவலியாக இருக்கிறது‘ என்று நம்மைப் பார்த்துக் கூறுகிறார்கள் என்றுதான் பொருள்.

ஆகையால்தான் காங்கிரஸ் கட்சி ‘உங்களுக்குச் சட்டமன்றத்திலே என்ன வேலை?‘ என்று கேட்கறிது அவர்கள் கேட்பதுடன் மட்டும் முடிவதில்லை. பெரியார் இராமசாமியும் கேட்கிறார். ‘உங்களுக்குச் சட்டமன்றத்தில் என்ன வேலை?‘ அதைப் போலவே மற்றவர்களும் கேட்கறிாக்ாள். நம்முடைய தோழர்களிலும் சிலர் கேட்கிறார்கள். ‘நமக்குக் சட்ட மன்றத்தில் என்ன வேலை?‘ என்று.

நாம் இத்தனை பேருக்கும் சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனென்றால், நாம் நிற்பதற்குரிய நோக்கத்தை நாமே தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். நம்முடைய வாதங்களிலே நேர்மைஇருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய பேச்சிலே உண்மையான வலிவு ஏறும்.

ஒளிவு – மறைவு ஏது?

சட்டசபைக்கு நீங்கள் ஏன் செல்லவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்கின்ற கேள்விக்கு நாம் சொல்லுகின்ற சமாதானம், சுயராஜ்யம் கிடைப்பதற்கு முன்னாலேயே வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் இருந்த காலத்திலேயே எப்படி காங்கிரஸ் கட்சி சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் ஓரளவுக்குச் செல்வது சுயராஜ்யம் போராட்டத்தை நடத்திச் செல்வதற்கு ஓர் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று உறுதியாக நம்பிச் சத்திமூர்த்தி சென்றாரோ, கோவிந்த வல்லப பந்த் சென்றாரோ, பாபு இராசேந்திர பிரசாத் சென்றாரோ, முன்ஷி சென்றாரோ, ஜவஹர்லால் நேரு சென்றாரோ அப்படி அவர்கள் எல்லாம் சென்றதைப் போலத்தான் நாமும் இன்றைய தினம், ‘வட நாட்டு ஏகாதிபத்தியம்‘ என்று நம்மால் கருதப்படுகின்ற இந்தியப் பேரரசு இருககின்ற நேரத்திலே ‘நாம் சட்டமன்றங்களிலே அமரவேண்டும். சட்ட மன்றங்களில் அமருவதன் மூலம் திராவிட நாட்டுப் பிரிவினைக்கு நம்மாலான உற்சாகத்தைப் பெறமுடியும்‘ என்று எண்ணத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் நாமும் சட்டமன்றங்களுக்குச் செல்கிறோம். இதில் ஒளிவு இல்லை மறைவு இல்லை.

இதில் வெட்கப்படக் காரணமில்லை – துக்கப்பட நியாயமில்லை.

இலட்சியத்தை இழந்தோமா?

யாருடன் உடன்பாட்டுக்கு வருவதானாலும், இந்த இலட்சியத்தை விட்டுவிட்டு நாம் உடன்பாட்டுக்குச் செல்வது தேசியக்கவி பாரதியார் சொல்லியிருக்கிறபடி கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு சமானமாகும்.

திராவிட நாடு இலட்சியத்தை விட்டுச் சட்டசபைக்குச் செல்வது, கண்ணை விற்றுவிட்டு, ரவிவர்மாவின் படத்தை வாங்குவதற்குச் சமமாகும். எனவே, தேர்தல் வெற்றி, தேர்தல் விளைவுகள் எப்படி ஆவதானாலும் சரி – திராவிட நாட்டுப் பிரிவினை என்பதிலே திராவிட முன்னேற்றக் கழம், ஒரு துளித் தயக்கமும் காட்டாது – தளர்ச்சியடையாது – விட்டுக் கொடுக்காது – விடாப்பிடியாக ஈடுபடும் என்பதைப் பணிவன்புடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது யாருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், யாருக்கு மருட்சியைக் கொடுத்தாலும் அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. ஏனென்றால், ஓர் அரசியல் கட்சியாக ஒரு விடுதலை இயக்கமாக நாங்களெல்லாம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பது கூட, ‘நாட்டுப் பிரிவினை வேண்டும்‘ என்பதற்காகவே தவிர, சட்டமன்றத்தில் இடம் வேண்டும் என்பதற்காக அல்ல.

