அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நில உச்சவரம்புச் சட்டத்தின் நிலை என்ன?

சட்டமன்றத்தில் அண்ணா பேருரை
தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் 8.3.61 இல் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இங்குத் தரப்படுகிறது.

“இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அதன் முடிவில் விவசாயத்தினுடைய விளைவை 12 இலட்சம் டன்னாக நாங்கள் உயர்த்த இருக்கிறோம் என்று சொன்னார்கள். இதைச் சொல்லிவிட்டு, இரண்டு வருடத்திற்கு முன்னாலே கவர்னர் உரையில் 12 லட்சம் டன் என்று சொன்னோம். ஏற்கெனவே 9 லட்சம் டன்னிற்கு வந்து விட்டோம். இன்னும் 3 லட்சம் டன்களைத் திட்டக் காலத்திற்குள் பூர்த்தி செய்து கொள்வோம் என்று இந்த மன்றத்திலே படித்துக் காட்டப் பட்டது. ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையைப் பார்த்தால் 12 லட்சம் டன் என்று நாங்கள் ஒரு எல்லையை வைத்திருக்கிறோம். ஆனால் பல்வேறு சங்கடங்களினால் 7 அல்லது 8 டன்னுக்குத்தான் இப்போது போகமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறுகிறார்கள். சர்க்காரே 7 லிருந்து 8 லட்சம் டன்தான் என்று சொன்னால், அது நிச்சயம் 8 இலட்சம் அல்ல; 7 லட்சம் டன்தான் என்று சொல்லலாம். 7 லட்சத்திலிருந்து இறங்காமல் இருந்தால் அதுவே விசேடம். ஆகவே 12 லட்சம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது 7 லட்சம் டன்தான் என்று சொன்னால் போட்ட கணக்கிலே 40 பங்கு அளவு தவறியிருக்கிறோம் என்று ஏற்படுகிறது. மிகத் திறமைசாலிகள் ஆயிற்றே ஏன் தவறுகிறார்கள்? மிக நல்ல நிர்வாகம் செய்பவர்கள் ஆயிற்றே ஏன் இந்தத் தவறு ஏற்பட்டது? மிக நல்ல கணக்குப் பிள்ளைகள் ஆயிற்றே ஏன் கணக்கு போடுவதில் குந்தகம் ஏற்பட்டது என்று சொன்னால் எதிர்க்கட்சியினரின் வேலையே இதுதான் என்று சொல்வதில் பிரயோசனம் இல்லை; கணக்கைச் சரியாகக் காட்டிவிட்டால் எதிர்க்கட்சியினரின் வாய் தானாகவே அடங்கிவிடும்.

இட்லர் கணக்கு இங்கு ஏன்?
அதை விட்டுவிட்டுத் தலையை எண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை. எதிர்ப்பக்கத்திலே 15 தலைகள்தான். இந்தப் பக்கத்தில் 113 தலைகள் இருக்கின்றன. எண்ணிக் கொள்ளுங்கள் என்றால் அதிலே பயனில்லை. இட்லர்கூட இந்தக் கணக்கைத்தான் சொன்னான். எல்லோரும் என் பக்கம் தலையை எண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லும் பொழுது யாராவது எழுந்திருந்து தலையை நீட்டினால் தலை சீவப்பட்டுவிடும். ஆகவே அப்படிப்பட்ட தலைக்கணக்கைக் காண்பிக்க வேண்டாம்.

எந்த வகையிலும் இந்த உணவு உற்பத்தி விஷயத்திலே இந்தக் குந“தகம் ஏற்பட்டதற்கு நீங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள். போதுமான உரம் கிடைக்காத தால் இத்தகைய தட்டுப்பாடு ஏற்பட்டது என்று காரணம் காட்டப்பட்டு இருக்கிறது. இரண்டு ஆண்டிற்கு முன்னால் இந்த மன்றத்தில் ‘நாங்கள் எட்டு லட்சம் டன் உரம் கிடைக்கும்படி செய்யப் போகிறோம் என்று உறுதி அளித்துவிட்டு அதற்குப் பிறகு இப்போது 1.3 இலட்சம்தான் கிடைத்தது என்று கூறுவதானது வேடிக்கையாக இருக்கிறது.

