அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாளைப்பற்றிப் பேசுவதற்கு முன்னால் இந்தக் கல்லூரியின் ஆரம்பக் கால நினைவுகளைப் பற்றி உங்கட்கு நினைவுறுத்த ஆசைப்படுகின்றேன். இங்கு கல்லூரி ஒன்று தோன்றினால் மாணவர்கள் நிறைய சேருவார்களா? ஆதாரம் கிடைக்குமா? என்றெல்லாம் ஐயப்படுவோர் அநேகர் இருந்தனர். இத்தகைய சங்கடமான நிலையில் எத்துணையோ நல்ல முயற்சிகளுக்கிடையில் இந்த கல்லூரி தோன்றியது. இந்தக்கல்லூரி மற்றக் கல்லூரிகளை எல்லாம் விடத் தனிச்சிறப்புக் கொண்டது. அச்சிறப்புக்கள் எல்லாம் இங்கு பயின்றவர்க்கே தெரியும். இங்கு மாணவப் பருத்திலேயே பிள்ளைகள் ஜனநாயக வளர்ச்சியைப் பெறமுடிகின்றது. ஜனநாயக உணர்வு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. அதே நேரத்தில் மாணவர்கள் தவறு செய்ய சருக்கல்களையும் மிகுதியாக உடையது.

எனவே, இங்கு பயிலும் மாணவர்கள் ஜனநாயக உணர்ச்சியை வழி தவறிப் பயன்படுத்தாது, இங்குள்ள இளமையான ஆசிரியர்களிடம் நெருங்கிப் பழகி ஐயங்களை அகற்றித் தரமும் திறமையும் பெற்று இக்கல்லூரிக்கு நல்ல பெயரெடுத்துத் தரவேண்டும். இதுவே என்னுடைய ஆசை. இந்தக் கல்லூரிக்கான உணவு விடுதி அமைவதற்காக என்னால் இயன்ற உதவியினை எப்போதும் செய்யக் காத்திருக்கின்றேன் என்பதையும், உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்னொன்றையும் மாணவர்களாகிய உங்களிடம் வலியுறுத்த ஆசைப்படுகின்றேன். மாணவர்கள் அரசியல் அறிவு நிறைய உடையவர்களாகத் திகழ வேண்டும், ஆனால் அரசியல் கட்சிகளோடு தொடர்பு கொண்டு தீவிரமாகப் பணிபுரிதல் கூடாது. இதற்கு என் வாழ்க்கையை நான் சான்றாகக் காட்டுவேன். நான் 3 வயது ஆனர்ஸ் படிக்கும் வரை எத்தகைய பொதுக்கூட்டத்திற்கும் செல்வதில்லை. கல்லூரியில் நடக்கும் உரையாடல் விவாத மன்றம் சார்பாக நிகழும் கூட்டங்களுக்கும் போக மாட்டேன்.

ஆனால் 3 வது ஆனர்ஸ் வகுப்பில் படிக்கும்போது லயலோக் கல்லூரியில் நடந்த ஆங்கிலச் சொற்பொழிவுப் போட்டியில் முதன் முதலாகக் கலந்து கொண்டேன். நான் இம்மாதிரி சொல்வதால் நீங்கள் அரசியல் அறிவே தேவையில்லை என்று நினைத்து விடக்கூடாது. கானா பிரதமர் யாரென்பதற்கோ, அமெரிக்காவை ஆளும்கட்சி எது என்பதற்கோ விடை தெரியாது. நீங்கள் திண்டாடக்கூடாது. இன்று உலகில் உள்ள அரசியல் நிலைமையைப் பற்றி நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும். உங்களுக்குள் ஆராய வேண்டும். சிலைக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். சிலையைப் பார்த்து மனிதன் சிந்தனை செய்கிறான்; ஆனால் சிலைக்குச் சிந்தனை செய்யும் ஆற்றல் கிடையாது.

