அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நியாயங்களை அலட்சியப்படுத்துவது அறமல்ல!

சட்டமன்றத்தில் அண்ணா பேருரை

சென்னைச் சட்டமன்றத்தில் அரசாங்க வரவு – செலவுத் திட்டத்தின் மீது 16.3.60இல் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

இந்த ஆட்சியாளர் மீது நான் மூன்று குற்றச்சாட்டுக்களைச் சாட்டுகிறேன்.

முதல் குற்றச்சாட்டு எல்லாத் தொழில்களையும் தனியாரிடம் விட்டு, விட்டு பெரிய தொழில்களையெல்லாம் மத்திய சர்க்கார் வசம் ஒப்புவித்துவிட்டு, பனை ஓலைத் தொழில் போன்ற சிறிய தொழில்களை மட்டுமே இந்த அரசாங்கம் வைத்துக் கொண்டிருப்பது, இந்த நாட்டு மக்கள் நலனுக்கு உகந்ததல்ல.

இரண்டாவது – திட்டங்களை நிறைவேற்றக் கொடுப்பதாகச் சொல்லி அதற்கென்று பெருநிதி ஒதுக்கி, ஆசைகாட்டி கடைசியில் ஒதுக்கியபடி செலவு செய்யாமல் இந்த அரசாங்கம் மக்க்ளுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்கிறது.

மூன்றாவது – விலைவாசிகளைச் கட்டுபடுத்துவதாக வாக்குறுதிகள் தந்து விலைவாசியைக் கட்டுப்படுதத்தாமலிருப்பது.

சாதனைகளைக் கண்டு பெருமைப்படுகிறீர்கள்?

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரிய தொழில்களில் ஒன்று நெய்வேலித் திட்டம். இது மத்தியச் சர்க்காரிடம் விடப்பட்டுள்ளது. மற்றொன்று பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை. இது மத்தியச் சர்க்கார் நேரடி நிர்வாகத்தில் இருக்கிறது.

நம்முடைய சர்க்கார் குறிப்பிடத் தகுந்த தொழில்கள் உண்டு என்றால் பஸ் போக்குவரத்து, சிங்கோணா எஞ்சினியரிங் ஒர்க்ஷாப் பண்ணை ஆகியவைதான். இச்சாதனைகளைக் கண்டு பெருமைப்படுகிறீர்களா என்று அமைச்சர்களைக் கேட்கிறேன்.

நீங்கள் முதலாளிகளைத் தேடுகிறீர்கள் என்பதை நாடு உணருகிறது. அந்த அளவுக்குப் பணப்புழக்கத்திற்கு இந்த நாட்டிலே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இங்கே ரூ.5 கோடி மூலதனத்தில் தொழில் நடத்த ஒரு ஆள் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வடநாட்டில் ரூ.5 கோடி முதல் 50 கோடி வரை பணம் போடும் முதலாளிகள் வாழ்கிறார்கள் வடக்கு வாழ்கிறது – தெற்கு தேய்கிறது என்று நாங்கள் சொல்வதிலே என்ன தவறு இருக்கிறது? 5 கோடி ரூபாய் முதல் போட்டு நடத்தும் தொழிற்சாலை ஒன்று இருக்கிறதா?

உங்கள் ஆற்றலை ஏன் பயன்படுத்தக்கூடாது?

ஒரு முற்போக்குத் துரைத்தனத்தார் இந்தியத் துணைக் கண்டத்திலேயே நாங்கள் தான் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளுவதால் நாட்டுக்குக் கிடைக்கும் இலாபமென்ன? இவர்களுடைய அபார அறிவை இதற்குப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டுப் பெருந்தொழில்களையெல்லாம் தனி முதலாளிகளுக்குக் கொடுத்து விட்டிருக்கிறீர்கள். உங்களுடைய அபாரத் திறமை பணம் பெறப் பயன்பட வேண்டும். உங்களுக்கு மத்திய சர்க்காரில் இருக்கும் செல்வாக்கு இதற்கப் பயன்பட வேண்டும். நிதியமைச்சர் அவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டது போல “பண்பாரங்கள் கூடிச் செய்வதல்ல இது“ என்பது போல அல்லாமல் இவ்வளவு அறிவு ஆற்றலும் உலகத்தில் உள்ள எல்லா ஆற்றலையும் உருட்டித் திரட்டி எங்களிடம்தான் தரப்பட்டிருக்கிறது என்பதாகச் சொல்லுகிற நீங்கள் அத்தகைய உங்கள் ஆற்றலை இதற்கு ஏன் பயன்படுத்தக்கூடாது.

