அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘ஒன்றுபடுவோம்-ஒற்றுமை காப்போம்’

சென்னை பிப்-27. அண்மையில் நடைபெற்ற சில சம்பவங்களின் காரணமாகக் கழகம் அழிந்தே போய்விடும் என்ற இழி தன்மை கொண்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் வகையில் கழக முன்னணித் தோழர்களிடையேயும் கழகக் காவலர்கள் அனைவரிடையேயும் தோழமை உணர்ச்சியும், கட்டுப்பாட்டில் நம்பிக்கையும் கடமையாற்றுவதில் புதியதோர் ஆர்வமும் இன்று முதல் உருப்பெற்றிருக்கிறது என்று கூறின் மிகையாகாது.

அண்ணா அவர்களின் சுட்டுவிரல் அசைந்தால் கழகத்தில் ஈடுபாடு கொண்ட இலட்சக் கணக்கானவர்கள் அவ்வழி நின்று தலைவணங்கிப் பணிபுரிவர் என்பது வெறும் வார்த்தை ஜாலமல்ல; அழியாத அழிக்க முடியாத உயிரோட்டம் கொண்ட உண்மையாகும் என்பதை நேற்றுச் சென்னையை அடுத்த திருவொற்றியூர் மாங்காடு சத்திரத்தில் நடைபெற்ற தி.மு.கழகத் தனிப்பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவைக் கண்டு கழக ஆதரவாளர்களும் பொதுமக்களும் காட்டிய அளவிட முடியாத மகிழ்ச்சியும் ஆரவாரமும் எடுத்துக்காட்டின.

கண்ணியம் காப்பாற்றப்படும்
கழகத் தோழர்களிடையே காணப்பட்ட கருத்து வேற்றுமைகள் அறவே மறைந்து கழகத்தின் எதிர்கால ஆக்கப் பணிகளுக்கான வழிவகைகளைக் காண 26.2.61 அன்று சென்னைத் திருவொற்றியூர் மாங்காடு சத்திரத்தில் தி.மு.கழகத் தனிப் பொதுக்குழுக் கூட்டம் பொதுச்செயலாளர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செயலாளர்களான கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், இரா.நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு, க.அன்பழகன், பொருளாளர் மு.கருணாநிதி மற்றம் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் நாடெங்குமுள்ள கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்களும் பொதுமக்களும் கூட்டம் நடந்த கட்டிடத்திற்கு முன்பு கூடியிருந்தனர்.

கழகத் தோழர்கள் மனமாற்றமடையவும் கழகத்தில் ஒற்றுமை ஏற்படவும் பலாத்காரம் போன்ற வன்செயல்கள் கழகத்திலிருந்து களையப்பட வேண்டுமென்று உண்ணா நோன்பு மேற்கொண்ட தோழர் ஈ.வே.கி.சம்பத் அவர்கள் விரும்பியதை ஒட்டி, அண்ணா அவர்கள் இவைகளில் யாருக்கும் கருத்த வேறுபாடு இருப்பதற்கில்லை என்றும், கழகம் கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும் காப்பாற்றப்படுமென்றும் உறுதி அளித்தார்கள்.

கழகத் காவலர்கள் கூட்டம்
இவைகளைப் பற்றி ஆராய ஒரு தனிக்கழகக் காவலர் கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்றும் அண்ணா அவர்கள் விரும்பினார்கள். அக்கூட்டத்தில் கழக முக்கியஸ்தர்களிடம் இதற்கான உறுதிமொழியைப் பெறுவதென்றும், அந்த வாக்குறுதியின் பேரில், தோழர் சம்பத் அவர்கள் உண்ணா நோன்பை நிறுத்தி விடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இக்கூட்டம் கூடுவதற்கு முன்பே, தோழர் சம்பத் அவர்கள் அண்ணா அவர்களிடம் உறுதி மொழி பெற்று 25 ஆம் நாள் மாலை தமது உண்ணாநோன்பை முடித்துக்கொண்டார்.

கழகக் காவலர்கள் கூட்டம் இன்று மாலை கூடியபோது பொதுச்செயலாளர் அண்ணா அவர்கள் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியைப் பலத்த ஆரவாரத்துக் கிடையே வெளியிட்டார்கள்.

பின் அண்ணா அவர்கள் கழகத்தில் வளர்ந்துள்ள நிலையைக் குறித்தும், கருத்து வேறுபாடுகளினால் அவ்வப்போது ஏற்பட்ட மோதல்களையும் நெருக்கடிகளையும் விளக்கி உரையாற்றினார்கள். எல்லாப் பிரச்னைகளும் அலசி ஆராயப்பட்டன.

