அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நேரமில்லை – உணருவீர்!

வருகின்ற பொதுத் தேர்தல், 1962 பிப்ரவரித் திங்கள் 26, 27ஆம் நாட்களில் நடைபெறவிருகக்கிறது. இடையிலே இருக்கின்ற நாட்கள் மிகக்குறைவு சென்ற ஆண்டு ஏற்பட்ட புதுக் குழப்பத்தால் தேர்தல் வேலை சீராக நடைபெறவில்லை. ஓராண்டுக் காலத்தில் செய்யவிருந்த தேர்தல் வேலையை இன்னும் இரண்டொரு மாதங்களில் செய்து முடித்துத் தீர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் நாளை எந்த இடம், மறுநாள் எந்தக் கூட்டம் என்பது எனக்கே தெரியாது. அவ்வளவு வேலைகள்! எதையும் சரிவரக் கவனிக்க முடியாத தொல்லைகள்! தோழர்கள் நிற்கின்ற தொகுதிக்கு ஒருமுறை போவதற்குக் கூட நாட்கள் இல்லை! ஒருநாளைக்கு 4அல்லது 5 கூட்டங்கள் நடத்தினால்தான் நம் தொகுதிகளைச் சுற்றி முடிக்க முடியும்.

வசதிக்கு வழி இது!

எனவே, தினமும் நான்கு கூட்டங்களுக்குக் குறையாமல் நடத்த வேண்டும்( அதில் அதிகமான பேச்சாளர்களைப் போடாமல், ஒரு பேச்சாளர், தலைவர், கழகச் செயலாளர், வேட்பாளர் – இவர்களை மட்டும் போட்டுக் கூட்டம் நடத்திப் பொதுமக்களிடம் நிலைமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிப் போடப்படுகின்ற கூட்டங்கள் 3 மணி நேரம் 4 மணி நேரம் நடக்காமல் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடவேண்டும். அப்போதுதான் பேச்சாளர்களுக்கும் மக்களுக்கும் வசதியாக இருக்கும்.

அதில் முக்கியமானது இன்னும் ஒன்று. நடைபெறுகின்ற கூட்டங்களுக்கு வருகின்ற போலீசு நண்பர்கள் 4 மணி நேரம் நிற்பதால், ஐயையோ நம்மை இவ்வளவு நேரம் கால்கடுக்க நிற்க வைத்த தி.மு.க.வுக்கா ஓட்டளிப்பது? என்று அவர்களுக்குத் தோன்றும், சீக்கிரமாகக் கூட்டங்களை முடித்துவிட்டால் அவர்களுக்கும் நம்மீது நல்லெண்ணம் ஏற்படும். ஆகையால் கழகத் தோழர்கள் இந்த முறையில்தான் கூட்டங்களைப் போட்டுத் தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவைபற்றி விளக்கமாகவும் எழுத இருக்கிறேன். எனக்குச் சென்னைக்கும், வெளியூருக்கும் போவதற்கே நேரமில்லாததால், இத்தகைய வேலைகளில் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஐம்பது லட்சம் செலவு

உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியவாணிமுத்து அம்மையார் பேசும்போது, ‘நான் இத்தொகுதியில் நிறுத்தப்படுவதாக இருந்தால்... என்று குறிப்பிட்டார்கள். நிறுத்தப்போவதாக இருந்தால் என்பது உபசார வார்த்தை அவர்கள்தான் இத்தொகுதியில் நிற்பார்கள். இது அவர்க்ளுக்கும் தெரியும். என்றாலும் பொதுச் செயலாளர் முன்னிலையில் சொல்வதற்கு அச்சம்.

