அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


போராட்டம்
2

இந்த கூற்றைக் கண்ட இருவரும் கழுதையைத் தூக்கி தோளின் மீது சுமந்து ஆற்றுப் பாலத்தைக் கடக்கலாயினர். நடு பாலத்திற்கு வந்ததும், கழுதை ஆற்று வெள்ளத்தைக் கண்டு மிரண்டு, கால்களை உதைத்து உதவி ஆற்றில் விழ, விழுந்து கொண்டிருக்கும் கழுதையைத் தாவிப் பிடிக்க தனயனும் அவனைப் பிடிக்க தந்தையும் ஒருவர் பின் ஒருவராக விழுந்தனர் ஆற்றில். ஆற்று வெள்ளம் அவர்கள் மூவரையும் விழுங்கிற்று.

இந்தக் கூற்றுக்கு ஒப்பானது குற்றம் குறை கூறும் குறும்பர்கள் செய்கை. ஆகவே பொதுச்சேவை சிரமமானது மட்டு மல்ல, சிக்கலானது சிந்திப்போருக்கு.

எதிரிகளின் செய்கையைக் கண்டு கலங்காமல் ஆர்வத்தோடு, தான் கொண்ட கொள்கைக்காக உற்சாகத்தோடு உழைக்கும் உறுதி வேண்டும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு.

கிண்டல் பாணம், கேலிவம்பு, துணிச்சலான தூஷனம், வசை வாள் எல்லாம் நம்மைத் தாக்கும். ஆனால், சலியும் இதயம் படைத்தவரல்ல நாம். எதையும் தாங்கும் இதயம் படைத்த இலட்சிய வீரர்கள் நிறைந்த அறிவுப் பாசறை தான் நமது திராவிட முன்னேற்றக் கழகம். ஆகவே எவ்வித மனச்சோர்வோ மனக்கசப்போ நம்மிடையில் நிச்சயமாக தலைதூக்கக் கூடாது. தன்னடக்கம், தன்னம்பிக்கை, நம் வாழ்வின் இலட்சியம்.

தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் தெரிந்த சோக விதை மிகப்பெருத்த அளவிலே சேதத்தைத் தந்தது. வீடிழந்த மக்கள் கண்களை கடலாக்கிக் கொண்டனர். குடிசைகள் காற்றில் பறந்தன. கால்நடைகள் காணவில்லை. வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் மாண்டன. மக்கள் பலரும் இரையாயினர். இடித்து இடிக்கும், கனத்தமழைக் காற்றுக்கும்.

தென்றல் தென்றலென தெம்மாங்கு பாடிய தேசியவாதிகள் வாயிலே புயல், புயல் என்ற புதிய கீதம், பூரித்த உள்ளங்களிலே புலம்பல். சலித்த முகங்களில் சிந்தனைத் தோற்றம். சிந்தனைச் சிங்கங்கள் சிலந்தையாக மாறின. மருட்சியடைந்தனர் மக்கள் புயலால்.
மாளிகைகள் மறைந்தன. அதே நேரத்தில் மண் குடிசைகள் கடிலிலே மிதந்தன. ஆடையிழந்து ஆதரிப்பாரற்று அங்குமிங்குமாக ஓடி அலைந்தனர். அவர்களுக்கு உதவவே தஞ்சை புயல் நிவாரண நிதிக்குழு உருவாயிற்று.

நிவாரணத்திற்கு ரூபாய் 25,000 தேவையெனக் கருதினோம். அந்தத்தொகை மிக மிகச் சொற்பம் காசு படைத்தவர்களுக்கு, மாளிகையின் உள்ளே மஞ்சத்தில் கொஞ்சும் மகுடாதிபதிகளுக்கு, ஆனால் நமக்கு குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிக மிகப் பெரிது. பக்தர்களல்ல நாம் பஜகோவிந்தம் பாடிப் பணம் திரட்ட, செல்வச் சீமான்களல்ல சரியென்று செக் எழுதி தந்துவிட சாதாரணமானவர்கள். நடுத்தர குடும்பத்தினர், நாதியற்ற்றவர்கள், நம்மால் ரூ.25,000 தரமுடியுமா என்ற சந்தேகத்தில் மயங்கினோம். இந்தத்தொகை நம்மால் நிச்சயமாக எவராலும் தர முடியாதும்.

