அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஒன்றுபட்ட இதயமே நமது ஒரே படைக்கலன்

அண்ணா அவர்களின் உருக்கமான கனிவுரை
“எந்தத் தம்பியையும் விட்டுவிட என் மனம் இடம் கொடுக்காது. நாம் இருந்தால் அனைவரும் ஒன்றாக இருப்போம் இல்லையேல் ஒன்றாக மடிவோம்.
“திராவிட நாடு விடுதலையைப் பெற முடியாவிட்டால் நாம் அனைவரும் ஒரு மண்டபத்துக்குள் ஓர் அறையில் அமர்ந்திருப்போம். நீண்ட நாளைக்கு பிறகு அந்த மண்டபத்தை யாரேனும் திறந்து பார்த்தால், நம்முடைய பிணங்களைத்தான் பார்ப்பார்கள். இந்த உறுதியைப் பெற்றாலொழிய நாட்டை மீட்கமுடியாது.

“நமக்குப் பிரேசிலிலிருந்து பீரங்கிகள் வரவில்லை. அர்ஜென்டைனாவிலிருந்து சுழல் துப்பாக்கிகள் வரவில்லை. அமெரிக்காவிடமிருந்து பணம் வரவில்லை. நமக்குள்ள ஒரே ஒரு படைக்கலம் ஒன்றுபட்ட இதயம்தான்! அதைவிட வேறு ஒரு கருவி படைக்கலன் மார்க்கம் இல்லை.

“எதிரிகளே! எனது தம்பிமார்களுக்குள்ளிருக்கும் குடும்பப் பாச உணர்வை அருள்கூர்ந்து சிதைக்காதீர்கள். அதைப்போன்று உலகில் மதிப்புப் பெற்றது வேறு ஒன்றில்லை.

வேறு எங்கே உண்டு இந்தப் பாசம்?
“நேற்று என் கரத்தில் கண்ணதாசனின் கண்ணீர் சொட்டியது. என் கண்ணீர் இன்னொருவர் மீது பட்டது இப்படி ஒருவருக்கொருவர் கண்ணீரால் கலந்திருக்கிறோம். அந்தப்பாச உணர்ச்சியால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். உலகில் வேறு எந்தக் கட்சியிலும் இந்தப் பாச உறவு இருக்க முடியாது என்று அண்ணா அவர்கள் சென்னை-மயிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

“இந்தக்கழகம், தலைவர்களுக்கு இருக்கும் அறிவாற்றலாலும் அவர்கள் பெற்றுள்ள புகழாலும் வளர்ந்ததல்ல நீங்கள் அறிவாற்றல் படைத்தவர்களாக, வீரம் செறிந்தவர்களாக இன மரபு அறிந்தவர்களாக எண்ணற்றவர்கள் இருப்பதால்தான் இந்தக் கழகம் ஏற்றம் பெற்றிருக்கிறது.

இதயத்தை அகற்றிப் பார்க்கத் தயங்கேன்!
“இந்தக் கழகத்திலிருந்து யாராவது விலகிவிட எண்ணினால் மாற்றார் மனதிலே அப்படிப்பட்ட ஓர் ஆசை ஏற்படுமானால் நம்மிடம் கூடச் சிலருக்கு ஐயப்பாடு ஏற்படுமானால் அதற்கான காரணத்தை இதயத்தை அகற்றிப் பார்க்கத் தயங்கமாட்டேன்.

“இங்கே நண்பர் என்.வி.நடராசன் அழுதுகொண்டே கேட்டார். “அண்ணா! நீங்கள் போய் விடாதீர்கள்” என்று இதே என்.வி.நடராசன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு கட்சியிலிருந்து கொண்டு நீ எங்கள் பேட்டைக்கு வராதே என்று பெத்து நாய்க்கன் பேட்டையில் முழங்கினார். இப்பொழுது இவர் என் அருமைத் தம்பிகளில் ஒருவராக தி.மு.கழகம் எப்படிப்பட்ட நிறைந்த நெஞ்சத்தைக் கொண்டவர்களால் நடத்தப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.

