அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பெரியார் தந்த கடைசிப் பட்டம்

“களை எடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு வளரும் பயிரையும் பாழ் படுத்தக்கூடாது – பயிர் பாழாகும்படி களை வளரவும் விடக் கூடாது. பெரும் கூட்டம் கூடும் நிலை ஒரு அரசியல் கட்சிக்கு வெற்றிப் பாதையிலே ஒரு கட்டம். இதையே ஒரு கட்சி தன் இலட்சியப் பூர்த்தியாகக் கொள்வது தவறு. ஆனால், பெருங்ககூட்டம் சேருவது பயனற்றது என்பதோ பிரமாதமல்லவென்பதோ சரியான பேச்சாகாது. ஐம்பது மோட்டார் அலங்காரமாக வந்து நிற்க, அவைகளிலிருந்து ஐம்பது சீமான்களும் மோட்டார் ஓட்டிகளும் நுழைவர். ஜஸ்டிஸ் மாநாடுகளில் பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு. சீமான்களல்ல, மோட்டார் டரைவர்களே, பேச்சைக் கேட்பர், கட்சி ஆர்வம் கொள்வர்.

“கள்ளுக்கடை வியாபாரிகள் சிலர், ஒரு கட்சியில் ஈடுபட்டடிருந்தனரே, அவர்கள் கட்சிக்குக் கள்ளுக்கடைக் கட்சி என்று பெயரிட்டனரா, யாராவது? கற்பூரக் கடைக்காரர் ஒரு கட்சியி்லே இருந்தால், அந்தக் கட்சிக்கு ஜோதிக் கட்சி என்று பெயரிடுவதா? போராட்டத் திட்டம், ஏதாவது ஒரு போராட்டத் திட்டம், தேவை என்ற அரிப்பின் காரணமாக ஏற்படக் கூடாது. அதைச் செய்வோமா, இதைச் செய்வோமா என்று அரசியல் கட்சி மனதை அலையவிடக் கூடாது. அதே போது போராட்டத்திற்கரிய பிரச்சினை எழுந்தால் விடக்கூடாது. இவ்வாறு தி.மு.க. பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 28ஆம் தேதி விருதையில் நடைபெற்ற தி.மு.க. அரசியல் மாநாட்டில் குறிப்பிட்டார்.

ஆண்கள் இல்லாததும் நல்லதுதான்

அன்புள்ள தலைவர் அவர்களே, தோழர்களே, தாய்மார்களே! இரண்டு நாட்களாக விருதுநகரில் நடைபெற்ற மாநாடுகளைக் கண்டு களித்தீர்கள். முதல் நாள் நடைபெற்ற பெண்கள் மநாட்டுக்கு நான் வர இயலாமற் போய்விட்டது. வருந்துகிறேன் – தாய்மார்கள் பொறுத்திடக் கேட்டுக் கொள்கிறேன். ஆடவரின் கொடும் செயல்களைத் தங்கு தடையின்றி எடுத்துப் பேச வாய்ப்பளிக்க பெண்கள் மாநாட்டிலே ஆடவர்கள் வராதிருப்பது கூட ஒரு வகையில் பொறுத்தமாக இருக்கலாம் என்று கூடக் கருதுகிறேன். நான் மாநாட்டுக்கு வரவில்லையே தவிர, நிகழ்ச்சிகளை விசாரித்திருக்கிறேன்.

வரவேற்புரை, தலைமை உரைகளைச் சென்னையிலேயே படித்துப் பார்த்து மகிழ்ந்தேன். எவ்வளவு ஆர்வம் ததும்புகிறது. வீர உணர்ச்சி எழுகிறது தாய்மார் உள்ளங்களிலே என்பதை அந்த உரைகளிலே கிடைக்கப் பெற்று பெருமகிழ்ச்சி அடைந்தேன். தாய்மார்கள் தி.மு.கழகத்துக்கு எப்போதுமே துணை நின்று பெரும் பணியாற்றி வந்திருக்கிறார்கள் – பிராச்சாரப் பணி மட்டுமல்ல – தி.மு.க. எடுத்துக் கொண்ட எல்லா நேரடி நடவடிக்கைத் திட்டங்களிலும் ஈடுபட்டு, தீவிரமாகப் பாடுபட்டிருக்கிறார்கள். சர்க்காரின் அடக்குமுறைத் தாக்குதலையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். வீரத் திராவிடத் தாய்க்குலம் வேறெப்படி இருக்க முடியும்! அவர்கள் உரம் ஊட்டி இனத்தை வளர்ப்பவர்கள். வாழ்க தாய்க்குலம்! வளர்க அவர்தம் வீரம் என்று போற்றாதிருக்க முடியாது.