நடிகர் இராமச்சந்திரனைக் கேட்டால் நான் மறுபடியும் காங்கிரசுக்கு போய்விடுவேன் என்று கூறலாம். கருணாநிதியைக் கேட்டால் கடுமையான கட்டளை என்று கூறுவார். இப்படியே மோகனமியற்றுவர். அண்ணாதுரையே கொடு ரூ.25,000 என்று என்னைக் கேட்டால், நான் ஹர! ஹர சிவ சிவ சம்போ என்று ஓடு எடுக்க வேண்டியது தான்.

ஆகவே பஞ்சத்தாண்டிகளான நம்மால், பொது மக்களின் ஆதரவால் சேர்க்கப்பட்டதுதான் இதோ உங்கள் முன் காட்சியளிக்கும் இரண்டு லாரி ஆடைகள். அதைக்கண்டு பூரிப்படைகிறேன். உள்ளம் மகிழ்கிறேன். வழங்கப்படவிருக்கும் துணிகள் உயர்ந்த ரகத் துணிகளல்ல! எல்லாம் முரட்டுத்துணிகள் மண்வெட்டும் மக்களுக்கு மானமிழந்த மங்கையருக்கு.

இது மகத்தான காரியம் மட்டுமல்ல. உள்ளபடியே நமக்கு மகிழ்ச்சியும், மாற்றாருக்கு மிரட்சியும், ஆட்சியாளருக்கு அதிர்ச்சியையும் தரக்கூடியது.

புயல் தந்த தொல்லைப் பரிசுகளை அனுபவித்துள்ள தஞ்சை, திருச்சி, பெருங்குடி மக்களுக்கு செல்லவிருக்கும் இந்த ஆடைகளை உள்ளபடியே அரசியலார் சார்பில் செலுத்தத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் திராவிடத்தின் துரதிருஷ்ட வசத்தினால் தென்னாட்டுக் கவர்னர் தமிழரல்ல. திராவிடம் பெற்ற திருமணியல்ல! ஆனால், வடநாட்டின் வாரிசு, டெல்லி ஆட்சியின் கைப்பாவை. செந்தமிழறியாத செல்வ பூபதி. நேருசர்க்கார் நேரடியாக அனுப்பிய முதலாளித்துவத்தின் பிரதிநிதி. அந்தத் துக்கரமான காரணத்தினால் கவர்னவர்களை அழைத்து இங்கு அடுக்கப்பட்ட ஆடைகளைத் தந்து தஞ்சைத் தமிழர்கட்குத் தர முடியவில்லை. மிக வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்.

எனவேதான் தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கலெக்டர் மூலமாகத் தர ஏற்பாடு செய்துள்ளேன்.

இவ்வளவு மகத்தான ஆடையளிப்பு விழா நடத்தும் நம்மை அரசாங்கம், பாராட்டாமல் பழிக்கிறதே. போற்றாமல் தூற்றுகிறதே! வாழ்த்துப் பட்டியலைத் தராமல் வசை புராணத்தை வீசி மகிழ்கிறதே! அரசாங்கத்தின் போக்குத் தவறு என்று எனக்கு முன் பேசிய தம்பிகளும் தலைவர்களும் குறிப்பிட்டனர். ஆனால் இது அல்ல நாம் எதிர்ப்பார்ப்பது.

இவ்வித மறுமலர்ச்சியை உண்டாக்கித் தந்த எனது ஆசைத் தம்பிமார்களை களிப்புடன் பாராட்டுகிறேன். அந்தப் பாராட்டுதலுக்கு பாராட்டு பெறுவோர்களில் எனது அரும்பெரும் தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் பெயரும் ஜொலிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ, விட்டக் குறையோ, தொட்டக் குறையோ! அவர் ரூபாய் ஐந்தோ பத்தோ தந்துள்ளார். தஞ்சை நிதிவசூலின் பொõú அவருக்கு எனது நன்றி.

நாம் சேகரித்த நிதிபனியாக்களின் பரம்பரையிலிருந்தோ, டால்மியாக்களிடமிருந்தோ அல்ல. அல்லும் பகலும் அன்றாடம் வயிற்றுக்குப் போராடும் மக்களிடமிருந்து, ஏழை எளியவன் பஞ்சை பராரி என்ற பலவகைப்பட்டவர் அளித்த பரிசு.

கோழி கூவியழைப்பதை அலாரக் கடிகாரமாகக் கொண்டு வயலுக்குச் சென்று பயிரிடும் நண்பர்களினால், ராமராஜ்யத்திலே புழுக்களாக, பஞ்சத்தின் பதுமைகளாக, பசியின் பவளங்களாகப் பரிமளிக்கும் பாட்டாளிகளினால், ஆலையிலே நெற்றி வியர்வையைத் துடைத்து துணி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களினால் தரப்பட்டவை.