ஜனநாயகத்துக்கு நல்லதா?

இந்த ஆண்டு சட்டமன்ற நடவடிக்கைகளைப் பற்றி நண்பர் ஏ.கோவிந்தசாமி அவர்கள் நான் வருகின்றபோது இங்கே பேசிக் கொண்டு இருந்தார். ஐந்து ஆண்டு சட்டசபை நடவடிக்கை என்றால் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற சட்டமன்ற நடவடிக்கைகளைப் பற்றி எப்படி எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ எனக்கு விளங்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘ஐந்து ஆண்டுச் சட்டமன்ற நடவடிக்கை‘ என்று ஏட்டில் இருக்கிறதே தவிர சட்டமன்றம் கூடியது 305 நாட்கள்தான். ஐந்து ஆண்டுகளில் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்ட நேரம் 1,200 மணிதான். இந்த நாட்டிலே இருக்கிற மூன்று கோடி மக்களைப் பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 250 பேர், மாதம் ரூ.150 சம்பளம் வாங்கிக் கொண்டு கவனித்திருக்கிறார்கள் என்பதை ஒரு சட்டமன்ற உறுப்பினர் சொல்வது வெட்கப்படக்கூடிய ஒன்றுதான்.

நான் கூச்சப்படாதவன் என்ற முறையிலே அதையும் வெளிப்படையாகச் சொல்கிறேன். சொல்லிக் கொள்வதற்கு காரணம். இவ்வளவு குறைச்சலான நாட்கள் சட்டமன்றம் நடப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்பதைக் காட்டத்தான்.

அளவைச் சுருக்கியா காட்டுவது?

ஐந்து ஆண்டுகளுக்குச் சட்டமன்றம் இருக்கிறது என்ற பெயரைக் காட்டி 305 நாட்கள் தான் சட்டமன்றம் நடந்தது என்று காட்டுவது பெரிய கடையைக் காட்டி, அதில் நடைபெறுகின்ற வியாபாரத்தினுடைய அளவைச் சுருக்கிக் காட்டுவதற்குச் சமானமாகும். என்னிடம் எதிர்பார்த்து, அப்படி ஆசைப்பட்டுக்கொண்டு வந்து, ஏமாற்றமடைந்து எந்தத் தோழரும் திரும்பிச் செல்ல வேண்டாம். என்னிடம் வருகின்ற போதே நான் யார் என்பதை அறிந்து, எதற்காக இருக்கிறேன் என்று தெரிந்து, என்னுடைய கொள்கை என்ன என்பதைப் புரிந்து இதற்கிடையில் என்னிடம் என்ன பெறலாம் என்று வரவேண்டுமே தவிர, நான் 4 அடி 3 அங்குலம் என்று உயரம் பார்த்த பிறகு, 8 அடி உயரத்திலுள்ள சாமானை என்னைக் கொண்டு எடுக்கச் சொல்லாதீர்கள்.

பின்னால் வருந்தாதீர்!