திராவிடத் தனி அரசுப் பிரகடனம்!

திராவிட நாடு தனி அரசு ஆனால்தான், பெண்ணடிமை ஒழியும் என்ற உண்மையை எடுத்துக்காட்டி வரவேற்புரையில் தோழியல் ராஜாம்பாள் அவர்கள் திராவிட நாடு அமைக்கத் தாய்மார்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்வம் எந்த வகையிலே மலர்கிறது என்பதும், அம்மையாரின் உரையிலே காணக் கிடைக்கிறது.

பொதுத் தேர்தலிலே ஈடுபட்டு, சட்டசபைகளைக் கைப்பற்றிட்ட திராவிடத் தனி அரசுப் பரிகடனத்தை வெளியிட வேண்டும் – என்று அம்மையார் கூறியிருக்கிறார்கள். எழுச்சியூட்டும் கருத்து தி.மு.க. இதுபற்றி, முறைப்படி எண்ணிப்பார்த்து, தக்க திட்டத்தைத் தீட்ட முன்வரும் என்று உறுதியாகக் கூறுவேன்.

அரும் பெரும் காரியங்களைப் பெண்கள் செய்ய இயலும் என்பதை எடுத்து விளக்க, தலைமையுரையிலே அரிய வரலாற்று உண்மைகள் எடுத்து விளக்கப்பட்டுள்ளன. இயக்கத் தோழர்களின் இல்லங்களிலே உள்ள தாய்மார்களை எல்லாம், பெண்கள் மாநாட்டுக்கு வந்து கலந்து கொள்ளும்படிச் செய்யும் பொறுப்பையும் மாநாடு நடத்தியவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியை இயக்கக் காரியத்திலே பங்கு கொள்ளும்படித் தூண்டும் செயலில், பெரும்பாலான கணவர்களால் வெற்றி பெற முடிவதில்லை. நான் சொல்லுவதற்குப் பதிலாகத் தோழியர் சத்தியவாணிமுத்து ராணியிடம் வந்து பேசி, ‘ராணி வா‘ மாநாட்டுக்கு என்று அழைத்தால், காரியம் சுலபமாக முடியும் – ராணி, ராணி என்ற நான் சொல்வது, ஊரை ஆளும் ராணியை அல்ல – என் உள்ளத்து ராணியை – துணைவியைக் குறிப்பிடுகிறேன் பெண்கள் மாநாடு மூலம் கிடைத்துள்ள பேரார்வம், தி.மு.க.வுக்குப் பெரிதும் பயன்படும் – சந்தேகமில்லை.

குந்தகம் எற்படாத அரசியல் களை எடுப்பு!

இன்று, காலை முதல் இதுவரை, தலைவர், திறப்பாளர், சொற்பொழிவாளர்கள் உரைகளைக் கேட்டீர்கள். கருத்துக்கு விருந்தாக அமைந்திருந்தன அந்தச் சொற்பொழிவுகள். திறப்பரை ஆற்றிய நண்பரின் பல யோசனைகளில் சீரிய கருத்தமைந்தன – எனினும், அவர் கூறியபடி, அவைகளில் பல பொதுக் குழுவிலே நாம் கலந்து பேசப்பட வேண்டியனவாகும். பொதுவாகக் கழகக் கட்டுப்பாட்டுக்காக, நான் சற்றுக் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நண்பர் வலியுறுத்தினர் – கண்டிப்பாக இருப்பது என்றால், இந்த நண்பரின் பேச்சிலேயே பாதிக்கு மேல் நான் தடுத்திருக்க வேண்டும், எனினும், நான் ஜனநாயகத்திலேயும், தோழமையிலேயும் பெரிதும் நம்பிக்கை உள்ளவன் ஆகையால், கருத்தலைகள் கிளம்புவது கண்டு மகிழ்கிறேன். கட்டுப்பாடு, கண்டிப்பு என்ற பெயரால், இயக்கத்தின் கருத்து வளர்ச்சியிலே, குந்தகம் ஏற்படச் செய்யக்கூடாது, யாருடைய கருத்தாக இருப்பினும், கழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அதனை எடுத்தாள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவேதான் எந்தப் பிரச்னையிலும், கழகத் தோழர்களின் கருத்தை அறிவதில் நான் மிகவும் ஆவல் கொண்டவனாக இருக்கிறேன்.

