28.2.60 மாலை, சென்னை-தேனாம்பேட்டை
காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் திருவுருவப்
படத்தை வெளியிட்டு ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:-
நாமெல்லாம் இன்று மகிழ்ச்சியும், பெருமையும் புதியதொரு
நம்பிக்கையும் அளிக்கின்ற ஒரு விழாவில் கலந்து கொண்டிருக்கிறோம்.
இப்படி ஒரு பெருநாள் வருமென்று நாமெல்லாம் பல ஆண்டுகளாக
எண்ணிக் கொண்டிருந்தாலும், தமிழர் எண்ணம் பாழ்பட்டுக்கொண்டே
வருகிற இந்த நாளில், இப்படி ஒருநாள் அமையுமென்று பலர் உறுதியாக
எண்ண முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் நம்முடைய உழைப்பும்,
நெடுநாளைய முயற்சியும், பலன்தரும் வகையில் இன்றைய திருநாள்
நமக்கு அமைந்து இருக்கிறது. இந்தத்திருநாள் நடக்கின்ற விதத்தினை
எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழ்க்கொடியின் கீழ் இணைய...
ஓர் உண்மை பலருக்குத் தெரியாது. அந்தச் செய்தியை இந்த நேரத்தில்
சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒருநாள்
நானும், திரு.குன்றக்குடி அடிகளாரும் தொலைபேசி வழியாகப்
பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அப்பொழுது இரவு சுமார் பதினொரு
மணி இருக்கும். அவர் குன்றக்குடியிலும் நான் சென்னையிலுமாக
இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அடிகளார் அவர்கள்
என்னிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். தமிழகத்தில்
உள்ளவர்களிடத்தில் கருத்து வேற்றுமை மலை போல் இருந்தாலும்
ஆண்டுக்கொரு முறை தமிழ் மொழியின் பேரால் எல்லாக் கருத்து
வேறுபாடு கொண்ட தலைவர்களும் தமிழர் என்ற உணர்ச்சியிலே தமிழ்க்
கொடியின் கீழ்க் கூடிக்கட்டாயம் பேச வேண்டும். இது என்
விருப்பம். இதனை நடத்தித் தரவேண்டும் என்று அடிகளார் அன்றைய
தினம் கேட்டுக் கொண்டார்கள். அது இன்றைய தினம் சீராக அமைந்திருக்கிறது.
அடிகளார் இப்பொழுது மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
இங்கே ஒரே வகை நோக்குடையவர்கள் இல்லை. ஆனால் எல்லாவகை நோக்குடையவர்களும்
இன்றைய திருநாளில் கலந்து கொண்டிருக்கின“றனர்.
இது போன்ற திருநாள் ஆண்டுக்கு ஒருநாள் கொண்டாடப்பட வேண்டும்.
இதற்காகத் துரைத்தனத்தாரும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து விடுமுறை
என்று அறிவித்து ஊர்தோறும் ஒரே கொடியின் கீழ் நின்று விழாக்
கொண்டாடி அந்த விழாச் சிறப்பினை உலகத்திற்கு அறிவிக்க வேண்டும்
என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.
உலகமெல்லாம் பெறவேண்டும்
தமிழ்ப் பெருங்குடி மக்களும், அரசியல் கட்சிசார்புடைய வர்களும்
கிளர்ச்சி நடத்தித் தீர்மானங்களை நிறைவேற்றி வலியுறுத்தி
வந்ததன் பயனாக நமக்கு ஓர் உருவம் இன்றைய தினம் கிடைத்திருக்கிறது.
அமைச்சராக டாக்டர் சுப்பராயன் அவர்கள் வருவார்களா என்று
ஐயப்பாடு பலபேருக்கு இருந்து வந்தது. அந்த ஐயப்பாடு நீக்கப்பட்டு
அவரும் இப்பொழுது அமைச்சராயிருக்கிறார். நம்முடைய துரைத்தனத்தாரும்
அதே நேரத்தில் நண்பர் வேணுகோபால் (சர்மா) அவர்கள் பல ஆண்டுகளாக
எண்ணிப் பார்த்துத் திருவள்ளுவர் உருவத்தைச் சமைத்துத் தயாராக
வைத்திருந்தார்கள். இதனால் அரிய உருவமும் நல்ல நிலையையும்
நமக்கு ஏற்பட்டன. இந்தப் பெரு மகிழ்ச்சியை உருவாக்கித் தந்த
நண்பரைப் பாராட்டுவதோடு, இந்த மகிழ்ச்சி உலக மெல்லாம் பெறவேண்டும்
என்று நான் ஆசைப்படுகிறேன்.
திருக்குறள் தமிழகத்துக்குச் சிறப்பொளி தந்துவந்த நந்தா
விளக்கு. அதனை இன்று தமிழர் கண்டெடு“த்துத் தம் உள்ளத்திற்கு
ஒளி தேடிக் கொள்ளுகின்றனர் உவகையுடன், பெருமிதத்துடன்.