சென்ற தேர்தலில் நமக்கு எதிர்ப்பு அதிகம். காரணம் இவர்கள் எங்கே வரப்போகிறாாகள்? என்று அப்போது நம்மை அலட்சியப்படுத்தினார்கள். நாம் பெற்ற வாக்குகளையும் மாநகராட்சியின் வெற்றிகளையும் கண்ட இவர்கள் இப்போது நம்முடைய வலிவை உணர்ந்து கொண்டார்கள். நம் வாய்ப்பும் அவர்களுக்குத் தெரியும் இலட்சக்கணக்கிலே பணத்தைச் செலவு செய்து நம்மை வரவிடாமல் இருக்க வேலை செய்வார்கள். நம்மை எப்படியாவது அழித்து ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். தமிழ்நாட்டுக்குத் தேர்தலுக்கு மட்டும் அவர்கள் அரைக்கோடி ரூபாய் தேர்தல் நிதியாகத்த திரட்டி வைத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்துத செய்தி கிடைத்திருக்கிறது.

திகில் கொள்ளத் தேவையில்லை

ஆனால், ரூ. 5 லட்சம் நிதி திரட்ட ஆரம்பித்து அதுவே சேராத நிலையில் பண வசதியற்ற நாம் இருக்கும்போது அவர்கள் ரூ.50 லட்சத்தை வைத்துக் கொண்டு தேர்தலில் நிற்கிறார்கள். அவர்களுக்குப் பணம் பலம் இருப்பதால் நீங்கள் திகில் கொள்ளத் தேவையில்லை. திடுக்கிடத் தேவையில்லை. பயப்படத் தேவையில்லை. ஆசைப்படவம் தேவையில்லை. இந்தப் பணம் நடுக் கொள்ளைக்காரர்களுக்கும், தண்டச் செலவுகளுக்கும் தாறுமாறான வழிகளுக்கும்தான் தேவைப்படும்.

என் தொகுதியில் உள்ள பஸ் முதலாளி காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள ஒரு கிராமத்திற்குப் போய் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ரூ.2000 தருவதாகச் சொன்னார் என்று அந்த ஊர்த் தோழர் ஒருவர் என்னிடம் வந்த சொன்னார். அவர் சொன்னாரோ இல்லையோ கொடுப்பாரோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால், என்னிடம் வந்து சொன்ன அந்தத் தோழர் நடேச (முதலியார்) பள்ளிக்கூடத்திற்கு ரூ.2000 கொடுப்பதால் மக்கள் அப்படி இப்படி இருக்கிறார்கள் என்று சொன்னார். உடனே நான் அப்படி இப்படி இருக்க வேண்டாம். கொடுத்தால் தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். கொடுக்காவிட்டால் ஏமாறாதீர்கள். பணம் வாங்கிக் கொண்டு எப்படி அவருக்கு ஓட்டுப் போடாமல் என்றால், பணம் கொடுத்தால் தாராளமாகப் போடுங்கள். பணம் கொடுப்பதாகச் சொன்னால் ஓட்டுப் போட்ட பிறகு ஏமாறாதீர்கள். பணம் பிறகு தருகிறேன் என்று அவர்சொன்னால் அவரிடம் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். வந்த அந்தத் தோழர், என்ன அண்ணா அவர்களாவது கொடுப்பதாவது? சும்மா சொல்கிறார்கள் என்றார். அதைப்போல அந்தத் தொகுதிக்கு ரூ.1000 இந்தத் தொகுதிக்கு ரூ.1500, அந்தத் தெருவுக்குத் ரூ.500 இந்தத் தெருவுக்கு ரூ.300 தருவதாகச் சொல்வார்கள். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இப்படிக் கொட்டிவிடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஊதியம் கொடுத்தா ஊழியம் செய்வார்கள்?

தேர்தலில் ஈடுபடுவது என்பது மக்களுக்கு ஊழியம் செய்ய, தொண்டுபுரிய எங்காவது தொண்டாற்றவரும் தொண்டன் தான் ஆற்றவிருக்கும் தொண்டிற்குத் தானே ஊதியம் கொடுப்பானா? உங்கள் வீட்டு விறகைப் பிளந்து தருகிறேன். அதற்கு இந்தா இரண்டு ரூபாய் என்று விறகைக் கொடுத்துவிட்டு யாராவது பிளப்பானா? உங்கள் வீட்டைப் கட்டுகிறேன், அதற்கு இந்தா ஒரு ரூபாய் என்று யாராவது சொல்வார்கள்? ஊழியம் செய்கிறேன், ஊதியம் கொடு என்றுதானே கேட்பார்களே தவிர, ஊதியம் கொடுத்தா ஊழியம் செய்வார்கள்? அப்படி ஊழியம் செய்வதாக இருந்தால் அது ஊரை ஏமாற்றுகிற கட்சியே தவிர வேறல்ல.