அதுபோல், நான் நாட்டுப்பிரிவினைக்கு என்னை ஆட்படுத்திக் கொண்டவன் என்று தெரிந்த பிறகு, ‘சட்டமனற்த்திற்காக இதை விட்டுக் கொடுப்பீர்களா?‘ என்று கேட்கத் தேவையில்லை. இதை கேட்டுக் கொண்டு எந்த அரசியல் கட்சியும் எங்களிடம் பேச வருவதில் பொருள் இல்லை. பேசிவிட்டுப் பிறகு ‘அண்ணாத்துரை பிடி கொடுக்க வில்லை. விட்டுக் கொடுக்கவில்லை‘ என்று பின்னாலே என்பேரிலே சலித்துக் கொள்ள நியாயம் இல்லை. ஏற்கனவே என் பேரிலே பல அரசியல் தலைவர்களுக்கு வருத்தமிருக்கிறது. ‘அண்ணாத்துரை எதைக் கேட்டாலும் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறான். நழுவிப் போய்விடுகிறான். அவனைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கிறது. என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்முடைய நண்பர் ஜீவானந்தம் அவர்கள் கூட ஒருமுறை சொன்னார் – ‘கம்யூனிஸ்டுகள் போல அண்டர்கிரவுண்டாக இருக்கிறாயே, உன்னைப் பார்க்கவே முடியவில்லையே‘ என்று அப்படி நான் பார்க்க முடியாத உயரத்திலேயும் இல்லை. பார்க்க முடியாதபடி வேறு அலுவலர்களில் நான் ஈடபட்டுக் கொண்டும் இல்லை. பார்பபதற்கு முன்னாலே எதற்கப் பார்ப்பது? என்று தீர்மானித்துக் கொண்டால், என்னைச் சுலபத்தில் பார்க்கலாம். என்னை ஒரு தடவைக்கு நான்கு தடவை பார்த்து, நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை என்னை விட்டுவிடச் செய்யலாம் என்று எதிர்பார்ப்பார்களானால், அது உண்மையிலேயே நடக்கக் கூடிய காரியமில்லை.

நாட்டுப்பிரிவினை கேட்பது நான் ஒருவன்தான் என்ற நிலைமை ஏற்பட்டாலும், கடைசிவவரையில் வீட்டின் திண்ணையிலாகிலும், ீவிதியில் வெறிபிடித்தவன் போலாகிலும் நாட்டுப் பிரிவினைக்காகத் தான் நான் பேசிக் கொண்டிருப்பேனே தவிர அதை விட்டுவிட்டு வேறு வழியில்லை வேறு துறையில்லை என்ற அளவிற்கு என்னை நானே ஒப்படைத்துக் கொள்ளமாட்டேன்.

சொல்வது எதற்கு?

ஆகையால், ‘சட்டசபைக்கு நீங்கள் ஏன் வருகிறீர்கள்?‘ என்று என்னைப் பார்த்துக் கேட்பது, ‘கல்யாணம் எதற்கச் செய்து கொள்கிறீர்கள்?‘ என்று மணவறையில் உட்கார்ந்திருப்பவனைப் பார்த்துக் கேட்டதற்குச் சமானமாகும். எதற்குச் சட்டசபைக்குச் செல்கிறோம்? அது திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சட்டசபை வேண்டுமென்பதற்கு அல்ல. இருக்கும் மந்திரிகளைக் கவிழ்க்க வேண்டும் என்பதற்கல்ல. அல்லது காமராசரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இராசகோபாலச்சாரியாரை உட்கார வைக்க வேண்டும் அல்லது கல்யாண சுந்தரத்தை உட்கார வைக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்திலே அல்ல.

தனிப்பட்ட முறையிலே பார்த்தால், காமராசரைத் தெரிந்த அளவிற்குக் கூட எனக்கு இராசகோபாலச்சாரியாரைத் தெரியாது. உள்ளபடி சொல்வதானால், காமராசரின் மேல் இருக்கக்கூடிய ஆசையின் அளவிற்கு இராசகோபாலாச்சாரியாரிடம் பழக்கமில்லை. அப்படி பழக்கம் ஏதாகிலுமிருந்தால், என்னைச் சிறையிலே தள்ளியவர் என்று எனக்கும் நான் ஆட்சியிருந்தபோது தொல்லை கொ்டுத்தவன் என்ற எண்ணம் அவருக்கும் பார்த்தவுடன் நினைவுக்கு வரக் காரணமிருக்குமே தவிர, பார்த்தவுடன் பாசம் வரக் காரணமில்லை.

