அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நமது முழக்கம்

திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆண்டு தோறும் கொண்டாடி வரும் மே தினத்தைக் கொண்டாடவே இங்கே நாம் கூடியிருக்கிறோம். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் திருவல்லிக்கேணி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு என் நன்றி!

சென்னையில் வேறு சிலர்!

இங்கு நாம் மே தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் சென்னையில் பலர் பற்பல இடங்களில் மே தினக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பார்கள். இதே நேரத்தில் நண்பர் ஜீவானந்தம், காரன்ஸ்ஸ்மித் நகர் மைதானத்தில் பொருளாதாரத்திற்கும் பொதுவுடைமைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கக் கூடும். ஹைக்கோர்ட் கடற்கரையில், இந்த நேரத்தில் சில நண்பர்கள் சமதர்மத்தையும், சமுதாயத்தையும் பற்றி பேசிக்கொண்டிருக்கக் கூடும். இன்னும் வேறு சிலர் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடும்.
மக்களிடம் பேசுகிறோம்

உலகத்திலேயே இரண்டாவது அழகிய கடற்கரை என்று கூறப்படும் இந்த அழகான கடற்கரையிலே, அற்புதமான காற்றை அனுபவித்துக் கொண்டு, நல்ல பாடல்களைக் கேட்டுக் கொண“டு, குடும்பத்துடன் குதூகலமாக, நண்பர்களுடன் உலாவிக் கொண்டு இருக்க வேண்டியவர்களாகிய நாம் (சிலர் அப்படித்தான் இருப்பார்கள் இப்போது) தொழிலாளர்களின் துயர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பொதுவுடைமைக்கும் நமக்கும் உள்ள பொருத்தங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். யார் சக்தி வாய்ந்தவர்களோ யாரால் அரசுகளை ஏற்படுத்த முடியுமோ, யாரால் அரசுகளை கவிழ்க்க முடியுமோ, அவர்களிடம், மக்களிடம் பேசுகிறோம்.

வித்தியாசம் உண்டு
பற்பல நாடுகளில் மே விழா கொண்டாடுகிறார்கள். இங்கு நாமும் மே தினத்தைக் கொண்டாடுகிறோம். ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று எனக்கு முன் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அது உண்மையே, மற்ற கட்சியினருக்கும், நமக்கும் கூட வித்தியாசம் இருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகள் நாட்டிலே செய்வதை, பேசுவதை நாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். அவர்கள் கூறுவதை மக்களிடம் விளக்கிக் கூறுகிறோம்.

இன்று மேதினியெங்கும் மே தினம் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தொழிற்சங்கங்கள் இந்த நாட்டில் மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நூற்றுக்கு நாற்பது பேர்
ஒரு நாட்டில் உள்ள தொழிலாளரின் ஜனத்தொகையில் பெரும்பான்மையோர் தொழிற்சங்கம் முதலியவற்றில் சேர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த நாட்டுத் தொழிலாளரின் ஜனத்தொகையில் நூற்றுக்கு நாற்பது பேர்தான். ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையோ, தொழிற்சங்கத்தையோ சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மற்றத் தொழிலாளர்கள் குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலையோ, அல்லது ஒரு தொழிற்சங்கத்தையோ சாராதவர்கள்.

அவர்களில் பலர் வயிற்றைக் கழுவ வண்டியிழுப்பவர்கள். அவர்களில் பலர் முதுகெலும்பு முறிய மூட்டைச் சுமப்பவர்கள். அவர்களில் பலர் காடுகளில் சென்று கட்டை வெட்டுபவர்கள். அந்தத் தொழிலாளர்களுக்கும் ஆசை மனைவியும், அன்பு மக்களும் இருக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் ஜனத்தொகையில் சேர்க்கப்படாதவர்கள். குறிப்பிட்ட தொழிற்சாலையில் வேலை செய்யாதவர்கள். அரசாங்கத்தின் தொழிற்சட்ட திட்டங்களுக்கு உட்படாத தொழிலாளர்கள்.

நாம், இணைப்புப் பாலம்
தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல பிணைப்பை. இணைப்பை நாம் ஏற்படுத்துகிறோம். தொழிலாளர்களின் நிலையை, ஆட்சியாளர்களுக்கு அறிவிப்பதோடு நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கிறோம். மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்தியில் நாங்கள் இணைப்புப் பாலமாக இருக்கிறோம்.