நாமென்ன அப்படியா செய்கிறோம்? கட்டை பிளக்கிறேன் – பணம் தாருங்கள், வீட்டைக் கட்டுகிறேன். பணம் தாருங்கள். உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறுகிறோம். ஓட்டு வேண்டுமானால் பின்னாலே கொடுங்கள். நோட்டை இப்பொழுதே கொடுங்கள் என்கிறோம்.

நாட்டுக்கு நன்மை விளையுமா?

காங்கிரசுக்காரர்கள் மக்களிடம் நோட்டைக் கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள். நோட்டுக் கொடுத்து ஓட்டு வாங்குகிற கட்சி நாட்டுக்கு நல்லது செய்யாது. அதை இந்தப் பதினான்கு ஆண்டுக்கால ஆட்சியிலே நீங்கள் நன்றாக உணர்ந்திருப்பீர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டுக்கு நல்ல பணி ஆற்றுகின்ற மக்கள் இயக்கம். ஆகையால்தான் நாங்கள் நல்ல அரசியல் அந்தஸ்திலே வேலை செய்கிறோம்.

இந்தத் தொகுதிக்குப் பெரிய பதவி வகிக்கின்ற ஒருவரை அந்தப் பெரிய இடத்திலிருந்து அவரை இறக்கிச் சத்தியவாணிமுத்து அம்மையாருக்கு எதிராகப் போட்டியிட வைக்க முனைந்துள்ளனர். நீங்கள் சத்தியவாணிமுத்து அவர்கள் சட்டசபையில் செய்த வேலைகளைக் கணக்கெடுத்துப் பாருங்கள். பாட்டாளித் தோழர்கள் படும் அல்லல்கள் பற்றி அவர்கள் சட்டசபையிலே எடுத்து வாதாடி இருக்கிறார்கள். பழங்குடி மக்கள் படும்தொல்லைகளைப் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பேசாமல் விட்டதில்லை. சட்டமன்றத்தில் அவர் பேசும்போது மந்திரிகள் வாயில் பல்லில் நீர் இல்லாமல் கேட்பார்கள். எனக்கு எதிலே அமர்ந்திருக்கிற நிதியமைச்சர் சுப்பிரமணியம், பெண் பாலாராய் இருந்தும் இவ்வளவு காரசாரமாய்ப் பேசுகிறார்கள். கொஞ்சம் சாதாரணமாகப் பேசச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொள்வார். நான் சத்தியவாணிமுத்துவை இரண்டுமுறை திரும்பித் திரும்பிப் பார்ப்பேன். பிறகுதான் அவர்கள் பேச்சிலே கொஞ்சம் காரம் குறையும்.

எப்படிச் சாதிக்க இயலும்?

காங்கிரசுக்காரர்கள் எங்களைப் பார்த்துச் சட்டமன்றத்தில் சென்று என்ன சாதித்துவிட்டீர்கள்? என்று கேட்கிறார்கள். பொதுமக்களே, தோழர்களே! இதனை நீங்கள் எண்ணிப் பார்கக் வேண்டும். எத்தனை, எப்படி, எங்களால் சாதிக்க முடியும்? சட்டமன்றத்திற்கு எங்களில் 15 பேரைத்தான் நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். அதில் சோரம் போனது போக எஞ்சியிருப்பது 12 பேர்தான். ஆனால் அவர்களோ 150 பேர்கள், எனவே அதனை நாங்கள் எப்படிச் சாதிக்க முடியும்?