வன்செயலைக் களைந்தெறிக!
அண்ணா அவர்கள் பலாத்கார மனப்பான்மை வளருவதை மிக வன்மையாகக் கண்டித்தார்கள். திருச்சி சம்பவத்தைச் சுட்டிகாட்டி இத்தகைய சூழ்நிலை கழகத்தில் ஏற்படுவதை வன்மையாகக் கண்டித்தார்கள்.

இத்தகைய பலாத்கார மனப்பான்மை வளருவதை வேரோடு கல்லி ஏறிய வேண்டுமென்றும் அதற்கு இக்கூட்டத்தில் உறுதிமொழி அளிக்க வேண்டுமென்றும், அண்ணா அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

அண்ணா அவர்களின் இந்த வேண்டுகோளுக்குக் கழகம் காவலர்கள், உடனடியாக ஒப்புதல் அளித்தார்கள்.

நண்பகல் உணவுக்குப் பின் மீண்டும் மாலை 4 மணிக்குக் கூடடம் கூடியது. அண்ணா அவர்கள் காலையில் ஆற்றிய உரையினைத் தொடர்ந்து ஆற்றினார்கள்.

கழகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற போக்கும் நோக்கமும் ஏற்பட்ட சூழ்நிலையை விளக்கினார்கள்.

வன்மையான எச்சரிக்கை
“கழகத்தின் நிர்வாகத்திலுள்ளவர்களைப் பற்றி வீண் வாதங்களையும் குற்றச்சாட்டுகளையும் தனிப்பட்ட குரோத உணர்ச்சிகளையும் மேடைகளிலும் பத்திரிகைகளிலும் பேசியும் எழுதியும் கழகத்தின் திட்டங்களையும் கழக முக்கியஸ்தர்களையும் குறை கூறியும் கழகப் பேச்சாளர்களும் பத்திரிகையாளர்களும் செய்த தவறு பலாத்கார மனம் படைத்தோரும் குறும்பு மனம் படைத்தோரும் சக்திபெற வாய்ப்பளித்து விட்டது என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இத்தகைய சூழ்நிலை கழகத்தில் வளருவதைத் தடுக்கவும் அவைகளை வேரோடு களைந்தெறியவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அண்ணா அவர்கள் மிக வன்மையாக எச்சரித்தார்கள்.

இந்த எச்சரிக்கையைக் கழகக் காவலர்கள் மிக உற்சாகத்தோடு மகிழ்ச்சியோடும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.

இத்தகைய செயல்களுக்குக் காரணமாயிருந்தவர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரியப்படுத்த வேண்டுமென்ற அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்கி ஏ.வி.பி. ஆசைத்தம்பி, எம்.எல்.ஏ அவர்களும் கண்ணதாசன் அவர்களும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

ஒன்றுபட்டுப் பணிபுரிவோம்!
கழகக் காவலர்களும் பொதுச்செயலாளர் அவர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க மு.கருணாநிதி அவர்களும் எஸ்.எஸ்.ஆர் அவர்களும் தங்கள் விலகல் குறித்துப் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் அனுப்பியமைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் தங்களது விலகல்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசுகையில் புதிய கருத்துகளையும் புதிய திட்டங்களையும் வரவேற்பதாகவும், ஆனால் அவை முதலில் தம்மிடமோ அல்லது பொதுக்குழுவிலோ தனி மாநாட்டிலோ வைக்கப்பட வேண்டும் என்றும் கழகக் கொள்கைகளுக்கு முரணான கருத்துகளையும் திட்டங்களையும் அனுமதிக்க முடியா தென்றும் அறிவித்தார்கள்.

இறுதியாகக் காவலர்கள் அனைவரும் எழுந்து நின்று “ஒன்றுபட்டுப் பணி புரிவோம்! வன்செயலை வேரோடு களைவோம்! ஒழுங்கீனத்தைத் தகர்த்தெறிவோம்! பகையுணர்ச்சி தோன்றவே தோன்றாது. ‘ஒற்றுமை நீடிக்க உழைப்போம்’ திராவிட நாடு திராவிடருக்கே! அறிஞர் அண்ணா வாழ்க” என்று உணர்ச்சி கொப்பளிக்க முழங்கினார்கள்.

இந்த ஒற்றுமைச் செய்தி கேட்டு உற்சாகம் கொண்ட பொதுமக்கள் பொதுக்குழுவிலிருந்து தலைவர்கள் திரும்பும் போது அவர்களது கார்களில் மலர்களையும் மிட்டாய்களையும் கற்கண்டுகளையும் வீசி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

(நம்நாடு - 27.2.61)