அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பெரியாரைச் சிறையில் வைத்திருப்பது முறையா?
2

தி.மு.கழகத்தால் பெரியாரை விடுவிக்க முடியும்!

என்னால் பெரியாரை விடுவிக்க முடியும். இன்றோ நாளையோ பெரியார் ஒரு சொல் சொல்லி விடட்டும், ஒரு ஜாடை காட்டட்டும், பெரியார் திருச்சிச் சிறையில் கூட இல்லை, சென்னைச் சிறையில் தானிருக்கிறார். அவரிடம் தோழர்கள் போய் இதைச் சொல்லட்டும். இதுவரை இந்தியத் துணைக் கண்டமே பார்த்திராத அளவுக்கு – ஏற்காத தண்டனையையும் ஏற்றுக் கொண்டு கருப்புக் கொடி காட்ட ஏற்பாடு செய்கிறேன். நான் அரசியலில் நாகரிகத்தை விரும்புகிறேன். நீங்கள் !பெரியாரை) விருப்பு வெறுப்புக்களை விரும்புகிறீர்கள்.

நேருவின் நாத்துடுக்கை அடக்கத் தமிழர்களால் முடியும், அந்தத் திறமையைத் தி.மு.கழகம் இழந்துவிடவில்லை, ஆனால், நானும் கிளர்ச்சி நடத்தியதனாலேயே இழுக்குப் பட்டுவிட்டதாகக் கூடச் சொல்லுவார்கள், திராவிடர் கழகத் தோழர்கள்!

காமராசரைப் பதவியிலிருந்து விரட்டிவிட்டால் பிறகு ஆச்சாரியார் வந்து அந்த இடத்திலே உட்கார்ந்து விடுவாரே என்பதற்காகத்தான், ‘உனக்கு நான் ஆதரவு தருகிறேன், நீ செய்வதைச் செய், அதைப் பொறுத்துக் கொள்கிறேன்’ என்று காமராசரைப் பார்த்துப் பெரியார் கூறுகிறார். அவருடைய காரியம் எதுவும் கெட்டுவிடாது, அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

நாம் கிளர்ச்சி செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதன்பிறகு திராவிடர் கழகத் தோழர்கள் என்ன சொல்வார்கள்? ‘பெரியாரை சனவரி 26ஆம் தேதியே விடுதலை செய்வதற்கு இருந்தார் காமராசர், இந்தப் பாவிகள் கிளர்ச்சி செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டார்கள்’ என்பார்கள்.

கருப்புக்கொடி காட்டக் கூடாது!

வேண்டாத பெண்டாட்டி கால்பட்டால் குற்றம் – கைப்பட்டால் குற்றம், சிரித்தால் குற்றம் – அழுதால் குற்றம் என்றால் என்ன செய்வது? கணவனுக்கு அவள் நெய்யை அதிகம் ஊற்றினால், ‘அய்யோ, இவ்வளவு நெய்யை ஊற்றிச் சாமானைப் பாழக்குகிறாளே’ என்பதும் நெய்யைக் குறைத்து ஊற்றினால் கணவனுக்குக்கூட நெய் ஊற்ற மனமில்லையே இவளுக்கு’ என்று சொல்லுவதும், இப்படி அவள் எதைச் செய்தாலும் அதிலே குற்றங்காணுவது எதைக் காட்டுகிறது? குடும்பத்தில் அவள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தால் அவள் என்ன செய்வாள், தற்கொலைதான் செய்து கொள்வாள்.

அதைப்போல, நான் எதைச் செய்தாலும் சந்தேகத்துடன் பார்த்தால் நான் எங்கே போவது? எனவேதான், நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் – ‘கருப்புக் கொடி காட்டக்கூடாது’ என்று!

திராவிடர் கழகத் தோழர்கள் எதையும் எண்ணிப் பார்க்க வேண்டும், ஆனால், எண்ணிப்பார்க்கும் சக்தியை அவர்கள் இழந்து 8 ஆண்டுகள் ஆகின்றனவே!