வேதனைகள் தீர்ந்தன!
நம் கழகத்தில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு வேதனைகளெல்லாம் அடியோடு ஒழிக்கப்பட்டன. எனது அருமைத் தம்பியான சம்பத், நேரடியாக உண்ணா நோன்பு மேற்கொண்டார். சம்பத் மனத்திலே ஏற்பட்ட எண்ணத்தை நிறைவேற்ற உறுதியளித்து, சம்பத்தின் உயிரைப் பிழைக்க வைத்து விடுவேனா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.

“உண்ணா நோன்பை நிறுத்திவிடு” என்று நான் கேட்டபோது பதில் பேசாது, அக்கம் பக்கத்தில் பார்த்து விட்டுப் பாசத்தோடு என்னைச் சம்பத் பார்த்தார். அந்தப் பார்வை மூலம் சம்மதம் தெரிவித்த நாளை, என் வாழ்நாளிலேயே நான் பெற்ற எல்லா வெற்றியை யெல்லாம்விட பெரிய வெற்றி பெற்ற நாளாக நான் கருதுகிறேன். என் தம்பியின் உண்ணா நோன்பை அன்பால் தடுக்க முடிந்தது. அந்தப் பெரிய வெற்றியை நினைத்து மகிழ்கிறேன்.

புதிய அத்தியாயம் துவங்கியது
அண்ணன்-தம்பி போன்ற உறவுப் பாசத்தை நேற்றைய தினம் மேலும் பெருக்கிக் கொண்டோம். நேற்று ஒரு புதிய அத்தியாயத்தையே துவக்கிச் சேர்த்திருக்கிறோம்.

‘நான் அரசியல் புத்தகங்களைப் படித்துவிட்டதால் கட்சி நடத்துபரனுமல்ல, நாம் நடத்துகிற இயக்கம் வெறும் அரசியல் இயக்கமும் அல்ல. நாட்டை விடுவிக்க நாம் கட்சி நடத்துகிறோம். இது ஓங்கி ஓய்யாரமாக வளர்ந்திருக்கிறது; மணிக்கு மணி கணத்துக்குக் கணம் வளர்ந்து வருகிறது.

“நம்மிடையே ஏற்பட்டிருக்கிற பாச உணர்ச்சி என்றும் வெற்றி பெறும் இதை நான் அன்றும் சொன்னேன்-இன்றும் சொல்கிறேன் என்றும் சொல்வேன். இதை மறந்து விடக்கூடாது.

உள்ளக் கிளர்ச்சியின் எதிரொலி
“நான் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தபோது, வீதி ஓரத்தில் ஒட்டுச் சுவர்மீது ஏறிக்கொண்டு பற்றிக் கொள்ளவும் இடமில்லாமல் ஒரு கையால் சுவரின் கற்களைப் பிடித்துக் கொண்டும் தொங்கிக் கொண்டும் நின்றிருந்தவர்களை யெல்லாம் கண்டேன். அவர்கள் என்னைக் கண்டதும் இருகரங்களால் கையொலி செய்து வரவேற்றனர். அவர்கள் ஏறி நின்ற சுவர், கனம் தாங்காமல் இடிந்து விழுந்தாலும் விழக்கூடும். அவர்கள் நின்றிருந்த சாலையோரத்தில் சில இடங்களில் குளம் உண்டு. பள்ளம் உண்டு படுகுழி உண்டு. இது அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அவர்கள் என்னைப் பார்த்தவுடன் உள்ளக் கிளர்ச்சியினால் உணர்ச்சி வசப்பட்டு ‘கை தவறினால் என்ன ஆகும்?’ என்றுகூடக் கவலைப்படாமல் கையொலி செய்து வரவேற்றனர்.