தென்னை மரத்தில் ஏறிக் கீா இறங்கும்போது எங்கே தேங்காய்? என்றும், மாமரத்தில் ஏறிக்கீழே இறங்கும்போது எங்கே மாங்காய்? என்றும், பசு மாட்டைத் தந்து பிறகு எங்கே பால்? என்றும், விளக்கில் எண்ணெய் ஊற்றித் திரிபோட்டுத் தந்து எங்கே விளக்கு எரியவில்லை? என்றும் கேட்டால் அதில் அர்த்தமிருக்கிறது.

அதைப்போல எங்களை ஆளும் கட்சியாக்கி – சட்டம் இயற்றும் அதிகாரம் தந்து, வரி போடும் அதிகாரம் கொடுத்து, பாலங்கள் எங்கே? பள்ளிக்கூடங்கள் எங்கே? மருத்துவச் சாலைகள் எங்கே? என்று கேட்டால் அதில் பொருள் இருக்கிறது. நீங்கள் கொடுத்ததோ 15, அதில் சொத்தை, சோகை 3, மீதியோ 12. இப்படி நிலைமை இருக்கிறது. ஆனால் நாங்கள் கொள்கை மாறினால் கேளுங்கள். லைசென்சு வாங்கினால் கேளுங்கள். பெர்மிட் வாங்கினால் கேளுங்கள்.

வெட்கப்படுவேன் – வேதனைப்படுவேன்

சத்தியவாணி முத்துவும், லூர்தம்மையாரும் பெண். சத்தியவாணிமுத்து, லூர்தம்மையாரிடம் போய் நான் ஒப்புக்கு எதிர்க்கட்சியாக இருக்கிறேன். ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாய் இருக்கிறேன். என் பெயரில் பஸ் ரூட் தந்தால் மக்களுக்குத் தெரிந்துவிடும். எனவே என் புருஷன் வேலையின்றி இருக்கிறார். அவர் பெயரில் ஒரு பஸ்ரூட் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி, அந்த பஸ் ஓடினால் என்ன அண்ணாதுரை, பார் பார், அதோ அவருக்கு பஸ் ஓடுகிறது. சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்குமுன் அவருக்குப் பஸ் ஏது? இப்பொழுது பார்த்தீர்களா பஸ்? என்று கேட்டால் உண்மையிலேயே நான் வெட்கப்படுவேன், வேதனைப்படுவேன், உங்களை ஓட்டும் கேட்கமாட்டேன். அப்படி யல்லவே பாவம் சத்தியவாணிமுத்து.

நான் ஒரு ரேஷன் கடையெடுத்து அதை என் குடும்பத்தார் பேரிலே போட்டு நடத்தினால். அண்ணாதுரை என்னவோ வீரன், தீரன் என்று பார்த்தோம். சீச்சீ இவ்வளவுதானா என்று கேளுங்கள் – பதில் சொல்கிறேன்.

ஆனால், கறந்த பால்போல் தி.மு.கழகம் சுத்தமாக இருக்கிறது. அங்கே போன பிறகும் கெடாமல் இருந்ததற்கே நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போடவேண்டும். அங்குப் போய்க் கெட்டவர் பட்டியல் உங்களுக்குத் தெரியாதா?

கோயில் காளைகள் அவர்கள்

தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தை விட்டுத் தள்ளுங்கள் டெல்லிப் பாராளுமன்றத்தைப் பாருங்கள். அங்கே போனால் தான் கெட்டுவிடுவார்கள் என்று காமராசர் கருதுகிறார். அதனால்தான் அவர் நம்மை டெல்லிக்குச் செல்லுங்கள். ஏன் செக்கு மாடுகள் போல் தமிழ்நாட்டையே சுற்றுகிறீர்கள்? என்று கேட்கிறார்.

நாங்கள் செக்கு மாடுகள்தான் செக்கு மாடுகள் பாதை தவறாமல் சுற்றும், போட்டதைத் தின்றுவிட்டு ஒரே இடத்தில் சுற்றும். செக்கில் எள் போடப்பட்டால் அது எண்ணெய் ஆகும் வரை பொறுமையாகச் சுற்றிக்கொண்டே இருக்கும்.