பெரியாருக்கு இந்த அளவு தண்டனை போதாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஈனத்தனமான எண்ணத்தைச் சிலர் வெளியிட்டுக் கூறுகின்றனர், இதைக் தி.மு.க. பொறுத்துக் கொள்ளாது.

கல்கி ஓர் எடுத்துக்காட்டு

பெரியார் அனுபவசாலியாக இருக்கலாம், அவர் எவ்வளவு பெரியாராயிருந்த போதிலும், பிராமணர்களைக் குத்துவேன் – கொல்லுவேன் என்று சொன்ன பிறகும், அவருக்கு 6 மாதத் தண்டனை தான் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தண்டனை போதாது, இன்னும் அதிகத் தண்டனை கொடுக்கும்படியாக அரசாங்கம் அப்பீல் செய்ய வேண்டும், என்ற கருத்தப்பட ‘கல்வி’ பத்திரிக்கை தலையங்கம் எழுதியிருக்கிறது.

‘கல்கி’க்கு எந்த அளவுக்கு ‘நல்ல மனம்’ இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதும், சான்று. மனிதனின் பண்பு எந்த அளவு மங்கி இருக்கிறது என்பதற்குக் ‘கல்கி‘ ஓர் எடுத்துக்காட்டு.

பெரியாருக்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறார் – ‘குரல் நடுக்கமெடுக்கக்கூடிய அளவுக்கு வயது முதிர்ந்து பலகீனமாக காணப்பட்டார் பெரியார்’ என்று.

கல்கி தன் பண்மை இழந்துவிட்டார்!

பெரியாரைப் பற்றி நீதிபதி இப்படிக் கூறுகிறார், ஆனால், இங்குக் ‘கல்கி‘ பத்திரிக்கை ஆபீசில் சுழல் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, மின்சார விசிறியின் காற்றிலே மகிழ்ந்து கொண்டு தலையங்கம் எழுதுபவர் கூறுகிறார் – ‘தண்டனை போதாது‘ – என்று அதை எழுதியவர் யாராயிருந்தாலும் – பகவத் கீதை படிப்பவரானாலும் சரி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கீதத்தை இரசிப்பவரானாலும் சரி – அவர் எவ்வளவு பெரிய மகா மேதையாக இருந்தாலும் சரி – இதை எழுதியதன் மூலம் அவர் தனது பண்மை இழந்துவிட்டார் என்றுதான் சொல்லுவேன்.

பெரியார் அவர்கள் சிறையில் எத்தனை நாளைக்கு இருக்கிறாரோ அத்தனை நாளைக்கும் நாங்கள் வெட்கப்படுகிறோம், துக்கப்படுகிறோம்.

நாங்கள் அவர்கள் !பார்ப்பனர்கள்) மீது வைத்துள்ள அன்புதான் பெரியாரை, விடுவிக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், ஆனால், இடையிலே அவர்கள் துவேஷத்தைத் தூவப் பார்க்கிறார்கள். ‘கல்கி‘யின் இந்தப் போக்கை நான் அனுமதிக்க மாட்டேன். நாங்கள் பெரியாரிடம் பகைத்துக்கொள்ள வேண்டுமென அவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

நாங்கள் பெரியாரைப் பகைத்துக்கொண்டால், தமிழ்நாட்டு அரசியல் சாக்கடையாகும் என்பதைக் ‘கல்கி‘க்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலில் காமன் பண்டிகைதான் நடக்கும்!

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால், பிறகு தமிழ்நாட்டில் அரசியலில் ‘காமன் பண்டிகைதான் நடக்கம், கடைசியில் அடிதடி சண்டையில் முடியும். அப்படி அடித்துக் கொண்ட எங்கள் இருசாராருக்கும் ஆயிரக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்து தூண்டிவிடவும் ஆள் இருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

மட்டரகமாக எழுதுவதாலோ, தாக்குவதாலே பிரச்சனை தீர்ந்துவிடாது. என்னை அவர்கள் அடக்கப் பார்க்கிறார்கள். என்னை அடக்கினால் இலாபம் யாருக்கு? யாரை நிரந்தரமாக அடக்க வேண்டுமென்று நினைக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் இலாபம்.

