அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பதவிகளைத் துறந்து தேர்தலில் ஈடுபடத் தயாரா?

காங்கிரசின் சார்பில் யார் யார் நிறுத்தப்ப்ட்டிருக்கிறார்கள்? அவர்களுக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்? இதோ இந்தப் பக்கத்தில் ஒரு மரம் இருக்கிறது – அதில் நான்கு மாம்பழத்தைக் கட்டிவிடுவதால் அது மாமரமாகி விடாது! அதிலே எட்டுக் கொய்யாப்பழத்தைக் கட்டிவிடுவதால் அது கொய்யா மரமாகிவிடாது! அதிலே சில அன்னாசிப் பழங்களைத் தொங்கவிடுவதால் அது அன்னாசி மரமாகி விடாது! அது எந்த மரமாக இருக்கிறதோ அந்த மரமாகத்தான் இருக்கும். சில பழங்களை ஒட்டிவிடுவதால் மட்டும் அது வேறு மரமாகிவிடாது!

அதைப்போலவே, யார் யாரையோ அழைத்து வந்த அவர்களைக் காங்கிரசில் ஒட்டிவிட்டதால் அவர்கள் காங்கிரசுக்காரர்கள் ஆகிவிட மாட்டார்கள். அவர்கள் எப்படியோ – அப்படித்தான் அமைவர்! மேலும் சொன்னால், இந்த மரத்திலே கொண்டு வந்த கட்டிவிடுவதால் மட்டும் கொய்யாக்கனி இந்த மரத்தின் கனியாகாது.

“நாங்கள் நிறுத்தி வைத்திருக்கிற, சத்தியவாணிமுத்து அம்மையார் எங்கள் கொள்கையிலே ஊறியவர்! உள்ள உறுதி படைத்தவர்களை – கொள்கை உறுதி படைத்தவர்களை – தொண்டுள்ளம் கொண்டவர்களை நாங்கள் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

அவர்கள் (காங்கிரசார்) நிறுத்தி வைத்திருக்கிறவர்கள் காந்தியாரின் அருகிலே இருந்தவர்களா? சத்தியாக்கிரகத்திலே ஈடுபட்டவர்களா? கதர் கட்டியவர்களா? அதற்காகக் கைராட்டினம் சுற்றியவர்களா?“ என்று பெரம்பூர் பகுதிக் கழகத்தின் சார்பில் நடந்த தேர்தல் நிதியளிப்பு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேருரையாற்றிய அண்ணா அவர்கள் காங்கிரசாருக்கு வினாவிடுத்தார்கள்!

ஆதரிக்கத் தவறாதீர்

அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கமாவது

‘எனது நெடுநாளைய ஆசை இப்போது நிறைவேறுகிறது – ஆற்றல்மிக்க நண்பர் அப்துல் சமத், அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நான் நெடுநாட்களாகக் கொண்டிருந்த ஆசை இப்போது நிறைவேறுகிறது.

முஸ்லீம் லீக் சோர்வுற்றிருந்த காலத்தில் அதில் ஈடுபட்டுப் புத்துயிர் கொடுத்த இளைஞர்களிலே அவரும் ஒருவர்.

அப்துல்சமத் அவர்கள், சட்டக் கல்லூரியிலே மாணவர் சங்கச் செயலாளராயிருந்த போது, நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்களும் அங்குப் பேசச் சென்றிருக்கிறோம். சுப்பிரமணியம் அவர்கள் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். நண்பர் அப்துல் சமத் எங்களை வரவேற்று அழகிய தமிழில் பேசினார்.

‘அவர் – நன்கு – அழகாகப் பேசுகிறார்‘ என்று அமைச்சர் குறிப்பிட்டார். அவர் அப்படிக் குறிப்பிட்டது. ‘என்ன, அண்ணாதுரை, ஏதோ நல்ல தமிழில் பேசுவது தி.மு.கழகத்தவருக்குத்தான் வரும் என்றெண்ணிக் கொண்டிருக்கிறீர்களே, பார்த்தீர்களா – ஒரு முஸ்லீம் நல்ல தமிழ் பேசுவதை?‘ என்பதற்காகத்தான்.

பேசிக்கொண்டிருந்த அப்துல்சமத், இடையிலே, தான் அது வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே படித்தாகக் கூறினார். அப்போது நான் சுப்பிரமணியத்திடம் சொன்னேன் – ‘பார்த்தீர்களா. நல்ல தமிழ் எப்படி வந்தது என்று கேட்டீர்களா?‘ என்றேன்.

