“நான் இங்கு வந்திருப்பது
இங்கு நடைபெறுகின்ற அறப்போரை ஆதரிக்கத்தான், சென்னைச் சிறைச்சாலை
அனுபவங்களை நாங்கள் அனுபவித்தாகிவிட்டது. இங்குள்ள சிறைச்சாலை
அனுபவங்களை அனுபவிக்கத் தயாராக இருக்கிறோம். இங்கு நடைபெறுகிற
போராட்டத்தில், எல்லாக் கட்சிகளுடன் சேர்ந்து செயலாற்ற தி.மு.கழகம்
தயாராக இருக்கிறது.“
ஒரு கம்யூனிஸ்டு நண்பர் என்னிடம்
“திராவிட நாடு கோருகிற நீங்கள், மலையாளிகள் கொடுமையை எதிர்த்துத்
திருவாங்கூர் தமிழக மக்கள்“ நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பீர்களா?“எனக்
கேட்டார். பெரும்பான்மையான மலையாளிகள், தமிழருக்கு அநீதி
விளைவித்தால், அதையும் எதிர்த்துப் போராடுவோம், அதுபோலவே,
பெரும்பான்மையான தமிழர்களால் மலையாளிகளுக்குத் தீங்கு நேர்ந்தால்
அதையும் எதிர்த்துப் போராடுவோம்.
மயிலும் கிளியும், மாடப்புறாவும்,
சோலையிலே கூடி வாழட்டும் என்று நான் கூறினேன் என்றால், ஒன்றையொன்று
கொத்தித் தின்ன வேண்டுமென்றா கூறினேன் என்று நாகர் கோவிலில்
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தி.மு.க. பொதுச்
செயலாளர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது.
டில்லி சர்க்கார், தயாரா?
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘,
‘எல்லோரும் இன்புற்றிருப்பதல்லாமல் வேறொன்றும் அறியேன்
பராபரமே‘, என்ற தமிழனின் சொல்லைக் கண்டு அதற்கு நியாயம்
வழங்க – நீதி வழங்க டில்லி சர்க்கார் தயாராக இல்லைய!
புதிய சீனாவிற்கு, கொரியாவிற்கு,
வியட்நாமிற்கு நீதி கோருகிற நேரு பண்டிதர், தமிழனுக்கு நீதி
வழங்காதது ஏன்?
திரு. நேசமணி சிறையில் இருந்து
வெளிவரும் வரையில் போராட்டத்தை ஆதரிப்போம், அவர் வெளிவ்ந்தவுடன்
பேச்சுவார்த்தைகள் நடத்தி – சகல கட்சிகளும் சேர்ந்து கூட்டாக
விவாதித்து – பொதுவான போராட்டத்தை நட்த்துவோம், எல்லோரும்
போராட்டத்தில் கலந்து கொள்ளத்தக்க ரீதியில் கதவைத் திறந்து
வையுங்கள், போராட்டம் முடிகிற வரையில் கட்டுப்பாட்டுடன்
நடந்து கொள்ளத் தயாராக இருப்பதற்க அறிகுறியாகக் கையொப்பம்
இட்டுத் தருகிறோம்.
போராடத் தி.மு.க. தயார்!
தாயகத்தில் இருந்தும் கூட
1,000 தொண்டர்களை அனுப்புகிறோம். இங்குள்ள அட்குகுமுறைகள்
யாவும் அங்கும் உண்டு. அப்படியானாலும் தமிழர்கள் தாயகத்துடன்
சேர்ந்து வாழ்வதுதான் நல்லது.
‘போராட்டத்தில் கலந்து கொள்ள
தி.மு.கழகம் தயாராக இருப்பதின் அச்சாரமாக ஆகஸ்டு 6ஆம் தேதி
நாகர்கோவிலிலும், செங்கோட்டையிலும், மணிக்கு ஒரு குழுவாக
அனுப்பப்போகிறோம்.
திருவாங்கூர்த் தமிழகப் போராட்டம்
சட்டசபையில் இடம் பெறவோ, பதவிக்காகவோ, மந்திரி சபையைக் கவிழ்க்கவோ
அல்ல!
எனக்குத் திருவாங்கூர் த.நா.காங்கிரசைப்
பற்றிப் பயமெல்லாம், நேரு சமிக்ஞை காட்டினாலும் ஓடிப்போகாமல்
நிற்பார்களா என்ற ஒரே பயம்தான்!
திருவாங்கூர் த.நா.கா. அழைத்தாலும்
சரி, இல்லையானாலும் சரி, திருவாங்கூர் – தமிழகத் தாயகத்துடன்
சேர நடக்கும் போராட்டத்தில் தி.மு.க. தனது பங்கைச் செலுத்தும்.
படை திரட்டி அனப்புகிறோம்!
தி.த.நா.கா. தலைவர்களுடன்
போராட்டத்திற்காகச் சமரசத்திற்கு வர எனக்கு என்ன கட்டளை
கிடைத்தாலும், அதை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்.
பண்டைய தமிழகத்தின் ஒவ்வொரு
மாவட்டத்திலிருந்தும் படை திரட்டி, கால் நடையாக அனுப்பி
வைக்கத் தயார்!
பணமோ தேவை – அதற்காக நாங்கள்
தெருக்கூத்து நடத்திப் பணம் திரட்டித் தருகிறோம்.
(நம்நாடு - 3-8-1954)