எனவே, நாங்கள் சர்வ ஜாக்கிரதையாகவே இருப்போம். நாங்கள் அந்த அளவுக்கு மனதை இறுக்கிக்கொள்ள மாட்டோம், அது நல்லதல்ல – யாருக்குமே நல்லதல்ல!

பார்ப்பனர்கள் இந்த நாட்டில் ஆதிக்கம் தேடுகிறார்கள், இதை இல்லையென்பார் இல்லை.

பார்ப்பனர்கள் தங்களின் நன்மையைக் கருதி தங்களின் மனப்போக்கை – கீழ்த்தரமான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பெரியார் காந்தி சிலையை உடைப்பதாகக் கூறுகிறார் என்றால் ஏன் அப்படிக் கூறுகிறார்?

காந்தி சிலை உடைப்பு ஏன்?

காந்திமேல் அவருக்குள்ள வெறுப்பாலா கூறுகிறார்? இதை நன்கு சிந்திக்க வேண்டும். காந்தி சிலையை உடைப்பதன் மூலமாவது சாதியை ஒழிக்க சர்க்கார் கவனத்தைத் திருப்பலாம் என அவர் கருதுகிறார்?

பெரியாரும் சாதி ஒழிய வேண்டும் என்றுதான் கூறுகிறார், பண்டித நேருவும் சாதி ஒழிய வேண்டும் என்றுதான் கூறுகிறார். இப்படி இருவரும் ஒரே கருத்தைச் சொல்லும்போது, பெரியாரைச் சந்தித்து நேரு சொன்னால், பிறகு சாதியை யார் ஒழிக்கப் போகிறார். சங்கராச்சாரியாரைச் சந்தித்துப் பேசியா சாதியை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்?

சாதி ஒழிய வேண்டுமென்று நேரு சொல்லிய பிறகு, சாதியை ஒழிக்கப் பெரியாரின் முறை கூடாது என்று மட்டும் சொன்னால் போதுமா?

இந்தக் கடை வேண்டாமா? வேறு கடையைக் காட்டு?

இந்தக் கடையில் சாமான் வாங்குவது சரியில்லை, கூடாது என்று சொன்னால், பிறகு வேறு எங்கே வாங்குவது? வேறு ஒரு கடையைக் காட்டு!

சாதியை ஒழிக்க நேரு காட்டும் முறைதான் என்ன?

முகம்மது நபி, மக்களுக்கு ஒரு வழியைக் காட்டினார். அவருடைய இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்தவர்களுக்குச் சாதி இல்லை.

நேற்றுவரை இந்துவாக இருப்பவன் இன்று இஸ்லாத்தில் சேர்ந்தால் அவன் சாதியற்றவனாகி விடுகிறான்.

இதைப்போல, நேரு என்ன திட்டம் தருகிறார்? எங்கே வைத்திருக்கிறார், திட்டம். இங்கு வந்து பெரியாரையும் திட்டுவிட்டுச் ‘சாதி கூடாது’ என்றும் பேசிவிட்டுச் சென்ற நேரு, ஏதாவது ஒரு திட்டத்தைத் தந்துவிட்டுப் போனார் என்றால், அவர் உள்ளபடியே அறிவாளி, உலகம் போற்றும் பேரறிஞர் எனலாம்?

போனதடவை அவர் இங்கு வந்தபோதும் நம்மையும் திட்டிவிட்டுப் போனார், பேச்சோடு பேச்சாக, ‘நாட்டுப் பிரிவினை கேட்பவர்கள் முட்டாள்கள்‘ என்றெல்லாம் மட்டரகமாகத் திட்டினார்.