களை எடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு, வளரும் பயிரையும் பாழ்படுத்தக் கூடாது – பயிர் பாழாகும்படி களை வளரவம் விடக்கூடாது. களை அறிந்து எடுத்திட வேண்டும் – இந்த உழவு முறை அரசியல் பண்ணைக்கும் பொருந்தும். கண்டிப்பு, கட்டுப்பாடு தேவை – களை எடுத்தல் தேவை – அதேபோது பயிர் அழியக் கூடாது – கருத்துக்கு விலங்கிடக் கூடாது. இதுதான் கையாளும் உழவு முறை.

மாநாடு தரும் காட்சிகளின் படிப்பினை!

பெரும் அளவில் கூடியிருக்கிறீர்கள் – தாய்மார்கள் ஏராளம் இங்கு ஏற்படும் பேச்சொலி, அமைதியைக் குலைக்கிறது என்று என் நண்பர்கள் யாவரும் கடிந்துரைத்தார்கள் – மாநாடுகளில் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று எடுத்துரைத்தார்கள். எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று எடுத்துரைத்தார்கள். அந்த ‘உபதேச காண்டம்‘ நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நான், பொதுவாகவே பெருங்கூட்டம் கூடும்போது, ஏன் அமைதிக் குறைவு காணப்படுகிறது என்பது பற்றி எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாநாடுகளில், கூடிடும் பெருங்கூட்டத்தில் ஒரு பகுதி தான் கழக உறுப்பினர்கள், மற்றோர் பகுதி, கழக ஆதரவாளர்கள்.

மாநாடுகளிலே கூடும் கூட்டம், அத்தனையும் கழக உறுப்பினர்களாகவே இருந்தால் அமைதி நிச்சயமாக நிலவும். ஆர்வம் கட்டுக்கடங்கியதாக இருக்கும், பொதுக் குழுக் கூட்டத்தில் உள்ளது போல. எனவே, மாநாடுகளில் கூடிடுவோரை அணுகி, கழக உறுப்பினராகும்படிக் கேட்டுக் கொள்ளவேண்டும் இந்தக் காட்சி தரும் பாடம் அதுதான்.

கூட்டம் கூடுவது வெற்றியிலே ஒன்று!

ஒரு சிலர் பேசுகின்றனர் – இப்போது புதிதாக – பெருங்கூட்டம் கூடிப் பயன் இல்லை, என்று. பெருங்கூட்டம் கூடும் நிலை ஒரு அரசியல் கட்சிக்கு வளர்ச்சிக்கு வழி, வெற்றிப் பாதையிலே ஒரு கட்டம். இதையே ஒரு கட்சி, தன் இலட்சியம் பூர்த்தியாகக் கொள்வது தவறு. ஆனால், பெருங் கூட்டம் சேருவது பயனற்றது என்பதோ, பிரமாதமல்ல என்பதோ சரியானதாகாது. ஐம்பது மோட்டார் அலங்காரமாக வந்து அவைகளிலிருந்து ஐம்பது சீமான்களும், மோட்டார் ஓட்டிகளும் நுழைவர் ஜஸ்டிஸ் மாநாடுகளில், பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு. சீமான்களல்ல டிரைவர்களே, பேச்சைக் கேட்பர், கட்சி ஆர்வம் கொள்வர். அந்த நிலை மாறி, பெரியாரின் பெரும் பணியினால், ஜஸ்டிஸ் கட்சி மாநாடுகளுக்குப் பெருங்கூட்டம் வரத் தலைப்பட்டது. அதே முறையில்தான் இப்போது தி.மு.க. மாநாடுகளுக்கும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். இது வெற்றியிலே ஒன்று – பொச்சரிப்பின் காரணமாக, இதிலே என்ன பிரமாதம் இருக்கிறது – கூடினால் போதுமா, என்று பேசுவது வீணுரை.