தொழிலாளர்களின் போராட்டங்களை மக்கள் ஆதரிக்காமல் இருக்க, அது தொழிலாளர், முதலாளி ஆகிய இவர்கள் இடையே ஏற்பட்ட போராட்டமே தவிர வேறில்லை. அது மக்கள் போராட்ட மல்ல, என்ற பிரச்சாரம் கொஞ்ச நாளைக்கு முன் நடந்தது.

நாரதர் வேலை
தொழிலாளர் சம்பளம் அதிகம் வேண்டும் என்கின்றனர். முதலாளிகள் லாபம் அதிகம் வேண்டும் என்கின்றனர். இதில் மக்கள் ஏன் அக்கரை செலுத்த வேண்டும்.
முப்பது முதலாளிகள் இருப்பார்கள். அவர்களிடம் முப்பதாயிரம் தொழிலாளர்கள் போராடுவார்கள். அதைப்பற்றி 30 கோடி மக்களுக்கு என்ன வந்தது? அவர்கள் ஏன் இதில் அக்கரை செலுத்தவேண்டும் என்று பத்திரிகைகள் எழுதின. மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பிணைப்பில்லாமல் வேரறுக்கப் பார்க்கிறது இந்த வேலை செய்யும் பத்திரிகை. வெட்கமில்லாமல், தன் வேலையை குறிக்கும் நாரதர் என்ற பெயரை வைத்திருக்கிறது.

இதைப் போன்றவைகளை ஒழித்து, மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நல்ல தொடர்பை ஏற்படுத்தவே திராவிட முன்னேற்றக் கழகம் வேலை செய்கிறது.

நமது நோக்கம்
தொழிற் சங்கங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு கிடையாது. தொழிற் சங்கங்களை யார் நடத்தினாலும் சரி காங்கிரஸ் நடத்தினாலும் சோஷியலிஸ்ட் நடத்தினாலும் தொழிலாளர்களின் குறைகளைக் கோரிக்கைகளை மக்களிடம் எடுத்து சொல்லி, தொழிலாளர்களின் துயரைத் துடைப்பதுதான் நமது நோக்கம்.
முதலாளிகள் தொழிலாளர்களை மோசம் செய்கிறார்கள். அவர்கள் குறைகளைக் கவனிப்பதில்லை. இந்த முதலாளிகள் யார்? இவர்கள் எப்படி முதலாளியானார்கள்?

முதலாளியாவது எப்படி?
முதலாளி எப்படி உற்பத்தியாகிறான்? எதனால் ஒருவன் முதலாளியாகிறான்? இதற்குச் சுருக்கமான பதில் தனிப்பட்ட மனிதன் லாபத்தால் முதலாளியாகிறான். இன்னும் கொஞ்சம் விளக்கமாக மார்க்ஸ் கூறுகிறபடி பார்த்தால் தொழிலாளிகளின் உழைப்பை முதலாளி திருடிக் கொள்கிறான். ஆகவே அவன் முதலாளியாகிறான்.

ஒருவர் ஒரு சரக்கை ஆறு ரூபாய்க்கு வாங்குகிறான். அதை எட்டு ரூபாய்க்கு விற்கிறான். ஒரு ரூபாய் நிர்வாகச் செலவு போனால் மீதமிருக்கும் ஒரு ரூபாய் அவனுக்கு லாபம்! ஒரு பொருளை விற்றால் அவனுக்கு ஒரு ரூபாய் லாபம். ஆயிரம் பொருள்களை விற்றால் ஆயிரம் ரூபாய் லாபம். ஒரு ரூபாய் ஆயிரம் ரூபாய்களாகி, ஆயிரம் லட்சமாகி, லட்சம் கோடியாகி, கோடி கணக்கிடமுடியாத தொகையாகிவிடுகிறது. முதலாளி லாபத்தால் பெருத்து பெரிய முதலாளியாகிவிடுகிறான்.

இந்தியா-வேட்டைக்காடு
டாடாவுக்கு கிழக்கு மேற்காக 1500 மைல் அகன்று, தெற்கு வடக்காக 1600 மைல் விரிந்து இருக்கும் இந்த பரந்த இந்தியா ஒரு வேட்டைக்காடு. நாராயணன் கோவிலுக்கு நாலுபுறம் வாசல் என்றபடி இந்திய துணைக்கண்டத்தின் எந்தப் பக்கத்திலும் அவன் வியாபாரம் செய்யலாம். ஜாம்ஷெட்பூரில் இரும்பு எடுக்கலாம், கல்கத்தாவில் ஆணி செய்யலாம், அதை வேறு எங்காவது கொண்டுபோய் விற்கலாம். அவனை யாரும் தடுக்க முடியாது. இந்தியா பூராவும் அவனுக்கு வேட்டைக்காடு.