இப்படிப்பட்ட ஓர் இளைஞர் – தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றவர் – அரசியலில் தேர்ந்தவர் – வட சென்னைப் பாராளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுகிறார். இவரைத் தேர்ந்தெடுக்க – எந்தக் கட்சியைச் சார்ந்தவர் ஆயினும், அல்லது எந்தக் கட்சியைச் சாராதவர் ஆயினும் – அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

காரணம் அதுதான்!

எனக்கு முன் பேசிய நண்பர்கள், சத்தியவாணிமுத்து அம்மையாரை எதிர்த்து நிற்கும் அம்மையாரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அந்த அம்மையாருக்குப் பொது வாழ்விலே பழகக்மில்லை. அரசியலிலே பயிற்சியில்லை‘ என்று சொன்னார்கள்.

நண்பர்கள், விவரத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறார்கள் என்றுதான் எண்ணுகிறேன். உள்ளபடியே, அந்த அம்மையாரை அவர்கள் தேர்ந்தெடுத்தற்கே காரணம், அவருக்கு விஷயம் தெரியாது என்பதுதான். இவரை (சத்தியவாணிமுத்து அம்மையாரை) எதிர்ப்பதற்கே காரணம். இவருக்கு விஷயம் தெரிந்திருப்பதுதான்.

சத்தியவாணிமுத்து அவர்கள், சட்டமன்றத்திலே அரும்பணியாற்றியிருக்கிறார். எப்படிப்பட்ட பிரச்சனையானாலும் காரசாரமாகப் பேசுவார். நான் அமைச்சர் சுப்பிரமணியத்திற்கு எதிரில் உட்கார்ந்திருப்பேன். எனக்கு இரண்டு மூன்று பெஞ்சுகள் பின்னே தள்ளி அம்மையார் உட்கார்ந்திருப்பார். என் எதிரே உள்ள அமைச்சர் சுப்பிரமணியம் ‘கொஞ்சம் காரத்தைக் குறைத்துக் கொண்டு பேசச் சொல்லுங்களேன்‘ என்பார். நானும் திரும்பிப் பார்த்துக் கையை உயர்த்திக் காட்டி, காரத்தைக் குறைத்துக் கொள்ளும்படி சொல்வேன். ஆனால் அம்மையார், பெண்மைக்கே உரிய நாணத்தின் காரணமாகத் தலைகுனிந்து கொண்டு பேசுவது போல், என் குறிப்பைக் கவனிக்காமல் பேசி முடித்துவிடுவார். அப்படி அரும்பணியாற்றிய காரணத்தால்தான், ‘அவர் மீண்டும் சபைக்கு வரக்கூடாது‘ என்கின்றனர், காங்கிரசார்.

நேர்மை, நியாயம் நிலைக்க வேண்டாமா?

எப்படிக் கதவைத் தாழ்ப்பாள் போட்டதும் திருடனுக்குக் கோபம் வருமோ – எப்படிக் கள்ளச் சாராயணம் காய்ச்சுபவனுக்குப் போலீசு அதிகாரியைக் கண்டதும் நடுக்கம் ஏற்படுமோ – எப்படி அடுத்த கடையில் ‘ நல்ல சரக்கு நியாயமான விலைக்குக் கிடைக்கும்‘ என்றெழுதிப் போட்டதும் மற்ற கடைக்காரனுக்குக் கோபம் வருமோ, அதை போல்தான் காங்கிரசாருக்கும், ‘சத்தியவாணிமுத்து‘ என்றதும் கோபம் வருகிறது!

‘சத்தியவாணிமுத்து அவர்கள் சட்டமன்றத்திற்கு வந்தால், ஊழலைக் கண்டிப்பார்களே நேர்மைக்கு வாதாடுவார்களே‘ என்று பயந்துதான், ‘அவர் சட்டமன்றத்திற்கு வரக்கூடாது‘ என்கின்றனர் காங்கிரசார்!

சத்தியவாணிமுத்து அம்மையார் தி.மு.கழகத்தில் ஈடுபாடு கொண்டவர், சிறைச்சாலைக்குச் சென்றவர். இன்னும் சொன்னார் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த காலத்தில் கூடச் சிறைக்கு வரத் துடித்தவர்! அப்போது ஓர் உயர்தரப் போலீசு அதிகாரி ‘நீங்கள் சிறைக்கு வராதீர்கள்‘ என்றார் அம்மையார் மறுத்தார்!