கூடிப்பேசுவது வீணுரையல்ல!

எனக்குத் தெரியும் அரசியல் கட்சிகள் இந்தக் காட்சியைக் காணத் தவங்கிடக்கின்றன என்று.

எத்தனைக் கட்சகிள் இது போன்ற காட்சியைக் காண முடியாததால், அங்கலாய்த்துக் கொள்கின்றன, என்பதும் எனக்குத் தெரியும்.

எனவே, இங்கு நான் காணும் காட்சி – கொட்டகை நிரம்பியுள்ள மக்கள் கூட்டம் தி.மு.க. பெற்ற வெற்றிகளில் ஒன்று. பெறவேண்டிய வெற்றிகளுக்கு வாய்ப்பளிக்க வல்லது.

தாய்மார்கள், தமது செல்வக் குழந்தைகளுடன் வந்துள்ளனர். வள்ளுவர் சொன்னாரே குழலையும், யாழையும் எற்றுக்கு என்று கூறிடத் தக்கதான மழலை, அந்த மழலை அதிகமாகக் கேட்கிறது – அமைதி இல்லை என்றார்களே நண்பர்கள், காரணம் இதுதான். தாய்மார்க்ளும், மழலை கேட்டு மகிழ்ந்தது போதுமென்றெண்ணித் தமது குழந்தைகளை முத்தமிட்டு, சாந்தப்படுத்தி விடுவார்கள்.

தி.மு.க. மாநாடுகளில் இவ்வளவு ஏராளமான மக்கள் கூடுகிறார்கள் என்றால் காரணமென்ன? அருளாளர்களைத் தரிசிக்கக் கூடுகிறார்களா! அசகாயச் சூரர்களைக் காணக் கூடுகிறார்களா! சாமான்யர்கள்தானே கூடுகிறோம்.

தூற்றலிலும், துப்பாக்கியிலும் பிறந்த கட்சி!

நமது நிருபர்கள் தரும் அறிவு விளக்கம், வரலாற்று ஆதாரம், அசைக்க முடியாத புள்ளி விவரம். இவைகளை் கேட்டு, தெளிவும் துணிவும் பெறுகின்றனர் – எனவே கூட்டம் பெருகிடக் காண்கிறோம் – கழகம் வளர்ச்சி பெறப் பார்க்கிறோம்.

இந்தப் ‘பேச்சுக் கச்சேரி‘ வேறு எதற்கெல்லாம் வழி வகுத்துத் தந்திருக்கிறது என்பதையும் எண்ணிப் பாருங்கள். தி.மு.க. துவக்கப்பட்ட போதே, போலீஸ் தடியடியும் சிறைவாசமும் கண்டோம், துப்பாக்கியைச் சந்தித்தோம் – அதைவிடக் கொடுமையான தூற்றல் நம்மைத் துளைத்தது.

எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்தது, நம்மால், இவைகளை இதோ இதுபோன்ற ‘பேச்சு கச்சேரிகள்‘ மூலம், நாமும் உரம் பெற்றோம் – நாடும் உரம் பெற்றது. இதற்கு உள்ள சூட்சம பலத்தை அறிந்த சிலர், தமக்குச் சாதகமாக இந்தப் பலம், அமையவில்லையே என்பதனால், பேசுவதே பாவம், பெருங்கூட்டத்தைச் சேர்ப்பது துரோகம், மாநாடுகள் நடத்துவது மகா பெரிய துரோகம் என்றெல்லாம் பேசுகிறார்கள். பரிதாப மாகத்தான் இருக்கிறது.

சினிமா கட்சி என்பது அர்த்தமற்ற பேச்சு!

இதைப் போலவே, தி.மு.கழகம், சினிமா, நாடகத் துறைகளிலே, மறுமலர்ச்சியை உண்டாக்கி வருகிறது – கலைத் துறையினர் பலர் நமது கழகத்திற்கு ஆதரவாக உள்ளனர். இதைக் கண்டு, ‘சினிமாக் கட்சி‘ என்று பேசுகிறார்கள் – கேட்கிறோம்.

