அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பண்போடு பழகினோம்!
அன்போடு பிரிகிறோம்!

சட்டமன்றத்தில் அண்ணா அவர்கள் நிதிநிலை அறிக்கையின் மீது இறுதி உரையாகவும், சட்டமன்றத்தின் இறுதி நாளான பிரியாவிடை உரையாகவும் நிகழ்த்திய உரையின் முக்கியப் பகுதிகள் இங்குத் தரப்படுகின்றன.

இம்மாமன்றத்துக்குள் நுழைந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எவ்வளவு வேகமாக நாட்கள் சென்றுவிட்டன என்பதை உறுப்பினர்களும் எண்ணிப்பார்த்து இருப்பார்கள். நேற்றுத்தான் உள்ளே நுழைந்து திரு.கிருஷ்ணராவ் அவர்களின் குழந்தையுள்ளத்தை எண்ணிப் பார்ப்பதுபோல் இருக்கிறது.

இந்த மன்றத்திலுள்ள பல கட்சி உறுப்பினர்களிடையே நல்ல தொடர்புகள் நிலவி வந்துள்ளன. ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டாலும், இம்மன்றத்தில் உள்ள எந்த உறுப்பினரும் கவனிக்கப் படாமல் விட்டுவிடப்படவில்லை. அந்த அளவுக்கு ஒருவரோடு ஒருவர், அறிந்தும் தெரிந்தும் இருக்கிறோம். அவரவர்கள் தாங்கள் தங்கள் கொண்டிருக்கிற கொள்கைவழி நின்று பணியாற்றி இருக்கிறோம். இப்படிப் பணியாற்றிய நாம், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது என்பது ஜனநாயகப் பண்பாகும். இப்படிப் பாராட்டுவதுகூட வேறு எதற்காகவாவது பயன்படுகிறது.

மூன்று குறைகள்!

“நான் சமீபத்தில் பம்பாய் சென்றிருந்தபோது, நிருபர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அவர்கள் தமிழ்நாட்டு அரசைப் பற்றிக் கேட்டபோது, இந்த அரசின் மீது மூன்று குறைகளைத்தான் தெரிவித்தேன். ஒன்று – இந்த அரசு மத மதப்பாகவும் மெத்தனமாகவும் இருக்கிறது. இரண்டு தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்குப் போதிய வலிவைத் தேடிக் கொள்ளவில்லை. மூன்றாவது – தனியார் துறையை வளர்க்கிறார்களே தவிர, அந்த அளவுக்குப் பொதுத்துறையை வளர்க்க முடியவில்லை எனக் கருத்தறிவித்தேன்.

அவர்கள் ஊழலைப் பற்றிக் கேட்டபோது, ‘மத்திய அரசாங்கத்தைப் பற்றிக் கூறப்படும் ஊழல்களைப் பற்றிக் கேள்விப்படும் போது, எங்கள் மாநில அரசு தங்கமானது‘ என்று கூறினேன். இக்கருத்தைத்தான் நாங்கள் சட்டமன்றத்துக்குள்ளும் வெளியிலும் கொண்டிருக்கிறோம்.

திறமைசாலிகள்தான்!

அமைச்சர்களைத் தனித்தனியாக எடுத்துக் கொண்டாலும், அவர்கள் அத்தனைபேரும் திறமைசாலிகள்தான்.

என்னுடைய கட்சியைச் சார்ந்த ஏ.கோவிந்தசாமி அவர்கள் பேசுகையில், சர்க்கார் கட்சியை நடத்திச் செல்லுகிற நிதியமைச்சரை ‘ஏசுநாதர்‘ என்று குறிப்பிட்டார். இதை கேட்டபோது, ‘இந்த ஏசுநாதரிடம் நாம்கூடப் பழகியிருக்கிறோம்‘ என்று ஒரு கணம் மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஏசுநாதரை அவருடைய சீடர்களில் ஒருவன்தான் காட்டிக் கொடுத்தான். அதைப்போல இந்த ஏசுநாதரையும் காட்டிக் கொடுத்து விடக்கூடாது.

எப்பொழுது வெளிப்படும்?

இவ்வமைச்சர்கள், அவரவர்களுக்குள்ள திறமையைப் பயன்படுத்தி, நல்ல ஆற்றலோடு பணியாற்றியிருக்கிறார்கள், இப்படி நான் சொல்வதாலே நாட்டிலே வேறு யாரும் திறமைசாலிகள் இல்லை என்பதல்ல. இவர்களைவிட திறமைசாலிகளும் இருக்கிறார்கள் என்பதையும் கூறுகிறேன்.

இப்பொழுதுள்ள அமைச்சர்களின் திறமை எப்பொழுது வெளிப்படும் என்று கேட்டால் – இப்பொழுதுள்ள எதிர்க்ட்சியைச் சேர்ந்தவர்கள் 50 பேர்கள் என்றம், ஆளும் கட்சியாளர் 150 பேர்கள் என்றும் இருக்கின்ற நிலைமை குறைந்து, ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒன்றையொன்று எட்டிப்பிடிக்கிற அளவுக்குப் பலமுள்ளதாக இருக்கும் பொழுதுதான் சிறப்பாக வெளிப்படும். அப்பொழுதுதான், ஆளும் கட்சிக்கு அடக்க உணர்ச்சியும் எறப்டும் – திறமையும் வெளிப்படும்.

திரு.சின்னதுரை பேசுகையில், எதிர்க்கட்சிகளை பஞ்சபாண்டவர்களுக்கு ஒப்பிட்டு, நாட்டு நலனைத் திரெபதிக்கு ஒப்பிட்டுப் பேசினார். எங்களில் யார் பீமன், நகுலன், சகாதேவன் என்ற சந்தேகம் வந்தாலும் யார் திரெபதி என்ற சந்தேகம் வரக்கூடாது.

பண்பு கெடவில்லை!

பணக்கார வீட்டுப் பிள்ளைகள், பணம் இருந்தாலும் பண்பு கெடாமல் இருப்பதைப்போல், ஆளும் கட்சிக்கு எண்ணிக்கை பலம் இருந்தாலும் பண்பு கெட்டுப் போகவில்லை!

நான் இந்த அவையில் நுழையும் காலத்தில் நிதியமைச்சர் காரசாரமாகப் பேசுவார் – கோபமாகப் பேசுவார் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால், நான் எந்த அளவுக்கு அவரிடம் கோபத்தை எதிர்பார்த்தேனோ எந்த அளவுக்கு எரிச்சலூட்டும் பேச்சை எதிர்பார்த்தேனோ, அந்த அளவைக் காட்டிலும் மிகக் குறைவாகவே இருந்தது. அதுவும் எதிர்க்கட்சிக்கு அவர் மதிப்பும் அளித்து வருகிறார். நாங்கள் கூறிய கருத்துக்களில் நல்லது என்று அவர் எண்ணுவதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

உண்மையான மதிப்பீடு எது?

சமநிலையற்ற நிலையில் செய்யப்படுகின்ற மதிப்பீடு உண்மையான மதிப்பீடு ஆகாது.

எட்டு அமைச்சர்களும் நல்ல முறையில் பணியாற்றி இருககிறார்கள். என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் பாராட்டினார்கள்.

குறிப்பாகக் கல்வித்துறையில், திரு.சுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய பணியும், தொழில்கள் வளர்ச்சியடைய வெங்கட்ராமன் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியும் உள்துறை அமைச்சர் ஆற்றியிருக்கிற பணியும், பழங்குடி மக்களுக்கு நல்ல சேவை செய்துள்ள மராமத்து அமைச்சரிக் சேவையும் சிறப்பானதாகும்.

இவற்றை நான் குறிப்பிட்டுக் கூறும்போது, பிற அமைச்சர்கள் எனது மனதில் இடம்பெறவில்லை என்று எண்ண வேண்டம். ஒன்றிரண்டைக் கோடிட்டுக் காட்டுவதற்காக இதைக் கூறினேன்.

எண்ணிப்பார்க்கட்டும்

இவ்வளவு திறமையுள்ள அமைச்சர்கள், வீடு திரும்பும் வேளையில் பிற மாநிலங்கள் செய்யாத எதை நாம் செய்துவிட்டோம் – அவர்கள் சாதிக்காத எதை நாம் சாதித்து விட்டோம் – பிற மாநிலங்கள் நம்மைப் பார்த்து, ஈவல்லவா புதிய திட்டம்‘ என்று பாராட்டும் வகையில் திட்டம் என்ன தீட்டினோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் நிலைத்து நிற்கத்தக்க – எண்ணிப் பார்க்கத்தக்க எந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறோம் – என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிர்வாக இயந்திரத்தைத் திறமையாக ஒட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அமைச்சர்களிடத்திலே திறமை இருக்கிறது. அந்தத் திறமையைப் பயன்படுத்த முடியாது அளவுக்கு அவர்களுடைய உரிமை கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

உரிமைக்குரலை இழக்காதீர்!

நமது நிதியமைச்சர் இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குப் போக போவதாகவும் அங்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போவதாகவும் அரசியல் ஆரூடக்காரர்கள் கூறுகிறார்கள்.

அப்படி அவர் அங்குப் போவதானாலும் அவர் இந்த பத்து ஆண்டுகளில் பெற்ற பயிற்சியும், திறமையும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டும். அங்குச் சென்று அவர் தமது உரிமைக்குரலை இழந்துவிடக்கூடாது என்று நாட்டு மக்கள் கவலைப்படுகின்றனர்.

மனித இரத்தத்தைக் குடித்துலவும் புலிகள்!

மத்திய அரசிலிருந்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் திரும்பி வருமபோது ஒன்று கூறினார். அதை திதி அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன் – ‘மனித இரத்தத்தைக் குடித்து உலவும் புலிகள் உள்ளன‘ என்றார். இப்படிப்பட்ட புலிகள் உலவும் இடத்துக்கு நமது கோவைச் செல்வத்தை அனுப்பி வைக்கிறோம்.

இப்படிச் செல்லுகின்ற அவர், அங்குள்ள பத்தோடு பதினொன்றாக இல்லாமல், நல்ல இடத்தைப் பெற வேண்டும். அப்படியில்லாவிட்டால் இங்கேயே இருந்து இவர் இந்த நிர்வாக இயந்திரத்தையாவது ஒட்டிச் செல்ல வேண்டும் அவர் எனது நண்பர் என்ற வகையில் இந்த ஆலோசனையைக் கூற உரிமையிருக்கிறது என்று எண்ணி இதைக் கூறுகிறேன்.

இந்த நேரத்தில் மற்றொன்றையும் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். பேரரசில் ஒரு சிற்றரசு போல் நமது நாடு இருப்பதை விடச் சுதந்திர நாடாக இருந்தால். இப்பொழுது திருப்பதைவிடச் சிறப்பாக இருக்குமல்லவா? – என்பதுதான் அது!

புரட்சிகரமான திட்டம் நிறைவேற்றினோமா?

இந்த ஐந்தாண்டுகளில், புரட்சிகரமான திட்டங்கள் எதையும் நிறைவேற்றி வைக்கவி்ல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். ‘நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரவில்லையா?‘ என்று நீங்கள் கேட்கலாம். இது அனைத்திந்தியாவிற்கும் உரிய திட்டம். தனித்தன்மை கொண்ட திட்டம் எதுவும் இல்லை.

நல்ல குடும்பத்தில் – வருகின்ற வருவாய்க்குத் தக்கபடி செலவிட்டுக் குடும்பம் நடத்துவதைப்போல் நீங்கள் நடத்திக் காட்டியிருக்கிறீர்கள்.

நெய்வேலி நிலக்கரி இன்னும் எடுக்கப்படவில்லை சேலம் இரும்பு தூங்குகிறது. இப்படிப் பல காரியங்களை அப்படி இருக்கின்றன.

பிரதிநிதித்துவம் ஏற்பட...

சனநாயகப் பண்பில் – ஆளுங்கட்சி அமைச்சரவை அமைந்திருப்பதுபோல், எதிர்க்கட்சியிலும் ஒரு குழு அமைத்து இன்னார் இன்னாருக்குப் பதில் சொல்ல வேண்டும். இவருடைய விவகாரங்களை இவர் கவனித்துப் பதில் அளிக்க வேண்டும்‘ என்ற முறை இருக்க வேண்டும்.

இதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால் உண்மையான சனநாயக முறை இம்மன்றத்திலே ஏற்பட வேண்டுமென்றால், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லாக் கட்சிக்கும் சரியான பிரதிநிதித்துவம் இருக்கும். பிரெஞ்சுப் பேரறிஞர் ஒருவர் இதைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்தை ஓய்வு இருக்கும்போது நிதியமைச்சர் படித்துப்பார்க்க வேண்டும்.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் இருந்திருக்குமானால் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்ற காங்கிரசுக்கட்சி 150 இடங்களைப் பெறுவதும் 17 இலட்சம் வாக்குகளைப் பெற்ற தி.மு.க. 15 இடங்களை மட்டும் பெறுவதுமான தவறு ஏற்பட்டிருக்காது. ஆனால், விகிதாச்சாரப் பிரதிநித்துவம் நிலை ஏற்படுமானால், கட்சிகளுக்கிடையே சமநிலையும் ஏற்படும். நாட்டு நிலையைச் சரியாகப் படம்பிடித்துக் காட்டுவதாகவும் அமையும். இப்படிப்பட்ட கருத்துக்கு நான் மட்டும் வரவில்லை. கம்யூனிஸ்டுக் கட்சியும் இக்கருத்தில் சிந்தனை செலுத்தியிருக்கிறது.

இயற்கையும் கூட!

எதிர்க்கட்சிகளில் – சின்னதுரை பேசியதற்குக் கல்யாண சுந்தரமும், கல்யாணசுந்தரம் பேசியதற்கு வி.கே.இராமசாமியும் – இப்படிப் பதிலளிக்கச் செய்து கடைசியாக மிஞ்சுபவரை, ஆளும் கட்சி ஒரே ரவுண்டில் வீழ்த்திவிடலாம் என்றுதான் இந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த வந்திருக்கிறது. இது இயற்கையும் கூட!

இம்மன்றத்தில் திறமையாகவும், கட்டுப்பாடாகவும் கண்ணியமாகவும் செயல்பட்டு வந்துள்ளதை மீண்டுமொரு முறை தெரிவித்து, இதில் திராவிட முன்னேற்றக் கழகம் – வெளியே எவ்வளவுதான் ஆத்திரப்பட்டாலும் – இந்த மனற்த்திலே பொறுப்புள்ள எதிர்க்கட்சிகயாக இருந்து மன்றத்தின் கண்ணியத்தைக் காத்துத் திறமையாகச் செயல்பட்டு வந்துள்ளது என்பதையும் எடுத்துக் கூறுகிறேன்.

நாட்டிலே – எதிர்க்கட்சிகளால் எதைச் செய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும், சுலபமாக அமைதியைக் குலைக்க முடியும். இப்படி அமைதியைக் குலைத்து, போலி கௌரவத்தையாவது ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அப்படிப்பட்ட நிலை எதுவும் நமது மாநிலத்தில் இல்லை.

குழந்தையின் கன்னத்தில் தட்டுவதுபோல்...

எதிர்க்கட்சிகளிடையே விவாதம் நடைபெறும்போது, சூடாக இருக்கும், கொடுக்கும்போது சூடாக இருக்கும் வாங்கும்போதும் சூடாக இருக்கும். ‘ஆனால், இவைகள் எல்லாம் எப்படி இருக்க வேண்டுமென்றால், குழந்தையின் கன்னத்தில் தட்டியதைப்போல இருக்க வேண்டும்.

நாங்கள் சட்டசபைக்கு வந்தபோது, ‘பத்து ஆண்டுக் காலத்துக்கு திராவிடநாடு கோரிக்கையை ஒத்திப் போடுங்கள் என்று மோகனராகத்திலும், பின்னர் ‘உங்களை விட்டேனோபார்?‘ என்று அடானா ராகத்திலும், ‘இனி இந்த இடத்திலேயே இல்லை‘ என்று கல்யாணி ராகத்திலும் நிதியமைச்சர் பாடினார்.

நாங்கள் எங்களுக்குப் பிடித்த – நம்பிக் கொண்டிருக்கிற கருத்துக்களை எடுத்துக் கூறுகிறோமே தவிர, வேறு எந்தத் தனிப்பட்ட கோபதாபமும் எவரிடமும் கிடையாது. ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் எனக்குக் கோபதாபம் கிடையாது. மரியாதை உண்டு. ஆனால் அவர்கள் கொண்டிருக்கின்ற கொள்கை மீது எங்களுக்குத் தணிாயத ஆத்திரம் உண்டு.

நீங்கள் சாதித்ததென்ன?

இந்த ஐந்தாண்டுக் காலத்தில் ஆட்சியில் அமர்ந்து இருந்தவர்கள், விலைவாசிகளைக் குறைக்கவில்லை! வரிமேல் வரி கூடியிருக்கிறது! வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை! கடன் மேல் கடனை ஏற்றி வைத்தார்கள்! சட்டங்களைச் செய்து அவற்றில் ஓட்டைகளையும் வைத்தார்கள். இப்படித்தான் எண்ண வேண்டியிருக்கிறது.

சேலத்து இரும்பு இன்னும் எடுக்கப்படவில்லை நெய்வேலி நிலக்கரி, நம்மை இன்னும் எடுக்கவில்லையே என்று நம்மைப் பார்த்துக் கேலி செய்கிறது!

சேதுத்திட்டமும், தூத்துக்குடித் துறைமுகமும் ‘அடுக்கடுக்காகப் பேசினீர்கள். ஆனால், எங்களை ஆழப்படுத்த வில்லையே‘ என்றுதான் நம்மைப் பார்த்துப் பேசுகின்றன!

வைத்தியர் இல்லாத வைத்தியசாலை, ஆசிரியர் இல்லாத பள்ளிக்கூடம், பாரையில்லாத ஊர், வேலையில்லாத மக்கள் இத்தனையும் இருக்கின்றன என்பதையும், செய்த நிலைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கும்போதுத, ‘இனி செய்ய வேண்டிய வேலைகள் அடுக்காக இருக்கின்றன‘ என்பதையும் நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ஐந்தாண்டுகளில், இவ்வளவு நல்லவர்களோடு சேர்ந்த இருந்து பழக வாய்ப்புக் கிடைத்தமைக்கு நன்றி கூறி, இனியும் இப்படிப்பட்ட வாய்ப்பு ஏற்படுவதற்கு அச்சாரமாக அமைந்ததற்கு எனது வணக்கத்தைத் தெரிவித்து உரையை முடிக்கிறேன்.“

(நம் நாடு - 16.12.61)