எனவே, சிந்தனை வேண்டும் என்று நான் சொல்வதைக் கண்டு உங்கள் சிந்தனைச் செல்வத்தை அற்பமான வழிகளில் செலவிட்டு விடாதீர்கள். இரவில் பறக்கும் ஆகாய விமானத்தின் செல்லுமிடத்தையறிய முற்படும் சிந்தனை பயனுள்ளது; ஆனால் நடுப்பகலில் பறக்கும் கருடனின் பாதையைக் காணச் சிந்தனையைச் செலவிடுவதால் பயனற்ற செயலே ஆகும்.

இனிப் பொங்கல் திருநாளைப் பற்றிக் கவனிப்போம். இன்றுள்ள நூற்றுக் கணக்கான திருநாட்கள் போதாதா? பொங்கல் திருநாள் என்று ஒன்று கொண்டாடுவானேன்? அதையும் தமிழர் திருநாள் என்று கொண்டாடுவதேன்? என்றெல்லாம் ஐயங்கள் எழலாம்.

தகப்பனார், பாட்டனார் தலைமுறை காலத்தில் பொங்கல் திருநாள் திருநாளாகக் கொண்டாடப்படவில்லை. அப்போதெல்லாம் சங்கராந்தியும், போகிப் பண்டிகையுமே கொண்டாடப்பட்டன. அப்போதும் இன்றுள்ள மகிழ்ச்சியே இருந்தது. ஆனால் பொங்கல் திருநாளில் நாம் அடையும் மகிழ்ச்சிக்கும் அன்றைய மகிழ்ச்சிக்கும் நிறைய வேறுபாடு உண்டு. சங்கராந்திப் பண்டிகை என்பது, ஒரு சாராருக்கே மகிழ்ச்சியூட்டும் பண்டிகை. அதுபோல மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதேசி போன்றவை ஒரு சாதியாருக்கோ ஒரு சமயத்தார்க்கோதான் இன்ப மூட்டும் விழாவாக நடந்து வருகின்றன. ஆனால் “பொங்கல் திருநாளோ” தமிழ் எல்லோராலும் கொண்டாடப்படுகின்றது. எனவே பொங்கல் திருநாள், சமயம், சாதி, குலம் என்ற கட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு தேசிய சமூகப் பண்டிகை.

“பொங்கல் திருநாள்” என்பது காலஞ்சென்ற நமச்சிவாயம் (முதலியார்) அவர்களால்தான் முதன் முதலாகச் சைனா பஜாரில் இருந்த பச்சையப்பன் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. அது முதலாக இப்பொங்கல் புதுநாள் வீட்டிலன்றி, கல்லூரி, பொது மன்றம் ஆகிய பொதுவிடமனைத்தும், ஒரு வகுப்பாரே அன்றித் தமிழர் அனைவராலும் கட்சி, தொழில் வேறுபாடின்றிக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் வாழ்த்துக்களை மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றனர். கலை நிகழ்ச்சிகள் நாடெங்கும் நிகழ்கின்றன. அறிஞர்கள் கூடிச் செவிக்கு இனிய விருந்தளிக்கின்றனர். இங்ஙனம் நாடெங்கும் இன்பம் பொங்குவது இந்நாளில்தான்.

இத்திருநாளைத் தமிழர்கள் எங்ஙனம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம். இந்நாளிலே மக்கள் நாட்டின் இறந்த கால, எதிர்கால வரலாற்றினைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். கணா நாட்டிலும், ஐஸ்லாந்திலும் இனிதான் இலங்கியங்கள் தோன்ற வேண்டும். ஆனால் நம் தமிழ்நாட்டிலே, இலக்கியத்திற்குக் குறைவில்லை. நம்முடைய கடைமை அந்த இலக்கியத்திலே வேன்டாதனவற்றை நீக்கி இலக்கியத்தைச் செம்மைப்படுத்துவது தான். ஆந்திர, மலையாள, வங்காள, கன்னட மற்றும் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள ஏனைய இலக்கியங்களெல்லாவற்றிலும் தமிழிலக்கியமே தொன்மையும் தலைமையும் வாய்ந்தது. எனவே தமிழிலக்கியத்திலுள்ள தூசுகளையும், மாசுகளையும் துடைத்து நம் இலக்கியத்தை ஈடு இணையற்றதாக ஆக்குவதே நம்முடைய கடைமையாகும். இதனைச் செய்வார் இல்லையா என்றால், ஏராளமானவர்கள் உண்டு என்றே சொல்ல வேண்டும். இப்பணியினைத் திறமையாகச் செய்து விட்டால் போதாது, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடே செய்தல் வேண்டும். சென்னைக் கடற்கரையிலும் தான் கிளிஞ்சல் இருக்கிறது. கன்னியாகுமரியிலும் தான் கிளிஞ்சல் உள்ளது; சங்கு உள்ளது. சென்னை மனிதன் அவற்றைப் பொழுது போக்குக்காகப் பொறுக்கிப் பின்பு கடலிலே எறிந்து விடுகிறான். மற்றும் சிலர் கன்னியாகுமரியிலிருந்து கிளிஞ்சலைக் காசு கொடுத்து வாங்கி வந்து கண்ணாடிப் பேழையில் வைத்து அழகு பார்க்கின்றனர். ஆனால் கன்னியாகுமரியில் வாழ்பவனே சங்கினை அறுத்து வளையலாக்கி அதனை எழிலும் பயனும் அடைய விலையுள்ள பொருளாக்கு கிறான். அதுபோலத் தமிழ் இலக்கியத்திலுள்ள பெருமைகளை மட்டும் பேசிக்கொள்வதில்லை பயனில்லை. சங்கினின்று அருமையான வளையல்களை அறுத்தெடுப்பது போல் தமிழிலக்கியத்திலுள்ள தேவையற்ற நூல்களைக் களைந்து தமிழிலக்கியத்தைச் செம்மைப் படு“த்து வேற்றவரெல்லாம் ரசித்திடும் வண்ணம் செய்வதே பெருமைப்படக் கூடிய செயலாகும்.

பழம் பெருமை பேசித் திரிவது நல்லதல்ல. புறாவையும் காக்கையும் உயரப் பறக்கிவிடும் போது நாமடையும் வியப்பும், அந்த சந்திர மண்டலந் தாண்டிச் செல்ல சோவியத் ராக்கட்டையும் நினைக்கையில் உண்டாக்கியதில்லையே. அயலவர் உழைப்பு, சிந்தனை பலமுறை தோற்றல் ஆகியவற்றுக்கு கொஞ்சமும் சலியாது முயன்ற விஞ்ஞானி தளராத மனப்பான்மையைத் தமிழர்கள் அறிந்து பின்பற்ற வேண்டும். அலட்சிய மனப்பான்மையை விட்டொழிந்து ஆராயும் நோக்கத்தோடு தமிழ் இலக்கியத்தினைப் புனிதப்படுத்தி நாட்டை வளப்படுத்த வேண்டிய அறிவும் ஆயுளும் பெற்று பெயருடன் வாழ்வீராக என்று உங்களை வாழ்த்தி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

பொங்கல் விழா, கல்லூரி தலைவர் திரு.கே.சி.கோவிந்தனார் எம்.ஏ., அவர்களின் தலைமையுரையுடனும், திரு.சஞ்சீவி, அவர்களின் நன்றி கூறுதலுடனும் இனிது முடிவுற்றது.
பச்சையப்பன் கல்லூரி-காஞ்சி 28-1-1959

நீதிகட்சி பொன்விழா
“நீதிக் கட்சியின் வரலாறு, ஓர் அரசியல் கட்சியின் வரலாறு அல்லது தமிழக அரசியல் வாழ்க்கையின் ஓர் ஆராய்ச்சியேயாகும். உப்பு பல பண்டங்களுடன் கலந்து சுவை கூட்டுவதைப் போல நீதிக்கட்சியின் பண்பாடு, இன்று பல கட்சிகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
“நீதிக் கட்சியினர் 17 ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தினர். அவர்கள் காலத்தில்தான் “கோயில் சொத்துக்களுக்குக் கணக்கு வைக்க வேண்டும்” என்று கூறும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

“நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்ற அந்த நாட்களில், இந்தியாவில் “இரட்டை ஆட்சிமுறை” செயலில் இருந்தது. முக்கியமான அதிகாரங்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் கையில் வைத்துக்கொண்டு , சில்லறை அதிகாரங்களை மட்டுமே மாநில ஆட்சியாளர்களிடம் தந்தனர். அந்தச் சில்லறை அதிகாரங்களை வைத்துக்கொண்டுதான், சிறந்த முறையில் ஆட்சிப் பொறுப்பை நீதிக் கட்சியினர் நடத்தினர்.

“அந்த இரட்டை ஆட்சி முறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துடன் முடிந்துவிடவில்லை; இன்னும் அதே நிலைதான் இருந்து வருகிறது. மத்திய அரசு பலமான அதிகாரங்கள் அனைத்தையும் தன்னிடம் வைத்துக்கொண்டு, மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் அதிகாரத்தை மட்டும் மாநில அரசுகளிடம் விட்டு வைத்திருக்கிறது.

“உணவுப் பொருள் தட்டுப்பாடு என்றால்-விலைவாசி உயர்வு என்றால்-மக்கள் என்னைத்தான் குறை சொல்வார்கள்; ஆனால் அதற்குக் காரணமாக உள்ள வரவுக்கு அதிகமாகச் செலவிடும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது மத்திய அரசாக இருக்கிறது; அதற்காக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளும் அதிகாரத்தையும் மத்திய அரசே பெற்றிருக்கிறது; இதனால் வேதனையுறுகின்ற மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் பொறுப்போ, மாநில அரசினுடைய தாக இருக்கிறது.

“இப்போதைய பத்தாண்டுக் காலத்தில் மிக முக்கியப் பணி ஒன்று உண்டென்றால், அது, மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரங்களைச் சம பலம் உள்ளவர்களாக உருவாக்குவதேயாகும்; அதற்கேற்ப அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட வேண்டியது அவசியமாகும்.
“இதை எந்தெந்த வகையில் செய்யலாம்-இதற்கு அரசியல் சட்டம் எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும் என்பதை நீதிக்கட்சி தனிக்குழு ஏற்படுத்தி ஆராய்ந்து இக்கட்சியின் அடுத்த மாநாட்டில் அறிக்கை கொடுத்தால், அரசியல் ரீதியாக உலகுக்கு சிறந்த பணியாற்றியவர்களாவார்கள்.

“அரசியல் சட்டம் திருத்தப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பதை தி.மு.கழகம் மட்டும் கூறவரவில்லை; மத்திய அரசிலே எதற்கு ஒரு சுகாதார இலாகா எதற்கு ஒரு சுகாதார அமைச்சர் என்றும் ‘டில்லியிலே எதற்கு ஒரு கல்வி இலாகா-அங்கே எதற்கு ஒரு கல்வி அமைச்சர்’ என்றும் ஆந்திர முதலமைச்சர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்!

“டெல்லி அரசினர், தாங்கள் கண்காணிக்கப் பள்ளிகளே இல்லை என்பதால்தான் “மத்தியப் பள்ளிகள்” என்று ஆங்காங்கு திறக்கிறார்கள் போலிருக்கிறது; இவை தேவைதானா? என்று ஆந்திரா முதலமைச்சர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்!

“ஆகவே இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து அடுத்த ஆண்டே அறிக்கை ஒன்றைக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கட்சி இறந்துவிட்டதா-இருக்கிறதா என்று கேட்போர் அது இருந்து செய்தது அறியத் துணை செய்வதாக அமையட்டும்.

சென்னை 31-12-1958