அப்படிப்பட்ட வள்ளல் நெஞ்சுள்ள உள்ளங்களைப் பூரிப்புடன் பாராட்டுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகச் சார்பில் நன்றியைக் காணிக்கையாகச் செலுத்துகிறேன்.

இந்த உதவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் அளிக்கப்படும் சிறிய உதவியானாலும் இதயப் பூரிப்புடன் செய்கிறோம். செய்வதையும் திருந்தச் செய் என்கிறபடி.

நாம் அளிக்கும் உதவி மாடமாளிகையில் வாழும் மகான்களுக்கல்ல. தினமும் உழுது பயிரிடும் பஞ்சை விவசாயிக்கு, ஆடையின்றி அவதிப்படும் அருமை திராவிடத் தோழர்களுக்கு காலை முதல் மாலை வரையில் கையில் கலப்பையை ஏந்தி, கரடுமுரடான நிலத்தை நஞ்சையாக்கி, நாம் உண்ண உணவளிக்கும் உத்தமனுக்கு என்பதை நினைக்கும்போது உள்ளம் பூரிப்படைகிறது மனதிற்கு மட்டிலா மகிழ்ச்சியைத் தருகிறது. உண்டா? இதைவிட ஆனந்தம்.

பஞ்சத்தால் பரிதவிக்கும் மக்களுக்கு நாம் செய்யும் இந்த உதவி விளம்பரத்திற்காக அல்ல. விளம்பரம் தேவைப்படும் கட்சியாக நாம் இல்லை. இருக்கவும் மாட்டோம்.

போராட்டங்கள் பல கண்டுள்ளோம். போலீஸ் தடியடி, குத்து, குண்டு வீச்சுகளையும் தாங்கியுள்ளோம். திராவிட மக்களின் நன்மைக்காக, நாடாள்வோரின் எந்த செய்கைக்கும் அஞ்சாமல் உழைக்கக் காத்திருக்கிறோம்.

அரசியல் வேறு, புரட்சி என்பது வேறு எதையும் அறிந்தே பணியாற்றி வந்திருக்கிறோம். எந்த காரியத்தையும் சிந்தனைக்கு வேலை தந்தே செய்திருக்கிறோம்.

திராவிடநாடு பெற போராட முற்பட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் நாம் கடைபிடிக்க வேண்டியவை பல.

நம்மிடம் ஒற்றுமை வளரவேண்டும், ஒழுங்குமுறை கற்றுக் கொள்ள வேண்டும் கூட்டத்திற்கு வரும் அன்பர்கள் அதை அறிந்து நடக்கமுற்படுவது நலம்.

நீங்கள் ஒழுங்கு தவறி நடக்கமுற்பட்டால் அண்டையில் உள்ள தாய்மார்கள் சங்கடப்படநேரிடும். அமைதி குறைவேற்படுமானால் அவர்கள் அவதிக்குட்படுவார்கள். அது கூடாது கூட்டம் முடியும் வரையில் ஒழுங்கு முறை தவறாது நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

புயல் நிவாரணத்திற்கு உதவிய உங்கள் யாவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பேச்சை முடிக்கிறேன்.

வணக்கம்.