அக்கிரமத்தின் உச்ச நிலையில்...!

இவர் இங்கு என்ன பாஷையில் பேசுகிறாரோ, அதே பாஷையில்தான், இங்கிலாந்தில் முன்பு சர்ச்சில் காந்தியாரைப் பற்றிப் பேசினார். அக்கிரமத்தின் உச்ச நிலையிலுள்ள யாரும் எந்த பாஷையில் பேசுவார்களோ அந்தப் பாஷையில்தான், நேருவும் பேசிவருகிறார், இப்பொழுது.

வட்டமேசை மாநாட்டுக்கு இங்கிலாந்துக்குச் சென்றிருந்த காந்தியார் தான் அணிந்திருந்த ஒரே ஆடையுடனேயே பிரிட்டிஷ் மன்னரைப் பார்க்கச் சென்றபோது, சர்ச்சில் சொன்னார் – ‘இந்த அரையாடை ‘பக்கிரி‘யை உள்ளே விடக்கூடாது‘ என்று.

சர்ச்சில் அப்படிச் சொன்னதைக் கேட்ட எவரும், சர்ச்சிலை அறிவாளி என்றா, சொன்னார்கள்? ‘மண்டைக் கர்வம் பிடித்தவன் சர்ச்சில்‘ என்றுதான் சொன்னார்கள்.

இப்பொழுது அதே இங்கிலாந்து ராணி சொல்லுகிறார் – நேரு கொண்டு வரும் மாம்பழம் ஒரு தனி ருசியாக இருக்கிறது என்று. இவரும், இங்கிலாந்துக்குப் போகும்போதல்லாம் மாம்பழம் கொண்டு போகாமலிருப்பதில்லை.

இந்த நேருவும் சர்ச்சிலைப் போலத்தான் – ஆணவக்காரர்களின் பாஷையில்தான் பேசியிருக்கிறார்.

‘பெரியாரின் முறை எனக்குப் பிடிக்கவில்லை‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதாது, வேறு நல்ல வழியைக் காட்டு. ஏன் சட்டம் போடக் கூடாது? காட்டுமிராண்டி என்றா கூற வேண்டும்?

கொடுங்கோலல்ல, காட்டுமிராண்டி ஆட்சி!

சாதியை ஒழிக்க ஒரு திட்டவட்டமான முறையைச் செய்யுங்கள், அதைச் செய்யும்வரை, அதைச் சொல்லுபவர்களைச் சிறையில் போடுவது என்பது கொடுங்கோலாட்சி கூட அல்ல – காட்டுமிராண்டி ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, மீண்டும் சென்னைக்கு வருகின்ற நேரு, சாதியை ஒழிப்பதற்கு, நான் வைத்திருக்கும் முறையைச் சொல்லிக்காட்ட வேண்டும்.

பண்டித நேருவின் புகழ் நாளுக்கு நாள் மங்கிவருகிறது. தெருக்கூத்திலே வேடம் போட்டு ஆடுபவர்களின் முகம் இரவில் மிக நன்றாக இருக்கும், பொழுது விடிய விடிய பவுடரெல்லாம் உதிர்ந்துபோய், முகம் கருத்துவிடும், அதைப்போல, நேரு பூசியிருக்கும் ‘அரிதாரம்‘ கலைந்து கீழே விழும் பருவம் இது முகம் கருப்பாரு முன்பாக, தன் வேடத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்! இன்றைக்கு ‘அவர் வார்த்தையைக் கேட்க மாட்டோம்‘ என்று கூறுபவர்கள் காங்கிரஸ் கமிட்டியிலேயே அதிகம் இருக்கிறார்கள்.

அவர் வார்த்தையைக் கேட்ட பிறகுதான் கேரளத்தில் நம்பூதிரிபாட் ஆட்சி அமைந்திருக்கிறது. அவர் வார்த்தையைக் கேட்ட பிறகுதான் மராட்டியத்திலே – குஜராத்திலே – ஒரிசாவிலேயெல்லாம் எதிர்ப்புக் குரல் கிளம்பியிருக்கின்றது.

