அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பொறுப்பு வாய்ந்த எதிர்க் கட்சியாக இயங்கும்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணி குறித்து அண்ணா தரும் விளக்கம்

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கோட்பாடான சுதந்திரத் திராவிட நாடு இலட்சியத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது“.

“தனது அடிப்படை இலட்சியத்தை ஒரு கட்சி மாற்றிக் கொள்ளுவதற்கு, மூன்று காரணங்கள் இருந்திடல் வேண்டும்.“

ஒன்று தான் மேற்கொண்டிருக்கின்ற குறிக்கோள் தவறானது எனக் கட்சி உணரவேண்டும்.

இரண்டு, அக்கோட்பாடு அடையமுடியாது என அக்கட்சி கொள்ளவேண்டும்.

மூன்று- வேறு ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக, கொண்டிருக்கின்ற இலட்சியத்தைக் கைவிடத் துணிய வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம், தனது அடிப்படை இலட்சியத்தை மாற்றிக் கொள்வதற்குக் தேவைப்படக்கூடிய மேற்குறித்திருக்கின்ற மூன்று காரணங்களில் எந்த ஒன்றும் தலைகாட்ட வில்லை.

இவ்விளக்கத்தை, அறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்து‘ இதழின் நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் வழங்கியிருக்கிறார்.

கொள்கை மாற்றம் – பொறுப்பற்ற தன்மை!

அண்ணா அவர்கள் மேலும் விளக்கியதாவது

“ஓர் அரசியல் கட்சி, தனது அடிப்படை இலட்சியத்தை ஒவ்வொரு ஐந்தாண்டுக் காலத்தி்லும் மாற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படி ஏதாவது ஓர் அரசியல் கட்சி தனது குறிக்கோளை அடிக்கடி மாற்றிக் கொள்ளத் துணியும் பட்சத்தில், அது பொறுப்பற்ற கட்சி என்றுதான் அழைக்கப்படும்.“

கழகத்தின் செயல்முறை குறித்து நிருபர் எழுப்பிய வினாவிற்கு அண்ணா தந்த பதில் –

“கழகம் துவக்கப்பட்ட நாள்முதல் சட்டத்திற்குட்பட்டுச் செயல்பட்டு வருவதையே கண்டிப்பாகக் கடைபிடித்து வந்திருக்கிறது. வேறுமுறைகளை நாடவேண்டிய நிலைக்கு ஆட்சியினரால் நாங்கள் பிரட்டப்பட்டால் அல்லாது – இன்றுபோலவே என்றும் செயல்பட்டு வருவோம்“.

ஆய்வுக்குரிய பிரச்சினை!

அடிப்படை இலட்சியத்தில் விட்டுக் கொடுத்தலுக்கு இடமில்லை என்ற நிலையில், அந்த இலட்சியத்தின் புறத்தேதான் உடன்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திராவிடநாடு இலட்சியமானது ஆராய்ந்து அறியத்தக்க பிரச்சினையாக ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது கண்டு நான் மகிழ்கிறேன். திராவிடநாடு கோரிக்கை ஒரு பிரச்சினைதான் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகிறேன்“.

தமிழகச் சட்டமன்றத்தின் தலைமை எதிர்க்கட்சியாக முன்னேற்றக் கழகம் உருவெடுத்திருப்பதைக் குறித்து நிருபர் எழுப்பிய வினாவிற்கு அண்ணா வெளியிட்ட கருத்து –

“கழகம் பெற்றிருக்கக்கூடிய இந்த நிலை முதலமைச்சருக்கு மகிழச்சி தருவதாக இல்லை, இருந்தாலும், தனிப்பெரும் எதிர்க்கட்சி என்ற அளவில், ஒரு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியிடம் எதிர்பார்க்கக்கூடிய அனைத்தையும், திராவிட முன்னேற்றக் கழகம் செவ்வனே நிறைவேற்றிவைக்கும் என் நான் உறுதி அளிக்கிறேன்.“

புதியவராயினும் பணி புதியதில்லை

முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் சட்டமன்றத்திற்குப் புதியவர்கள் என்றும், அவர்களால் சட்டமன்றப் பணிகளைச் செம்மையாக ஆற்ற இயலாது என்றும் கூறப்பட்டு வருகிறது பற்றி அண்ணா அவர்கள் பின்வ்ரும் விளக்கத்தைத் தந்திருக்கின்றார்.

“சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற கழகத்தவர்களில் பெரும்பான்மையினர் நகராட்சி, ஊராட்சி அமைப்புகளில் பணிபுரிந்து நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருக்கின்றவர்களாவர்.

