அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘பொறுப்புடன் நடப்பது கோழைத்தனமல்ல’

கிண்டிப் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில்
அண்ணா கருத்துரை

28.2.59 அன்று மாலை, சென்னை கிண்டிப் பொறியியல் கல்லூரித் தமிழ் மன்ற ஆண்டு விழா தோழியர் சௌந்தராகைலாசம் அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது, அண்ணா அவர்கள், ‘வாழ்வும் வளமும்’ என்பது பற்றி ஆற்றிய உரை வருமாறு:

இந்தக் கல்லூரித் தமிழ் மன்றத்தின் சார்பில், பேசுமாறு என்னைக் கனிவுடன் அழைத்த மாணவர்களுக்கும், என்னை அழைக்கத் துணிவுடன் அனுமதித்த ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாகத் தமிழில் பற்று வைத்திருக்கும் மாணவர்கள் மீது சிலருக்கு அருவறுப்பும் ஒருவித ஐயப்பாடும் இருந்து வந்தது. ஒரு மாணவருக்குத் தமிழ்ப்பற்று இருக்கிறது என்று தெரிந்தாலே அவரை ஏற இறங்கப் பார்க்கின்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறி வருகிறது. இப்பொழுதெல்லாம் தமிழ்ப்பற்று இல்லாதவரைத்தான் ஏற இறங்கப் பார்க்கிறார்கள்.

தொழிற் கல்லூரிகளில் தமிழ் மன்றம்
சில ஆண்டுகளாகவே, இப்படிப்பட்ட தொழிற்கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் அமைத்து, விழா நடத்துகின்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கலைக்கல்லூரிகளில் மட்டும்தான் தமிழ் மன்றங்கள் இயங்கி வந்தன. தொழிற்கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வம் ஏற்பட்டு, தமிழை வளர்த்து வருவது காண மெத்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

தமிழ்ப் பற்று ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால், அவர் தமிழ்மொழி மீது மட்டும் பற்று வைத்திருப்பதன்றி, தமிழர் என்ற உணர்ச்சியும், தமிழ்நாடு என்ற எண்ணமும் கொண்டு விடுவார். அந்த உணர்ச்சி எங்கேயோ கொண்டு சென்றுவிடும் என்ற ஐயப்பாடு பலருக்கு இருந்தது. இந்த ஐயப்பாடு நீங்கி, தமிழ்ப்பற்று கொள்வது இயற்கையான ஒரு செயல்தான், இது எதற்கும் ஊறு செய்வதாகாது என்ற உண்மை மெல்ல மெல்ல, ஆனால் நிச்சயமாக வெற்றி பெற்று வருகிறது.
மாணவர்கள் எழுத்துத் துறையானாலும், பேச்சுத் துறையானாலும“, கலைத்துறையானாலும், அவற்றிலெல்லாம் நல்ல பயிற்சி பெற்றுத் திகழ்வது பாராட்டுக்குரியது. இப்பயிற்சி, இவர்கள் பிற்காலத்தில் தமிழர் சமுதாயத்துக்குப் பணியாற்றக் கிளம்பும்போது நல்ல துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சாதுவா தலைவனாக மாறினான்
பொறியியல் கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் விரைவில் சமுதாய வாழ்விலே வளத்தை ஏற்படுத்தும் பணியிலே ஈடுபட இருக்கிறீர்கள். சமுதாய வாழ்வும் வளமும் விரைவில் மேம்பாடு அடைய இருக்கின்றன.

நீங்கள் ஈடுபட்டுள்ள காரியம் மிகப் பொறுப்பான காரியம். மிகச்சிறந்த காரியம். அதுவும் என் போன்ற அரசியல் தலைவர்கள் வரும்போதுதான் நீங்கள் மிகப்பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். பொறுப்புடன் நடப்பது என்பது கோழைத்தனத்தின் அறிகுறியல்ல. எந்தத்துறையில் ஈடுபட்டாலும், அத்துறையில் மேம்பாடு அடையவேண்டும். அதற்குப் பொறுப்பு மிக அவசியம் மாணவர்கள் அரசியலில் மிகத் தீவிரமாகப் பங்கு பெறுவது ஆகாது என்று எல்லோரும் வற்புறுத்தி வருகிறார்கள். இப்படிச் சொல்வது மாணவர் நன்மைக்கு மட்டுமல்ல; அரசியல் பாதுகாப்புக்கும்கூட.

மாணவர்கள் அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடக்கூடாது என்பதுதான் எண்ணம். மாணவப் பருவத்தில் ஈடுபடாவிட்டால் பிற்காலத்தில் ஈடுபட முடியாமற் போய்விடுமோ என்று ஐயப்படத் தேவையில்லை. இதற்கு வேறு உதாரணம் சொல்லி விளக்க நான் விரும்பவில்லை. என்னையே எடுத்துக்கொள்கிறேன். நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது என்னை அறிந்தவர்கள் இப்பொழுது ‘அந்தச் சாதுவா இப்படி அரசியல் தலைவனாக மாறினான்’ என்று கூறக்கூடும்.

எதிர்காலத் தமிழகத்திற்குப் பயன்படட்டும்
கட்டுப்படாத ஆற்றைக் கட்டுக்கடங்கச் செய்ய வளமில்லாத வயலுக்கு வளமூட்ட இருளடைந்த இடத்திற்கு ஒலி ஏற்படுத்த பாதையில்லாத இடத்திற்குப் பாதை அமைத்துத் தர இன்னும் பல துறைகளிலே மாபெரும் புரட்சியைச் செய்ய இருக்கிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்ட காரியங்களைச் ‘செய்யுங்கள்’ ‘செய்யுங்கள்’ என்று நாங்கள் சொல்கிறோம். ‘செய்கிறோம்’ ‘செய்கிறோம்’ என்று ஆளவந்தார்கள் சொல்லி வருகிறார்கள். செய்து காட்ட இருப்பவர்கள் நீங்கள், அத்தகைய மகத்தான புரட்சியை செய்ய இருக்கிறீர்கள். உங்கள் பயிற்சி எதிர்காலத் தமிழகத்திற்குப் பயன்படும் என்று நம்பிப் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அழகு என்றால் என்ன?
‘எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே’ ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ ‘வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம்’ என்று பலர் பலவாறாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். யாரும் இது வரை திட்டவட்டமாக எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஓர் இலக்கணத்தை வகுத்துத் தரவில்லை. பல கருத்துகள் காலத்தால் கனவாகி விடுகின்றன. சில கருத்துகள் கருவிலே உருவெடுத்து வருகின்றன. நாட்டு மக்கள் எது பற்றியும் திட்டவட்டமாகக் கருத்தைக் கொள்ள இயலவில்லை. எல்லாக் கருத்துகளும் குழப்பும் நிலையில் உள்ளன. எதற்கும் பொருள் சொல்ல முடியவில்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் வாழ்ந்த சாக்ரட்டீஸ், மாணவர்களைப் பார்த்து ஒரு பதத்துக்குப் பொருள் கேட்டான். ‘அழகு என்றால் என்ன?’ என்று கேட்டான். ‘மனத்துக்குப் பிடித்தது அழகு’ என்றார் ஒருவர். ‘எனக்குப் பிடித்தது அழகு’ என்றார் மற்றொருவர். ‘அழகா, அதை நேற்று மாலை சந்தித்தேனே’ என்றார் இன்னொருவர். இப்படி அவரவர் கருத்துக்கேற்பப் பொருள் சொன்னார்கள். அதுபோலத்தான் ‘வாய்மை’ ‘வீரம்’ ‘வாழ்வு’ ‘வளம்’ என்கின்ற பதங்களுக்கும் திட்டவட்டமாகப் பொருள் சொல்ல முடியாது. நாம் எடுகின்ற முயற்சிக்கு ஏற்பதாய் வளம் கிடைக்கும்.

இதுவா வளமில்லாத நாடு
பழைய எண்ணங்கள் வாய்மூடச் செய்ய, புதிய எண்ணங்கள் உருவாக வேண்டும். ஒரு கருத்துடன் இன்னொரு கருத்து தழுவினால் புதிய எண்ணம் பிறக்கும்.
நம் நாட்டில் வளமில்லாயா? இல்லை என்று யார் சொல்ல முடியும்? நம் சென்னையிலே பெரிய பெரிய சாலைகள் இருக்கின்றன. மவுண்ட்ரோடு பெரிய சாலையிலே 14 அடுக்கு மாளிகை கட்டி வருகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கட்டடத்திற்கொப்ப இந்தக் கட்டடத்தைக் கட்டுவதாகச் சொல்கிறார்கள். அந்தக் கட்டடத்தை அண்ணாந்து பார்த்தாலே கழுத்து நோகிறது. அதைப் பார்த்தவர்கள், வளமில்லை என்று சொல்ல முடியுமா? அந்தக் கட்டடத்தை ஒருநாள் மாலை நேரத்தில் பார்த்துவிட்டு, அந்த மாலை நேரத்தில் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஓய்வு நேரத்தில் உல்லாசம் பெற வருபவர்களைக் கண்டால், ‘இது வளமில்லாத நாடு’ என்று எவரும் சொல்லமாட்டார்கள்.

வளத்துக்கு இலட்சியம் வேண்டும்
அதே நேரத்தில், கடற்கரையோரமாக மயிலாப்பூர் நோக்கிச் சென்றால், குப்பம் இருக்கும்.அந்தக் குப்பத்திற்கு நாம் போக வேண்டியதில்லை. அந்தக் குப்பத்திலுள்ள நெடுநாற்றம் பாதி வழியிலேயே நம்மைச் சந்திக்கும். இந்த நிலை எதைக் காட்டுகிறது?

எனவே, ‘வாழ்வு’ ‘வளம்’ என்ற சொற்களுக்குத் தனித் தனிப் பொருள்கள். (அப்சலூட் மீனிங்) இல்லை. ஒருவரைப் பார்த்து, ‘வளமாக இருக்கிறீர்களா?’ என்றால், ‘இல்லை’ என்பார்கள் சிலர். ‘இருக்கிறேன்’ என்பார்கள் சிலர். வளம் இல்லை என்றால், இருப்பதாகச் சொல்வார்கள். வளமிருப்பவர்கள் இல்லை என்பார்கள். இது நம் நாட்டு நிலைமை. வாழ்வுக்கு இலக்கணம் பெறவேண்டுமானால் வாழ்வுக்கு ஓர் இலட்சியம் வேண்டும். அதேபோல வளத்துக்கும் ஓர் இலட்சியம் வேண்டும்.

எதற்காக வாழ்வு இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட வழிகளில் வாழ்வு இருக்க வேண்டும் என்பதற்கு ஒழுங்கான திட்டவட்டமான எண்ணம் ஏற்படவேண்டும். வாழ்க்கைக்கு எதையாவது செய்தாக வேண்டும். அதை வலியுறுத்த எளிய வாழ்க்கை வழிகளைக் கண்டுபிடிக்க இளைஞர்கள் முயல வேண்டும்.

தப்புக்கணக்கு போடுகிறார்கள்
தமிழர்கள் வாழ்ந்த வரலாறு பற்றி எண்ணிப் பார்க்கின்ற போது நாமும் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. தமிழரின் பழைய வரலாறு பற்றி நாம் ஆராய்ந்தால், அதன் விளைவாக, ‘நாம் ஒரு தனி இனம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு, அந்த இன எண்ணம் இனவெறியாக உண்டாகி, அது பல ஆபத்துகளை உண்டாக்கி விடக்கூடும் என அரசியல் தலைவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள். நமக்கு வாழ்க்கையிலே ஒரு தெளிவில்லாத காரணத்தால்தான் இப்படி வாழலாமா, அப்படி வாழலாமா என்ற எண்ணமெல்லாம் ஏற்படுகின்றன.
தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று ஆராய்வது பிற இனத்தார் மீது பகை வளர்ப்பதல்ல.
பழந்தமிழர் வரலாறு அறிய சங்க இலக்கியம் ஓர் அரிய சாதனம். ஆனால் பழந்தமிழரின் முழு வரலாறு எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாறு. இடையிலே துண்டிக்கப்படாத வரலாறு, நமக்கு இப்பொழுது இல்லை. நமது பள்ளிக்கூடங்களிலே பாடமாக வைக்கப்பட்டிருக்கின்ற இந்து தேச சரித்திரம் 200 பக்கம் கொண்டதாக இருந்தாலும், அதிலே இரண்டொரு பக்கங்களுக்குள் தமிழர் வரலாறு அடக்கப்பட்டு விடுகிறது. அந்த வரலாற்றுக்குத் துணையாகக் கிடைக்கும் வேறு வரலாற்று நூல்களைப் புரட்டினால், ‘இராஜராஜ சோழன் மகன் இவன்’ என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ‘இவனை இராஜ இராஜனின் பேரன் என்று சொல்வாரும் உளர்’ என்று அதில் எழுதப்பட்டிருக்கும்.

சரியான வரலாறு இல்லை
‘ஜூலியஸ் சீசரின் மகன் காலிலே அணிந்திருந்த செருப்பு இன்னின்ன வேலைப்பாடுகளால் ஆனது; எலிசபெத் பேரரசியின் விசிறி இப்படியிருந்தது; எட்டாவது ஹென்றி எப்படிப் பட்ட மனைவியிடம் எப்படியெப்படிக் கொஞ்சுவான்’ என்றெல்லாம் பிற நாடுகளிலே வரலாறு எழுதப்பட்டுள்ளது. இந்த நாட்டிலே சரியான வரலாறு கிடையாது.

வரலாறு இழந்துவிட்ட ஓர் இனம் எப்படி இப்படி எழுச்சிப் பெற்றது என்று வியப்பும் வரலாறு இல்லாத ஓர் இனம் எப்படியோ வரலாறு பெற்றுவிட்டதே என்ற திகைப்பும் ஏற்படுவது இயல்பு.
தமிழகத்திற்க ஒரு வரலாற்றுக் குறிப்பு இல்லை. தமிழக வரலாறு மட்டுமன்றி, தமிழகத்தில் குறிப்பிடத்தக்கவர்களின் குறிப்பாக அண்மைக்காலம் வரை வாழ்ந்தவர்களான திரு.வி.க. திருப்பூர் குமரன், வ.உ.சி. போன்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் கூடச் சரிவர எழுதப்படவில்லை. அங்கங்கே துண்டு துண்டாகத்தான் எழுதிச் சேர்க்கப் பட்டிருக்கின்றன.

ஆராய்ச்சி முற்று பெறுவதில்லை
தானம் கொடுத்தவர்கள் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறார்கள். மன்னன் பட்டத்துக்கு வந்தால் செப்புப் பட்டயம் செய்து வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சில சான்றுகள்தான் பழந்தமிழகத்தைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ளன. புதைபொருள் ஆராய்ச்சித் துறையிடம் இப்படிப் பட்ட சான்றுகளைக் கொடுத்து ஆராயச் சொன்னால் ஆண்டு பத்து ஆனாலும் அவற்றை ஆராய்ந்தபடியே இருக்கிறார்களே தவிர ஆராய்ச்சி முடிந்து முற்றுப் பெறுவதில்லை.
வாழ்க்கைக்கு ஓர் இலக்கணம் தேவை; அதற்கு நமது பழைய வரலாற்றைத் தேடினால் அது துண்டிக்கப்பட்டிருக்கிறது. கிடைத்துள்ள வரை வரலாற்றை நல்ல குறிப்புகளாகப் பயன்படுத்த வேண்டும். தமிழ் இலக்கியத்தில் நமக்குத் தேவையான பொருளைக் கண்டுபிடித்து எடுக்கவேண்டும். பொறியியல் துறையினர், ஒரு பாதை அமைப்பதற்காகப் பள்ளம் வெட்டும்போது, அதிலே கிடைக்கும் பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்ப் பொருட்காட்சியிலே சேர்க்கும் பணியிலே ஈடுபடுவதில்லை. பாதை அமைப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றைத்தான் முதலில் செய்வார்கள். அதைப்போல, தமிழ் இலக்கியத்திலே நமக்குத் தேவைப்படுகின்ற பொருள்களை மட்டும் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டும். பள்ளம் வெட்டுகின்ற போது மண்ணுக்குள்ளிருந்து ஒரு பிள்ளையார் சிலை கிடைக்குமானால், அதை ஆராய்ச்சித் துறைக்கு அனுப்பி வைத்தால், அதைப் பற்றி ஆராய்ந்த ஒருவர், ‘இது ஆறாம் நூற்றாண்டுப் பிள்ளையார்’ என்பார். இன்னொருவர் ‘இல்லை, இல்லை; இது ஏழாம் நூற்றாண்டிலிருந்த பிள்ளையார்’ என்பார். மற்றோர் ஆராய்ச்சியாளர், ‘இது பிள்ளையார் சிலைதானா?’ என்று ஐயப்படுவதாகத் தெரிவிப்பார். இந்த ஆராய்ச்சிக்குத்தான் அந்தப் பிள்ளையார் பயன்படுமே தவிர, பாலம் அமைக்கும் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.

வேறு நாட்டம் வேண்டாம்
இலக்கியத்தில் நாம் தேடும் பொருள் கிடைக்கும் வரை, வேறு பொருளில் நாட்டம் செலுத்தக்கூடாது. நமக்கு எப்படிப்பட்ட பொருள் தேவை? அது எப்பொழுது தேவை? அதை எப்படிப் பெறுவது? நமக்குப் புழுக்கம் ஏற்படுகின்ற பொழுதுதான் சன்னலைத் திறக்கிறோம்; அப்பொழுதுதான் சன்னலைத் திறக்க வேண்டுமென்ற எண்ணம் நம் மனதிலே தானாக ஏற்படுகிறது. மற்ற நேரங்களில் சன்னல் மூடியிருக்கிறதா, திறந்திருக்கிறதா என்றுகூடக் கவனிப்பதில்லை. இதைத்தான் வள்ளுவர்,

“உடுக்கை யிழந்தவந் கைபோல் ஆங்கே,
இடுக்கண் களைவதாம் நட்பு” என்றார்.

வாழ்க்கையில் வளம் காணலாம்
உடுத்தியிருக்கும் ஆடை நெகிழ ஆரம்பித்தால், ஆடை நெகிழ்வதை மனது உணர்ந்து, அது கண்ணுக்குச் சொல்லி, நெகிழ்வது உண்மைதானா என்று கண்பார்த்து, மூளைக்கு அதைச் சொல்லி அதன்பிறகு மூளைக்கு உத்தரவுபோட்டு, பிறகு நெகிழ்ந்த ஆடையைச் சரி செய்வதில்லை. ஆடை அவிழ்கிறது என்ற உணர்ச்சி ஏற்பட்ட உடனே கைகள் தாமாகச்சென்று ஆடையைச் சரி செய்கின்றன. அதைப் போல், உணர்ச்சி உள்ளத்தில் உந்தும்போது தானாகச் சில எண்ணம் எழும். அதை வகைப்படுத்தினால் வாழ்க்கைக்கு அது உதவும். இன்று ஒருவரோடு ஒருவர் கூடி வாழாததற்கு முக்கியமாக மூன்று காரணங்களைச்சொல்லலாம். 1. சாதிமத பேதம்; 2. அறியாமை. 3. வறுமை. இந்த மூன்றையும் நீக்க இலக்கியத்திலே என்ன வழி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்த நிலைமையைத் திருத்தினால் வாழ்க்கையிலே வளம் காண முடியும்.

சாதி இருப்பதா, கூடாதா என்பதிலே யாரும் முரண்பாடான கருத்துக் கொண்டில்லை. அது சமுதாயத்திலே செய்து வைத்திருக்கும் கோட்பாடுகளைப் பேசாத கட்சிகள் இல்லை. பேசாத தலைவர்களும் இல்லை. ஆனால், அதைப் போக்குவதற்கு முக்கியமாகக் கூட்டு முயற்சி இல்லை; அதனாலே அதை ஒழிப்பதிலே வெற்றி பெறவில்லை.

(நம்நாடு - 4.3.59)