சினிமாத் துறையிலே ஈடுபட்டவர்கள், ஒரு கழகத்திலே கலந்து பணியாற்றுவது தவறா? சினிமா, அவர்களுக்கு ஒரு தொழில்! கொள்கைப் பற்றும், பொதுப் பணி புரியவேண்டும் என்ற ஆர்வமுமம், அவர்களை இங்கே, அழைத்து வந்திருக்கிறது இதிலே என்ன தவறு?

கள்ளுக்கடை வியாபாரிகள் சிலர் ஒரு கட்சியிலே ஈடுபட்டிருந்தனரே, கட்சிக்கு, கள்ளுக்கடைக் கட்சி என்று பெயரிட்டனரா, கற்பூரக் கடைக்காரர் யாராவது ஒரு கட்சியிலே இருந்தால் அந்தக் கட்சிக்கு ஜோதிக் கட்சி என்று பெயரிடுவதா என்ன அர்த்தமற்ற பேச்சு! ஆனால், ஏன் பேசுகிறார்கள் என்பது புரியாமல் போகிவில்லை நன்றாகப் புரிகிறது.

கலைவாணர் வந்தது ஏன்?

ஆண்டு பல ஆகிவிட்டன – சந்திரோதயம் நாடகம் சென்னை ஒற்றைவாடைக் கொட்டகையில் – இசை அரசு தண்டபாணி தேசிகர், நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராச பாகவதர் மூவரும் வந்தனர் – பெரியார், ஒரு பிடி பிடித்தார் – இந்தக் கலைவாணர்கள், முருகா முருகா என்று பணத்தைப் பறித்துக் கொண்டு போகிறார்களே ஒழிய, இன அபிமானம், சுயமரியாதை, இவைகளுக்காகப் பாடுபடும் நமது இயக்கத்திலே ஒரு பற்று பாசம், தொடர்பு துளி காட்டுகிறார்களா – என்ற கோபமாகவே பேசினார். என்ன, வரவழைத்து உட்கார வைத்துக் கொண்டு இப்படி ஏசுகிறார்களே, என்றனர் மூவரும். அவர்களுக்குச் சமாதானம் கூறினேன், பிறகு நான் பேசும்போது, பெரியார் கேட்கும் காரணத்தை விளக்கி கலாவாணர்கள் எல்லாம் கூடிய சீக்கிரம் நமது கழகத் தொண்டிலே ஈடுபடுவார்கள் என்று உறுதி அளித்தேன்.

அது போலவே கலைத்துறை விற்பன்னர்கள் இன்று நம்மிடம் உள்ளனர்.

கலைஞானிகள் பெரியார் பாதையில்!

பெரியார் சொன்ன முறைப்படித்தான். நான் கலைத் துறையினரைக் கழகப் பணிபுரிய அழைத்து வந்தேன். பெரியாரே ஒற்றைவாடைக் கொட்டகையிலே தாம் பேசியதற்காக வருத்தப்பட்டு, அடுத்த திங்களில் ஈரோடு சென்று ‘கிந்தனார்‘ காலட்சேபம் செய்த என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு தங்கச் செயினும், கிந்தனார் என்று பெயர் பெறிக்கப்பட்ட டாலரும் பரிசளித்தார்.

ஈரோட்டிலே, நடைபெற்ற தனித் திராவிடர் கழக மாநாட்டில், காந்தியார் படத் திறப்பு விழாவை நடத்த என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை வரவழைத்தார் – தமது கையாலேயே கடிதம் எழுதி.

அப்போதெல்லாம் ‘சினிமாக் கட்சி‘ அல்ல – இப்போது சினிமாக் கட்சி என்ற ஏசுவதாக எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள். அந்தப் பழைய சம்பவங்களை அறிந்திருக்கிற எனக்கு. ஏன் கோபம் வரப் போகிறது! அங்கு இல்லை இந்தக் கலைவாணர்கள் – அதனாலே ஒரு ஆத்திரம் – அதைப் போக்கிக் கொள்ள எதையெதையோ பேசுகிறார்கள்.

சினிமாக் கட்சி என்றால், கழக மேடையிலும், மாநாடுகளிலும் சினிமா சம்பந்தமான விஷயங்களே பேசப்பட்டு, கழகக் கொள்கைகள், அரசியல் பிரச்னைகள் மறைக்கப்பட்டுப் போய் விட்டால் ஓஹோ இது சினிமாக் கட்சியாகிவிட்டது என்று சொல்லலாம்.