முதலாளி சரக்கை உற்பத்தி செய்கிறான். ஏராளமாக அவன் உற்பத்தி செய்யும் சரக்கை விற்கவேண்டுமல்லவா? ஆகவே அவனுக்கு மார்க்கெட் தேவையாக இருக்கிறது. எவ்வளவுககெவ்வளவு அவன் வியாபாரம் செய்யும் இடம் நாடு பெரியதாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு முதலாளியின் லாபம் பெருகுகிறது பெரிய முதலாளியாகிறான். உற்பத்தியான சரக்கை விநியோகம் செய்ய பெரிய மார்க்கெட் இல்லாவிடில் பெரிய முதலாளியாக எவனும் ஆகமாட்டான். முதலாளிகள் இன்றைய உலகில் பெரிய நாடுகளில்தான் இருக்கிறார்கள். சிறிய நாடுகளில் முதலாளிள் இல்லை.

காட்டை குறைப்போம்
காடு பெரியதாக, மரங்கள் அடர்ந்ததாக இருந்தால், அங்கு புலி வாழும். புலி எதன் மீது வேண்டுமானாலும் பாயும், காட்டிலே புலி பதுங்க ஏராளமான புதர்கள் உண்டு. புலிகளை ஒழிக்கக் காட்டைக் குறைக்க வேண்டும். மரங்களை வெட்டவேண்டும். வேலி கட்டி பாதுகாக்க வேண்டும். புலி மறைந்து வாழ அங்கு இடமிருக்காது. வேண்டுமானால் நாய்கள் குரைக்கலாம். நரிகள் ஊளையிடலாம். ஓநாய்கள் உயிர்வாழலாம். ஆனால் புலி மட்டும் வெட்டப்பட்ட காட்டில் வேலி போடப்பட்ட காட்டில் நிச்சயமாக இருக்காது. அதைப் போலத்தான் சிறிய நாடுகளில் முதலாளிகள் இருக்க மாட்டார்கள்.

சிறிய நாடுகளில் முதலாளி உண்டா?
நார்வே நாட்டிலே முதலாளிகள் இருக்கிறார்களா? இல்லை. கிரீசில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்வீடனில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்விட்சர்லாந்தில் முதலாளிகளைப் பார்க்க முடியுமா? ஸ்பெயினில் முதலாளிகள் வாழ்கிறார்களா? பாரிசில் பார்க்க முடியுமா, முதலாளிகளை? அமெரிக்காவில் முதலாளி இருக்கிறான். அடுத்தபடி இந்தியாவில் வளர்கிறான், நான் குறிப்பிட்ட சிறிய நாடுகளில் முதலாளிகள் ஏன் இல்லை தெரியுமா? அந்த நாடுகள் இந்தியாவைப் போல மிகப் பெரியதல்ல. அந்த நாட்டிலிருக்கும் வியாபாரி ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடுகளுக்கு இடையேதான் வியாபாரம் செய்யவேண்டும். எனவே அவன“ பெரிய முதலாளியாவதில்லை.

ஒரே இந்தியா எப்போது?
ஆனால் இன்று இந்தியா முழுவதும் முதலாளிகளுக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு இந்தியா திறந்த மார்க்கெட்டாக எப்போது ஆனது?

வெள்ளைக்காரனின் பிக்ஸட் பைனட்டிற்குப் பிறகுதான் இந்தியா ஒன்றானது. நாட்டுக்கு நாடு இருந்த சுவர்களைச் சுக்கலாக்கிய பிறகு இந்தியா ஒன்றானது. இருந்த எல்லைக் கோடுகளையெல்லாம் அழித்துவிட்ட பிறகுதான் அது அகண்ட இந்தியாவானது. ஒவ்வொரு நாட்டு கோட்டைச் சுவர்களை இடித்து வெள்ளைக்காரன் வெற்றி பெற்ற பிறகுதான் இந்தியா ஒரே நாடாக மாறியது.

இந“தியா ஒரே நாடாக ஒரே ஆட்சியின்கீழ், ஒரே சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட பிறகுதான் இங்கு முதலாளி முதலைகள் கொழுத்தன. இந்தியா பூராவிலும் தங்கு தடையின்றி சென்று சுரண்டி பெருத்து, பெரிய முதலாளிகளாகி விட்டனர். இன்று இந்த நாட்டில் முதலாளிகள் பெருகிவிட்டனர்.

முதலாளித்வத்தை ஒழிக்க...?
முதலாளித்துவத்தை ஒழிக்க பல வழிகள் இருக்கின்றன. முக்கியமாக முதலாளித்துவத்தை ஒழிக்க மூன்று வழிகள் உள்ளன. ஏன் நான்கு வழிகள் என்று கூடச் சொல்லலாம். நான்காவது வழி சிலருக்குப் பிடிக்காமல் கூட இருக்கலாம்.