“நேற்று நாங்களெல்லாம் தேம்பித் தேம்பி அழுதோம். அதை இங்குத் தெரிவிப்பதில் நாங்கள் யாரும் வெட்கப்படத் தேவையில்லை. அதைவிடப் பெரிய பெருமை எங்களுக்கு வேறு இல்லை.

இரட்டைக் குழந்தையைப் போன்றவர்கள் நாம்!
“இரட்டைக் குழந்தை பிறந்தால்-ஒரு குழந்தைக்குச் சளி பிடித்தால் மறு குழந்தைக்கும் சளி பிடிக்கும். ஒரு பிள்ளைக்கு மாந்தம் வந்தால் மறு குழந்தைக்கும் மாந்தம் வரும். ஒரு குழந்தைக்குக் கண்ணில் கோளாறு வந்தால் மறுகுழந்தைக்கும் அந்தக் கோளாறு வரும். இரட்டைக் குழந்தைகள் போன்றவர்கள்தான் நாம் இருக்கிறோம். நம்மில் யாருக்கு வலி வந்தாலும் மற்றவருக்கும் வரும்.

கழகத்தில் சிறுசிறு பூசல்கள் ஏற்பட்டால் அவற்றைப் பூசல் என்றுகூட நான் கொள்ளவில்லை. ஆசைத்தம்பிக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டால் உடனே எனக்கு அது சங்கடத்தைத் தரும். எனக்குச் சங்கடம் என்றால் அது மதியழகன் அவர்களுக்கு அதிர்ச்சியைத் தரும். மதியழகனுக்கு அதிரிச்சி என்றால் கண்ணதாசன் கலங்குவார். கண்ணதாசன் கண்ணீர் சிந்தினால் எம்.ஜி.ஆருக்குக் கவலை வரும். எம்.ஜி.ஆருக்குக் கவலை ஏற்பட்டால் எஸ்.எஸ்.ஆர் வருந்துவார். இப்படியே சொல்லிக்கொண்டு போனால் இங்கே மேடையிலே வந்து அமர்ந்திருக்க முடியாத நிலையில் உள்ள சம்பத் அவர்களையும், இங்கே எதிரிலே வீற்றிருக்கும் உங்களுடைய பெயர்களையும் உங்கள் வீடுகளிலுள்ள எண்ணற்றவர்களையும் திராவிடத்திலுள்ள அத்தனைப் பேரையும் குறிப்பிடலாம். நாம் அத்தனைப் பேரும் இரட்டை பிறப்பு போன்றர்கள் ஆவோம்.

பெருமைப்படத்தக்கது-வெட்கப்படத்தக்கதல்ல!
“எங்களை விட்டுப் போய்விடாதீர்கள் அண்ணா” என்று என்.வி.நடராசன் அவர்கள் கேட்டு“ககொண்டார். நான் போய் விடுவேன் என்று நான் நேற்று சொன்னது உண்மையாகவே போய்விடுவதற்காக அல்ல; எத்தனை முகங்கள் வேதனைப்படுகின்றன என்பதைப் படம் பிடிக்கத் தான். நான் பிடித்த படம் பெருமைப்படத்தக்கது வெட்கப் படத்தக்கதல்ல.
நாம் நடத்துவது வெறும் அரசியல் கட்சியல்ல; அப்படியானால் இந்த மாவட்டத்தில் இவரை அழை அந்த மாவட்டத்தில் அவரை அழை, இவருக்கு இதைக்கொடு அவருக்கு அதைக்கொடு அவர்களுக்குக் கொடுத்தது போதும். மிச்சமிருப்பதை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடலாம்.

நாம் அத்தனை பேரும் புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்கள்.