அங்கே இல்லை இங்கே உண்டு

இதோ எனக்கு முன்பு தோழர் எம்.ஜி.இராமச்சந்திரன் பேசினார். எதைப் பற்றி? ஜெனோவா படத்திலே எனக்கு எப்படி மேக்கப் செய்தார்கள் தெரியுமா? வலது கரத்தில் வாளை ஏந்தியதும் இடது கரம் எப்படிஇருக்க வேண்டும் தெரியுமா? காமிரா அப்பொழுது எங்கே இருக்கும் தெரியுமா? என்று இதை எல்லாமா பேசினார்? பேசினால், சினிமாக் கட்சிதான். அவர் பேசியது அது அல்லவே, அவருக்குத் தொழில் சினிமா! அதையும் கூடப் பகுத்தறிவுத் துறைக்குப் பக்க பலமாக்குகிறார். இங்குமாநாட்டிலே, அவர் பேசியது, சினிமா சம்பந்தமாகவா? இல்லையே, திராவிடர், திராவிட நாடு பெறுவது எப்படி கழகத்திலே கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும், மாநாடுகளிலே எப்படி ஒழுங்குமுறை காணப்பட வேண்டும், என்ற இவை பற்றி அல்லவா பேசினார்? இதற்கா சினிமாக் கட்சி என்று பெயர்? என்ன தெளிவு! ஏன் இந்தப் பேச்சு! அங்கே இல்லை – இங்கே உண்டு – அதுதான் காரணம்.

ஒரு நாடு விடுதலை பெற வேண்டுமானால் இனம் விழிப்படைய வேண்டும், எல்லாத் துறைகளிலேயும் மறுமலர்ச்சி ஏற்படும் – அதை இன்று காண்கிறோம். எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் இ எழுச்சிக்கும் விடுதலைக்கும் பாடுபடவேண்டும் என்ற ஓர் ஆர்வம் பிறக்க வேண்டும். அதன் விளைவுதான் தி.மு.க. கழகத்தில், ஏராளமான கலைத்துறையினர் ஈடுபடுவது கழக வெற்றியிலே இது ஒரு கட்டம் – எழில் உள்ளது – எனவே, மாற்றார் உள்ளத்திலே எரிச்சலை ஊட்டுகிறது.

தூற்றுவோர் நாளை போற்றுவார்கள்!

மாற்றார்கள் மட்டரகமாகத் திட்டித் திரிகிறார்கள். மனம் பொறுக்கவில்லை என்று நண்பர்கள் பேசினார்கள். ஆத்திரம் பிறக்கக் கூடாது, தூற்றல், வெறும் குப்பை – அது எருவுமாகும் நமது கழனிக்கு. நாங்கள் என்ன தூற்றப்படவே கூடாத உயர்நிலையை அடைந்துவிட்டவர்களா? ஏன் பதைக்கிறீர்கள், எங்களை யாரேனும் தூற்றினால், கொலைக்காரன், அடுத்துக் கெடுப்பவன், அகப்பட்டதைச் சுருட்டுபவன் என்றெல்லாம், என் அரசியல் தந்தையே தாக்கினார் – தாங்கிக் கொண்டேனே. அவரே அவ்விதம் தூற்றியான பிறகு மற்றவர்கள் தூற்றுவது எனக்குத் தூற்றுலாகவா தெரியும்? பெரியார் தந்த கடைசிப் பாடம் எனக்கு, தூற்றலைத் தாங்கிக் கொள்வது எப்படி என்பது தான். எனவே தூற்றல் கேட்டு ஆத்திரம் கொள்ளாதீர்கள். நமது சொல்லும் செயலும் தூற்றுவோரின் மனதையும் மாற்ற வல்லதாக அமைய வேண்டும்.

தூற்றுவது அரசியல் அநாகரிகம்!

அதுபோலவே, கம்யூனிஸ்டுகளும், பிறரும், நமது போராட்டத் திட்டங்களைக் கேலி செய்வதும், இவை சரியான போராட்டமல்ல என்று ஏளனம் புரிவதுமாக உள்ளனர். அந்தப் போக்கு அரசியல் அநாகரிகம்.