ஆனால் காங்கிரசு காளை கோயில் மாடு. அது கண்ட இடத்திற்கெல்லாம் போகும். கண்ட இடத்தில் எல்லாம் வாய் வைக்கும். கண்ட கண்ட பொருள்களைப் பாழ்படுத்தும். தாய்மார்கள் தெருவிலே உலர்த்தி வைத்திருக்கின்ற பொருள்களைத் தின்னும். பூச்செண்டு கிடந்தால்கூட அதைப் பிய்த்துப் பாழ்படுத்தும்.

காமராசருக்குப் பல கோயில் மாடுகள் கிடைத்திருக்கின்றன. அந்தக் கோயில் மாடுகளை இந்தத் தெருவில் துரத்தினால் அந்தத் தெருவுக்கு ஓடும். அந்தத் தெருவிலே துரத்தினால் இந்தத் தெருவுக்கு வரும்.

அதுபோல, அரசியல் கோயில் மாடுகள் செப்டம்பர் மாதத்தில் ஒர கட்சியில் இருக்கும். அக்டோபர் மாதத்தில் இன்னொரு கட்சிகக்குப் போகும். இந்த இரண்டு கட்சிகளிலும் லாபம் கிடைக்காவிட்டால் நவம்பர் மாதத்தில் தானே ஒரு கட்சி ஆரம்பிக்கும்.

யாருக்கு ஓட்டு?

நல்வாழ்வு வேண்டுமா- தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள். உங்கள் வரிப்பணம் பாழாக வேண்டுமா – காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள். உங்கள் சித்தம் எங்கள் பாக்கியம். மாவுக்கு ஏற்ற பணியாராம் என்பது போல, எங்களை அனுப்புகின்ற அளவுக்குப் பணி செய்வோம்.

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றுகூறுவேன் – தயவு செய்து யாரும் வதந்திகளை நம்பாதீர்கள். அருள்கூர்ந்து வீண் புரளிகளை நம்பாதீர்கள்.

இந்தக் கூட்டத்திற்கு வருவதற்குமுன், என் மேஜைமீது மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அதில் இராஜாஜி – அண்ணாதுரை – முத்துராமலிங்கதேவர் சந்திப்பு என்று போடப்பட்டிருந்தது. நான் திடுக்கிட்டுப் போனேன். எங்கே அவர்களை நாம் சந்தித்தோம் என்று போடப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். ஆனால், சந்திக்கப் போவதாக மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி நாங்கள் சந்திக்கப் போவதாக இதுவரையில் ஒன்றும் இல்லை.

இப்படி இல்லாத ஒன்றை இருப்பதாகச் செய்திகளைப் பத்திரிகைக் காரர்கள் இன்றைய தினம் போட்டு, வீண் புரளிகளைக் கிளப்பிவிடுகிறார்கள். தேர்தல் காலம் அல்லவா? அப்படித்தான் செய்வார்கள். தினசரி வருகிற பத்திரிகைச் செய்திகளை, விரும்பு வேண்டிக் கேட்டு்க் கொள்கிறேன். உண்மையான அதிகாரப்பூர்வமாக எட்டுகின்ற செய்திகளை மட்டும் நீங்கள் நம்புங்கள்.

ஒருவரை, உனக்கு எத்தனைக் குழந்தைகள்? என்று கேட்டால், இரு – மனைவியைக் கேட்டுவிட்டு வந்த சொல்கிறேன் என்றால் எப்படி பைத்தியக்காரத்தனமோ அதைப்போல்தான் இந்தப் பத்திரிகைப் புரளியைப் பார்த்துவிட்டுப் பேசுவதும் சொல்வதுமாகும்.

கொள்கையை என்றும் கைவிடமாட்டோம்.

கொள்கையை விட்டு நாம் எப்பொழுதும் இறங்கிவிட மாட்டோம். தேர்தலுக்காக ஒத்துப்போவது அல்ல நம் கொள்கை. ஒதுங்கிப் போவதுதான். அவர்கள் கொள்கையை மற்ற எதிர்க்கட்சிகிள் ஏற்கவேண்டியதில்லை. அவர்கள் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இல்லை. நானும் அவரும் பார்த்துக் கொள்கிறோம். நீ ஒதுங்கிக் கொள் என்பது போனற் நிலைமை அது.