தலைவர் அவர்களே! தோழர்களே!!
காலையிலிருந்து இதுவரை டவுன் ஹாலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கும், இவ்வளவு பெருந்திரளான மக்களைக் கூட்டி நடத்தப்படும் இப்பொதுக் கூட்டத்திற்கும், சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து உதவிய உள்ளூர் கழகத் தோழர்களுக்கும், வட ஆற்காடு மாவட்ட கமிட்டியினருக்கும் கழகச் சார்பில் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த ஊருக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். அன்று அன்புடன் வரவேற்ற தோழர் பக்தவத்சலம் இன்று நம்மோடு இருக்கிறாரா இல்லையா? சட்டசபை துணைத்தலைவரா, சர்க்காரின் பாதுகாவலரா? அவர் ஊரில் இருக்கிறாரா, அல்லது எங்கிருக்கிறார் என்பதைப் பற்றி கவலைப் படாமல் நமது கழகம் வளர்ந்து வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் எதிரிகளால் நசுக்கப்படுவதை விட சில சமயங்களில் நண்பர்களால்தான் அதிகம் நசுக்கப்படுகிறது. எனினும், நாம் வலுவூட்டிய கரங்கள்தானே அவைகள் அக்கரங்கள் தனது பயிற்சிக்காக நம்மையே நசுக்குகின்றன என்று கருதி நான் பொருட்படுத்துவதில்லை. எனவே எதிரிகளாலும், சில சமயங்களில் நண்பர்களாலும், நமது கழகம் நசுக்கப்பட்டாலும் கூட அது தனக்கு உண்மையான தொண்டினால் வளர்ந்து வருகிறது.
எனக்கு முன் நண்பர்கள் பேசிய பேச்சுக்களையெல்லாம் கேட்டீர்கள். அவைகள் அனைத்தையும் தொகுத்து சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் கூறுவதெல்லாம் பத்திரிகைகளில் வந்த செய்திகளே தவிர, இல்லாதவைகளை எடுத்துச்சொல்லி வம்பு பேசுபவர்களல்ல.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகத்தான பணியை மக்கள் உணர்ந்து வருவதால் அதன் கொள்கைக்கு நாடெங்கும் ஆதரவு தந்து வருகின்றனர். ஆனால் மாற்றுக் கட்சியனரோ எங்களைக் கண்டால் பொறாமைப் படுகின்றனர். இதற்கு காலம்தான் பதில் கூற வேண்டுமேயன்றி நாங்கள் அல்ல.

தோழர்களே, எப்படிப்பட்ட பாட்டாளியும் மற்ற நாட்டை விட இந்நாட்டில் தான் அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.

அமெரிக்காவில் நீக்ரோக்கள் என்றால் செந்தமிழ் நாட்டில், அந்நாட்டுக்குரிய திராவிடர் கடுமையான கஷ்டநஷ்டங்களுக்கு ஆளாகி தவிக்கிறார்கள். வேலையில்லாக் கொடுமை பஞ்சத்தால், பட்டினியால் பெற்றெடுத்த கண்மணிகளைக் காப்பாற்ற வழியின்றி தவிக்கும் பரிதாபம் ஆகியவைகளிடையே மரக்கிளையில் தூக்கிலிட்டுக் கொள்ளும் குடும்பங்கள் எத்தனை? ஊரை விட்டு ஓடுகிறவர்கள் எத்தனை பேர் ஆயிரம்? இவைகளுக்கெல்லாம் காரணம் என்னயென்று கேட்கிறேன். பக்தி குறையினாலா? எங்களில் சிலபேருக்கு வேண்டுமானால் அப்படியிருக்கலாம். ஆனால் நாட்டிலுள்ள அத்தனைபேருமா நாஸ்திகர்கள்? சுயமரியாதைக் கட்சிக்காரர்கள்?

நாம் வெட்டாத குளம் உண்டா! கட்டாத கோயில் உண்டா! பண்ணாத பாலாபிஷேகம் உண்டா! தேர், திருவிழா, ஆண்டுதோறும் ஆண்டவனுக்கு கல்யாணம். முதல் ஆறுகால பூஜைகளுக்குத்தான் குறைச்சல் உண்டா? நமது பாட்டாளித் தோழன் மூட்டை தூக்கும்போது கூட ராமாயென்று சொல்லிக் கொண்டுதானே தூக்குகிறான். எனவே பக்தி குறைவால்தான் நாட்டிலே பஞ்சம், பட்டினி, மழையில்லாமை யென்று ஆச்சாரியார் அடிக்கடி கூறுவது வடிகட்டிய அரசியல் சாணக்கியமாகும். எனவேதான் நண்பர் பொன்னம்பலனார் பேசும்போது சமுதாயத்தில் மறுமலர்ச்சி தேவையென்று வலியுறுத்திக் கூறினார்.

உலகத்தில் எங்குமே காண முடியாத எண்ணிக்கையில் ஜாதிப் பிரிவுகளும், அதன் காரணமாக மக்களிடையே பேதா பேதங்களும் வேறுபாடுகளும் மலிந்திருக்கின்றன.