அடிகளார் அவர்கள் பேசுகையில் உருவ வழிபாட்டை ஒத்துக் கொள்ளாத
அண்ணாத்துரையும் இதில் கலந்து கொள்கிறார் என்று குறிப்பிட்டார்கள்.
அடிகளால் முயற்சி வெல்லவேண்டும்
நான் அவருக்குத் தெரிவித்துக் கொள்ளுவேன் ஆண்டவனை மட்டுமல்ல,
நான் உங்களையே ஒத்துக்கொள்கிறேன் வரவேற்கிறேன். நல்லது
செய்பவர்களை நான் மனதாரப் பாராட்டி வரவேற்பேன். அந“த முறையில்
அடிகளார் அவர்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நான்
விரும்புகிறேன்.
உருவங்களைக் காணுவதில் மனிதக் குலத்துக்குத் தனியாத வேட்கை
உண்டு. ஆனால் இன்றைய தினம் திரு.வேணுகோபால் அவர்கள் நமக்கு
அளித்திருக்கின்ற திருவள்ளுவர் திருவுருவப்படத்தை நாங்களெல்லாம்
இல்லந்தோறும் வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல திருக்குறளில்
உள்ள கருத்துகளை ஆய்ந்து அறிதல் வேண்டும். திருக்குறள் எல்லாருக்கும்
பயன்படுமாறு செய்யவும் அதற்கான பேருணர்ச்சியைப் பெறவும்
தான் இன்றைய தினம் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
ஓவியத்தைப் பற்றி நண்பர்களெல்லாம் சொன்னார்கள். நண்பர்
வேணுகோபால் அவர்களும் இதற்காகப் பல ஆண்டுகள் சிந்தித்து
இந்த உருவத்தை அழகாக அமைத்துத் தந்திருக்கிறார்.
சிந்தனையாளர் வள்ளுவர்
நான் ஓவியரின் வீட்டுக்குச் சென்று உருவத்தைப் பார்க்கின்ற
நேரத்தில் கால் விரல் இரண்டும் ஒட்டிய வண்ணமிருக்கிறதே ஏன்?
ஒரு விரலுக்கு இடையில இடைவெளி இல்லையே ஏன்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “வள்ளுவர் ஒரு குறளை எழுதி முடித்துவிட்டு
அடுத்த குறளை எழுதுவதற்காகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் அவயங்கள் ஒன்றோடுடொன்று உராய்ந்த வண்ணமிருக்கின்றன
என்று குறிப்பிட்டார்.
சிந்தனையில் ஈடுபட்டிருப்பவர்கள், இப்படித்தான் இருப்பார்கள்
என்பதை இப்படத்தின் வழியாக நாம் அறிய முடிகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற பெருநெறி பெற்றிருந்தும்
என்ன காரணம் பற்றித் தமிழர் இன்று சாதிச் சேற்றிலே உழலலாயினர்?
“நீட்டலும் மழித்தலும் வேண்டாம்” என்ற கொள்கையினைக் கொண்டிருந்த
தமிழர், “இல்லறம் அல்லது நல்லறமன்று” என்று வாழ்ந்த தமிழர்
பிற்காலத்தில் ஏன் பல தொல்லைகளை ஏற்க வேண்டி வந்தது?
தமிழர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்ற அரிய கருத்துகளைத்
தந்து சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருந்தவர் திருவள்ளுவராவார்.
நாம் திருவள்ளுவரை மனதிலே வைத்து அவர் வழி நடத்தல் வேண்டும்.
வள்ளுவரின் குறள்நெறி
வள்ளுவர் குறளில் மூன்று விதமான கருத்துகளை வலியுறுத்துகிறார்.
ஒன்று-சில கருத்துகளை அவர் அறுதியிட்டு முடிவாகச் சொல்கிறார்.
“கற்க கசடற கற்பவை”, கற்றபின் நிற்க அதற்குதக என்பது. இரண்டாவதாக
நம்மை பார்த்துக் கேட்டுக் கொள்வது போலவும், வேண்டுகோள்
விடுவது போலவும் அமைந்துள்ள சில குறள்கள் உண்டு. அதற்கு
எடுத்துக்காட்டாக “கற்றதனால் ஆய பயன் என்கொல், வாலறிவன்
நற்றாள் தோழ அர் எனின்” என்ற குறளைக் குறிப்பிடலாம். மூன்றாவதாக
இதைச் செய்தால் இப்படி மதிக்கப்படுவாய் என்று சொல்வது போல்
அமைந்துள்ள குறள்கள் சில உண்டு. அதற்கு எடுத்துக்காட்டு
“தெய்வம் தொழாள் கொழுநன் தொழு தொழுவாள், பெய்யெனப் பெய்யும்
மழை” என்ற குறளைக் குறிப்பிடலாம்.