குத்துச் சண்டை நடக்கும்பொழுது கோதாவில் இரண்ட பயில்வான்கள் இருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் இன்னும் எத்தனையோ பயில்வான்களும் இருப்பார்கள். இவர்கள் ஒருவரையொருவர் குத்திக்கொள்ளும்போது, அவர்கள் இவன் குத்தியது தப்பு, அவன் அங்கே குத்தியிருந்தால் பரவாயில்லை என்று பேசிக் கொண்டிருப்பார்கள். குத்துச் சண்டை தெரிந்திருக்கும் இவர்கள் ஒதுங்கிக் கொண்டுதான் பார்க்கிறார்கள்.

இரண்டு பயில்வான்கள் சண்டைபோடும்போது, வேறு இரண்டு பயில்வான்கள் ரெப்ரியாக இருப்பார்கள். சண்டை தறவாகப் போட்டால், திருத்தியும் முடிந்தால் இரண்டு குத்து குத்தியும், எலுமிச்சம் பழமும் கொடுப்பார்கள்.

போட்டியைத் தவிர்ப்பதற்கத்தான்!

அதைப்போல், இருகட்சிகள் தேர்தல் களத்தில் குதிக்கும்போது, மற்ற எதிர்க்கட்சிகள் ரெப்ரியாக இருக்க வேண்டும். இதுதான் ஒதுங்கிப் போகும் கொள்கை.

நிதியமைச்சர் சுப்பிரமணியம் எழுந்து நின்று வெடுக்கென்று ஒரு கேள்வி கேட்டார். ‘திராவிட நாடு அடிப்படையில் தேர்தலில் நி்ல்லுங்கள் என் றுசொல்லியிருந்தால், வீட்டுக்குப் போகின்ற நிதியமைச்சர் சந்தோஷமாக இருக்கின்றதைப் பார்த்த அவர்க மனைவி, சட்டசபை நடக்கும்போது கூட சந்தோஷமாக இருக்கிறீர்களே?‘ என்று காப்பியை ஆற்றிக் கொண்டே கொடுக்க தெரியுமா ஒரு சேதி? இன்று சட்டசபையில் கொஞ்சம் குத்தி, இநத் அண்ணாதுரையை ஒரு மடக்கு மடக்கிவிட்டேன். அவரும் கோபத்தில் கூட்ட சேருவதில்லை என உறுதி கூறிவிட்டார். இனி காங்கிரசுக்கு தலைவலி இல்லை – எனக்கும் ஆபத்தில்லை என்றுதான் சொல்லக்கூடம்.

அமைச்சர் சொன்னதற்கு நான் சிரித்தேன். நம் தோழர்களுக்கோ என்மீது ஆத்திரம் நான் மட்டும் கோபப்படாமல், ஆத்திரப்படாமல் உணர்ச்சிவயப்படாமல் இருந்தேன்.

நிதியமைச்சருக்குச் சொல்லிக் கொள்வேன் நேரு பண்டிதர் அவர்கள், இந்தத் தேர்தல் முடிவு திராவிட நாட்டுப் பிரிவினைக்கு வழிகோலும் என்று அறிக்கை விடட்டுமே. தேர்தல் அல்ல – நாட்டு மக்களின் வாக்கெடுப்பு நடத்தட்டுமே. இதை விட்டுவிட்டு, நான் பொதுவாழ்வை விட்டு விடவேண்டும் என்று சுப்பிரமணியம் சொல்கிறார். என்னுடைய பொதுவாழ்வில் அவருடைய பொதுவாழ்வுக்கு ஆபத்து என்று கிலி கொள்கிறார்கள் போலும்.

திசை திருப்பிவிட நினைக்கிறாரா?