இதுதான் சோஷலிசம் என்றால் சோஷலிசத்தை எழுதியவர் இங்கு இருந்திருந்தால் உங்களைச் சபிப்பார். வேண்டுமானால் நான் முன்பு குறிப்பிட்டதுபோல – இது சமய தர்மம் என்று வாதாடுங்கள். முதலாளிகள் தேவை என்று சொல்லுங்கள். ஆனால் உலகம் ஏற்றிருக்கும் பொருளாதாரம் புரிந்த நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ள தத்தவத்தை மாற்ற விரும்பாதீர்கள். வேண்டுமானால் 150 பேர் உள்ள இந்த மன்றத்தில் இதைச் சொல்லி உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் பொருளாதாரம் தெரிந்தவர்கள் மத்தியில், மக்கள் மன்றத்தில் இதைச் சொன்னால் கைக்கொட்டிச் சிரிப்பார்கள்.

ஆசையெல்லாம் மண்ணாகி விடுகின்றன.

நீங்கள் மக்களக்கு ஆசையை ஊட்டுகிறீர்கள். பின்னர் அவர்கள் நம்பிக்கையில் மண்விழும் வகையில் ஒதக்கிய பணத்தைக் குறைப்பதும் செய்வதுமாகத் சொன்னதைக் கைவிடுவதுமாக இருக்கிறீர்கள்.

நீங்கள் மக்களுக்குக் காட்டுகின்ற ஆசையெல்லாம் மண்ணாகி விடுகின்றன.

சேலத்தில் எதிர்பார்த்து, எதிர்பார்த்து, நிபுணர்களும் பொருளாதாரத் தத்துவம் புரிந்தவர்களும் சில காலமாகப் பேசிவரும் இரும்புத் தொழிற்சாலை “வரும்“ என்பதற்கு ன்ன ஆதாரம்? அமைச்சர்கள் டெல்லிக்கப் போய்வரும் விமானப் பயணம் அளவுக்குத்தானிருக்கிறது ஆதாரம். வரும் என்ற நல்லெண்ணம்தான் ஆதாரம். இங்குள்ள அமைச்சர்கள் டெல்லிக்கு மெத்த நண்பர்கள் என்பதுதான் ஆதாரம்!

ஆந்திரத்தில் நிதியமைச்சராகவுள்ள பிரமாமனந்த ரெட்டியவர்களுக்கு “மத்திய சர்க்கார் மூலம் கிடைக்கும் வசதி எதுவும் தக்க விகிதத்தில் கிடைக்கவில்லை“, என்று பேசக்கூடிய துணிவும், தெளிவும் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திர அமைச்சருக்குள்ள அந்தத் துணிவு இவர்களுக்கு ஏன் ஏற்படவில்லை? அகில இந்தியாவிலேயே மத்திய சர்க்காருக்காகவும் வக்காலத்துப் பேசும் துரைத்தனம் சென்னை மாநிலத் துரைத்தனம் ஒன்றுதான். இவர்கள் தங்களை 5 ஆண்டுகளுக்கு மத்திய சர்க்காரிடம் குத்தகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது போல எண்ணிப் பேசுகிறார்கள்.

எல்லாம் இல்லை – இல்லை – இல்லை

நேற்று, இங்கே எங்கள் கட்சி உறுப்பினர், பரம்பிக்குளம் திட்டம்பற்றி ஒரு பத்திரிகை செய்தியைக் குறிப்பிட்டுப் பேசுகையில் “பத்திரிகையில் வருவதையெல்லாம் நம்பிப் பேசாதீர்கள்“ என்றார். இன்று பத்திரிகையில் பார்த்தேன். சேது சமுத்திரத் திட்டம் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்களிலும் நிறைவேறாது என்பதாக ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் பேசியிருக்கிறார்.