முதல் வழி
முதலாளித்துவம் ஒரு பலமான ஸ்தாபனம். அதை ஒழிக்க எல்லா நாடுகளும் விரும்புகின்றன. பல நாடுகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. முதலாளித்துவத்தை முறியடிக்க பயன்படும் சில முறைகளைத்தான், இப்போது கூறப்போகிறேன்.
முதல் வழி கையில் மெஷின்கன்னை எடுத்துக்கொண்டு போய் முதலாளிகளைச் சுட்டு விடலாம். அது சட்ட விரோத மாயிற்றே என்று எண்ணலாம். ஆம்! சட்ட விரோதந்தான். சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்களை நான் குறிப்பிடுகிறேன்.

இரண்டாவது வழி
முதலாளிகள் லாபத்தால் வளர்கிறார்கள் என்று முன்பே குறிப்பிட்டேன்! முதலாளிகளின் லாபத்தை குறைக்க வேண்டும். முதலாளிகளுக்குக் கிடைக்கும் லாபத்தை அப்படியே அரசாங்கம் உறிஞ்சிவிட வேண்டும். முதலாளிகளுக்கு ஓரளவு லாபம்தான் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
முதலாளிகளுக்குக் கிடைக்கும் லாபம் அவர்கள் மேனிமினுக்குக்கு பயன்படுத்தும் அளவு இருக்கக் கூடாது. அவர்ளது வாழ்க்கை நடத்துவதற்கு, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போதுமானதைத் தவிர, மீதிப் பணத்தை வரிபோட்டு அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

அப்படி செய்தால் முதலாளிகள் பெருகவும் மாட்டார்கள். அவர்களிடம் பொருளும் குவியாது வரி போட்டு அவர்களிடமிருந்து வாங்கும் பணத்தில் மக்களுக்கு நல்லது செய்யலாம். இதனால் முதலாளித்துவம் ஒழிந்துவிடும். ஓங்கி வளராது.

மூன்றாவது வழி
முதலாளித்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்க இன்னொன்றும் செய்யலாம். தனிப்பட்ட எவரும் எந்த தொழிற்சாலையையும் எடுத்து நடத்த அனுமதிக்கக் கூடாது. முதலாளிகளிடமிருக்கும் எல்லா ஆலைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். எல்லா தொழிற்சாலைகளையும் சர்க்கார் எடுத்து நடத்த வேண்டும். அவ்விதம் செய்தால் அதில் கிடைக்கும் லாபம் அரசாங்கத்தைச் சாரும். எந்தத் தனிப்பட்ட முதலாளியையும் சாராது. அதனால் முதலாளித்துவம் வளராது. பூண்டே இல்லாமல் ஒழிந்து விடும். அப்படித்தான் இன்றைய உலகில் பலர் செய்து வருகிறார்கள்.

நான்காவது வழி
முதலாளிகள் அதிக சரக்கைத் தயார்செய்து, அகண்ட தன் நாடு பூராவிலும் விற்று, நிறைய லாபம் சம்பாதித்துப் பெரிய முதலாளிகள் ஆகிறார்கள். இம்முறையை ஒழிக்க வேண்டும். முதலாளிகள் ஒரு குறிப்பிட்ட இடம் வரையில்தான் வியாபாரம் செய்யலாம். அதற்குமேல் செல்ல வேறு அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற முறை இருக்க வேண்டும். அதாவது மிகப் பெரிய நாடுகளை இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்துவிட வேண்டும். பரந்த பெரிய நாடுகளை சிறிய நாடுகளாக்கி விட வேண்டும்.

நாட்டுப் பிரிவினையைக் கைக்கொண்டு சிறிய நாடுகளாக்கி விட்டால் நிச்சயமாக முதலாளித்துவம் வளராது. இந்த முறை பல நாடுகளில் உள்ளன. நார்வேயும், ஸ்வீடனும் தனி நாடுகளாக இருப்பதால் தான் அங்கு முதலாளிகள் இல்லை. ஆகவே நான்காவது வழி திராவிட நாடு திராவிடருக்கே என்று நாம் கூறுகிறோம். இது சிலர் ஏற்காமலிருக்கலாம். ஆனால் இதுதான் நான்கில் ஏற்கக் கூடியது எனது உண்மை!