சந்தித்தது எப்படி?

ஆனால் காமராசருடையது அப்படியல்ல, நாங்கள் சட்டசபையில் இல்லாத நேரத்தில், அவர் மந்திரிப் பதவி ஏற்றுக் கொண்டவுடனே, என்னைப் பார்க்க வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டு ஒரு முறைக்குப் பலமுறை அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து – இப்போது சுதந்தராக் கட்சியிலிருக்கிற நண்பர் எஸ்.எஸ்.மாரிசாமி மூலம் சொல்லி அனுப்பினார். நாட்டை ஆளும் முதலமைச்சர் என்னை ஏன் பார்க்க வேண்டும்? என்று நான் மாரிசாமியைக் கேட்க, காமராசர் அவர்கள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு வந்திருக்கிறார்். அதற்குத் தங்கள் ஆதரவு தரவேண்டும். அதற்குத்தான் தங்களைப் பார்க்க வேண்டுமென்கிறார் என்று சொல்ல, எப்படியாவது பார்க்க வேண்டும் என்று மாரிசாமி வாதாடி, எந்த இடத்தில் பார்ப்பது? என்று பேசிய நேரத்தில் இராயபுரத்திலுள்ள நம்முடைய அறிவகத்திற்கு வருவதாகச் சொல்லி யனுப்பியவர்தான் காமராசர்.

நான்தான், அவர் அறிவகம் வருவதைப் பற்றிச் சந்தேகப்படுவார்கள். அறிவகத்தைப் பற்றியேகூடச் சந்தேகப்ப்டுவார்கள், ஆகையால் அவர் அங்கே வரத்தேவையில்லை. அவருடைய இடத்திற்கு நான் வருவதாக இல்லை. இருவருக்கும் பொதுவான இடத்திற்குப் போகலாம் எனக்கூறி, ஸ்டுடியோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்திலேதான் நாட்டை ஆளும் முதலமைச்சரும், நானும் சந்தித்தோம்.

நினைவுபடுத்தத்தான்!

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், ஏதோ சினிமா என்பதை மிக்க கேவலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே காங்கிரஸ்காரர்கள், அவர்களுடைய மாபெருந்தலைவர் முதன் முதலில் என்னைச் சந்தித்தது சினிமாக் கொட்டைகையில்தான் என்பதை அவர்களுக்குச் கவனப்படுத்தத்தான் நான் அதைச் சொல்லி அனுப்பியது கூட அந்த நோக்கத்திற்குத்தான்!

அங்கே எப்படி வருவது? என்று அவர் சொல்லுகிறாரா என்று பார்த்தேன், வருவதாகக்கூட அல்ல, படம் போடச் சொல்லுங்கள், பார்க்கிறேன் என்று அவர் சொன்னாராம். படம்கூட ஒன்று போட்டுக் காட்டினோம்! அப்போது நான் எழுதிய சொர்க்கவாசல் என்ற படம் தயாராகிக் கொண்டிருந்ததது. அதிலே பல இடங்களில் வெட்டிவிட் டிருந்தார்கள். அதையே பார்க்க வேண்டும் என்றார் காமராசர். என்னோடு உட்கார்ந்து கொண்டே படத்தைப் பார்த்தார். இதிலே எதை வெட்டினார்கள்? என்று கேட்டார். அந்த இந்த இடம் என்றேன், இதில் வெட்ட ஒன்றுமில்லையே என்றார். ஒன்றுமில்லை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், அவர்கள் வெட்டுகிறார்களே என்றேன். அதற்கு அவர் என் முதுகில் தட்டிக் கொண்டே, நீங்கள் சும்மாயிருங்கள் நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்றார். உடனே நான், ஐயா, உங்களுக்கு அந்த அதிகாரமில்லை என்று சொன்னேன்.

