கடந்த ஏழாண்டுகளில் காங்கிரஸ்
ஆட்சி சாதித்தவை என்ன? காங்கிரஸ் நண்பர்கள், தங்கள் திறமைக்
குறைவைத் திரையிட்டு மறைக்க, ‘ஆட்சிக் காலம் ஏழாண்டுகள்
தானே, அது போதாது, இன்னும் பொறுத்துக் கொள்ளுங்கள், பசிபோக,
பட்டினி மறைய, பஞ்சம் தொலைய இன்னும் பொறுத்திருங்கள்‘, என்று
பேசுகிறார்கள்!
மற்ற நாடுகளிலெல்லாம் ஏழாண்டுகளில்
எத்தனை சாதனைகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால்
இவர்கள் கூற்று உண்மைதானா என்பது தெரியவரும், என்று பொதுச்
செயலாளர் அண்ணா குறிப்பிட்டார்.
பொதுச் செயலாளர் அண்ணாதுரை
அவர்கள் 29.8.1954இல், கல்லக்குடி தி.மு.கழக ஆண்டு விழாவில்
ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி 31.8.1954 அன்று வெளியாகியது,
மிகுந்த பகுதி இங்கு வெளியிடப்படுகிறது.
கடந்த உலய யுத்தத்தின் போது,
ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், கிரீஸ் போன்ற
நாடுகள் எல்லாம் பலத்த சேதங்களை அனுபவித்தன.
பூந்தோட்டத்தைத் தந்தான்!
ரஷ்யாவும், பிரிட்டனும், ஜெர்மனியும்,
படுசூரணமாக்கப்பட்ட நகரங்களையும், பாழான மாளிகைகளையும்,
இடிந்துபோன தொழிற்சாலைகளையும், இந்த யுத்தம் முடிந்த ஏழாண்டுக்
காலத்தில் எழில்மிகு நாடுகளாய் யுத்தக் காலத்திற்கு முன்பிருந்ததைவிடச்
சிறப்புற்ற நாடுகளாய்த் தூக்கி நிறுத்திவிட்டன.
ஆனால், வெள்ளையன் இந்த இந்தியத்
துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும்போது, இந்த நாட்டை என்ன
சுடுகாடாகவா ஆக்கிவைத்து வி்ட்டுப் போனான்?
பூந்தோட்டத்தைக் குத்தகைக்கு
எடுத்தவன், மலரைப் பறித்து அனுபவித்துவிட்டு, குத்தகைக்
காலம் முடிந்ததும் பூச்செடிகளை அழிக்காது, தோட்டத்தைத் தந்துவிட்டுச்
செல்வது போன்றே, வெள்ளையனும் இந்த நாட்டை 150 ஆண்டுகள் கொடி
கட்டி ஆண்டுவிட்டு, ஆண்ட காலத்தில் சுரண்டிக் கொண்டு, போகும்
போது நாட்டை அப்படியே தந்துவிட்டுதான் சென்றான், அது மட்டுமின்றி
இந்த நாட்டு மக்களிடம் இரயிலையும், இராணுவத்தையும், விமானத்தையும்,
கப்பலையும் தந்துவிட்டுச் சென்றான்.
திறமையின்மையே காரணம்!
காங்கிரஸ்காரர்கள் ஆட்சிப்
பீடமேறிய பின், எதை மாற்றினார்கள்? எதை மாற்றி, சீர்படுத்தி,
செப்பனிட்டுச் சிறப்பெய்தச் செய்யும் திறன் இவர்களுக்கு
இருந்தது?
கார்டு அளவிலிருந்து கான்ஸ்டபிள்
டிரஸ் வரை, சட்டப்புத்தகம் முதல் பாலர் பள்ளிப் புத்தகம்வரை
எதை இவர்கள் மாற்றினார்கள்?
எந்தக் காரியம் சாதிப்பதில்
இவர்கள் திறமையைக் காட்டினார்கள்?
எனவே, இவர்கள் கடந்த ஏழாண்டுக்
காலத்தில் ஏழைகளுக்கு ஏதும் செய்ய முடியாமற் போனதற்குக்
காரணம், இவர்களின் திறமையின்மையே தவி, காலம் போதாது என்பதல்ல!
மேலும், இன்று காங்கிரஸ் பணக்காரரின்
பாசறையாக, முதலாளிகளின் முகாமாக மாறிவிட்டது.
எப்படி அது ஏழைகளுக்கு நன்மை
செய்ய முடியும்?
என்று பொதுச் செயலாளர் அண்ணாதுரை
அவர்கள் குறிப்பிட்டுவிட்டுத் தென்னாட்டைப் பொறுத்தவரையில்
வடநாட்டுடன் ஒட்டிக் கொண்டிருப்பது, எந்த வகையிலும் லாபமல்ல.
சரியானதுமல்ல, தேவையானதுமல்ல என்பதைப் புள்ளி விவரங்களுடன்
விளக்கித் தென்னாட்டு மக்கள் நல்வாழ்வு பெற்று வாழ்வின்
மூன்று அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைத்
தங்கு தடையின்றிப் பெற, ‘திராவிடம் திராவிடருக்காக வேண்டும்‘
என்று கூறியதுடன் திராவிட நாடு திராவிடர்க்காவது தவறு என்று
பேசுகிறவர்களின் போக்கையும் பொதுமக்களுக்கு உணர்த்திய அவர்கள்,
அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருப்பவர்களின் நாணயமற்ற செயலையும்
அம்பலமாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
(நம்நாடு - 2-9-1954)