கூட்டு வியாபாரம்
முதலாளிகளை இந்த வழிகளில் குறைத்துவிடலாம். இதனால் முதலாளித்துவம் தேய்ந்து மறைந்து விடும். இன்று முதலாளிகள் ஒன்றாகச் சேருகிறார்கள். முதலாளிகள் ஒன்று சேர்ந்து கூட்டு வியாபாரம் நடத்துகிறார்கள். ஒரு புதிய தொழிற்சாலையை ஆரம்பிக்க இவ்வளவு பணமா தேவை! நான் 10 லட்சம் போடுகிறேன். நீ 25 லட்சம் போடு என்று கூட்டுத் தொழில் நடத்துகின்றனர். அதனால் மேலும் மேலும் பலமடைகிறார்கள். ஆகையால் அதைத் தடுக்க வேண்டும்.

முதலாளித்துவம்-ஒரு யானை
முதலாளித்துவம் ஒரு மதம் பிடித்த யானை. அந்த யானையைப் பிடித்து, வாழை நாரினால் துதிக்கையைக் கட்டி, அந்தக் கயிறை ஒரு வாழை மரத்தில் கட்டி விட்டு, பார், பார் நான் முதலாளித்துவத்தைக் கட்டிப் போட்டவிட்டேன் என்று கூறினால் சரியா?

யானை ஒரு இழுப்பு இழுத்தால் அதன் கட்டு அறுந்துவிடும். அது மட்டுமா? விடுபட்டதும் தான் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தையே கூட வாயில் போட்டுக்கொள்ளும். அது யானை என்ற காரணத்தால். ஆகையால் வெறும் நாரினால் வாழை மரத்தில் யானையைக் கட்டுவதில் பயனில்லை என்று கூறுகிறோம் நாம். அரசாங்கமே யானையே அடக்க வாழை மரத்தில் கட்டாதே என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறோம்.

ஆந்திரம் கேட்போர் சொல்வது என்ன?

இன்று ஆந்திர மாகாணம் கேட்பவர்கள் என்ன கூறுகிறார்கள்?

எங்கள் நாட்டுத் தொழில்களை எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்களே பார்த்துக்கொள்கிறோம். சர்க்காரையும் எங்களிடமே தந்து விடுங்கள். எங்களுக்கு வேண்டியது எங்களுக்குத் தான் தெரியும், புரியும். தெலுங்குத் தெரியாதவர்களுக்கு, அம்மொழியின் அருமை எப்படித் தெரியும். ஆகையால் எங்களால்தான் முடியும். எங்கள் மொழியை வளர்க்க, எங்கள் நாட்டு மக்களின் குறைகள், பாராளுமன்றத்திலிருக்கும் தமிழர்களுக்குத் தெரியாது. வேண்டுமானால் தமிழரின் குறைகள் தெரியலாம்! கிருஷ்ணா நதி எங்கேயிருக்கிறது என்பது தமிழர்களுக்குத் தெரியாது! கோதாவரி எங்கே பிறக்கிறது, எந்த வழியாக செல்கிறது. எங்கே கலக்கிறது என்பது எங்களுக்குத்தான் தெரியும் தமிழர்களுக்குத் தெரியாது.

அவர்களுக்குக் காவிரிக்கரை நன்றாகத் தெரியும். வைகை நதியின் வளப்பத்தை அவர்கள் அறிவார்கள். எங்கள் நாட்டைப் பற்றி எங்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும். அக்கரையும் இருக்கும். ஆகவே எங்கள் நாட்டைப் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

திராவிட நாடு கேட்கிறோம்
ஆந்திரர்கள் ஆந்திர மாகாணம் கேட்கிறார்கள். நாம் திராவிட நாடு கேட்கிறோம். தமிழகம், கேரளம், கன்னடம் ஆகியவைகள் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டாட்சியைக் கோருகிறோம். இந்த நான்கு நாடுகளும் தனித்து வாழ முடியும்.

வளமான நாடு
எல்லா வளங்களையும் பெற்றிருக்கிறது இந்த நாடு. இயற்கை வளம் தேவைக்கு மேல் இருக்கிறது. மூன்று பக்கமும் அகன்ற ஆழமான கடல்கள் உள்ளன. வியாபாரத்திற்கேற்ற துறைமுகங்கள், அக்கடற்கரையோரங்களில் உள்ளன. சென்னை போன்ற நல்ல நிலையில் உள்ள துறைமுகங்கள் தொண்டியைப் போல அழிந்த நிலையிலுள்ள துறைமுகங்கள் பல உள்ளன.

