அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நஷ்ட ஈடு தர வேண்டும்!

ஆச்சாரியார் போய், காமராசர் வந்திருக்கிறார். அவர் ஆட்சியில், மக்களின் குரலுக்கு மதிப்புண்டு என்கிறார்கள். உண்மையிலேயே காமராசர் சர்க்கார் மக்களின் நலன் கருதும் சர்க்காரானால், தனது முதன் மந்திரிப் பீடத்தில் முன்பு உட்கார்ந்த ஆச்சாரியார் ஆட்சியின் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தங்கள் பிள்ளைகளைக் காவு கொடுத்தவிட்டுக் கண்ணீர் வடிக்கும் குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கத் தகுந்த நஷ்ட ஈடு தர வேண்டும்.

காமராசர் ஆட்சி நல்ல ஆட்சி என்று வாயாரச் சொன்னால் மட்டும் போதாது, இதைக் காமராசர் ஆட்சி செய்யாதவரை ‘ஒரு நல்ல ஆட்சி‘ என்று இதை நாங்கள் கொள்ள முடியாது – ஆச்சாரியார் ஆட்சி போய், மற்றொரு ஆட்சி வந்தது என்று, மட்டும்தான் நாங்கள் எண்ண முடியும்!

தூத்துக்குடி, கல்லக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்குவதுடன் உயிரிழந்த தோழர்தம் குடும்பத்தாருக்குத் தகுந்த நஷ்ட ஈடு தரவும் உடனடியாக ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

இவ்வாறு பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள், 29.8.1954இல் கல்லக்குடித் தி.மு.கழக ஆண்டு விழாவில் ஆற்றிய சிறப்புரையில் குறிப்பிட்டார்.

கல்லக்குடி ஆண்டு விழா!

திருச்சி ஆக. 30 – கல்லக்குடித் தி.மு.கழக முதல் ஆண்டு விழா நேற்று மாலை 6 மணியளவில் துவங்கிற்று.

கூட்டத்திற்குத் தேழர் அ. தம்புசாமி தலைமை தாங்கினார். தோழர்கள் அன்பில் தருமலிங்கம், அ.பொன்னம்பலனார், முகவை ஆர்.எஸ். பாண்டியன் ஆகியோர் பேசியதும், தி.மு.கழகப் பொதுச் செயலாளர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மக்கள் காட்டிய ஆர்வம்!

பொதுச் செயலாளருக்குப் பல்வேறு மன்றங்கள், சங்கங்கள் தி.மு.கழகக் கிளைகள் ஆகியவற்றின் சார்பில் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. கல்லக்குடி கழகத்தின் சார்பில் வரவேற்பு இதழ் ஒன்றும் வாசித்தளிக்கப்பட்டது.

கூட்டத்தில், கல்லக்குடியைச் சுற்றியுள்ள கிராம மக்களும் டால்மியா சிமெண்டு தொழிற்சாலையி்ல் பணிபுரியும் தொழிலாளர் பெருமக்களும், பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.

டால்மியாபுரம், கல்லக்குடியாக முன்னேற்றக் கழகத்தால் மாற்றப்பட்டிருப்பது நியாயமே என்பதை நிரூபிப்பது போன்றிருந்தது – அந்த மக்கள் காட்டிய ஆர்வம்.

கல்லக்குடி வழக்குகளை வாபஸ் வாங்கக் கோரியும் துப்பாக்கிப் பிரயோகத்தால உயிர் நீத்தவர்கட்கு நஷ்ட ஈடு தரக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேறின.

(நம்நாடு - 31-8-1954)