வள்ளுவருடைய குறள் நெறிக்கு ஒப்ப மேல் நாட்டினர் முன்னேறி
வருகிறார்கள். “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறள்தான் விஞ்ஞானத்திற்கு
இன்று அடிப்படையாக இருக்கிறது. எனவே நாம் பல நூல்களையும்
வைத்துக்கொண்டு குழப்பமான நிலையடையாமல் அதுவும் இருக்கட்டும்
இதுவும் இருக்கட்டும் என்று சொல்லிக்கொண“டு இருக்கலாம்,
முடிவாக நாம் திருக்குறளை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
வள்ளுவருக்குச் செய்யும் கைமாறு
இந்த ஓவியத்தைக் காணும் பிறநாட்டார் தமிழரின் தனிச்சிறப்பினை
எண்ணத் தலைப்படுவர். இதன் மூலம் எல்லார்க்கும் எல்லாம் உளது
என்று கூறத்தக்க விதத்தில் அமைந்துள்ள அறநூல் தந்த திருவள்ளுவரை
நாம் உலகுக்குக் காட்ட முடியும். ஆகவே, நாம் வள்ளுவருக்குச்
செய்யும் கைம்மாறு திருக்குறள் உலகெலாம் பரப்புவதற்கு முயற்சிக்க
வேண்டும்.
மேலும் இப்பொழுது நாம் பலவிதமான நூல்களை வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இது எப்படி இருக்கிற தென்றால் குடுகுடுப்பைக்காரன் சட்டை
மாதிரி இருக்கிறது. அவன் சட்டையைப் பார்த்தால் உங்களுக்குத்
தெரியும். ஒரு பக்கத்தில் பட்டு இருக்கும், இன்னொரு பக்கத்தில்
வெல்வெட்டிருக்கும், ஆனால் அவையெல்லாம் கிழிந்திருக்கும்.
அதைப்போல நாம் பல கருத்துகளை வைத்திருக்கிறோம் அதை நீக்கி
ஒரு சிறப்பான கருத்தின்கீழ் நாம் ஒன்றுபட வேண்டும். நாம்
எப்படி இருந்தோம் என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வறியவர்போல் கேட்கும் வள்ளுவர்
சில நாட்களுக்கு முன்பு என்னை ஒரு பெரியவர் பார்க்க வந்திருந்தார்.
அவரிடம் நான் என்ன வேண்டும். என்ன காரியமாக வந்துள்ளீர்கள்
என்று கேட்டேன். அவர் தன் கையில் வைத்திருந்த ஒரு படத்தை
என்னிடம் காட்டினார்கள். நானும், பெரியார் அவர்களும், மற்றும்
கழக நண்பர்களும் அந்தப் பெரியவருடன் இருந்து ஒரு காலத்தில்
படம் எடுத்துக் கொண்டது காணப்பட்டது. அத்துணைச் செல்வாக்குப்
பெற்றிருந்த அவர் இன்று வறியவர் கோலத்தில் இருப்பதை என்னால்
உணர முடியாது. அதைப் போலத்தான் இப்பொழுது நம்மைப் பார்த்துக்
கேட்கிறார். இந்தப் படத்தில் இருக்கும் திருவள்ளுவர்.
இப்பொழுது கடவுள் இல்லை என்று நாம் சொல்வதாகச் சிலர் நினைக்கிறார்கள்.
இடைக்காலத்தில் ஏற்பட்ட கற்பனை மிகுதியால் உண்மை மறைக்கப்பட்டுவிட்டது.
திருவள்ளுவர் கற்பனையைக் கலக்காமல் மிகவும் சிக்கனமாகச்
சொற்களைக் கையாண்டு, உண்மையை எடுத்துச் சொல்லி நமக்கு
வழிகாட்டியவர்.
மக்களின் பண்பைக் கெடுக்க யாரும் இயக்கம் நடத்த மாட்டார்கள்.
ஓயாமல் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒழுக்கத்தைக் கெடுக்க
ஓர் இயக்கமா ஆரம்பிக்க வேண்டும்?
திருக்குறள் நல்ல துணையாகும்
பல ஆண்டுகள்கடும் தவம் புரிந்த விசுவாமித்திரர் முன், ஒரே
ஒரு மேனகைதான் தோன்றினாளாம். உடனே விசுவாமித்திரரின் தவம்
களைந்து, அவளைக் கூடிக் குழந்தை பிறந்ததாகக் கதை இருக்கிறது.
இதுபோன்ற தப்பான எண்ணம் இப்பொழுது குறைந்து வருகிறது.
நாம் நல்ல அரசியலை உருவாக்கவும், பண்பினை வளர்க்கவும் நல்ல
முறையில் முன்னேறவும் திருக்குறள் நமக்குத் துணையாகும் என்பதனை
நீங்கள் அறிதல் வேண்டும்.
இத்திருவுருவப் படத்தை இல்லத்தில் வைப்பதென்றால் வழிபாட்டுக்காக
வைக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவர் காட்டிய அரிய
கருத்துக்களை நாம் உணர்ந்து வாழ்க்கையில் செம்மையுற வேண்டுமென்று
கேட்டுக் கொள்கிறேன்.
(நம்நாடு - 1.3.60)
|