நாட்டைப் பிரித்தால்
நாட்டைப் பிரித்து விட்டால், வெளி நாட்டு முதலாளிகள் தலைகாட்ட முடியாது, திராவிடத்தில்! முதலாளிகளின் ஆதிக்கப்பிடியிலிருந்து விடுதலையடையும் திராவிடம். அந“தத்திராவிடத்தை அடைவது தான் நமது இலட்சியம்.

ஆரியம் திராவிடத்தில் வாழாது
இந்த மே தினத்தில் திராவிடத்தைப் பெற உறுதி கொள்ள வேண்டும். அந்த திராவிடத்தில் முன் கூறிய வழிகளைப் பயன்படுத்தி முதலாளித்துவத்தை முறியடித்து விடலாம். இன்னொன்றும் கூறுகிறேன். திராவிட நாட்டில் ஆரியம் இருக்காது. நிச்சயமாய் கூறுகிறேன். அது திராவிட நாட்டில் வாழாது; வாழ்விடமாட்டோம் என்றால் ஆரியர்கள் திராவிடநாட்டில் வாழ முடியாது, வாழவிட மாட்டோம் என்று பொருளல்ல.

ஆரியத்தை அழிப்போம் என்றால், அனந்தாச்சாரியை அழிப்பது என்பதல்ல பொருள். அவர்களை நாம் ஒன்றும் செய்ய மாட்டோம். உங்களுக்கு நன்றாகத் தெரியும்! பல ஆரியர்கள் சீர்த்திருந்தி, நமது இயக்கத்தை ஆதரித்து நம்மவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களையும் பிடித்தாட்டுகிறது.
ஆரியத்தை ஏன் திராவிட நாட்டில் வாழ விடமாட்டோம் என்றால், அது நம்மை வாழவிட வில்லை. இனியும் இருந்தால் வாழவிடாது. ஆரியம் நம்மை அழித்திருக்கிறது. அதன் பிடியில் சிக்கி சிதைந்தோர் ஏராளம். அது நம்மை மட்டுமா பிடித்து ஆட்டுகிறது? ஆரியர்களையும் அந்த ஆரியம் பிடித்தாட்டுகிறது? அது அவர்களுக்குப் பிரியமான தென்றா நீங்கள் கருதுகிறீர்கள்?

யார் தான் இந்தக் காலத்தில் பஞ்சக் கச்சம் கட்டிக்கொள்ள விரும்புவார்கள்? ஒரு காலை எடுத்து வைத்தால் மறு காலின் துணி மேலே போகிறது. வேறு காலை வைத்தால் இந்தக் காலின் துணி மேலே போகிறது, வேகமாக நடந்தால் பின்னால் அவிழ்கிறது, அவசரமாக குனிந்தால்முன்னால் அவிழ்கிறது இவ்வளவு தொல்லையான அதை அவர்கள்கூட விரும்ப மாட்டார்கள். ஆகவே நம்மையும், அவர்களையும் பிடித்து ஆட்டும் ஆரியம் அழிய வேண்டும்.

ஸ்டாலின் சொன்னார்
மாவீரன் ஸ்டாலின்! ஜெர்மானியரை எதிர்க்க விடுத்த வேண்டுகோளில் “மி நீணீறீறீ Nலீமீ ˆறீMˆ?” என்று அழைத்தார். நான் ஸ்லாஸ் இனத்தாரை அழைக்கிறேன் என்றார். அவர் அங்கே உலக மக்களை அழைக்கவில்லை. ஜெர்மானியரை எதிர்த்துப் போராட ஸ்லாவியர்கள் தேவை, அவர்களுக்குத் தான் சிறப்பாக திறமை இருக்கிறது-ஜனநாயகப் பற்று இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால், இங்கு சிலர், அவர் வழி நடப்பதாகக் கூறிக் கொள்வோர், டெல்லி சர்க்காரை எதிர்க்கும் நம்மை நையாண்டி செய்கிறார்கள்.

ரஷ்யாவில் ஜார்ஜியர்கள்
ரஷ்யாவிலே ஜார்ஜியா என்று ஓரிடம், ரஷ்ய மாவீரன் ஸ்டாலின் பிறந்த இடம் அது. இன்றைய தலைவர் மலெங்கோவும் அங்கு பிறந்தவர்தான். நம் ஆதித்தன் அங்கு சென்றிருந்த போது அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டாராம் நீங்களெல்லாம் ரஷ்யர்கள் தானே என்று’ அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?