இதற்காகவா ஆதரவு காட்டினார்கள்?
அனுமார் இலங்கைக்குச் சீதையைக் காண்பதற்காகப் போய்ச் சீதையைக் காட்டுவதற்கு முன்னால் ‘கண்டேன் சீதையை’ என்று சொன்னார். ஆனால் இவர்களோ இலங்கைக்குப் போகிறார்கள். ஆனால் சீதையைப் பார்க்கவில்லை; திரும்பியும் வரவில்லை. இராமன் அனுமன் வருகைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறான் ஆனால் அனுமாரோ எங்கோ ஒரு மரத்தின் கிளைமேல் ஏறிக்கொண்டு முந்திரிப் பழத்தைத் தின்று கொண்டு, அதன் கொட்டைகளைக் கீழே வீசி எறிவதுபோல் இவர்கள் எதிர்க்கட்சியினரைப் பார்த்து எறிவதுபோல் ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காகவா இவ்வளவு பெரிய இடத்திற்கு வரவேண்டும்? இதற்காகவா மக்கள் இந்த அளவுக்கு உங்களுக்கு ஆதரவு காட்டினார்கள்? ஆகவே நீங்கள் அவர்களுக்கு அவசியம் நல்ல விளக்கங்கள் கொடுக்க வேண்டும்.

கணக்குக் கொடுப்பதிலே தயக்கம் காட்டுவது ஏன்?
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அமைச்சர் அவர்கள் கவனிக்க வேண்டும். ‘விலைவாசியை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று எடுத்துச் சொல்லக்கூடியதிலே வெட்கம் இருக்க வேண்டாமா இந்த அரசுக்கு? எதிர்த் தரப்பிலுள்ள எங்களைப் பார்த்து ‘நீங்கள் இதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டால், நாங்கள் உங்களுக்குத் தெரிந்த கணக்குகளையெல்லாம் விஷயங்களையெல்லாம் எங்களுக்குச் சொல்லுங்கள் என்று சுலபமாகச்சொல்லிவிட முடியும். எங்களைப் பார்த்து வழி சொல்லுங்கள் என்பது, உண்மையிலேயே ஜனநாயகத்திலே வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்வதற்கென்று முத்திரை பொறித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களை மக்கள் அதற்காகச் சும்மாக்கூட அமர்த்தவில்லை. பணம் கொடுத்து அமர்த்தியிருக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப் படும் தொகை உங்கள் தகுதிக்குக் குறைவாக இருக்கலாம். அதிகம் கொடுக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அதிலே நீங்கள் தியாகம் கூடச் செய்யக்கூடும். அதற்கு நான் என் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில், ‘உங்களுக்கு எசமானர்கள் பொதுமக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. எசமானர்களாகிய பொதுமக்கள் உங்களைக் கணக்குக் கேட்கிறார்கள். அதன்படி நீங்கள் கணக்குக் கொடுப்பதிலே தயக்கம் காட்டுவது ஏன்? விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவதில் இதுவரையில் நீங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

பொறுப்பை உணரவில்லை
“இந்த மன்றத்திலே எந்தத் தரப்பினராக இருந்தாலும், இதையேதான் எடுத்துக் கூறி வந்திருப்பதைப் பார்க்கலாம். காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டுகளும், வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையே திருப்தித் திருப்பி எடுத்துக் கூறி வந்தார்கள். அமைச்சர்கள்கூட யாரோ விலையை ஏற்றி விட்டதைப் போலவும் நாங்கள் சொல்லி விலையை இறக்காதது போலவும் சொன்னார்கள். ‘விலைவாசிகள் கட்டுப்படுத்தப்பட்டால்தான் ஏழைகள் பிரச்சனை தீரும் என்பதை எங்கோ வெளிநாட்டிலிருந்து உபதேசம் செய்வதைப்போல் பண்ணுகிறார்களே தவிர விலைவாசிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது என்பதை அவர்கள் உணரவில்லை.

விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவதற்காக அசோக்மேத்தா கமிட்டி கொடுத்த சில யோசனைகளை எந்த அளவில் இதுவரை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. விலைவாசிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் ‘ஸ்டேட் டிரேடிங்’ மிக அவசியம் என்பதை உணவு அமைச்சர் கனம் பக்தவத்சலம் அவர்கள், இந்த மன்றத்திலே மிக அழுத்தமாகச் சொன்னார்கள். இந்த மாநிலத்தின் கருத்தும் இதுதான். அண்டை மாநிலமான கேரளத்தின் முதல் மந்திரி அவர்களைச் சந்தித்துப் பேசிய போது, ‘இதுதான் நல்ல திட்டம்’ என்று அவர்கள் சொன்ன தாகவும் கூறினார்கள். ‘இதை எல்லாம் நாங்கள் மேலே அனுப்பி இருக்கிறோம். அது ஒப்புக்கொள்ளப்பட்டுவிடும். அதன்படி ‘ஸ்டேட் டிரேடிங்’ வந்தால் ஒரு நிரந்தரமான பரிகாரம் கிடைக்குமென்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். என்ன ஆயிற்று?