ஆகையால் அவர் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மக்கள் கஷ்டம் நேருவுக்குத் தெரியாது!

நாட்டைச் சுற்றிச் சுற்றிக் கொண்டே வருவதால் நேருவுக்கு இதை அறிய முடியவில்லை.

25 வயது பையன் தகப்பனார் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ரூ.12 கொடுத்து பேனா வாங்குவான், ஆடம்பரச் செலவுகள் செய்வான், ஊரைச் சுற்றிக்கொண்டு வீட்டிற்குள்ளே நுழையும்போது தகப்பனாரின் பரிதாபக் குரலை அவன் அறியமாட்டான்.

குடியிருக்கும் வீடு அடமானம் வைக்கப்பட்டது என்பது மகனுக்குத் தெரியாது.

அதைப்போல, இந்தியாவில் மக்கள் படும் கஷ்ட நஷ்டம் நேருவுக்குத் தெரிய முடியாது.

கடை வீதிக்குப் போனால் விலைவாசி ஏற்றம். தொழில் செய்யலாமென்று வேலை நாடிச் சென்றால், எங்கும் வேலை காலி இல்லை என்ற போர்டுகள் தொங்குகின்றன. பிள்ளைக்குப் பள்ளிச் சம்பளம் கட்ட பணமில்லாத திண்டாட்டம். நாளெல்லாம் சோகரேகை படர்ந்து, துக்கம் கப்பிய முகத்துடன் தகப்பன் படும் கஷ்டத்தைப் பள்ளிப் பிள்ளைகள் தெரிந்து கொள்வதில்லை, வீடும் பள்ளியும் தான் அவர்களுக்குத் தெரியும்!

நேருவின் மதிப்பு குறைந்து வருவதால்தான் அவர் டி.டி.கே.யை அனுப்பினார் அமெரிக்காவுக்கு.

சென்றவுடனா கடன் கேட்பது?

அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அழகாகப் பேசி, அமெரிக்கர்களை மயக்கிவிடுவார், அவருக்கு நன்றாகச் ‘சோப்‘ போடத் தெரியும் என்றுதான் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அவர் சென்றும் ஏன் வெறுங்கையுடன் திரும்பி வந்தார்?

அமெரிக்காவுக்குச் சென்றதும் அவர் என்ன செய்தார்? சென்ற உடனேயே ‘கடன் கொடுங்கள் – கடன் கொடுங்கள்‘ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். இவரை அங்குள்ளவர்கள் வரவேற்று, ‘எங்கு வந்தீர்கள், என்ன விசேஷம்?‘ என்று கேட்டால் இவர் அதற்கு ஒன்றுமில்லை, சும்மாதான் வந்தேன், அமெரிக்கர்கள் மிகவும் நல்லவர்கள் – மிகத் தாராளமாக எல்லோருக்கும் உதவி செய்கிறார்கள் என்றெல்லாம் இந்தியாவிலுள்ள நாங்கள் கேள்விப்படுகிறோம், அதனால் தான் நான் வந்து உங்களைப் பார்த்துப் பாராட்டி வி்ட்டுப்போகலாம் என்று வந்தேன்‘ என்று சாதாரணமாகச் சொன்னாலே போதும். உடனே ஐசன்ஹோவரே இவரை அழைத்து, ‘உங்களுக்கு என்ன வேண்டும்‘ ஏதாவது பண உதவி தேவையானால் சொல்லுங்கள், தாராளமாகத் தருகிறோம்‘ என்று கூறியிருப்பார். இவர் வாயைத் திறந்து ‘பணம்‘ என்று கேட்டேயிருக்க வேண்டியதில்லை.

கடன் வாங்கப் போகிறேன் என்று விளம்பரம் செய்தார்!