ஒரு தெருரவில் நல்ல சங்கீத வித்வான் இருந்தால் அவருக்கு எதிர்வீட்டில் இருக்கும் அபசுர சங்கீத வித்வான், அவரைப் பக்கத்துத் தெருவுக்குக் குடிபோகுமாறு சொல்வான். அந்த நல்ல சங்கீத வித்வான் இருந்தால் இவன் பிழைப்புக்கு ஆபத்து.

அதுபோல், என்னுடைய பொதுவாழ்க்கைக்கும் ஆபத்து என்று கருதி, திசை திருப்பிவிட நினைக்கிறார்.

இந்தத் தேர்தலில் திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவு எவ்வளவு என்று நாங்கள் கணக்கெடுப்போம். இன்னும் ஐந்தாண்டுகளில் உலகம் எங்கள் வளர்ச்சியை உணரும்.

காங்கிரசு ஆட்சி திருப்தி தந்தது என்றால் தாய்மார்களே, அவர்களுக்கே ஓட்டுப்போடுங்கள். அவர்கள் ஆட்சியில் எதிர்பார்த்தது கிடைத்தது என்றால் காங்கிரசிற்கே ஓட்டுப் போடுங்கள் நான் தடுக்கவில்லை.

உண்மையை உணருவீர்! உறுதி கொள்வீர்!

காங்கிரசு ஆட்சியில் கேடுபாடுகள் அதிகம் என்ற நாங்கள் கொடுத்த விளக்கம் சரியனெப்பட்டால் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள்.

சத்தியவாணிமுத்துவுக்கு ஓட்டுப்போட்டால்தான் புண்ணியம் வரும். இல்லையேல் பாவம் வரும் என்று நான் மிரட்டவில்லை. தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடாவிட்டால் உங்கள் குழந்தைக்குட்டிகளுக்கு நோய் வரும் என்று சபிக்கவில்லை நான்.

ஆனால், மந்திரிகள் வந்தாலும் சரி, அவர்களுக்குத் தெரிந்த இராஜதந்திரிகள் வந்தாலும் சரி, உங்கள் கட்சி எங்களுக்கு என்ன நன்மை செய்தது? என்று மட்டும் கேளுங்கள்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டைவிட்டு நீங்கினான். நீங்கினான் என்று சொன்னால் காங்கிரசுக்காரர்களுக்குக் கோபம் வரும். நாங்களல்லவா ஓட்டினோம்? என்பார்கள் ஓட்டினீர்கள் நீங்கள். ஓடினார்கள் அவர்கள். அவர்கள் ஓடும்பொழுது சும்மா ஓடவில்லை. பலகோடி ரூபாய் ஐவேஜி வைத்துதவிட்டுத்தான் சென்றார்கள். இதை அமைச்சர் சொன்னார் – சர்க்கார் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இப்போது அந்த ஐவேஜி கரைந்து தேய்ந்துபோய் பலகோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு அந்தக் கடனுக்குத் தரவேண்டிய வட்டியும் கோடிக்கணக்கில் இருக்கிறது.

கடன்காரன் போல் பேசுகிறார்

திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்குக் கடன் வாங்கலாமா என்று நாங்கள் கேட்டால், கடன் கொடுத்தவனுக்கு இல்லாத அக்கறை இந்த அண்ணாத்துரைக்கு எதற்கு? என்று காமராசர் சொல்வார். சத்தியவாணிமுத்துக்கு கடன் பட்டுவிட்டால், அந்தக் கடனை அவருடைய பிள்ளை தீர்க்கக் கூடும். காமராசரோ – கால்வழி இல்லாதவர். எனவேததான், ஆமாம். வாங்கினேன். இப்போது என்னிடம் இல்லை. என்ன செய்யப் போகிறாய்? என்று கடன்காரன் கடன் கொடுத்தவனிடம் பேசுவதைப் போலப் பேசுவார்.