கேட்ட ஆதித்தனைப் பார்த்து, கைக்கொட்டி சிரித்தார்களாம். நாங்கள் ரஷ்யர்களா? யார் சொன்னது நாங்கள் ஜார்ஜியர்கள் என்று கூறினார்களாம்.
ரஷ்யாவிலே, ஜார்ஜிய பகுதியினர் தங்களை ஜார்ஜியர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். இதை நண்பர் ஆதித்தன் அவர்கள் என்னிடம் குறிப்பிட்டு, அண்ணாதுரை நீங்கள் ரஷ்யாவிற்குச் சென்று திராவிட நாட்டுப் பிரச்சினையைக் கூறினால் ஒத்துக்கொள்வார்கள் என்று கூறினார்.
நான் காரன்ஸ்மித் நகர் மைதானத்தில் பேசும்போது இதைத்தான் குறிப்பிட்டேன், மாஸ்கோவிற்குச் செல்லுவேன். மாவெங்கோவிடம் சொல்லுவேன் என்று.

பேனா எடுத்தார், எழுதினார்!

இது பொறுக்கவில்லை நண்பர் ஜீவானந“தத்திற்கு பேனாவை எடுத்தார், எழுதினார், இரண்டு பக்கம்.

நீயாவது மாலெங்கோவையாவது, பார்ப்பதுதாவது என்று எழுதினார்.

நானாக யாரையும் போய்ப் பார்க்கும் வழக்கம் என்னிடம் இல்லை. அப்படியாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்பினால் நீ வரக்கூடாது என்று தடுப்பவர்களுமில்லை. இதற்கு மாலெங்கோ மட்டும் விதிவிலக்கா?

இவர் பேச்சும் எழுத்தும் ரஷ்யாவரை செல்லும் என்றிருந்தேன். அது கல்கத்தாவிற்கப்புறம் கால் வைக்காது என்பதைத் தெரிந்து கொண்டேன். நானாக செல்ல முடியும், நான் இஷ்டப்பட்டால் பார்க்கவும் முடியும்.

மலெங்கோவின் ஆட்சியில்...
உலகம் முழுவதற்கும் பொதுவுடமைக் கட்சிக்கு தலைமை ஸ்தாபனமாக ரஷ்யாவில் இருந்த தலைமை ஸ்தாபனத்தை (காமின்பாரம்) மலெங்கோவின் ஆட்சியில் கலைக்கப் போகிறார்கள். இதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு நாட்டிலும், பொதுவுடைமைக் கொள்கையை அவ்வவ் நாட்டின் நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். விரைவில் ரஷ்யாவில் உள்ள தலைமை ஸ்தாபனத்தைக் கலைக்கப் போகிறார்கள்! மிக விரைவில்!

நண்பர்கள் நாம் தான்
ஆனால் கம்யூனிஸ்ட் நண்பர்கள் நம்மீது சீறுகிறார்கள், நண்பர் ஜீவானந்தம் எதிர்க்கிறார், ராமமூர்த்தி மறுக்கிறார்.

பிரிவினையில் பொதுவுடமை இருக்கிறது. இப்பொழுது ஆத்திரப்பட்டு கொஞ்சம் ஆவேசமாக நம்மைத் திட்டுபவர்கள், கொஞ்சம் பொறுத்து அவகாசமாக அலசிப் பார்த்தால் உண்மையை அறிவார்கள் என்று நம்புகிறேன். நான் மீண்டும் கூறுகிறேன், தென்னாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் நண்பர்ள் நாம் தான்! நம்மைத் தவிர வேறு நண்பர்கள் தன்னாட்டில் அவர்களுக்கு, நிச்சயமாக வேறு யாருமில்லை.

சொன்னேன், செய்தேன்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நான் ஒரு சமயம் சொற்பொழிவாற்ற சென்றிருந்தேன். கல்லூரியை விட்டு ஜஸ்டிஸ் கட்சியில், ஈடுபட்டிருந்த நேரம் அது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன் முதலியோர் மாணவர்கள்.
நான் அங்கு வருவதை எதிர்த்து சில மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். தோழர் பாலதண்டாயுதமும் அன்று, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர். சில மாணர்களின் எதிர்ப்பு எனக்கு நன்றாகத் தெரியும்.

இரண்டுநாள் சொற்பொழிவு செய்தேன். சொற்பொழிவு நேரம் தவிர மற்ற நேரத்தில் மாணவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். மாணவர்கள் என்னை பல கேள்விகள் கேட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சி பணக்காரர்களின் ஸ்தாபனமாக மாறி விடுகிறதே சீமான்களின் பூட்ஸ் துடைக்கும் கட்சியாக ஆகிவிடுகிறதே என்று குறைப்பட்டனர்.