‘எதிர்த்து நிற்கம் அம்மையார், இப்போதுதான் வேலையைவிட்டு வெளியேறிவந்தவர்கள்‘ என்று இங்குச் சொன்னார்கள். அந்த அம்மையாருக்குச் சட்டமன்றம் வர ஆசையாக இருந்தால் ஐந்து அல்லது பத்து ஆண்டுக்காலம் பொதுத்தொண்டிலே பழக்கப்பட்டு பயிற்சி பெற்று, மக்கள் அவரை நன்கு அறிந்து கொண்டபின், சட்டமன்றத்திற்கு வரக்கூடாதா?

பலியாக்கி விடாதீர்!

பிஞ்சிலே பழுத்தால் ‘வெம்பல்‘ என்பார்கள்! திடீரெனத் தேர்தலிலே நின்றால், ‘சுயநலம்‘ என்பார்கள்! அந்த அவப்பெயருக்கு (எதிர்த்து நிற்கும்) அம்மையாரைப் பலியாக்கிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பெண்ணுக்குத் திடீரென்று இரவில் சாமி வந்துவிடும். கையையும் காலையும் தூக்கி ஆடிக்கொண்டு குதிப்பார்கள். அப்போது அந்த அம்மையாருக்குப் பெயர் கன்னியம்மா, அதில்லாதபோது அந்த அம்மாள் வெறும் முத்தம்மாள் தான். ஆவேசமாடும் கன்னியம்மாளால் வீட்டுக் காரியங்களைக் கவனிக்க முடியாது – அது முத்தம்மளால்தான் முடியும்!

காங்கிரசார் நிறுத்தி வைத்திருப்பவர் கன்னியம்மா – நாங்கள் நிறுத்தி வைத்திருப்பது முத்தம்மாவை!

உங்களுக்கு, ஆவேசம் ஆடுபவர் வேண்டுமென்றால் காங்கிரசுக்கு வாக்களியுங்கள்! வீடு வாசலைக் கவனித்துக் கொண்டு பிள்ளைக்குட்டியைப் பேணி வளர்க்கின்ற முத்தம்மா வேண்டுமென்றால் எங்களுக்கு வாக்களியுங்கள்.“

சோதிடரா அவர்?

‘சென்னையில் 10 இடமும் காங்கிரசுக்கே கிடைக்கும்‘ என்று அண்மையில் காமராசர் பேசினாராம். அவர் எப்போது முதலமைச்சர் வேலையை விட்டுவி்ட்டு, சோதிடம் பார்க்கிற வேலையை மேற்கொண்டாரோ-தெரியவில்லையே!

காமராசர், ‘அமைச்சராக இருப்பதால்தான் அவ்வளவு ஆணவமாகப் பேசுகிறார்?

ஏற்கனவே பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன் – இன்றைய தினமும் கேட்கிறேன் – தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை நடக்க இருக்கிறது – இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. இப்போதாகிலும் அமைச்சர்கள் தங்கள் பதவிகளைத் துறந்துவிட்டுத் தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தயாரா?

பதவியை விட்டு இறங்குவாரா?

முதலமைச்சர் காமராசர் என்றில்லாது, போலீசு அமைச்சர் பக்தவச்சலம் என்றில்லாது – நான் எப்படி வெறும் அண்ணாதுரையாக அப்துல்சமத் எப்படி வெறும் அப்துல் சமத்தாக சத்தியவாணிமுத்து எப்படி சத்தியவாணிமுத்தாக வருகிறோமோ – அதேபோல், ஆட்சிப் பொறுப்பைக் கவர்னிடம் ஒப்படைத்துவிட்டு அமைச்சர்கள் வரத் தயாரா? எங்களைப் போல் வந்தால்தான் – நாளை – நாட்டுக்கு உங்கள் உண்மைநிலை தெரியும்!

காமராசர் – முதலமைச்சர் காமராசராக இருப்பதால் தானே இத்தனை ஆடம்பரம், ஆர்ப்பாட்டம்? பத்துப்பேர் இவர்கள் பக்கத்திலே நிற்கிறார்கள் என்றால், அது பாசத்தாலா? நேசத்தாலா? இல்லை பதவியால்!

அமைச்சர்கள் வந்தால் அடிக்கொரு போலீசுக்காரர் நிறுத்தி வைக்கப்படுகின்றார்! அமைச்சர்களின் வரும் கார் கதவைத் திறக்கக்கூட போலீசு அதிகாரிகள் வருகின்றனர். அவர்களின் பின்னே கலெகடர் முதலிய அதிகாரிகள் வருகின்றனர்.