நான் கம்யூனிஸ்டுகளின் எந்தப் போராட்டத் திட்டத்தையும் பேலி செய்ததில்லை, நமது திட்டங்களை அவர்கள் கேலி செய்வதைப் பொருட்படுத்தப் போவதுமில்லை.

போராட்டத்திட்டம், ஏதாவது ஒரு போராட்டம் தேவை, தேவை என்ற அரிப்பின் காரணமாக ஏற்படக்கூடாது – அதைச் செய்வோமா, இதைச் செய்வோமா என்று ஒரு அரசியல் கட்சி மனதை அலைய விடக்கூடாது. அதே போது, போராட்டத்திற்கரிய பிரச்சனை எழுந்தால், விடக்கூடாது – இதுதான் நான் சொன்னது லால்குடியில் – சொல்வது இப்போதும்.

போராடவே முடியாதவர்களல்ல – தி.மு.கழகத்தினர் தழும்பு பெற்றவர்கள் போராட்டங்களிலே.
டால்மியாபுரம் போராட்டம் பெரிதா? பிரமாதமா?

இப்போது தோழர் கருணாநிதியிடம் ஒரு போராட்டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சூழ்நிலை அருமையாக உருவாகி இருக்கிறது ஜூலை 15ல், போர்த் துவக்கம், தோழர் கருணாநிதியிடம் கலந்து பேசி முறையும் வகுத்தாகிவிட்டது.

இது ஒரு பிரமாதமான போரா? என்கிறார்களாம் கம்யூனிஸ்டுகள்! அவர்களுக்கு, இதெல்லாம், ‘சப்பை‘யான போராட்டமாகத் தோன்றக்கூடும் – கென்யாவுக்கு ஒரு படையும், இப்ப, கம் எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் படைகளை அனுப்பிவிட்டு, சேதியை எதிர்பார்த்திருப்பவர் போல, டால்மியாபுரம் போராட்டம் பெரிதா, பிரமாதமா என்று பேசுகிறார்கள்.

நாம் கவனிக்க வேண்டியது, இவர்கள் பேச்சையும்மலல், போக்கையுமல்ல, போராட்டத்திற்கரிய பிரச்னைதானா இது என்று நமக்குள் பேசி முடிவு கட்ட வேண்டும். தீட்டிடும் திட்டம், நாம் கலந்து பேசியதன் விளைவா என்பது தெரிய வேண்டும். அதுதான் முக்கியமே தவிர, நமது மனைவி நமது கண்ணுக்குப் பிடித்தமானவளாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்வீட்டுக்காரன் தீர்ப்பா நமக்கு முக்கியம்?

எனவே, எந்த ஏளனத்தை, நான் பொருட்படுத்தவில்லை.

ஆச்சாரியார் குலக் கல்விப் போராட்டம்!

டால்மியாபுரம் போராட்டம் ஜூலை 15இல் துவங்கும் – அதிலே எத்தகைய கஷ்ட நஷ்டம் ஏற்கவும் சித்தமாகக் கருணாநிதி இருக்கிறார்.

இதுபோலவே, ஆச்சாரியாரின் கல்வித் திட்ட ஒழிப்புக்கான கிளர்ச்சியும் நடத்தத்தான் போகிறோம். அதை முன்னின்று நடத்தித் தரும் பொறுப்பைத் தம்பி சம்பத்திடம் ஒப்படைக்க இருக்கிறேன். சிதம்பரம் மாநாட்டிலே இது பற்றி, மேலும் விளக்க இருக்கிறேன்.

திருத்தணிக் கிளர்ச்சியிலும் நமது தி.மு.க. தோழர்களே ஈடுபட்டுள்ளனர் – சிறை புகுந்திருக்கிறார்கள்.

ஆகவே, களம் புக வேண்டிய அவசியம் ஏற்படும்போது தி.மு.க.முன் நிற்கும் – அதுபோலவே, கழக வளர்ச்சிக்காக ஆக்க வேலைகளையும் தளராது செய்து வரும்.

சென்றேன் – சொன்னேன்... வென்றேன்!

பிரச்சாரம், பேச்சுக் கச்சேரி என்று பிறர் கேலி பேசும் அளவுக்கு வளர்ந்துவிட்டது என்று சிலர் கருதுகின்றனர்.