உள்ளபடியே படத் தணிக்கை அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. சென்சார் போர்டு என்பதை மத்திய அரசு அமைத்திருக்கிறது. நம்மைப் போல் படம் பார்க்கிற உரிமைதான் மாநில அரசுக்கு இருக்கிறதே தவிர, வெட்டி விட்டால் அதைத் திரும்பச் சேர்க்க மாநில அமைச்சர்களுக்கு உரிமை இல்லை. இதைத்தான் நான் காமராசருக்கச் சொன்னேன். உண்மையா என்று அவர் கட்டார். ஆமாம் என்று அன்றைய தினம் சொன்னேன்.

தவறை உணர்த்தவே!

ஆகையால், சினிமா என்றால், அப்படியே வெறுத்து விட்டுப் போய்விடுகிறவர்கள் போல் காங்கிரஸ்காரர்கள் வெளியில் பேசிக் கொண்டிருக்கிறார்களே அது எவ்வளவு தவறு என்பதை நாடு உணர வேண்டும் என்பதற்காகத்தான் என்னைப் பார்க்க வேண்டுமென்று சொன்ன நேரத்தில் அவரை அங்கே வரச் சொன்னேன்.

அன்று எங்களோடு கூட இருந்தவர்களில் முத்தமிழ்க் கலாவித்வரத்தினம் டி.கே.சண்முகமும் ஒருவர், தமிழரசுக் கழகத்தில் இருக்கிற உமாபதியும் ஒருவர் ஐந்தாறு சாட்சியோடுதான் நான் அவரைப் பார்த்தேன். ஏனென்றால், ஒரு அரசியல் தலைவர் இன்னோர் அரசியல் தலைவரைச் சந்திப்பதால் ஏதாவது மடிகனத்துவிடும் என்று மற்றவர்கள் எண்ணி்க் கொள்ளப் போகிறார்கள் என்பதற்காகத்தான் இவர்களோடு சந்தித்தேன்.

அற்ப எண்ணம் எனக்கில்லை!

இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், அப்போது இருந்த காமராசருக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு! அவர், பாட்டாளி மக்கள் சமூகத்திலே பிறந்தவர் என்பதில் எனக்கு மிகுந்த அக்கறையும் உண்டு. ஆகையினால் அவரைக் கவிழ்த்து விட்டு இன்னொருவரைக் கொண்டு வரவேண்டும் என்ற அற்ப ஆசை எனக்கு இருக்கக் காரணமில்லை.

பிணி முற்றிவிட்டதா?

ஆகையால் எங்கே அவரைக் கவிழ்த்துவிடுகிறார்களோ என்ற பயத்தில் பெரியார் இராமசாமி அவர்கள், அவருடைய பக்கத்திலேயே நின்று கொண்டு தான் செய்ய வேண்டிய பிரயாணத்தைக் கூடச் செய்யாமல் காமராசரைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

வீட்டிலே உள்ள நோயாளியைப் பார்ப்பதற்கு வந்த டாக்டர், பின்பு திண்ணையிலேயே, உட்கார்ந்து விடுகிறார் என்றால் ஆபத்தான நோய் வந்துவிட்டது என்பதுதானே அர்த்தம். அதுபோலத்தான் காங்கிரஸ் கட்சிக்கு நோய் அதிகமாக ஆகிவிட்டது என்று உலகத்தி்லே உள்ளவர்கள் சந்தேகப்படத்தக்க அளவுக்குப் பெரியார் அவர்கள், அதன் பக்கத்திலே இருந்து கொண்டு காமராசரைக் கவிழ்க்காதீர்கள் என்கிறார். அகவே தான், நான் அந்த விளக்கத்தைத் தரக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நோக்கம்தான் என்ன?

சட்டமன்றத்திற்கு முன்னேற்றக் கழகம் செல்வது காமராசரைக் கவிழ்க்க அல்ல. மந்திரிசபையை நாங்கள் பெற வேண்டும் என்பதற்காகவும் அல்ல. ஆனால் எந்த நோக்கத்திற்காகச் செல்லுகிறோம்?