அமெரிக்காவிலே ஹாரிசன் முதலியார் எனகாண முடியுமா? லண்டனிலே கிரிப்ஸ் செட்டியார் உண்டா? விஞ்ஞானத்தோடு போட்டியிட்டு நாள்தோறும் பலவித அற்புதங்களைக் கண்டு பிடித்து வரும், மேல்நாட்டவருக்கு ஜாதி வித்தியாசமும், ஜாதிப் பட்டங்களும் அவசியமானதென்று தெரிந்தால் அவர்கள் நம்மை விட அதிக ஜாதிகளை உண்டாக்கி இருக்க மாட்டார்களா? எனவே மக்களது ஒன்றுபட்ட வாழ்க்கைக்குத் தடங்கலாயுள்ள ஜாதி வெறியைத் தகர்த்தெறிய வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறுவது நாஸ்திகமாகுமா?

பீமனைக் கண்ட பரத கண்டம் வந்தவரிடத்திலெல்லாம் அடிமைப் பட்டதேன்? அவர்களது எதிர்ப்பை நமது ஆண“டவன் களும், ஆயுதங்கலும் ஏன் தடுக்கவில்லை? இவை எல்லாம் தேசியத் தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்றுதான் தி.மு.கழகம் கூறுகிறது.
தோழர்களே!

நம், நாட்டிலிருந்து லட்சக் கணக்காக பாட்டாளி மக்கள் ஏன் வெளி நாட்டுக்கு ஓட வேண்டும்? நம் நாட்டில் எது இல்லை? நான் பலமுறை ஆதாரத்துடன் கூறியிருக்கிறேன்.

இயற்கை வளம் மிகுந்த நமது நாட்டிலிருந்து, பிற நாட்டுக்கு நம் தோழர்கள் ஓடுவதா? இதற்காக ஆட்சி பீடத்திலுள்ள ஆச்சாரியாரோ அல்லது மற்றவர்களோ கவலைப்பட்டதுண்டா? ஓயாது உழைக்கும் தொழிலாளிக்கு ஒரு கவளம் சோறு கிடைக்க வில்லையே ஏன், இதற்குக் காரணந்தான் என்ன?

இறைக்கின்ற தண்ணீர் தோட்டத்தில் சேரவில்லையென்றால் குடத்தில் ஓட்டையிருப்பதால்தானே. அதை அடைக்க வேண்டுமென்று கூறினால் தேசத் துரோகமா யென்று கேட்கிறேன். அதேபோல் எல்லா இயற்கை வளப்பமுடைய நம் நாட்டில் பிழைக்க வழியில்லாது வெளிநாட்டுக்குப் பாட்டாளி ஓடுகிறான்.

நம் நாட்டுப் பணமும், வளப்பமும் டெல்லி ஆட்சி, பீடத்தில் குவிந்தால் நாம் எப்படி வாழ முடியும்.

டெல்லி சர்க்காருக்கு கமிஷன் ஏஜெண்டுபோல நமது சர்க்கார் செயலாற்றுகிறதே யன்றி சுதந்திரமுடன் ஆண்டால் ஏழை நடுத்தர மக்களுக்கு கொடுமைகள் நிரந்தரமாக நிலைத்திருக்க முடியுமா?

நமது நாடு பிரிக்கப்பட்டால் நாசம் விளையும் என்று வாய் கூசாது, கூப்பாடு போடும் மேதாவிகளைக் கேட்கிறேன். பிரிந்த நாடுகளில் இன்று எந்தெந்த நாடு இந்தியாவிடம் பிச்சை கேட்கின்றன? இன்னும் சொல்லுவேன், முப்பது கோடி மக்களைக் கொண்ட இந்தியா, எண்பது லட்சம் மக்களைக் கொண்ட இலங்கையிடம் அரிசிக்கும், அரசியல் நெருக்கடி தீரவும் கைக்கட்டி நிற்கிறதே!

நாட்டுப் பிரிவினைக்காக போராடும் எங்கள் பாசறையில் ஆயிரக்கணக்கில் தோழர்கள் பணியாற்றுகிறார்கள். பல்லாயிரக்கணக்கில் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆகையால், இதனின் ஜீவசக்தி என்ன என்பதை ஆட்சியாளர் உணர வேண்டும்.

144 தடையுத்திரவுகள், புத்தகங்களுக்குத் தடை மற்றும் அடக்குமுறையைக் கண்ணை மூடிக்கொண்டு எங்கள் மீது ஏவி விட்டாயே, நான் எழுதிய புத்தகத்திற்கு தடை விதித்தாய். சிறைக்கனுப்பினாய், 150 ரூபாய் அபராதமும் விதித்தாய் உயர்நீதிமன்றம் சென்றேன். அடக்கு முறையை வீசிய சர்க்காரின் மானம் தூள், தூளாயிற்று.