யாரால் – எதனால்?

இவற்றைப் பார்க்கின்ற ஏழை மக்கள் என்ன நினைப்பார்கள்? கலெக்டர் பகை வரும். போலீசு அதிகாரி வழக்குப் போடுவார் என்ற இந்தப் பீதியைக் கிளப்பிவிட்டு விட்டுத்தான் நீங்கள் பெரிய மனிதர்களாகியிருக்கிறீர்களே தவிர, மாறாகக் கதராலா, காந்தியாரலா பெரிய மனிதராகியிருக்கிறீர்கள்?

முதல் மந்திரியாக இருந்து கொண்டா, எங்களை முறியடிப்பேன் என்று சொல்வது?

ஏணியின் மேல் நின்று கொண்டிருப்பவன் அல்லது யானையின் மேல் சென்று கொண்டிருப்பவன். கீழே போகின்றவனைப் பார்த்து நான் எவ்வளவு உயரம் தெரியுமா? என்றா கேட்பது? யானை மேல் செல்பவனும், கீழே இறங்கி வந்து, பக்கத்தில் நின்று அளந்து பார்த்தால், ‘யார் உயரம்?‘ என்பது தெரியும்.

இங்கு வரும்போது ஒரு தமிழ் ஏட்டில் பார்த்தேன். ‘ஓட்டுப் போடுங்கள், சோறு போடுகிறேன்‘ என்று காமராசர் பேசியிருக்கிறார். இவர் என்ன முதலமைச்சரா? இல்லை – திருவண்ணாமலை ஓயாமடத்துக்காரரா? சோறு போடுகிறாராமே! இதுவரை போட்ட ஓட்டுக்கு எவ்வளவு சோறு போட்டார்?

வாக்களிப்பதா – எதற்கு?

காமராசரே! எதைப்பார்த்து உங்களுக்கு ஓட்டளிப்பது? விலைவாசியை உயர்த்தியிருக்கிறீர்கள் – அதைப்பார்த்தா? வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பெருக்கியிருக்கிறீர்களே – அதைப் பார்த்தா? – வீடுவிட்டு வீடு – நாடு விட்டு நாடு ஓடி அல்லல் பட்டோரைப் பார்த்தா? – எதைப்பார்த்து உங்களுக்கு வாக்களிப்பது.

எந்தப்பக்கம் பார்த்தாலும் உங்களுக்கு வாக்களிக்கும்படி கடந்த 13 ஆண்டுகளில் மக்கள் நிலையை உயர்த்தும்படி நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?

வரைமுறையற்று இவர்கள் கடன் வாங்கிக் கொண்டே போகிறார்கள். அதை எப்படித் திரும்பச் செலுத்துவது? யார் செலுத்துவது? கடன் வாங்கினாலும் அதைத் திரும்பச் செலுத்தக் கூடிய ஆட்சியையாகிலும் அமைக்க வேண்டாமா? வாங்கிய கடனால் மக்களுக்காகிலும் ஏதாகிலும் நன்மை உண்டா?

அதைத்தான் நானும் சொன்னேன்!

தாழ்த்தப்பட்டோரை எடுத்துக் கொண்டாலும் அவர்கட்கு ஆண்டுக்கு 14 காசுதான் கிடைக்கிறது. இதை முன்பு கூட்டத்தில் சொன்னேன். அதைக் கேட்ட தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ‘அண்ணாதுரை எப்படி இந்தக் கணக்கைப் போட்டுப் பார்த்தார்?‘ என்று கேட்கிறார். அவருக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. ஆனால், ஓர் அமைச்சர் சொன்னதைச் சொல்கிறேன் – கர்நாடக மாநிலத்திலே உள்ளவர் காங்கிரசு அமைச்சர் ரட்சையா, ஆதித்திராவிடரான அவர், ‘எங்கள் மக்கள் இவ்வளவு தான் பெறுகின்றனர்‘ என்று சொல்கிறார். அவர் சொன்னதைத்தான நான் சொன்னேன். உங்கள் மந்திரிகள் இப்படித்தான் என்றால், என்னைக் குற்றம் சொல்லாதீர்கள்)

வெற்றிக்கு வழிகோலுவீர்!

தன்மானம் தழைக்க – தமிழகம் உயர – வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய – வரிக்கொடுமைகள் மறைய – முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்காகவும், முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்ற முஸ்லீம் லீக்கினுடைய வெற்றிக்காகவும் பாடுபடவும், வாக்களிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

(நம் நாடு - 30.1.61)