விடுதலை இயக்கம் என்ற முறையில் திராவிட நாட்டுப் பிரிவினையை நாங்கள் வலியுறுத்திக் கொண்டு வருவதைச் சட்டமனற்த்தில் அமர்ந்த கொண்ட காங்கிரசுக் கட்சி கேலிக் கூத்தாக்குகிறது! வெட்ட வெளியில் பேசுகிறார்களே திராவிட நாடு என்று முடியுமா, சட்டமன்றத்திற்கு வரச் சொல்லுங்கள் என்று அவர்கள்தான் என்னை அழைத்தார்கள்! சட்டமன்றத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதில்லை. அதன் அவசியத்தைக்கூட நான் அன்றைய தினம்உணராமல்தான் இருந்தேன்.

வெட்டவெளியில், திராவிடநாடு, திராவிடநாடு என்று பேசினால் போதுமா? சட்டமன்றத்திற்கு வாருங்கள் என்று இவர்கள்தான் அழைத்தார்கள். சட்டமன்றத்திற்குநாங்களும் சென்றோம்?

இப்பொழுது அவர்கள் கேட்கிறார்கள் திராவிடநாடு கேட்கிற நீங்கள் ஏன் சட்டமன்றத்திற்கு வருகிறீர்கள்? என்று.

சட்டமன்றத்திற்கு வராவிட்டால், ஏன் வரவில்லை? என்று இவர்களே தூண்டுகிறார்கள்! சட்டமன்றத்தில் போய்ப் பேசினால் சட்டமன்றத்தில் இந்தப் பேச்சு என்ன பேச்சு என்று இவர்களே கேட்கிறார்கள்.

இந்த விதத்திலே அவர்கள், நாம் எதைச் செய்தாலும் குற்றம் காணும் விதத்திலே, சட்டமன்றத்தில் உங்களுக்கு என்ன வேலை? என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள்!

செல்வாக்கும் மதிப்பும் எதனாலே?

நான் சட்டமன்றத்திற்குப் போனதால்தான், திராவிட நாட்டுப் பிரிவினைத் திட்டத்திற்கு நல்ல மதிப்பு ஏற்பட்டிருக்கிறது, நல்ல செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு உங்களுக்குச் சொல்லுவேன் சென்னை மாநகராட்சியில் நம்முடைய தோழர்கள் மேயர்களாக அமர்ந்ததாலே என்ன பெரிய சாதனை கிடைத்துவிட்டது என்று, ஏனோ தானோ என்று பல இடங்களிலே பேசிக் கொள்கிறார்கள், நம்முடைய அப்துல்காதர் மேயராக இருந்தபோது எகிப்திய நாட்டுத்தலைவரான நாசர் அவர்கள் சென்னைக்கு வந்தார். சென்னையிலே யார் வருவதாக இருந்தாலும் மாநகராட்சியின் தலைவர்தான் முதலில் அவர்களை வரவேற்பது வழக்கம்.

உங்களுக்கு அப்துல்காதரைத் தெரியும் – நாசரின் உருவத்தையும் நேரே பார்த்திருக்கலாம். சிலர் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். நாசர் அவர்கள், அப்துல்காதரைச் சந்தித்தபொழுது அவரும் காங்கிரஸ் கட்சியாகத்தான் இருப்பார் என்று எண்ணிக் கொண்டு சென்னை மேயர் அப்துல்காதர் என்று அறிமுகப்படுத்திய உடனே தாங்கள் காங்கிரஸ் கட்சிதானா? என்று கேட்க அப்துல்காதர் அவர்கள் இல்லை என்று சொல்ல நாசர் அவர்கள் திகைத்துப் போய் காங்கிரஸ் கட்சி இல்லாவிட்டால் வேறு எந்தக் கட்சி மேயராக முடியும் என்று எண்ணிக்கொண்டு அப்படியானால்...? என்று கேட்க, நான் வேறு அரசியல் கட்சி என்று அப்துல்காதர் சொல்ல, அது என்ன அரசியல் கட்சி? என்று நாசர் கேட்க தி.மு.க. என்று அப்துல்காதர் சொல்ல தி.மு.க. என்றால்... என்று நாசர் கேட்க, அப்துல்காதர் அதற்கு விளக்கங்கள் கொடுத்தாரே அது எத்தனைக் கோடி பெறும்என்று நீங்கள் கருதவில்லையா?