அப்படியில்லாமல் இவர் இங்கிருந்து போகும்போதே, ‘கடன் வாங்கப் போகிறேந்‘ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு போனார்.

அமெரிக்காவில் டி.டி.கே.யைப் பார்த்து, ‘உங்கள் திட்டத்துக்குத் தேவையான பணம் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?‘ என்று கேட்டதற்கு, ‘என்ன செய்வது? திட்டத்தைக் கைவிட வேண்டியதுதான்‘ என்று பதில் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்லலாமா? ‘வெளிநாட்டு உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எங்கள் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம், அந்த அளவுக்கு இந்தியாவில் பண வசதி இல்லாமலில்லை, ஏதாவது உதவி கிடைத்தால் வரவேற்கலாம் என்று இருக்கிறோமே தவிர, வெளி உதவியையே நம்பி இருக்கவில்லை நாங்கள்‘ என்றல்லவா இவர் கூறியிருக்க வேண்டும்? அப்படிக் கூறினால், அவர்களே தாராளமாக இந்தியாவுக்குப் பணம் தரலாம். தருவதற்குக் கருதலாம்.

தேவையை முன்கூட்டி சொல்லலாமா?

ஒரு வீட்டை அடமானம் வைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள், வீட்டின் உண்மை மதிப்பு ரூ.50 ஆயிரம் என்றாலும், இந்த வீட்டைக் கட்ட ரூ.100 ஆயிரம் செலவாயிற்று, வீட்டின் உத்தரங்களெல்லாம் அசல் தேக்கு மரத்தாலானவை, அடியிலே வெகு ஆழத்திலே கடைக்கால் போடப்பட்டுள்ளது. மிகக் கெட்டியான வீடு என்றெல்லாம் சொன்னால்தான் ரூ.200 ஆயிரமாவது பாங்கிலே கடன் கொடுப்பார்கள். அதை விடுத்து வீடு மிகப் பழுதாகிவிட்டது, கடைக்கால் ஆடிப்போய்விட்டது, உத்திரங்களெல்லாம் உளுத்துப் போய்விட்டன, அதைப் பழுது பார்க்கத்தான் பணம் தேவைப்படுகிறது‘ என்றால் பணம் கிடைக்குமா?

வெறுங்கையுடன் திரும்பினார் டி.டி.கே.!

அதைப்போல, டி.டி.கே.யும் அங்குப்போய் ‘திட்டம் வெற்றிபெற நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்‘ என்று செஞ்சியிருக்கிறார்.

சுத்த பஞ்சப் புத்தியை அமெரிக்காவில் சென்று காட்டினார், அவர்கள் வெறுங்கையுடன் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

கடன் கேட்க அமெரிக்காவுக்குச் சென்ற நேரமாவது சரியான நேரமா என்றால் அதுவுமில்லை, ரஷ்யா செயற்கைச் சந்திரனைப் பறக்க விட்டிருந்த நேரம், அமெரிக்கரெல்லாம் கவலையுடன் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் டி.டி.கே. சென்று ‘என்ன, ஐசனோவா, சௌக்கியமா?‘ என்று கேட்டார், ‘அட இரு அய்யா, நீ வேறு வந்து தொல்லை கொடுக்கிறீர்‘ என்று சொல்லியிருப்பார்கள்.

தக்க நேரமாகப் பார்த்து அங்குச் சென்றிருந்தால், அவர்களும் சந்தோஷத்துடன் வரவேற்றிருப்பார்கள், ‘எங்கே வந்தீர்கள்?‘ என்று கேட்டால் ‘சும்மாதான் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன், நீங்கள் எதெதற்கோ உதவி செய்தவதாகக் கேள்விப்பட்டேன், பள்ளிக் கட்டிடங்கள் கட்டவும், பாலங்கள் கட்டவும் பண உதவி செய்வதாக அறிந்தேன். உங்களைப் பாராட்டுவதற்காகவே வந்தேன்‘ என்று சொன்னால், உடனே ஐசனோவரே, இந்தியாவுக்குத் தேவையான பணம் எவ்வளவு என்று கேட்டு அனுப்பி வைப்பார். பணம், கேட்காமலேயே நமக்கு வரும்.