அவர்களிடம் சீக்கிரத்தில் அதை பாமர மக்களின் கட்சியாக, மாற்றுகிறேன் என்று சொன்னேன் சீமான்களின் பிடியில் எப்படியோ சிக்கிக்கொண்ட கட்சியை, மாளிகையிலிருந்து மண் குடிசைக்கு, மைதானத்திற்கு கொண்டு வரவே முயல்வேன் என்று சொன்னேன்.

சொன்னபடி திராவிடர் கழகமாக மாற்றி, சேலத்தில் அரசாங்கத்தார் தரும் சர் முதலிய பட்டங்களைக் கழற்றி எறிய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தேன். மிட்டா மிராசுகள், கட்சியைவிட்டு ஓடினர். ஏழை மக்களின் ஸ்தாபனமாக மாறியது கட்சி!
பட்டம் பதவி பெற்றவர்களை விட்டு, விலகி மக்களின் கழகமாக மாறிவிட்டது. அதில் பெருத்த முதலாளிகள் கிடையாது.

பெரிய முதலாளி
எங்கள் கழகத்தில் இருக்கும் மிகப் பெரிய முதலாளி என்று மூர்த்தி சுருட்டு தயாரிக்கும் கே.கே.நீலமேகம் அவர்களைத்தான் சொல்லலாம்.

நாங்கள் பாடுபட்டு பெறும் திராவிட நாட்டை சர். ஆர்.கே. சண்முகத்திடம் விட்டு விட்டால் நீங்கள் எங்களைக் குறை கூறலாம், திட்டலாம்.

இராமனின் பாணமா?
வெறும் பொதுவுடமை கொள்கை சாதி, பேதத்தை ஒழித்து, மதப்பிடியிலிருந்து விடுவித்து, மூட பழக்கங்களி லீடுபட்ட மக்களை விடுதலை செய்து, நம் நாட்டை நம்மிடம் தருமா? இராமன் விட்ட கணை இராவணனின் உடல் முழுவதும் துளைத்து, சீதா, சீதா என்ற உணர்ச்சி எங்கேயாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்து, பிறகு கடலில் மூழ்கி, மீண்டும் இராமனின் அம்புறாத்தூணியில் வந்து புகுந்து கொண்டதாம். அதைப்போல இங்கிருந்து விடும் கணை விந்திய மலையைத் தொட்டு, மேலும் தொடர்ந்து சென்று, டெல்லி வரையிலும் பாயும் என்றால் நம்ப முடியுமா? நல்ல வில்வீரன் உண்மை என்று ஒத்துக் கொள்வானா? இதை ஒத்துக் கொண்டால் இதை புதிய வைதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரிவினை வேண்டும்
ஆகையால்தான் பிரிவினை வேண்டும் என்கிறோம். திராவிட நாடு திராவிடர்க்கே வேண்டும். இந்தியாவிலிருந்து பிரித்து தரவேண்டும். காட்டைவெட்டி, வேலியிட்டு மரங்களைச் சாய்க்க வேண்டும் என்கிறோம். புலி கண்டிப்பாய் பதுங்கி பாய முடியாது.

நாட்டுப் பிரிவினையால் பொதுவுடைமை இருக்கிறது. லெனினையும், மார்க்ஸையும் நன்றாக மீண்டும் படித்துப் பார்க்கட்டும்.

ஸ்காண்டிநேவியா என்ற நாடு பிரிந்து, நார்வே, ஸ்வீடன் என்று இரு நாடுகளாக இல்லையா? ஏன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாதா? அங்கே மார்க்ஸ் புத்தகம் இல்லாமலா இருக்கும்? லெனின் படம் அங்கு இருக்காதா?

மார்க்ஸ் தத்துவத்தை-லெனினிஸத்தை படித்தவர்கள் படித்தும் மறந்து விடாமல் இருக்கிறவர்கள் விரைவில் தெளிவு பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்றால் கடந்த காலங்களில் பல தடவைகள் குழம்பிவிட்டாலும் முடிவில் தங்களைத் திருத்திக் கொள்ள தயங்காதவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

மும்முறை முழங்குவோம்
திராவிட நாடு பிரிந்தால் அங்கு பொதுவுடைமை இல்லாமல் போய்விடாது. திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு திராவிடருக்கே என்ற கொள்கையிலேயே இருக்கிறது. இன்றைய மே தினத்தில் நாம் கலையும் முன் திராவிட நாடு திராவிடருக்கே என்று மும்முறை முழங்குவோம்.

திராவிட நாடு திராவிடருக்கே!

திராவிட நாடு திராவிடருக்கே!

திராவிட நாடு திராவிடருக்கே!


-முதல் பதிப்பு: 1953, வெளியீடு தாஜ்மகால் பதிப்பகம், சென்னை-5