750 ரூபாய் அபராதத்தை திருப்பி கொடுத்து விடுமாறு உயர்நீதிமன்றம் புத்தி கற்பித்து, இன்னும் சொல்லுவேன் நான், இது வரை அந்த 750 ரூபாயைத் திரும்பியும் வாங்கவில்லை. நமக்கு கடன்பட்ட சர்க்கார் இன்றைய சென்னை சர்க்கார்.

இது மட்டுமா? இந்த சர்க்கார் ஊழல் மலிந்த சர்க்கார் மக்களைக் காப்பாற்றத் தெரியாத சர்க்கார் கையாலாகாத சர்க்கார் கண் குருடாகி காது செவிடாகி, போலீஸ் உதவியை நாடி ஆட்சி செய்யும் சர்க்கார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

தங்களின் நிர்வாகம் சரியாய் இருக்கிறதா இல்லையா? யென்பதற்கு நிபுணத்துவம் என்று பேரால் அமெரிக்கர்களை வாரந்தோறும் வரவேற்கிறதே சர்க்கார்.

ஒருவன் தனது மனைவியின் கற்பைப்பற்றி எதிர் வீட்டுக்காரனிடம் விவரம் கேட்பதைப் போலில்லையா?

எனவே, அமெரிக்க நாட்டுக்கு தம் நாட்டின் தன் மானத்தை அடகு வைத்திருக்கிறது நேரு சர்க்கார், என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.
ஆறு ஆண்டுகளிலே எத்தனை ஆலைகளை கட்டினாய்? எத்தனை பேருக்கு வேலை கொடுத்தாய், மின்சாரத்தைக் கண்டு பிடிக்க முடியாமல், வெள்ளையன் கண்டு பிடித்த மின்சாரத்தைக் குறைப்பதற்குத் திட்டம் போடுகிறாயே, தொழிலாளர் இதனால் தொல்லைபடுகின்றனரே.

நேரு ஆட்சியிலோ, ஆச்சாரியாரின் ஆட்சியிலோ, ஆசிரியர்களுக்கு அதிகாரிகளுக்கு மாணவர்களுக்கு டாக்டர்களுக்கு, நர்சுகளுக்கு, ஏழைகளுக்கு, எளியவர்களுக்கு யாருக்காவது நிம்மதியுண்டா?

நகீப் அந்நாட்டு மக்களுக்கு வாழ்வளித்தார். நகாஷ்பாட்சாவையும், அவரது மனைவியையும் கூண்டில் ஏற்றினார். நேரு அவ்விதம் கேட்டாரா, கேட்பாரா? அவர் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தோழர்களாவவது கேட்டார்களா? நம் நாட்டிலேயுள்ள நாசக்காரர்களை நோக்கி!

நாங்கள் இவ்வாறு கூறுவதை மறுக்கத்தான் முடியுமா? எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு பேரம் நடத்தும் டெல்லி ஆதிக்கத்திலிருந்து விடுபட திராவிட முன்னேற்றக் கழகம் போராடுவது தேசியத் துரோகமாகுமா?

அன்று ஜின்னாவைக்கூடத்தான் கேலி செய்தாய்? கோடையிடிகளிலிருந்து மாரிகாலத்து தவளைகள் கூட கத்தின. கைபர் கணவாய் வழி வந்தவனுக்கு பாகிஸ்தானா என்று மிரட்டினாய்? இறுதியில் ஜின்னா கேட்டதைவிட அதிகமாக அளந்து கொடுத்தாயே!
பாகிஸ்தான் பிரிவினை காரணங்களைவிட, பன்மடங்கு மேலான காரணங்களும், அதைவிட இந்நாட்டுக்கே சொந்தக்காரர்களான திராவிடர்கள், நாங்கள், எங்களது திருநாட்டைக் கேட்டால் இல்லையென்று மறுக்க நீ யார்? என்று கேட்கிறேன், டெல்லி ஏகாதிபத்தியத்தை.

நாட்டுப் பிரிவினையை அமைதியாக, பலாத்காரமின்றி பெறவே திராவிட முன்னேற்றக் கழக மனதார விரும்புகிறது. ஆனால் பலாத்காரத்தினால்தான் நாட்டுப் பிரிவினையைப் பெற வேண்டும் என்று ஆதிக்கக்காரர்கள் தாங்களாகவே விரும்பினால் அதனின் விளைவுகளும், பழிகளும் டெல்லி சர்க்காரைய சாரும் என்பதை எச்சரிக்கிறேன்.

வணக்கம்.