கடன் வாங்கிய கனவான் இறந்து, பணிம் வீட்டின் கூடத்திலே இருக்கும்பொழுது பணம் கடன் கொடுத்தவர்கள், திண்ணைமேல் வந்து உட்கார்ந்து கொண்டு, பாவம், செத்தானே என்று சொல்லாமல் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டானே என்றுதான் சொல்வார்கள். உள்ளே பிணம் இருக்கும். வெளியே அவர்கள், வீடு உனக்கு, கார் எனக்கு தோட்டம் அவருக்கு, கழனி இவருக்கு என்று பங்கு போட்டுக் கொண்டிருப்பார்கள்.

அதைப்போல, ஒருநாள் வெளிநாட்டுக்காரன் நம் நாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு சிந்திரியை நீ வைத்துக் கொள். சித்தரஞ்சனை நீ பார்த்துக் கொள். துர்க்காபூர் உருக்கு ஆலை எனக்கு, பிலாய் தொழிற்சாலை அவருக்கு என்று பங்கு போட்டுக்கொள்வர்களே தவிர, பணத்தை இந்தச் சர்க்கார் திருப்பித் தராவிட்டால் சும்மாவா விட்டுவிடப் போகிறார்கள்? இப்படி, கடன் வாங்கிய கட்சிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்றால், தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடுங்கள்.

எங்கே போயிற்று பணமெல்லாம்

ரூ.88 கோடியை மாநில அரசுக்கு வரி தந்த பிறகும், ரூ.1000 கோடியை டெல்லி அரசுக்கு வரி கொடுத்த பிறகும், ரூ.1179 கோடியை வெள்ளையன் வைத்துவிட்டுப் போன பிறகம் ரூ.4971 கோடி கடன் வாங்கிய பிறகும் நாட்டு மகக்ளின் அன்றாட வருமானம் என்ன தெரியுமா? நாள் ஒன்றுக்கு 5 அணா கூலி பெறுபவர்கள் 600 லட்சம் பேர். நாள் ஒன்றுக்கு 4 அணா கூலி பெறுபவர்கள் 200 லட்சம் பேர். அப்படியென்றால் இந்தப் பணம் எங்கே போயிற்று? பெரும பணம் முதலலைகளுக்குத்தான் போயிருக்கிறது.

உதாரணமாகக் கோயம்புத்தூர் மில்களுக்கு மட்டும் 1960 – 61இல் கிடைத்த லாபம் இதோ

ஆலைகள்
ரூபாய்
இலட்சுமி 71,93,831
வெங்கடேசா 24,75,837
பழனி ஆண்டவர் 16,89,227
தனலட்சுமி 15,73,659
கோவை காட்டன் 15,34,827
இராசலட்சுமி 13,61,765
ககரி 10,42,012
இராமகிருஷ்ணா 9,82,482
வசநதா 7,48,243
குமரன் 7,43,340
சக்தி 6,55,713
பங்கஜா 6,54,450
கோத்தாரி 5,75,701
முருகன் 5,16,643
வஜியேசுவரி டெக்ஸ் 4,67,016
விஜயலட்சுமி 4,57,325
பாலசுப்பிரமணியா 4,37,254
திருமூர்த்தி 4,08,808
லோட்டஸ் 2,96,630
ரங்கவிலாஸ் 2,84,179
ராம்நாராயணா 2,39,067
கருணாம்பிகா 1,16,247
எஸ்.ஆர்.சி. 83,355
பிரகாசா 48,892
ஆர்.கே. 40,704

வசந்தாவும். இராசலட்சுமியும். இலட்சுமியும் காங்கிரசை ஆதரிப்பதிலே அர்த்தம் இருக்கிறது. இங்கே இருக்கிற சாத்தாவும் தலலெட்சுமியும் காங்கிரசை ஏன் ஆதரிக்க வேண்டும்? இது நம்மை வாழ வைக்கிற ஆட்சி இல்லை. தலை ஊறும் பொழுது கொள்ளிக் கட்டை எடுத்தா சொரிந்து கொள்வோம்?

ஆகவே, இவைகளையெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்த்து இந்தப் பகுதியிலே உங்களது நல்ல ஆதரவினைத் தி.மு.க. விற்குத் தருமாறு உங்களை விரும்பிக் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

(நம்நாடு - 23.11.61)