சேது சமுத்திரத் திட்டம் இப்பொழுது இல்லை. நெய்வேலி உரத் தொழிற்சாலை இப்பொழுது இல்லை. அலுமினியத் தொழிற்சாலை தனியாருக்கப் போகிறது. தூத்துக்குடித் துறைமுகத் திட்ட ஆரம்ப வேலைக்குக் கூடப் பணம் ஒதுக்கவில்லை – இப்படி ஒவ்வொன்றாகப் பார்த்தால் மிச்சமிருப்பது என்ன என்பதை அறிய வேண்டும். அதற்கு வழிவகை இல்லை. எண்ணிக்கை பலத்தை வைத்துக் கொண்டு எதையும் செய்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.

நாங்கள் எந்தப்பிரச்சினையைப் பேசுகிறோமோ அதை விட்டுவிட்டுப் புதுப் பிரச்சனையில் ஈடுபடுகிறார்கள், அமைச்சர்கள். முன்பு ஒருமுறை நான் சொல்லியதற்கப் பதில் சொல்லவந்த நிதியமைச்சர் என் பூர்வேத்திரத்தை ஆராய்ந்தார்.

சொல்ல வக்கில்லாத அமைச்சர்!

என் பூர்வோத்திரத்தை ஆராய்வதற்காக இந்த அவையில் 3 மணி நேரம் ஒதுக்குவது என்றால் இந்த நாட்டு மக்கள் எப்படி நன்மையடைய முடியும்? சொல்லுவதற்கு நேரிடையாகப் பதில் சொல்ல வக்கில்லாத காரணத்தால், பிரச்சினையிலிருந்து நழுவி தப்பித்துக் கொள்ளத்தான் இப்படி வேறு புதுப்பிரச்சினையில் ஈடுபடுகிறார்.

இவர்களெல்லாம் வெள்ளைக்காரர்களின் அடிமைகள் என்று எங்களைப் பற்றிச் சொல்லுகிறார்கள். வெள்ளைக்காரனை விரட்டிவிட்டோம், சுயராஜ்யம் வாங்கிவிட்டோம் என்கிறார்கள். வெள்ளைக்காரன் எங்கே போனார்? வெள்ளைக்காரனுடைய மூலதனம் ரூ.200 கோடி இன்னும் இந்த நாட்டிலிருக்கிறது என்றால் அவன் போய்விட்டான் என்ற எப்படிச் சொல்ல முடியும்? அவன் வேண்டுமானால் கட்டுக்கடங்கியிருக்கிறான். உங்களுடன் கைக்குலுக்கிறானே தவிர ஒழிந்துவிடவில்லை. வெள்ளைக்காரன் வைத்திருந்த ஆட்சிமுறை அடிமுதல் நுனிவரை அப்படியே இருக்கிறது. எதையும் மாற்றவில்லை.

மலத்திற்கா இவ்வளவு ஆராய்ச்சி?

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் நமது நிதியமைச்சர் அவர்கள் ஏறக்குறைய நான்கு பக்கங்கள் மலம் பற்றிய ஆராய்ச்சியை வெளியிட்டிருக்கிறார். மலத்தைப் பற்றி இவ்வளவு அதிகமாக ஆராய்ந்திருக்கிறார். நான் ஆட்டு இறைச்சியைப் பற்றி ஏதோ சொன்னதற்கு என்னைக் கிண்டல் செய்த இவர், இப்போது மலத்தில் இறங்கிவிட்டார். இதை நான் சொல்வதாலே மலத்தின் மூலம் கிடைக்கும் உரத்தின் பயனைக் குறைத்து மதிப்பிட்டதாகக் கருதவேண்டாம். இதைப்பற்றிச் சம்பந்தப்பட்ட இலாகா அமைச்சர் சொல்லியிருக்கலாம் என்று குறிப்பிடுகிறேன். போன ஆண்டு இத்தனைப் பேருக்க வேலை அளித்தோம். இந்த ஆண்டு இத்தனைப் பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும். இந்த ஆண்டு இத்தனைத் தொழிற்சாலை திறந்திருக்கிறோம். ஊழியர்கள் மனத்தில் திருப்தி ஏற்படுத்தினோம். தொழிலாளர்களுக்கு நிம்மதியோடு வாழ வழி செய்திருக்கிறோம். விலைவாசி கட்டுக் கடங்கியிருக்கிறது. இவ்வாண்டு இவ்வளவு நிதி இருப்பு இருக்கிறது என்று நிதியமைச்சர் விளக்கியிருந்தால் பொருத்தமாக இருக்கும். பெரிய பெரிய ஞானிகளெல்லாம் மும்மலத்தை நீக்கச் சொன்னார்கள். இவர் ஒரு மலத்தையாவது நீக்க சொன்னாரே என்று மகிழ்ச்சியடைகிறேன்.