கேட்ட உடனேயே கிடைத்திருக்குமே!

நேருவின் புகா இன்னும் மங்கிவிடவில்லை என்றால், கேட்டவுடனேயே பணம் கிடைத்திருக்க வேண்டுமே!

காஷ்மீர் பற்றி ஐ.நா. சபையில் பேச கிருஷ்ணமேனனை அனுப்பினார்கள், கிருஷ்ணமேனன் உடல் நலிவுற்றுத் தள்ளாடிய நிலையில் சபைக்குப் போனார், அவர் தள்ளாடியது போதையால் அல்ல, வழக்கமான இரத்தக் கொதிப்பு நோயால்தான் – மடாதிபதியைப் போல் இரு பக்கமும் இருவர் தாங்கிச் செல்ல அவர் சபைக்குச் சென்றிருக்கிறார்.

பலவீனத்துடன் சபைக்குச் சென்ற கிருஷ்ணமேனனால் இந்தியா சார்பில் தைரியமாகப் பேச முடியவில்லை, அவருடைய பேச்சால் எவரும் மயங்கிவிடவில்லை.

ஜின்னா இருந்தால் நேரு நிலை என்ன?

நாளைக்கு ஒரு தலைவர், வேலைக்கு ஒரு மந்திரிசபை மாறும் நிலையிலுள்ள இன்றைய பாகிஸ்தானிடமே இவர்கள் ஜம்பம் சாயவில்லை என்றால், இன்னும் ஜின்னா மட்டும் உயிருடனிருந்திருந்தால், அலகாபாத் பண்டிதரின் ஆட்டமெல்லாம் எப்படியாகியிருக்கும்?

இவரையா மற்ற நாட்டினர் மாலை போட்டு வரவேற்பார்கள்?

நேருவில் இராஜதந்திரமெல்லாம் எதிலும் பயன்படாமல் போய்விட்டன, அரை டன் விறகு வைத்து எரித்தாலும் திருப்பூர் பருப்பே வேகவில்லையென்றால், வடநாட்டிலிருந்து வரும் கேசரிப் பருப்பா வெந்துவிடும்?

இதனை இதனால் இவன் முடிக்கும்...!

பணம் தேவையென்றால், அதற்கான வகையில் பக்குவமாகப் பேசி வென்றுவரக் கூடிய திறமை வாய்ந்த சர் ஏ.இராமசாமி முதலியாரை அனுப்பியிருக்க வேண்டும். அவர் எங்கள் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் அவரைச் சிபாரிசு செய்வதாகக் கருதலாம், அவர் கூட வேண்டியதில்லை – டாக்டர் சி.பி.இராமசாமி ஐயரையாவது அனுப்பியிருக்க வேண்டும், சர்-மிர்சா-இஸ்மாயிலையாவது அனுப்பியிருக்கலாம்.

‘இதனை இதனால் இவன் முடிக்கும்...‘ என்ற குறளை நமது நாவலர் அடிக்கடி எடுத்துச் சொல்வதைப்போல, இன்ன இன்ன வேலைக்கு இன்னார்தான் தகுதி என்று தேர்ந்தெடுத்து அனுப்பினால் பலன் கிடைக்கும்.

இதையெல்லாம் விடுத்து, எதையும் சிந்தித்துப் பார்க்காமல், தாறுமாறாக மற்றவர்களைத் திட்டுவதினால் – ஆத்திரத்துடன் பேசுவதினால் காரியம் வெற்றிபெற முடியாது. தனது புகழ் சரிந்து வருகிறது என்பதை நேரு உணர வேண்டும்.

(நம்நாடு - 24, 25, 26, 27, 31-12-1957)