அவர்களில் சிலர் ஊராட்சி நகராட்சி மன்றத் தலைவர்களாவர், இதுவுமின்றி, அவர்கள் பொதுவாழ்வில் நீண்ட நாட்களாக ஈடுபாடு கொண்டிருப்பவர்களுமாவர். எனவே, அவர்களுக்குச் சட்டமன்றப் பணி புதுமையாக இருந்திட நியாயமில்லை.

எனவே, கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் திறம்படப் பணிபுரிந்து புகழ் பரப்புவர்.

சட்டமன்றக் கட்சித் தலைவர்!

“இதே கருத்தில்காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களை நோக்குமிடத்து 60 உறுப்பினர்கள் நீங்கலாக மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றத்திற்குப் புதிதாக அழைத்திருப்பவர்களேயாவர் என்பது கருதத்தக்கது“.

இரண்டு கிழமைக்குள் கழகத்தின் சட்டமன்றக் கட்சி கூட தனக்குரிய தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அக்கட்சி தனக்குத் தேவைப்படக்கூடிய செயல்முறைகளை அடிக்கடி வரையறுத்துக் கொள்ளும்.

சட்டமன்றத்திற்கு நான் சென்றமவர்வதைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை, ஆனால், இந்த நிலை, சட்டமன்றத்தில் சட்டசபையை வழிநடத்திச் செல்வதற்கான ஆற்றல் குறைவைக் காட்டுவதாக ஆகாது.

மக்கள் சபையிலும் கூடத் தேவைக்குரிய எண்ணிக்கை இருப்பதினால், கழம் ஒரு தனி அமைப்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என நம்புகிறேன். அதற்கும் ஒரு தலைவரும், துணைத் தலைவரும் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படுவர்.

சாதி உணர்வு தலைகாட்டிற்றா?

சாதியும் தனிநபர் செல்வாக்குந்தான் தி.மு.கழக வேட்பாளர்களின் வெற்றிக்குக் காரணம் எனக் கூறப்படுவதற்கு அண்ணா தக்க பதிலளித்திருக்கின்றார்.

“கழக வேட்பாளர்களின் வெற்றிக்குத் தனிநபர் செல்வாக்குதான் காரணம் என்றால், எனக்குத் தோல்வி ஏற்பட்டு இருக்கக் கூடாது, தென் ஆற்காடு, வடஆற்காடு மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கின்ற தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். தங்களுக்குப் பேராதரவான தொகுதிகள் என நம்பப்பட்ட தொகுதிகளில் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட படையாச்சி வகுப்பைச் சாராதவர்கள், படையாச்சி வகுப்புத் தலைவர்களைத் தோல்வி காணச் செய்திருக்கின்றனர். இராமநாதபுரத்தில் இரண்டொரு இடங்கள் நீங்கலாக மற்ற இடங்களில், 1857 ஆம் ஆண்டுத் தேர்தலில், சாதிய உணர்வு தலைகாட்டி நின்றது போல், 1962ஆம் ஆண்டுத் தேர்தலில் தலைகாட்டவில்லை.

தமிழகத்திற்கு வெளியிலும் கழகம் வளருகிறது!

தமிழ்நாட்டுக்கு வெளியே திராவிட நாடு கோரிக்கை முழக்கம் ஒலிக்கப்படவில்லை என்றதற்கு அண்ணா அவர்கள் குறிப்பிட்டதாவது –

“இந்த ஒலிமுழக்கம் கழகத்திற்கு நல்ல ஆதரவினைத் திரட்டித் தந்த வருகிறது. இப்பொழுது கூடத் தமிழகத்துக்கு வெளியே உள்ள கழக ஆதரவாளரகாவுள்ள தமிழர்களால் இந்த இயக்கம் வளர்க்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் கழகத்திற்குச் சில கிளைகளும் இருக்கின்றன. கழகம், தனது நடவடிக்கைகளின் மூலம் வட்டார மக்களைத் தன்பால் ஈர்க்க முழு அளவில் முயலும்.“

“தலைமைப் பொறுப்பில் தென்னாடு முக்கியத்துவம் வகிப்பது குறித்து நீங்கள் மன நிறைவு கொள்கிறீர்களா?“ என்று கேட்டதற்கு அண்ணா அவர்கள் அளித்த விடை வருமாறு.
“தாங்கள் தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வின்றியே, தலைவர்களாக வந்து என்ன பயன் ஏற்பட்டுவிடும்“!

(நம்நாடு - 2-3-1962)