பாதியிலேயே நிற்பதேன்?
“அதேபோல், ‘நிலத்திற்கு உச்சவரம்பு’ என்று சொன்னார்கள். என்ன நடந்தது அதற்கு? அதற்காக ஒரு குழு அமைத்தார்கள். அந்தக்குழு ஊர் ஊராகச் சுற்றிப் பல விஷயங்களை இன்னும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி ஒரு வரிகூட நம்முடைய நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிடப் படவில்லை. நம்முடைய ஆயுட்காலத்திற்குள்ளே இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டிருப்பார்கள் என்று துருவித் துருவிப் பார்த்தேன். ஒன்றுமில்லை. ஆகவே, நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாதியில் நிற்கிறது. நீங்கள் எடுத்துக்கொள்ளாத முயற்சிகளைப் பற்றி நாங்கள் எத்தனை எடுத்துச் சொன்னாலும் எதிர்க்கட்சிக்காரர்கள் தானே எடுத்துக் கூறுகிறார்கள். ‘அவைகளைக் கவனிக்கிறோம்’ என்று கூறிச் சும்மா இருக்கிறார்கள்.

நான் மீண்டும் விலைவாசி விஷயத்திற்கு வருகிறேன்.

அவநம்பிக்கையின் எதிரொலி
நம்முடைய அமைச்சர் அவர்கள் கடைக்குப் போய் விலையைகத் தெரிந்து கொண்டதாக நேற்றைய தினம் சொன்னார்கள். அவரே கடைக்குப் போய்த் தெரிந்து கொள்வது என்றால் அவர் இந்த விஷயத்தில் அக்கறை காட்டுகிறார் என்பது மட்டுமல்ல; எங்கள் விஷயத்திலே எவ்வளவு அவநம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. நான் இடித்து இடித்துச் சொல்கிறேன். ‘விலைவாசி ஏறியிருக்கிறது’ என்று என்னுடைய வார்த்தைகளில் இருக்கிற அவநம்பிக்கை காரணமாகக் கடைக்கு அவரே நேரில் போய்த் தெரிந்த கொண்டு பத்திரிகை நிருபர்களைக் கூப்பிட்டுச் சொல்கிறார். ‘சேதி தெரியுமா? விலைவாசி ஏறிவிட்டது’ எழுதிக் கொள்ளுங்கள் என்று. கடைக்காரர் அமைச்சர் என்ற காரணத்தினால் ஒருகால் விலையைக் குறைத்துச் சொல்லக்கூடும். ஆனால் நாங்கள் அப்படி அல்ல; நம்முடைய அமைச்சர் என்ற உரிமையோடு உண்மையைத் தெளிவாகச் சொல்கிறோம். இந்த மன்றத்தில் நான்கு ஆண்டுகளாகச் சொல்கிறோம். எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?

நடவடிக்கை எடுக்கிற அதிகாரம் முழுவதும் உங்கள் கரத்தில் இருக்கிறதா? அதைத்தெளிவாக நாட்டு மக்களுக்குச் சொல்லிவிடுங்கள்; திருப்பித் திருப்பி எங்களைக் கேட்காதீர்கள்; விலைவாசியைக் கட்டுப்படுத்த எங்களால் முடியாது. அது மத்திய அரசாங்கத்தினால்தான் முடியும்’ என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள். நாங்கள் திருப்பித் திருப்பி உங்களைக் கேட்கும்பொழுது ‘இந்த அதிகாரத்தை மத்திய சர்க்காருக்குக் கொடுத்துவிட்டு நீங்கள் என்ன அரசு நடத்துகிறீர்கள்?’ என்ற வகையிலே கேட்க முடியும்.

“மக்கள் நம்பும்படியாக விலைவாசியைக் கட்டுப்படுத்துகிறோம்” என்று வாக்குறுதி அளிக்கிறீர்கள். வெளியிலே கொடுத்த எந்த வாக்குறுதியும் இந்த மன்றத்திலே நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை.

நிலத்திற்கு உச்சவரம்பு கட்டுவது பற்றி எல்லோரும் கூடிக் கூடிப் பேசினோம். அது இப்பொழுது கிணற்றிலே கல்போட்டாற் போல் இருக்கிறது.

எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளை எடுத்துக் கொண்டீர்களா? விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. இது இறங்காத வரையில் எந்தத் திட்டங்களை எடுத்துக் கொண்டாலும் என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டாலும் அது நல்ல பலனைத் தராது என்பதை நான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

(நம்நாடு - 13.3.61)