அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நல்லதொரு பணியில் ஈடுபடுவீர்!

செம்பாக்கம் வட்டத்தில் அண்ணா நல்லுரை

செம்பாக்கம் தி.மு.க. சார்பில் 14-5-60 மாலை 6 மணிக்குத் தோழர் து. சுந்தரம் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. அண்ணா அவர்கள் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டாதவது.

இவ்வூரில் தி.மு.க. கிளையைத் துவக்கி, இரண்டாவது முறையாக என்னை வரவழைத்துப் பேசுமாறு செய்த பேரார்வம் கொண்ட கழகத் தோழர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எனக்கு முன் பேசிய தோழர் காங்கிரசுக்காரர்கள் திட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டார். நான் நமது தோழர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். காங்கிரசுக்காரர்கள் திட்டுவது நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் திட்டும் இடத்துக்குப் போகாமல் இருந்து விடுவது ஒன்று. அப்படிப் போனாலும் அவர்கள் திட்டும் போது உங்கள் காதுகளை மூடிக்கொள்வது இரண்டாவது. அப்படிச் செய்தால் நமக்குக் கோபம் வராது.

அப்படிப்பட்டவர்களுக்கு இங்கு வேலை கிடையாது!

நான் பெரியார் அவர்களுடன் கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்தபோது, ஒரு காங்கிரசுக்காரர், கேள்விச் சீட்டு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அவர் “எல்லாம் பொதுவுடைமை என்று சொல்லுகிறீர்களே, உங்கள் அருகாமையில் உட்கார்ந்திருக்கும் நாகம்மையாரும் பொதுவுடைமை தானே? என்று எழுதியிருந்தார். அதற்குப் பெரியார் அவர்கள் இந்தச் சீட்டைக் கொண்டு வந்து கொடுத்திருக்கும் காங்கிரசுக்காரருக்குத் தைரியம் இருந்தால், இங்கு வந்து நாகம்மையாரைக் கேட்கட்டும். அவள் கொடுத்தால் வாங்கிக் கொள்ளட்டும். இதை என்னை வந்து கேட்கிறானே மடையன்? என்று சொன்னார். அதை விடவா நம்மைக் காங்கிரசுக்காரர்கள் திட்டுகிறார்கள். எவ்வளவு திட்டினாலும் தி.மு.கழகத் தோழர்களுக்குக் கோபம் வரக்கூடாது. அப்படிப் கோபம் வருவதாயிருந்தால் அப்பேர்பட்ட தோழர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேலை கிடையாது.

கழகத்தில் நம் வீட்டுப்பிள்ளைகள் போய்ச் சேருகிறார்களே என்று பெரியோர் ஆத்திரப்படக்கூடும். நான் கழகத்தில் ஈடுபட்டு என்ன கெட்டுப் போய்விட்டேன். கழகத்தில் சேர்ந்தால் வாலிபர்கள் துடுக்குத்தனம் குறைந்து நாட்டுக்கு நல்ல சேவைகள் செய்வார்கள்.

துணையிருந்தால் நம்புங்கள் – இன்றேல் விடுங்கள்!

கழகத்திலுள்ளவர்கள் கடவுள் இல்லை என்பவர்கள் என எங்களைப் பற்றிப் பெரியவர்கள் கருதக்கூடும். இந்த ஊரில் எத்தனைக் கோவில்கள் இருக்கின்றனவோ எனக்குத் தெரியாது. நான் வாழும் காஞ்சிபுரத்தில் 108 சிவன் கோயில்கள் இருக்கின்றன. நானும் அந்த ஊரில் பிறந்தவன்தான். ஒரு பக்தன் 500 ரூபாய் வைத்து இருக்கிறான், என்வீட்டில் திருடன் வந்த களவாடமல் இருக்க எனக்குத் துணை செய்ய வேண்டும். அதற்காக இதோ ஒரு பலம் கற்பூரம்“ என்று ஏற்றிவிட்டுப் போகிறான். அதே நேரத்தில் இன்னொரு பக்தன் “சாமி உன்னிடம் முன்பு வந்துபோனானே ஒரு பக்தன் அவனிடம் 500 ரூபாய் இருக்கிறது. அதை நான் இன்று இரவு களவாடப் போகிறேன். எனக்குத் துணையாக இருக்கவேண்டும். இதோ 2 பலம் கற்பரம்“ என ஏற்றுகிறான்.

பாடுபட்டுச் சம்பாதித்த பணத்துக்குத் துணையிருந்தால் அந்தக் கடவுளை நம்புங்கள். பாடுபடாத ஒருவன் களவாடத் துணையிருக்கும் கடவுளாக இருந்தால் அப்பேர்பட்ட கடவுளை வெறுத்துத் தள்ளுங்கள் என்றுதான் நானும் நான் சேர்ந்திருக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் சொல்லி வருகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் அகப்பை

இன்று இருக்கும் சாதத்தை எடுத்துப் பதம் பார்க்க நாட்டு மக்களக்கு கொடுக்கும் அகப்பையாக இருந்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம். ஆதலால் கழகத் தோழர்கள் நாட்டின் நலிவுகளைப் போக்க நல்லதொரு பணியில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழர்கள் காஞ்சி பூஞ்சோலை, சி.வி.இராசகோபால், ஜே.ஏ. வகாப் ஆகியோரும் பேசினர்.

தலைவர் முடிவுரைக்குப் பின் நன்றி கூறலுடன் கூட்டம் முடிவுற்றது.

(நம்நாடு - 9-6-60)