நாம் ஆழ உழுதிருக்கிறோம். எனினும், இன்னும் பரவலாக உழ வேண்டும். நமது கழகக் கொள்கைகள் புகாதிருக்கும் இடம் பல உள. நான் நாளைய தினம் பாகநேரி எனும் ஊர் செல்கிறேன். இந்த பதினைந்து ஆண்டுகளாக, நான் அந்தப் பக்கம் போனதே இல்லை, நமது கழகப் பிரச்சாரமும் பரவாத இடம், பாகநேரி இப்படிப்பட்ட பாகநேரிகளிலெல்லம் நமது பிரச்சாரம் பரவச் செய்ய வேண்டும்.

சென்றேன், கண்டேன், வென்றேன் என்ற பெருமிதத்துடன் ஜூலியஸ் சீசர் சொன்னாலும் தனது திக் விஜயம் பற்றி எனது தம்பிமார்கள் – சென்றேன், சொன்னேன், வென்றேன் – என்று கூறக் கூடியவர்கள், எனவேதான் அவர்களை நான் பிரச்சாரத்தில் மேலும் அதிகமாக ஈடுபடக் கேட்டுக் கொள்கிறேன்.

“நம் நாடு,“ பொறுப்பில் இருப்பதால், நான் அதிகமாகச் சுற்றுப் பயணம் செய்வதற்கில்லை – எனவே, மற்றவர்கள், முன்பு செய்ததைவிடச் சற்று அதிகமாகவே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும், நமது முயற்சிகள் வெற்றி தரவல்லன் என்ற நம்பிக்கை எங்கும் தெரிகிறது.

“திராவிட நாடு திராவிடருக்கே“ என்ற பிரச்சனை எங்கும் பேசப்படுகிறது. நாடு விழிப்புற்று இருக்கிறது, நல்ல சமயம் நண்பர்களே! நல்ல சமயம்!! நமது பணியை மேலும் திறம்படச் செய்வோம், வாரீர்!!! விருதை மாநாடு நமக்கு அந்த வீரத்தையும், ஆர்வத்தையும் அளிக்கிறது. இதனைச் சிறப்புற நடத்திக் கொடுத்தவர்களுக்கெல்லாம் என் நன்றி.

விருதுநகர்த் தேர்தலில் ஆசைத் தம்பி!

கடைசியாக ஒரு ஆசைத் தம்பி! விஷயம். இந்த இரண்டு நாள் மாநாடும், இங்கே தோழர் ஆசைத் தம்பி தேர்தலில் நிற்பதால் தேர்தலுக்குப் டை திரட்டவே நடத்தப்படுகிறது என்று காங்கிரசார் எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்.

நாம் தேர்தல் காரியத்தை எவ்வளவு துச்சமாக மதிக்கிறோம் என்பதை மாநாடு விளக்கி இருக்கும். தேர்தலைப் பற்றி, இரு நாட்களிலே யாரும் பேசவுமில்லை – அதற்கான பரபரப்பும் இல்லை. ஏன்? திராவிட முன்னேற்றக் கழகம், அடிப்படை பிரச்சனையிலேதான் அதிகமான அக்கரை காட்டுவது – அடிப்படைப் பிரச்சனை, திராவிட நாடு திராவிடருக்கு ஆக வேண்டும் என்பதுதான், அதற்குத் தேர்தல் பயன்பட்டால் தேர்தலில் தி.மு.க. அக்கரை காட்டும்.

தோழர் ஆசைத் தம்பியிடமும். தோழர் வி.வி. ராமசாமி அவர்களிடமும் நான் தேர்தல் சம்பந்தமாகப் பேசினேன் – ஜூலை 6-க்குள் நான் குறிப்பிட்டுக் கேட்டிருக்கும் சில தகவல்களுக்கு, அவர்கள் பதில் அளிக்க இசைந்திருக்கிறார்கள் – அதற்குப் பிறகே, தேர்தலைப் பற்றி, தி.மு.க. முடிவு கூறும். இந்தப் பிரச்சனைப் பற்றி, விருதுநகர் தி.மு.க. கிளையும், இராமநாதபுர மாவட்டத் தி.மு.கழகமும் தமது கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

சீரிய முறையில் இரு மாநாடுகளை நடத்தி. தி.மு.கழகத்துக்குச் சிறப்பளித்தவர் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

(நம்நாடு - 3-7-1953)