அனுபவித்த தொல்லைகள் கொஞ்சமா?
நம்முடைய மதியழகன் அண்ணாமலை நகரில் படித்துக் கொண்டிருந்தபோது சில படுகாலிகளினால் தாக்கப்பட்டார். கருணாநிதியைப் புதுவைக் கடைவீதியிலே சில காலிகள் அடித்துப் போட்டுவிட்டுக் ‘கருணாநிதி பிணமானான். அவன் பிணத்தைக் கழுகு கொத்தட்டும்’ என்று கூறிச் சென்றார்கள். இராசேந்திரன் தேனியிலே தேர்தலுக்கு நின்றபோது படுகொலைக்கு ஆளாக இருந்தார். ஆசைத்தம்பி இயக்கத்துக்கு மட்டுமல்ல-குடும்பத்திலும் என் ஆசைத்தம்பி அவர். பல தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதோ அமர்ந்திருக்கும் மெல்லிய உருவம் என்.வி.நடராசன் குன்றத்தூரிலே துப்பாக்கி பிரயோகத்துக்குப் பலியாகி செத்துவிட்டார் என்ற செய்தியை நான் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி இல்லத்திலிருந்த நேரத்தில் கேள்விப்பட்டு அவர் வீட்டிலேயே படுத்துப் புரண்டு அழுத வேதனையை என்னாலே மறக்க முடியவில்லை. கல்லக்குடிப் போராட்டத்தில் கண்ணதாசனைச் சுட்டுவிட்டார்கள் என்று நான் சிறையிலே இருந்த நேரத்தில் சொல்லக்கேட்டு, ஒருநாள் முழுவதும் அவர் சாகவில்லை என்ற செய்தி கிட்டும் வரை உணவருந்தாமல் தவித்திருக்கிறேன்.

பாச உணர்ச்சியின் எழிலோவியம்!
“தம்பிகளுக்குள்ளே இருக்கும் இந்தப் பாசம்தான் நமக்குள்ளே ஒட்டு உறவை வளர்க்கிறது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் பாகப்பிரிவினைக்காகத் தகராறு வரும். ஆனால் நாம் அனைவரும் வெவ்வேறு தாய்களுக்குப் பிறந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல இருக்கிறோம். நமக்குள் எந்தத் தகராறும் வராது; வரவிடமாட்டேன். இந்தப் பாச உணர்ச்சியை நேற்றுத் திருவொற்றியூரில் கண்டேன். இன்று அதன் எழிலோவியத்தை இங்குக் காண்கிறேன்.”

“மலையாலத்தில் ‘நவரகிழி’ என்ற ஒரு வைத்தியமுறை இருக்கிறது. பல்வேறு மூலிகைகளையெல்லாம் கொண்டு வந்து அவற்றைத் தைலமாக்கி அதை பெரிய தொரு பாத்திரத்தில் ஊற்றி அதற்குள் நோயாளியை மூழ்க வைத்து குத்திக் குத்தி நாடி நரம்புகளெல்லாம் புதிய வலிவு பெறுமாறு செய்வார்கள்.

புது வலிவும் பொலிவும்!
“அதேபோல் நமது இயக்கத்திலும், ‘நவரக்கிழி’ நடந்திருக்கிறது. வேதனைகளையெல்லாம் தைலமாக்கி மனமாச்சரியம் என்ற குத்துக்களால் குத்தி நமக்குப் புதுவலிவும் பொலிவும் உண்டாக்கியிருக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சி!

“நேற்று நான் திருவொற்றியூரில் நடந்த காவலர் கூட்டத்துக்குள் நுழைந்தபோது கிழவன் போல இருந்தேன் வெளியே வரும்போது வாலிபன் போல் இருந்தேன் என்பதாக நண்பர் கோவிந்தசாமி பேசுகையில் குறிப்பிட்டார். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறேன். (மேலே போர்த்தியிருந்த சரிகை வேட்டியைக் காட்டிப் புன்முறுவலுடன் கூறினார்) நாம் அனைவரும் வாலிபராக புதிய வலிவோடும் பொலிவோடும் இன்று இருக்கிறோம்.

“எனவே ‘சென்று வாருங்கள்’ ‘வென்று வாருங்கள்’ எனக்கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

(நம்நாடு - 28.2.61)