அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. பணியாற்றும்

பத்தருகையின் பொருந்தா வாத்திற்குப் பதில்

“நமது கழகத்திற்கு 34 இலட்சம் மக்கள் வாக்களித்து 50 பேர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். நமக்கு வாக்களித்த அத்தனைப்பேரும் எதைக் கருதி வாக்களித்தார்கள்? – சட்டமன்றத்திற்குப் போனால் உடனே இவர்கள் திராவிடநாடு பெற்றத் தந்துவிடுவார்கள்‘ என்பதற்காக அல்ல, திராவிட நாடு பெறுவது ஒன்று மட்டுமே சட்டமன்றத்திற்கு நாம் செல்வதன் நோக்கமல்ல, உள்ளே நுழைந்ததும் கிடைத்துவீடக் கூடியதுமல்ல திராவிடநாடு.

தி.மு.கழகத்தின்ர், கொண்ட கொள்கையில் உறுதியுள்ளளவர்கள், ஆட்சியின் கேடுபாடுகளைக் கண்டிப்பவர்கள், நிர்வாக ஊழல்களை அம்பலப்படுத்துபவர்கள் என்பதையெல்லாம் எண்ணித்தான் அவர்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

நல்ல அரசியல் தெளிவு பெற்றவர்கள் – பக்குவப்பட்டவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்லவிருக்கிறார்கள், எனவே தி.மு.கழகம் நல்ல பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் சட்டமன்றத்தில் தொடர்ந்து பணியாற்றும் என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம் விடுதலை இயக்கம்தான்!

நமது கழகம் ஒரு விடுதலை இயக்கம்தான், அதே நேரத்தில் சட்டமன்றத்திற்குள் செல்லும் போதும் வெளியே வரும் போதும் நமது தோழர்கள் ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்ற முழக்கத்தோடு மட்டும்திரும்பிவிட மாட்டார்கள் – பொறுப்புள்ள எதிர்க்கட்சியினராகத்தான் பணியாற்றுவார்கள், ஆட்சியின் நிர்வாக ஊழல்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவார்கள், நீர்ப்பாசனத் திட்டங்களை வற்புறுத்துவர்கள், விவசாயப் பிரச்சனைகளை விவாதிப்பார்கள், மக்களுக்குத் தேவையான எல்ாப் பிரச்சினைகளும் எடுத்துப் பேசுவார்கள், இது ஒரு விடுதலை இயக்கம்தானே‘ எனக்கருதி, மற்றப் பிரச்சினைகளையெல்லாம் பேசாமல் விட்டுவிட மாட்டார்கள்‘ என்று அண்ணா அவர்கள் நேற்று மாலை சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்கள் தொடர்ந்து அண்ணா அவர்கள் பேசியதாவது.

“நான் சட்டமன்றத்திற்குப் போகாததால், உள்ளே நமது தோழர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்று காங்கிரசுக்காரர்கள் பயப்பட வேண்டாம். அமைதியே உருவான நாவலர் நெடுஞ்செழியன், அங்கே நான் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்த செய்து கொண்டிருப்பார் – ஐந்தாண்டுக் காலம் சட்டமன்றத்திலிருந்து நல்ல பயிற்சி பெற்றிருக்கின்ற தம்பி கருணாநிதியும் இருக்கிறார். எனவே, நல்ல பொறுப்புடனும், கடமையுணர்ச்சியோடும் நமது தோழர்கள் அங்கே பணியாற்றுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.“

கோட்டைக்குத் தாளிட்டு விட்டார்களா?

அண்ணா அவர்கள் தமது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது

“முதலமைச்சர் காமராசருக்கும், அவருக்காகத் தேர்தல் பணிகளைச் செய்து அலுத்துப்போய் மருத்துவமனையில் ஓய்வு பெறும் பெரியாருக்கும் இப்போது ஏற்பட்டுள்ள பெருங்கவலை, நான் மீண்டும் உள்ளே நுழைந்து விடுவேனோ என்பதுதான் அவர்கள் இப்பொழுது கோட்டைக்குத் தாளிட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் – நான் விரும்பினால் இப்பொழுதும் நுழைய முடியும், ஆனால், அந்த அளவுக்கு என் தம்பிமார்கள், சோடைகள் அல்லர், தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளத்தக்க வகையில் திறமையாகச் செயலாற்றுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘இந்து‘ பத்திரிகையில் தலையங்கம் குறித்து அண்ணா அவர்கள் குறிப்பிட்டதாவது –

“தேர்தல் முடிந்ததும், நாம் 50 இடத்தில் வெற்றி பெற்றது குறித்து ‘இந்து‘ பத்திரிகை ஓர் தலையங்கம் எழுதிற்று, அந்தப் பத்திரிகையைப் பற்றி நான் குறை சொல்வதாகக் கருதவேண்டாம், அதன் வாதத்திலுள்ள தவறினைச் சுட்டிக்காட்டவே அதைப்பற்றி இங்குச் சொல்ல விரும்புகிறேன்.“

இந்து தலையங்கம் புத்திமதியா அது!

ஒருவருக்குத் திருமணமான பிறகு, திருமணம் செய்து கொண்ட வாலிபரைப் பார்த்து, ‘உனக்குத்தான் திருமணமாகி விட்டதே, இனி நீ தெருத் திண்ணையில் படுத்துக்கொள்‘ என்று யாரும் சொல்ல மாட்டார்கள், ‘குடியும், குடித்தனமாகக் குழந்தை குட்டிகளுடன் வாழ்க்கை நடத்து‘ என்றுதான் கூறுவார்கள்.

நாம், ‘திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்துடன் தான் மக்களை அணுகினோம். தேர்தல் முடிந்ததும் ‘இந்துப் பத்திரிக்கை சொல்லுகிறது. நீங்கள்தான் 50 பேர் வந்துவிட்டீர்களே, இனி ஏன் பிரிவினைக் கொள்கை? அதை விட்டுவிடுங்கள்‘ என்று.

திருமணமானவனைத் தெருத் திண்ணையில் படுக்கச் சொன்னது போலத்தான் இருக்கிறது ‘இந்து‘பத்திரிகையின் புத்திமதி!

இந்துப் பத்திரிகை போட்ட தப்புக் கணக்கு பற்றி எண்ணிக் கழிவிரக்கப்படுகிறேன்‘ நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில்.

‘நமது ஆன்றோரும் – சான்றோரும் உச்சிமீது வைத்துப் பாராட்டிய திராவிட நாட்டின் தனிச்சிறப்மை, அதன் விடுதலை இலட்சியத்தை, 50 பேர் சட்டமன்றத்தில் இடம் பெற்று விட்டதாலேயே விட்டுவிடுவோம் என்று ‘இந்து‘ப் பத்திரிகை எண்ணுவதற்குக் காரணம், அது எங்கள் மனப்பான்மையை – நாங்கள் செல்லும் பாதையை – நாங்கள் செல்லும் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாததுதான் என்று எண்ணுகிறேன்.

மக்கள், இப்பொழுது எங்களைக் கவனிக்கிறார்கள், நாங்கள் ஒரு கேள்விக் குறியாக இருக்கிறோம் என்பதற்கு அறிகுறி தான் இந்த 50 பேர்.

கேள்விக் குறிக்கு அறிகுறி!

“நாங்கள் கொண்டகொள்கையை விட்டுவிட அல்ல சட்டமன்றத்திற்குச் சென்றது – பாதை நழுவி நடக்காது தி.மு.கழகம்!

இலட்சியத்தை அணுகியே அது செல்லுமே தவிர இழந்து விடாது!“

“திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிக்களிப்பைவிட வேதனையில்தான் அதிகமாக வளர்ந்திருக்கிறது. நமக்குப் பெயர் ‘கண்ணீர்த்துளி‘ தானே தவிர, ‘பன்னீர்த்துளி‘ அல்ல! எனவேதான் நான், ‘கண்ணீரைத் துடைத்துக் ்கொண்டு காரியமாற்றுங்கள்‘ என்று தெரிவித்தேன்.

“ரோம் நாட்டின் மாவீரன் ஒருவன், போர்க்களத்தில் மாண்டான், அவன் மாண்டது கேட்டு உற்றார் உறவினர் அனைவரும் அழுதனர், ஊரே அழுதது, ஆனால், அவனைப் பெற்ற தாய் மட்டும் அழவில்லை, ‘நீ ஏன் அழவில்லை?‘ என்று அந்தத் தாயிடம் கேட்டார்க், அதற்கு அந்தத் தாய் ‘என் மகன் கடமையாற்றுகையில் மாண்டான், அதற்காக நான் அழுதால், ‘அந்தக் கோழைக்கா பிறந்தான் அந்த வீரன்?‘ என்று ஊரார் எண்ணுவர், அதனால்தான் அழவில்லை‘ என்று பதில் சொன்னார். அந்த வீரத் தாயின் மனப்பான்மை உங்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் வீரத் தாயின் மனப்பான்மை உங்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் ஏற்படவேண்டும், நாங்கள் தோற்றதற்காகக் கவலைப்படக்கூடாது.

பிறந்த குழந்தையைப் பிழைக்க வையுங்கள்!

“குழந்தை பிறப்புடன் தாய் செத்த செய்திகளை நாம் கேள்விப்படுவதில்லையா, அதனால் பிறந்த குழந்தையையுமா சாகடித்துவிடுகிறோம்? ‘தாய் செத்துவிட்டாலும் பரவாயில்லை, குழந்தையைப் பிழைக்க வைப்போம்‘ என்று முயற்சி செய்யவில்லையா? அதைப்போல, நீங்கள் இப்போது செத்த தாயைப் பற்றிக் கவலைப்படுவதுபோல் தோற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்! பிறந்த குழந்தையைப் பிழைக்க வையுங்கள். வெற்றி பெற்றவர்களை எண்ணிப் பெருமைப்படுங்கள்! அவர்கள் நன்கு பணியாற்ற உதவுங்கள் – என்று கேட்டுக் கொள்கிறேன்“ என்று அண்ணா அவர்கள் 4.3.62 அன்று திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரை நிகழத்துகையில் குறிப்பிட்டார்கள்.

‘இந்து‘ பத்திரிகை எழுதிய தலையங்கத்துக்கு அணண்ா அவர்கள் அளித்த பதில் நேற்றைய இதழில் வெளியாயிற்று, அதன் தொடர்பாக அண்ணா அவர்கள் மேலும் கூறியதாவது.

புத்தி சொல்வது தவறல்ல

இப்போது சில பத்திரிகைகள் எங்களுக்குப் புத்திசொல்ல ஆரம்பித்திருக்கின்றன, எங்களுக்குப் புத்திசொல்லக்கூடிய அளவுக்கு நாங்கள் அவர்களுடைய கண்ணுக்குக் தெரிகின்றோம், முன்பெல்லாம் நாங்கள் அவர்கள் கண்ணுக்கே தெரியாமல் இருந்தோம்.

இப்போது புத்தி சொல்லவேண்டியது யாருக்கு? ஆளுங்கட்சியை, வடக்கே சில இடங்களில் சுதந்திராக் கட்சியும், கம்யூனிஸ்டுக் கட்சியும், இங்கே தி.மு.கழகமும் அறைகூவி அழைக்கின்றன. இத்தேர்தலில்! ‘ஆளத் தெரியாததால்தானே இங்குத் தொல்லையெல்லாம் வந்திருக்கின்றன?‘ என்று காங்கிரசுக்குப் புத்தி சொல்வதா எங்களுக்குச் சொல்வதா? நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில்தான் கேட்கிறேன். புத்தி சொல்வது தவறு என்று சொல்லவில்லை – யாருக்குச் சொல்ல வேண்டும்?

ஆளுங்கட்சிக்குத் தனது அகந்தையின் காரணமாக இறங்குநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் யாருக்குப் புத்தி சொல்வது?

‘இந்து‘ பத்திரிகை எழுதியிருப்பதில் வாதப் பொருத்தமாவது இருக்கிறதா என்று பாருங்கள். சென்ற சட்டமன்றத்தில் நாம் 15 பேர், இருந்ததே தெரியாமல் இருந்தோமாம்! இப்போது 50 பேர் வந்துள்ளதால் உலகுக்கு நாம் இருப்பது தெரியுமாம்! ‘இந்து‘ இதழ்தான் இப்படி எழுதுகிறது.

சட்டமன்றத்தில் பணியாற்றுவது என்பது ‘இந்து‘ பத்திரிகை எண்ணுகிறபடிதான் இருக்க வேண்டும் என்பதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவுக்குப் பொருத்தம் இருக்க வேண்டாமா?

அப்பத்திரிகை மேலும் என்ன சொல்கிறது தெரியுமா? ‘உபயோகமற்ற முறையில் 15 பேர் இருந்தார்கள், இப்போது 50 பேர் புதிதாக வந்திருப்பதால் நல்ல பலன் ஏற்படும்‘ என்று எழுதியிருந்தால் அதன் வாதம் பொருத்தமாக இருக்கம், ஆனால் அப்படி எழுதவில்லை, சட்டமன்றத்திற்குள்ளே இருந்த ‘ஊருக்குத் தெரியாதவர்கள்‘ போய் விட்டார்கள் என்பதற்காக அது வந்திருக்கிறது, ‘ஐயோ அவர்கள் இல்லையே, தோற்றுவிட்டார்களே‘ என்று வருந்தி எழுதுகிறது!

‘இந்து‘ பத்திரிகை, உலகில் பேரறிவாளர்களால் போற்றப்படுகின்ற பத்திரிக்கை என்று பெயரெடுத்திருக்கிறது. அதற்கு நம் கழகத்தின் பால் நல்லெண்ணம் கூட வேண்டாம் – அறிவுக்குப் பொருத்தமாகவாவது இருக்க வேண்டாமா? இதற்கு இண்டனில் கிளை எதற்கு?

‘சேலை கட்டி வந்தான் சென்னியப்பன்‘ என்பது போலல்லவத இருக்கிறது அதன் வாதம்? சேலை கட்டிவந்தான் செந்தாமரை‘ என்றால் பொருத்தமாக இருக்கும், சென்னியப்பன் எப்படி சேலைகட்டி வருவான்?

இவர்கள் எல்லாம் ஏன் தோற்றார்கள்?

‘சட்ட மன்றத்திற்குள்ளே நுழைந்ததும், இலட்சியத்தை விட்டு விடுங்கள்‘ என்று கூறுவது ‘இந்து‘ப் பத்திரிகைக்கு எங்கள் மீதுள்ள அக்கறையினாலா என்பது தெரியவில்லை.

திராவிடநாடு கேட்டதால்தான் நான் காங்சிபுரத்தில் தோற்றேன் என்றால், டாங்கே தோற்றது எதனால்? அவர் நாட்டுப் பிரிவினை கேட்டாரா? பேராசிரியர் ரங்கா ஏன் தோற்றார்? – அவர் தனிநாடா கேட்டார்? அசோக்மேத்தா தோற்றது எப்படி? திரிலோக்சிங் எதனால் தோற்றார்?

எதிர்க்கட்சித் தலைவர்களைல்லாம் வீழ்த்தினார்கள் காங்கிரசுக்காரர்கள் என்றால்தான், வெளிநாட்டில் அவர்களுக்கு மதிப்பு! அதனால்தான், திட்டமிட்டுக் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிட்டு லோகியா, அசோக் மேத்தா போன்ற தலைவர்களையெல்லாம் வீழ்த்தியிருக்கிறார்கள்!

‘அசோக்மேத்தாவின் ஐந்து விரலுக்குள் புள்ளிவிவரங்கள் அடக்கம்‘ என்பார்களே! கிருபளானி என்ன – காங்கிரசிலே பக்தி குறைந்தவரா? அவர் நாக்கு நுனியிலே நாகரிகம் நடமிடுவதாகக் கூறுவார்களே! பாராளுமன்றத்தில் கிருபாளானி பேச ஆரம்பித்தால் எல்லோரும எழுந்தா வெளியே வந்து விடுவார்கள்? அவர் பேசுகிறார் என்றாலே பண்டித நேரு தன் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு கவனமாகக் கேட்பாரே!

சதிசெய்து தோற்கடித்தனர்!

திட்டமிட்டுச் சதிசெய்து ‘எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரைக்கூட வெற்றி பெறாமல் செய்துவிட வேண்டும்‘ என்று, அகில இந்தியாவிலும் வேலை செய்திருக்கிறார்கள். பி.எஸ். சின்னதுரை ஏன் தோறறார்? – இப்படி, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மக்கள் மதிக்கும் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கப் பத்திரிகைகளிலெல்லாம், காங்கிரசு தோற்றத்தை விட, எதிர்க்கட்சித் தலைவர்கள் தோற்றத்தைப் பற்றித்தான் பெரிதுபடுத்தி எழுதுகிறார்கள்!

வெளிநாட்டுக்காரர்கள் ‘ஒரு காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய எதிர்க்கட்சிகளாக இருக்கும் கட்சியின் தலைவர்களெல்லாம் வீழ்த்தப்பட்டு விட்டார்கள்‘ என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசு தோற்றத்தை வெளிநாட்டினர் அறிந்து கொண்டால், சொந்த ஊரிலேயே தோற்ற காங்கிரசை வெளிநாட்டில் மதிக்கமாட்டார்கள். அதனால்தான், எதிர்க்கட்சித் தலைவர்களின் தோல்வியைக் காட்டிக் காங்கிரசார் பெருமைப்படுகிறார்கள். இந்தத் தோல்வியைக் காட்டி இன்னும் கொஞ்சம் வெளிநாட்டில் பணம் கடன் வாங்கலாம். இதைவிட வேறு உருப்படியான பலனைக் காங்கிரசு ஆட்சி பெறபோவதில்லை!

எங்களை வீழ்த்தத் திட்டமிட்டனர்!

நாங்களெல்லாம் என்றைக்கு வெற்றி பெற்றோமோ அன்றே எங்களையெல்லாம் வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடத் துவங்கி விட்டனர். பத்திரிகைகளை நீங்கள் பார்த்தால் இது உங்களுக்குத் தெரியும். கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக அமைச்சர்கள் அதிகமாகச் சுற்றுப்பயணம் செய்த இடங்கள் எவை என்றால், நாங்கள் வெற்றிபெற்ற தொகுதிகளாகத்தான் இருக்கும். இதுபற்றிச் சட்டமன்றத்திலும் நாங்கள் பேசியிருக்கிறோம். அமைச்சர்கள் எங்கள் தொகுதிக்கு வந்தால் எங்கள் அழைப்பதில்லை. நாங்கள் யாரைத் தோற்கடித்தோமோ அவர்களைத் தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு செல்வார்கள். கிராம மக்களிடம் சென்று, ‘பார்த்ரீர்களா, இவரை நீங்கள் தோற்கடித்து விட்டீர்களா, அடுத்தமுறை இவரை நீங்கள் தேர்ந்தெடுத்தால்தான் உங்களுக்கு நிர்ப்பாசன வசதி செய்வோம், குடிநீர் வழங்குவோம்‘ என்றெல்லாம் சொன்னார்கள்.

இப்படிப்பட்ட செயல்களினால் காங்கிரசுக்குக் கிடைத்த வெற்றிதான் இது. இனி இதே வேலையில் அவர்கள் ஈடுபட வேண்டுமானால், மற்றொரு 50 தொகுதிகளை அவர்கள் பட்டினிப்போட வேண்டும்.

எங்களைத் திட்டமிட்டு ஒழித்துக் கட்டுவார்கள் என்பதும் எங்களுக்கு முன்பே தெரியும், நமது நெடுஞ்செழியனிடமும் கருணாநிதியிடமும் பேசிக் கொண்டிருந்த போதுகூட நான் இதைச் சொல்லியிருக்கிறேன்.

தேர்தலுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பேசுகையில் கூட நான் காங்கிரசுக்காரர்களுக்குச் சொன்னேன் – எங்களைத் தோற்கடிக்க உங்கள் முழுப் பலத்தையும் ‘காட்டுவதால் மற்ற இடங்களைக் கோட்டைவிடப் போகிறீர்கள்‘ என்று, அதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை, மற்ற இடங்களைத் துச்சமெனக் கருதினார்கள், அதனால் இவற்றை அவர்கள் கோட்டை விட நேர்ந்தது!

“எப்படியும் – உங்கள் 15 பேரையும் ஒழிப்போம்‘ என்று கூறி, 50 இடங்களைக் கோட்டைவிட்டார்களோ அதேபோல், அடுத்த தேர்தலிர், ‘இந்த 50 பேரையும் ஒழிப்போம் என்று கூறி வேலை செய்வார்களானால் இன்னொரு 75 இடங்களை கோட்டை விடுவார்கள்! எனவே, இனி இந்த வேலையிலும்அவர்கள் வெற்றி பெற முடியாது!

ஓட்டை விழுந்த பானையில் புளியை அடைத்தால்...?

ஓட்டை விழுந்த பானையில் புளியை வைத்து அடைத்தால் மற்றொரு பக்கம் ஓட்டை விழ ஆரம்பிக்கும்.

காஞ்சிபுரத்தில் புளியை வைத்துத்தான் ஓட்டையை அடைத்தார்கள். ஏன் புளி என்று சொல்லுகிறேன் என்றால், புளியில் தண்ணீர் பட்டால் அது கரைய ஆரம்பிக்கும் – நிலைத்து நிற்காது! அதேபோல் தான், இவர்கள் அடைக்கும் ஓட்டை, நாளடைவில் கரைந்து மீண்டும் ஓட்டையாகும்.

ஆளைத் தேள் கொட்டினால், ‘ஆ‘ என்று அலறுகிறான், அதனால் ‘ஆளைவிடத் தேள் பெரியது‘ என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதைப்போல், நான் தோற்றதால் – தோல்வி என்னை அழுத்திவிடும் என்று யாரும் கூறமாட்டார்கள் அடு்த்தமுறை நான் நன்றாகப் பணியாற்றுவேன்‘.

நாங்கள் தோல்வி பெற்றுவிட்டதைப் பற்றி இங்கே நண்பர்கள் பேசினார்கள். இது, நாங்கள் மறந்துவிட்டிருப்பதை நினைவுறுத்துவதாகும் என்னைப் பொறுத்தவரை இப்போது இங்கே வந்த பிறகுதான் எனக்கு அந்த நினைவே வந்தது.

“நான் தேர்தல் காலத்தில் ஆற்றிய பணிகளுக்கெல்லாம் பிறகு, எனக்கு நான்கு நாட்கள் நல்ல ஓய்வு கிடைத்தது. நான்கு மாதம் பெற முடியாத ஓய்வை மைசூர் மாநிலத்தில் 4 நாட்கள் பெற்றேன் வேளா வேளைக்கு உண்பது – உறங்குவது, இடைவேளைகளில் இயற்கைக் காட்சிகளையும் சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு இரசிப்பது – ஆகிய இப்படிப்பட்ட நிலை. 4 நாட்களை மைசூர் மாநிலத்தில் கழித்தேன், அதன் பிறகு வந்துள்ளேன், எனவே இனியும் மறந்துவிட்டதை நினைவுபடுத்திக் கொண்டு பேச வேண்டாம் என்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் வீரப் பரம்பரை என்பது உண்மையானால் – வெற்றிப் பரம்பரை என்பது உண்மையானால் தோல்வியைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. விழுந்த பிணத்தைக்கூட ஒரு கணம் புரட்டிப் பார்த்துவிட்டு, மேலால் நடப்பதுதான் வீரனின் செயலாகும். அதற்காகக் கவலைப்படக்கூடாது.

என்னை மட்டும் அவர்கள் தோற்கடிக்கவில்லை, தோற்பதில் கூட என்னைத் தனியாக விட்டுவிடவில்லை, ஒன்பது பேரோடு சேர்த்து என்னைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

இலட்சியக் குறிக்கோளுக்கு ஒரு சான்று!

நான்கூட நமது நாவலரிடம் வேடிக்கையாகச் சொன்னேன் ‘நீங்கள் பொதுச் செயலாளராக இருந்தபோது உங்களைத் தோற்கடித்தார்கள், இப்போது நான் பொதுச்செயலாளராக இருக்கும்போது என்னைத் தோற்கடித்துவிட்டார்கள், பொதுச் செயலாளருக்கும் வெற்றிக்கும் ‘ராசி‘ இல்லை போலும்! இனி பொதுச் செயலாளராக வருவதற்குக் கூடப் பலர் பயப்படுவார்கள்‘ என்றேன், எனவே, தோல்வியை அனைவரும் மறந்துவிட வண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மைசூர் மாநிலத்தில் நான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது பெங்களுரிலிருந்து 100 மைல் தொலைவிலுள்ள சரவண பெலகொலா என்னுமிடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே 600-700 அடி உயரத்தில் உள்ள அழகிய குன்றின் மீது 60 அடி உயரத்தில் கோமதீசுவரரின் சிலை நின்றபடியிருந்தது, அந்தச் சிலைக்குப் பின்னால் நீலவானம், முன்னால் அடர்ந்த காடு, நிஷ்டையில் மெய்மறந்து நிற்கிறார் ரிஷி, அவர் நின்ற இடத்திலே ‘புற்று‘ வளர்ந்து விடுகிறது, புற்றிலிருந்து பாம்பு புறப்பட்டு, அவர் காலில் சுற்றிக் கொள்கிறது. இப்படி அழகாக அந்தச் சிற்பத்தை வடித்திருந்தார் சிற்பி! அதைப் பார்த்ததும் நானும் மெய் மறந்து நின்றேன்.

பதவிக்காக எதையும் இழக்க மாட்டோம்!

அப்போது நான் நினைத்தது என்னவென்றால், ‘இப்படித் தமிழகத்திலே ஒவ்வொருவரும் தம் இலட்சியம் ஒன்றிலேயே நிலையாக மெய்மறந்து நிற்கவேண்டும். அப்படி ஒருவர் இருவராக எட்டுப்பேர் பத்துப்பேராக அல்ல – இரண்டு மூன்று இலட்சம் தோழர்களுக்காவது அந்த உணர்வு ஏற்பட வேண்டும் என்பது தான்.

எனவே, நாம் இலட்சியத்தைச் சட்டசபைப் பதவிக்கா விட்டுவிடுவோம் என்று யாராவது எதிர்பார்த்தால் அவர்கள் ஏமாறுவார்கள்.

கேள்விகளின் நடமாடும் சின்னம் தி.மு.க.!

ஒரு கேள்விக்குறி நாடு முழுவதும் எழுந்தியிருக்கிறது, ‘எங்கள் நாடு எது? இனம் எது? ஏன் இந்த இழிநிலையில் இருந்து வருகிறோம்? எங்களை ஆட்டிப்படைபப்வர் யார்? – இந்த கேள்விகளின் நடமாடும் சின்னமாகத்தான் தி.மு.க. இருந்து வருகிறது.

இந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் 60-70 பேர் சட்டமன்றத்திற்குப் போனாலும் அதைத்தான் பேசுவார்கள், ஒருவர் மட்டும் போனாலும் அதைத்தான் பேசுவார்!

இப்போது பண்டித நேருவுக்கு முன்னாலே நம்முடைய கேள்விக்குறியாக ஏழுபேர் நின்று பேசப் போகிறார்கள். மதுரையில் பண்டித நேருவுக்கு முன்னாலே நமது முதலமைச்சர் காமராசர் சொன்னார் – ‘அடுத்த தடவை தி.மு.கழகம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும்‘ என்று! இப்போது பண்டிதர் எண்ணிப் பார்க்கமாட்டாரா? – எத்தனை ஆண்டுக்காலம் எப்படிப் பணியாற்றினால் தி.மு.கவுக்கு இவ்வெற்றி கிடைத்திருக்கும்? எப்படிப்பட்ட வீரர்களை இவர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள்! என்று எண்ணிப்பார்க்கமாட்டாரா?

திருச்சியிலே நமது எம்.எஸ். மணியால் தோற்கடிக்கப்பட்ட டாக்டர் மதுரம்சாமான்யரா? பெரியாருக்குச் சுவீகாரப்பிள்ளை, அவர் திருச்சிக்குச் செல்லப்பிள்ளை, அவரைச் சாதாரண சுருட்டுத் தொழிலாளர் சங்கத்தை நடத்திச் செல்லும் நமது மணி தோற்கடித்திருக்கிறார்.

நேருவுக்கு எதிரில் நாம் ஏழு பேர்!

இப்படி, வெற்றிபெற்ற நமது தோழர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையி்லே சிறப்புப் பெற்றிருக்கிறார்கள்.

எனவே, என்னையும் அன்பழகனையும், சண்முகத்தையும் சத்தியவாணிமுத்தையும் தோற்கடித்து விட்டதாக ஆளுங்கட்சியினர் மகிழ்ச்சி கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். உள்ளே சென்றிருப்பவர்கள் சாதாரணமானவர்களல்ல, நல்ல அரசியல் தெளிவும், பக்குவப்பட்ட தன்மையும் கொண்டவர்களாவார்கள்.

நீண்டகாலத் திட்டமிது!

எங்களையெல்லாம் தோற்கடிக்க வேண்டும் என்பது காங்கிரசார்களின் நீண்ட நாள் திட்டமாகும். நான் பல காங்கிரசார் பேச்சுக்களைச் சமயம்வரும்போது அம்பலப்படுத்துவது வாடிக்கை! அதேபோல் இப்போது ஒன்றை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத்தில் காமராசர் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு சமயம் என்னைப் பார்த்து, அவர் ‘உங்களைத் தோற்கடிக்க எங்களால் முடியாதா?‘ என்று கோட்டார் ‘ஒரு ஐந்து லட்சம் ரூபாய் செலவிட்டால் தோற்கடித்து விடுவோம்‘ என்றார்.

ஆனால், இந்தத் தேர்தலில் அதைவிட அதிகமாகச் செலவிட்தாக அறிகிறேன். இதைப்போல் இன்னும் எத்தனை இடத்தில் அவர்களால் செய்யமுடியும்? இதுதான் ஜனநாயகத்தின் கேள்வி.

நல்லெண்ணத்தைப் பெற முயல்வோம்

ஒரு முறை என்னைத் தேர்ந்தெடுக்காது விட்டுவிட்டால் மறுமுறையும் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற முயல்வேன். என்னுடைய தோல்வி கழகத் தோழர்கள் அடுத்த தேர்தலுக்கு உற்சாகத்தோடு பணியாற்றத்தக்க விதத்தில் பயன்படும் என்று கருணாநிதி அழகாக எடுத்துச் சொன்னதைக் கண்டு அகமகிழ்கிறேன். அத்தகைய உணர்வைத் தரும் வகையில்தான் நம்முடைய தோல்விகள் பயன்படவேண்டும். அதுதான் நடந்தது, அதுதான் நடக்கவேண்டும், தோல்வியுற்ற அனைவரும் மறுபடியும் வாக்காளர்களின் நல்லெண்ணத்தைப் பெறப்பாடுபட வேண்டும்.

நாம் ஏன் தோற்கிறோம்? இதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம், அவை உண்மையாகவும் இருக்கலாம் – உண்மை யில்லாமலும் இருக்கலாம் – வதந்தியாகவும் இருக்கலாம்.

நம்மை எதிர்த்து எவ்வளவு பணத்தைச் செலவிட்டாலும் அதையும் மீறிப் பெறுவதுதான் வெற்றி.

அடுத்த தடவை தோற்கடிக்க முடியுமா?

திருவண்ணாமலை சண்முகத்தையும், சத்தியவாணிமுத்தையும் தோற்கடித்து விட்டார்கள். அடுத்த முறை பணத்தை வைத்துக் கொண்டு முயன்றாலும் இவர்களை தோற்கடிக்க முடியாது என்று சொல்லிக் கொள்கிறேன்.

நாங்களெல்லாம் சட்டமன்றத்திற்குப் போகாததால் ஒரு குறையும் ஏற்பட்டுவிடவில்லை. உள்ளே செல்பவர்களெல்லாம் சோடையானவர்களல்லர்! அவர்களம் நல்ல திறமை பெற்றவர்கள்தான்.

நெல்லிக்குப்பத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நண்பர் கிருஷ்ணமூர்த்தியும், பெண்ணாகரத்திலிருந்து வரும் திருவேங்கடமும், திருக்கோஷ்டயூர் மாதவனும் வழக்கறிஞர்கள் ஆவார்கள்! நமது நாவலர் நெடுஞ்செழியன் நடமாடும் பல்கலைக் கழகம் நம் நண்பர் மதியழகன் பி.ஏ., பட்டதாரி! செய்யாறிலிருந்து வந்திருக்கும் புலவர் கோவிந்தன் எம்.ஓ.எல். பட்டம் பெற்றவர்! ஊத்தங்கரை கமலநாதன், வாணியம்பாடி வடிவேல் போன்றவர் களெல்லாம் உள்ளாட்சித் துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள்! போளுர் உறுப்பினரான கேசவன் – ