அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘பண்டிதரின் அறைகூவலைப் பணிவோடு ஏற்கிறேன்‘

“நான் எளிதில் தீவிரத்தை ஏற்கமாட்டேன். அப்படி ஏற்றால், இலகுவில் விடமாட்டேன்“.

“மதுரையில் கூடிய மாநாட்டில் மாபெரும் தலைவரான பண்டிதர், ‘உள்நாட்டுப்போர் மூண்டாலும் ஒற்றுமையைக் காப்போம்‘ என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். நானும் பண்டிதர் வாயிலிருந்து வார்த்தை வருமா என எதிர்பார்த்துத் தவம் கிடந்தேன்“.

“நான் அவருடைய அறைகூவலைப் பணிவோடு எற்றுக்கொள்கிறேன். தி.மு.க. பலாத்காரத்தில் நம்பிக்கையற்றது. மிகமிக அடக்க ஒடுக்கத்தோடு அரசியல் நாகரித்தோடு பண்போடு நடந்துவரும் தி.மு.கழகம் மிதமிஞ்சிய கொடிய அடக்கு முறைகளால் முறியடிக்கப்பட்டால், மிச்சமிருக்கும் ஒரேவழி நிச்சயமாக உள்நாட்டுப் போர்தான்.

விடுதலை இயக்கம் இடி – மின்னல்

“ஆனால், உள்நாட்டுப் போர் நடக்கும்போது நான் இருக்கமாட்டேன். தி.மு.க. இருக்காது. அப்போது யார் யார் எந்தக் காட்டில் எந்தக் குகையில் வெடிகுண்டு தயாரிப்பார்களோ இப்போது அதை என்னால் சொல்ல முடியாது. ஏன்இப்போதே யார் யார் எண்ணத்திலே அந்தத் திட்டம் ஊசலாடிக் கொண்டிருக்கிறதோ யாரால் அறிய முடியும்! அண்ணா இப்படித்தான் சொல்வார். நாம் அதைக் கேட்டுக் கொண்டு சும்மாயிருந்தால் முடியாது என்று கருதி, இப்போதே யாரேனும் அத்தகைய செயலில் இறங்கிவிட்டிருக்கக்கூடும். அதை யாரால் அறிய முடியும்?“

“முன்கூட்டியே நேரு அறிந்திருப்பாரோ – சுபாஷ் சந்திரபோஸ், வெள்ளையனை எதிர்த்துப் புரட்சி நடத்தப் போட்டிருந்த திட்டத்தை. சீனாவிலே ஒரு மாசேதுங் தோன்றுவார் என்று அவர் தோன்றுவதற்கு முன் யாருக்குத் தெரியும்? இந்தோ-சீனாவிலே ஒரு யோசிமின் இருப்பதை அதற்கு முன்னாலே அறிந்திருந்தவர் யார்?“

“விடுதலைஇயக்கம், வானிலே படர்ந்திருக்கும் கருமேகத்தைப் போன்றது. எந்த நேரத்தில் மின்னும், எப்போது இடி இடிக்கும், எப்பொழுது மழை பெய்யும், அந்த மழை எப்படியிருக்கும் என்பதைக் கீழேயிருந்து கொண்டு ஒருவரால் சரியாகக் கணித்துச் சொல்ல முடிவதில்லை. அதேபோலத்தான் ஒரு விடுதலை இயக்கத்தின் வரவை முன்கூட்டிக் கணித்துக்கூற எவருக்கும் ஆற்றல் இல்லை“.

வாய்க்கரிசி போட்டுக்கொண்டுதான்...

“இப்போது நான் பேசி முடித்ததுமே என்னைக் கண்காணாச் சீமைக்கு அழைத்துச் சென்றுவிட சட்டமில்லையா? இருக்கிறது. படுத்துத் தூங்கும்போது கத்தியால் குத்தும் கயவர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்ற கொடுமையை நான் அறியாதவனா?“

நாட்டு விடுதலை கேட்கும்போதே நாம் – ‘வாய்க்கரிசி‘ போட்டுக் கொண்டுதான் கேட்கிறோமே தவிர, வாழ அல்ல. இந்த நாட்டில் நமக்கு வாழ்வு என்ன கேட்கிறது? வடநாட்டு ஆட்சியின் கொடுமையையும் தாங்கிக் கொண்டு, உள்நாட்டில் உள்ள கங்காணிகளின் பேச்சையும் கேட்டுக்கொண்டு நாம் வாழத்தான் வேண்டுமா? என்று நேற்று மாலை சென்னை 54ஆவது வட்டம் (நுங்கம்பாக்கம்) வள்ளுவர் மன்றச் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டார்கள்.

அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது –
இன்றைய பத்திரிகையிலே செய்தியொன்று படித்தேன். குவைத் நாட்டுக்கு ஐ.நா. பேரவையில் இடம் ஒதுக்க இந்தியா சிபாரிசு செய்திருப்பதாக. குவைத் என்பது ஒரு நாடா? நாடு அல்ல அது ஈராக்கை ஒட்டியுள்ள எண்ணெய்க் கிணறுதான் குவைத் என்பது. அது, நமது நாட்டிலுள்ள இரண்டு தாலுக்காக்களைப் போன்ற பரப்புள்ள ஒரு பகுதி. அந்தப் பகுதி எனக்குத்தான் சொந்தம் என்கிறது ஈராக். அப்படி அது கோருவதற்குக் காரணம், உதுமான்ய சாம்ராஜ்யத்தில் ஒர பகுதியாகக் குவைத் இருந்தது என்பதுதான். குவைத், ஈராக்கிலிருந்து பிரிந்த,தன்னை ஒரு குடியாட்சியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. இந்தக் குடியரசை – குவைத் ஒரு தனி நாடு என்பதை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட அரசு நேருவின் அரசுதான்.

அந்த உரிமை நமக்கில்லை?

குவைத் ஒரு தனி நாடாக ஏற்கலாம். குவலயம் புகழும் தமிழகத்தை – திராவிடத்தை ஏற்கக் கூடாதா? எங்கள் முன்னோர்களை இப்படி இகழலாமா? எங்கள் மூதாதையர்கள் கட்டிய கோபுரம் இடிந்தா போய்விட்டது? தோழிப்பிள்ளைக்கு வந்த வேலை முடிந்துவிடும். ஆனால், பிறகு, அந்தத் தோழிப்பிள்ளையும் ஒரு நாளைக்கு மாப்பிள்ளையாக வேண்டும். அவனுக்கு மணமாக வேண்டும்!

அதைப்போல தேர்தல் என்பது இடையிலே ஏற்படும் நிகழ்ச்சி. நீங்கள் ஓட்டுப் பெற்றுக் கொடுங்கள் – பெற்றுக் கொள்ளுகிறேன். கொடுக்காவிட்டால் கோபப்படமாட்டேன்.

மாநகராட்சியை நீங்கள் பெற்றுத் தந்தீர்கள் – பெற்றுக் கொண்டேன் சட்டமன்றத்தையும் பெற்றுத்தந்தால் ஏற்றுக் கொள்கிறேன். இல்லையென்றால் வருத்தப்படமாட்டேன்.

ஆனால் அதேநேரத்தில் நாட்டு விடுதலையில் உள்ள நாட்டத்தை விட்டுவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திறமையைச் செய்ய நம்மாலும் இயலும்

தொடர்ந்து பேசுகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதாவது –
“தி.மு.கழகம் ஓர் அரசியல் கட்சியாகவும் இருக்கிறது என்பதால், சில பல அலுவல்களில் அது ஈடுபடுகிறது. அதுவொரு விடுதலை இயக்கம் என்பதால் வேறு சில பல பணிகளிலும் ஈடுபடுகிறது“.

“வெறும் அரசியல் கட்சியினராக மட்டும்நாம் இருந்தால் காட்டு மிருகங்களை வேட்டையாடுவோர் எந்த இடத்தில் புலி இருக்கும் எந்தப் பொந்தில் கரடி இருக்கும், எந்த இடத்திலே காண்டாமிருகம் இருக்கும் என்று மோப்பம் பிடிப்பதுபோல் அரசியலிலும் மோப்பம் பிடித்து யாரிடத்திலே பிள்ளையில்லாச் சொத்து இருக்கிறது. எங்கே கள்ளமார்க்கெட்டில் குவித்த பணம் இருக்கிறது. யார் தேர்தலுக்கு நிற்க்த் தயாராகியிருக்கிறார். யாரைப் பிடித்தால் பணம் செலவு செய்வார். யாருக்கு ஓட்டு வரும் என்று கண்டுபிடித்துக் கொண்டு வந்து நிறுத்தும் வேலைகளைக் காமராசரைவிடத் திறமையாகச் செய்ய முடியும்.

தேர்தல் இரண்டாவது நிலைதான்

நாம் பிடிப்பது மோப்பமுமல்ல நடத்துவது அரசியலில் வேட்டையுமல்ல. இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குத் தேர்தல் பற்றிப் பேசுவோம். அப்படிப் பேசுகின்ற நேரத்தில், எங்கே விடுதலையின் மீதுள்ள நோக்கமும், நினைப்பும் மறைந்துவிடுமோ என் அஞ்சுகிறேன். அதனால்தான் நான் கூடத் தேர்தல் ஆர்வத்தை இரண்டாவதாகக் கொண்டிருக்கிறேன்.

“என்றைக்கு அடக்குமுறை வெறி நம்மீது பாயவருமோ எந்த நேரத்தில் நம் இன்னுயில் உடலிலிருந்து பிரிக்கப்படுமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கட்டத்தில் நாம் இருக்கிறோம். எந்த வட்டத்தில் எவ்வளவு ஓட்டு வரும்? எத்தனை ஓட்டு கேட்டால் வரும், எத்தனை ஓட்டுநோட்டை நீட்டினால் கிடைக்கும் என்ற கவலை நமக்கில்லை“.

அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசுகையில், மதுரையில் கூடிய காங்கிரசுக் செயற்குழுக் கூட்டத்தில் சஞ்சீவியாரும் அமைச்சர் சுப்பிரமணியமும் பேசிய பேச்சுக்களையும் அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டு, அவற்றிற்கெல்லாம் தக்க விளக்கம் தந்தார்கள்.

குரல்வளையை நெரித்து...

கடந்த பத்தாண்டுக் காலத்தில் கழகம் பெற்றுள்ள வளர்ச்சியின் விளைவாக, அனைத்திந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை விளக்கினார்கள்.

காஞ்சியில் அண்மையில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், “அண்ணாதுரையை இந்தத் தடவை சட்டசபைக்கு வரவிடக்கூடாது“ என்று கூறியது என்ன என்பதை விளக்கிய அண்ணா அவர்கள்.

“தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையின் குரல் வளையை நெரித்தக் கொன்றுவிட்டுக் களவாட நினைக்கும் திருடன் நிலையில் இன்றைய காங்கிரசு இருந்து வருகிறது“ என எடுத்துக் காட்டினார்கள்.

“கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், கொஞ்சம் சுறுசுறுப்பாகப் பணிபுரியும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்வதைப் போல, நான் சட்டசபைக்கு வராமலிருக்க வேண்டும் எனக் காங்கிரசார் விரும்புகிறார்கள்“ என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

“தி.மு.க.வினர் சட்டசபைக்கு வருவதை விடுத்துப் பாராளுமன்றத்திற்குச் செல்லட்டுமே‘ என்று காமராசர் பேசியதற்கும் அண்ணா அவர்கள் தக்க மறுமொழியளித்தார்கள்.

“தமிழ்நாட்டு அரசியலிலே ஏதோ நடக்கக்கூடாதது நடக்கிறது. அதனால்தான் நாங்கள் உள்ளே வருவதை அவர்கள் விரும்பவில்லை. எங்களைத் தடுக்கப் பார்க்கிறார்கள்“ என்றார் அண்ணா.

(நம்நாடு - 26.10.61)