செவிடன் பார்த்த நோயாளி

அமைச்சர் கனம் வெங்கடராமன் அவர்கள் பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சயினர் பேசியதை 6 குருடர்கள் யானையைக் கண்ட கதைக்கு ஒப்பிட்டுப் பேசினார். அவர் பள்ளியில் படித்த கதையை இங்கு இதற்குப் பயன்படுத்தியிருக்கிறார். நானும் பள்ளியில் படித்தபோது ஒரு கதை படித்திருக்கிறேன். அமைச்சர் படித்த கதை குருடன் கதை. நான் படித்த கதை செவிடன் கதை. ஓர் செவிடன் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றான். அவன் செல்லும் முன்பு நோயாளியிடம் என்ன பேசுவது என்று தனக்குத்தானே யோசித்து முடிவு செய்து கொண்டு புறப்பட்டான். நோயாளிப் பார்த்து உடன்பு எப்படி இருக்கிறது? என்றால் குணமடைந்து வருகிறது என்று நோயாளி சொல்லுவார் – ரொம்ப சந்தோஷம் என்று பதில் சொல்லலாம். எப்போது குணமடையும் என்று கேட்டால் கூடிய சீக்கிரம் குணமடைந்துவிடும் என்பார். அப்படியே ஆகட்டும் என்று பதில் சொல்லலாம் என்று எண்ணி சென்றான். அதேபோல் நோயாளியிடம் உடம்பு எப்படியிருக்கிறது? என்று நோயாளியைக் கேட்டான். இழுத்துப் பறித்துக் கொண்டு இருக்கிறது என்று நோயாளி சொன்னார். ‘ரொம்ப சந்தோஷம்‘ என்று செவிடன் பதில் சொன்னானாம் எப்போது குணமடையும் என்றதற்குக் கூடிய சீக்கிரம் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று விடுவார்கள் என்று சொன்னார்கள். ‘அப்படியே ஆகட்டும்‘ என்று செவிடன் பதில் சொன்னான். இதுதான் நான் படித்த கதை. அதை போல – செவிடன் நோயாளியைப் பார்த்ததுபோல – அமைச்சர்கள் மக்களைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நானும் ஒரு கதை சொன்னேன்

அமைச்சர் வெங்கடராமன் – நான் செவிடாகவும் இருக்க வேண்டாம். திரு.அண்ணாதுரை அவர்கள் நோயாளியாகவும் மாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணா – அமைச்சருக்குச் சுவையாக இருக்கும் என்பதற்காக ஒரு உண்மையையும் சொல்கிறேன். நான் கொஞ்சம் செவிடு. தனிப்பட்ட ஆளின் செவிட்டுத்தனமும், குருட்டுத்தனமும் சமுதாயத்திற்க ஒன்றும் நஷ்டமில்லை. அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் கதை சொன்னதைக் கேட்டவுடன்தான் இங்கே கதை கூடச் சொல்லலாம் போலிருக்கிறது என்று நினைத்து நானும் ஒரு கதை சொன்னேன்.

அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் கதை சொல்ல ஆரம்பித்தது இப்பொழுதுதான் என்பதில்லை. அவர் டெல்லி பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த காலத்திலேயே அங்கே ஒரு கதை சொல்லியிருக்கிறார். பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து ஆலயத்தில் மாட்டப்பட்டிருக்கும் படங்களையெல்லாம் காட்டினார். ஆண்டவன் மீது நம்பிக்கையுள்ளவர்கள் நடுக்கடலில் போகும் போது கப்பல் மூழ்கிவிட்டதையும் பிறகு ஆண்டவன் அருளால் அவர்கள் தப்பியதையும் காட்டும் படங்களை அவனுக்கு அந்தப் பாதிரியார் காட்டினார். அப்படியானால் ஆண்டவன் நம்பிக்கையுள்ளவர்கள் ஆண்டவனைத் தொழுதுவிட்டுக் கடலில் மூழ்கிச் செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம். இதுதான் அவர் சொன்ன கதை! அதைப் போல மத்திய சர்க்கார் பட்ஜெட்டில் ஏழைத் தொழிலாளர்களுக்கு வசதிகள் எங்கே – வீடில்லாத பாட்டாளி மக்களுக்கு வீடு எங்கே காட்டுங்கள் என்று அப்போது கேட்டார், திரு.வெங்கட்ராமன் அவர்கள். அதே கேள்வியை நான் இப்போது திரு, வெங்ட்ராமன் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், எங்கே வீடில்லாதவர்களுக்கு வீடுகள்?

உங்கள் எண்ணம் ஈடேறாது!

மிகப் பொருத்தமான நியாயங்களைச் சொல்லி வாதாடினாலும் ஆட்சியிலிருப்பவர்கள் அலட்சியம் செய்துவிடுவது அரசியல் அல்ல – அறமல்ல. அவர்களுடைய எண்ணம் ஈடேறாது என்று கூறிக்கொள்கிறேன்.

சமுதாய நலத் திட்டம் பற்றிப் பலர் பேசினார்கள். என் கட்சியிலே உள்ளவர்கள் கூட, சமுதாய நலத்திட்ட அதிகாரிகள் தங்களுடன் நல்ல முறையில் ஒத்துழைப்பதாக என்னிடம் கூறினார்கள். ஆனால் அதேபோல் எல்லா இடங்களிலும் இல்லை. அத்திட்டம் பெரிய அரசியல் விளம்பரமாகத்தான் பல இடங்களிலே நடக்கிறது. அதுவும் தக்க பலனைத் தராது.

இறுதியாக நான் சொல்லிக் கொள்கிறேன் – இங்கு எடுத்துச் சொல்கிற பிரச்சினைக்குப் பதில் சொல்லாமல் புதுப் பிரச்சினைக்குப் போய்விடாதீர்கள்? நான் சொல்லுவதை விட்டு விட்டு திராவிட நாடு கிடைக்குமா? பார்ப்பனர் பற்றி என்ன சொல்கிறோம்? சுதந்தரா கட்சி பற்றி எங்கள் கருத்து என்ன? என்று நீங்கள் பேசுவீர்களேயானால் அதற்குப் பதில் சொல்ல ஊடே ஊடே நாங்கள் பேச வாய்ப்பு இருக்காது உங்களுக்கிருக்கின்ற ‘பாராமன்றத் திறமையைப்‘ இதற்குப் பயன்படுத்தாதீர்கள்.

முன்னேர் வழியில் பின்னேர்

நாங்கள் எடுத்துச் சொல்லுகின்ற பிரச்சினை பற்றிச் சொல்லுங்கள். என்.ஜி.ஓக்கள் பற்றித் திட்டவட்டமான முடிவைச் சொல்லுங்கள். வரிக்கும் வருவாய்க்கும் எத்தனை சதவிகிதம் என்ற புள்ளிவிவரத்தைத் தரவேண்டும் எனக் கேட்டும் கொள்கிறேன். விலைவாசியைக் கட்டுப்படுத்த என்ன உத்தரவாதம் தருகிறீர்கள்? எல்லாப் பெருந்தொழிலையும் மற்றவரிடம் ஒப்படைத்துவிட்டுப் பனை ஓலை முடையும் தொழிலை மட்டும்தான் வைத்துக் கொள்ளப் போகிறீர்களா? இரும்புத் தொழிற்சாலை வருமா? சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா? என்பதற்கெல்லாம் விடிவு – விமோசனம் வழி பிறக்கும் என்பதைச் சொல்லுங்கள். அதைவிட்டு என் வாதத்திலேயே ஒரு செங்கல்லைப் பிடுங்கி வாதம் சரிந்துவிட்டது என்று சொல்ல முயலாதீர்கள் நேடியான சமாதானத்தைத் தரவேண்டும்.

இந்த ஆண்டில், எல்லா மாநிலங்களிலும் வெளியாகியிருக்கும் பட்ஜெட்டுகளில் புதுவரி இல்லை. அதைப் பின்பற்றித் தான் இந்த மாநிலத்திலும் புதுவரி போடவில்லை. இதில் வியப்பில்லை, முன்னேர்பேல் பின்னேர் போகிறது. இதில் சாமர்த்தியத்திற்கு வழியில்லை என்று சொல்லி முடிக்கிறேன்.

(நம்நாடு - 17.3.60)