தி.மு.கழகத் தூதுவர்கள்!

காங்கிரஸ் கட்சி ஆட்சி மன்றத்தைக் கோட்டையில் கைப்பற்றுவதற்கு முன்னால், சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயராக அமர்ந்து, வெளிநாட்டுத் தலைவர்களிடத்திலே கைக்குலுக்கி, நாங்கள் எல்லாம் நாட்டை ஆளப்பிறந்தவர்கள் சுயராஜ்யத்தைப் பெறப் போராடுகிறவர்கள் என்று எடு்த்துச் சொன்னார்கள்.

அதுபோலவே, இன்றைய தினம் ஒரு முறைக்கு நான்கு முறை நம்முடைய மேயர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் பிற மாநிலத்துத் தலைவர்கள் இங்கே வருகின்ற நேரத்தில் அவர்களிடத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூதுவர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதிகளாக, திராவிட நாட்டுப் பிரிவினையை எடுத்து வலியுறத்துபவர்களாகப் பேசிக் கொண்டு வருகிறார்கள்! அது நம்முடைய கொள்கையின் வலிவை இலட்சியத்தினுடைய செல்வாக்கைப் பாரறியச் செய்திருக்கிறது!

அதனால்தான் இந்தத் தடவை எப்படியாகிலும் முன்னேற்றக் கழக மேயரை வரவிடாமல் தடுக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டது!

நாணயமா அது?

நிரம்ப நியாயங்கள் பேசுகிறார்கள்( 35 அல்லது 37 பேர்களாக இருக்கின்ற முன்னேற்றக் கழகம் எப்படி மேயர் பதவியைக் கைப்பற்றயிது என்று பேசுகிற அவர்கள் மெஜாரிட்டியாக இருந்தால்தான் தேர்தலுக்கு நிற்கலாம் என்று அரசியல் நாணயம் பேசுகிற அவர்கள், முதல் தடவை அ.பொ.அரசு அவர்கள் மேயராக நின்ற நேரத்தில் மெஜாரிட்டி கட்சியின் எதிரிலே கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு நின்றது எந்த அரசியல் நாணயத்தைக் காட்டுகிறது?

ஒன்று இவர்களே நின்றிருக்க வண்டும் எங்களுக்கு அடுத்த முறையிலே எண்ணிக்கை பலம் உள்ளவர்கள் என்பதனால் அதையும் விட்டுவிட்டு அதற்கும் குறைவாக இருக்கிற 11 பேர் உள்ள கட்சியிடம் நீங்கள் நில்லுங்கள் என்று தூண்டிவிட்டு அவர்களுக்குப் பக்கத்திலே இவர்கள் போய் நின்றார்கள். இப்படிப்பட்ட செயல் அவர்களுக்குக் பழக்கமான ஒன்றாகும் பக்கத்திலே இருக்கும் கேரளம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

பட்டம் தாணு (பிள்ளை)யிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களுடைய அரசியல் ஒரு பக்கம் சங்கரும், ஒரு பக்கம் சாக்கோவும்இழுத்துக்கொண்டு போவதை அங்கே நாம் இன்றைய தினம் கூடப் பார்க்கிறோம்.

‘பராக்கு‘ கூறுகிறார்களா?

அதேபோலதான், மாநகராட்சி மன்றத்தில் இவர்களுக்கு எண்ணிக்கை பலம் இருந்தும், கூட 11 பேர் உள்ள கட்சிக்கு இவர்கள் பராக்கு கூறுபவர்களாகவும், கட்டியம் கூறுபவர்களாகவும் தங்களை ஆக்கிக் கொண்டது எந்த அரசியல் நாணயம்? எந்த வகையில் அரசியல் நேர்மையைக் காட்டும்.

இதைச் செய்தவர்கள்தான் என்னைக் கேட்கிறார்கள் – மூன்று ஒட்டு உனக்கு எங்கிருந்து வந்தது? என்று! ஆண்டவன் கொடுத்தான் நீ ஏன் கேட்கிறாய்? எங்கிருந்தோ வந்தது, ஓட்டுச் சீட்டில் பெயரும் இருக்கிறது.

நினைப்பு வேறு – செயல் வேறு?

மூன்று ஓட்டுக்கள் அதிகம் என்றவுடன், உனக்கு ஏன் காங்கிரஸ் மீது சந்தேகம் வருகிறது? கடையிலே சாமான் போய்விட்டது என்று கேள்விப்பட்டவுடன், ஒரு கான்ஸ்டபிள் கந்தசாமி எங்கே? என்று கந்தசாமியையே கேட்டால் என்ன அர்த்தம்? கந்தசாமி ஏற்கனவே அப்படித் திருடியிருக்கிறான் என்று அர்த்தம்.

எங்களுக்கு மூன்று பேர்கள் ஓட்டுப் போட்டார்கள் என்றவுடனே, அப்படிப் போட்டவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என்றால் என்ன அர்த்தம்? உன்னிடம் இருக்கும் ஆட்கள் அவ்வளவு யோக்யர்கள் நாணயமுள்ளவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று நீ சொல்லுகிறாய் நான் அல்ல எனக்கு அவர்களிடத்திலே மதிப்பு உண்டு.

அந்த மூன்று பேர் காங்கிரஸ் கட்சியா அல்லது 11 பேரிலே உள்ளவர்களா என்பது எனக்குத் தெரியாது.

அது மட்டுமல்ல, நம்முடைய தம்பி சம்பத், ஐந்து பேர்களை அன்று அனுப்பாமலிருந்தாரே அது கூட என்னவெனக் கருதுகிறீர்கள்? அது என்னிடத்திலே இருக்கிற அக்கறையாக ஏன் இருக்கக் கூடாது? நான் இந்த ஐந்து பேரை அனுப்பினால் நாற்பத்தைந்தோடு ஐந்து சேர்ந்து 50 ஆகி, காங்கிரஸ் அல்லது காங்கிரஸால் ஆதரிக்கப்பட்டவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். முன்னேற்றக் கழகம் வராது என்னதான் பிரிந்து வந்த விட்டாலும் விட்ட குறை தொட்டகுறை இருக்கிறதே என்ன வண்ணம் அவருக்குத் தோன்றியிருக்கக் கூடாதா?

திறமை அவர்களுக்குண்டா?

அது அரசியல் இராச தந்திரம் இந்த மூன்று பேர் ஓட்டுப்போட்டது அரசியல் அநாகரிகம்! அரசியல் இராச தந்திரம் எது? அரசியல் நாகரிகம் எது? என்பதற்கு உலகத்திலேயே நீங்கள் தானா அகராதி எழுதியிருக்கிறீர்கள்? வேறு யாரும் அகராதி எழுதவே மாட்டார்களா? உங்களுக்கு இன்னமும் அகராதியைப் படிக்கத் தெரியவில்லையே என்பதுதான் எனக்கு இருக்கும் மனக்குறை அப்படியிருக்கும் போது அரசியல் அகராதியை எழுதுபவர்களாக உங்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

எப்படி நாங்கள் மாநகராட்சியைக் கைப்பற்றியவுடன்,மக்கள் பாராட்டத்தக்க வகையில் காரியங்களைச் செய்திருக்கிறோமோ அது போலவே, சட்டமன்றத்தையும் கைப்பற்றினால் எங்களால் காரியமாற்ற முடியும். ஆனால் அதற்காக மட்டுமல்ல நாங்கள் சட்டமன்றத்திற்குச் செல்வது.

(நம்நாடு - 1, 2.1.62)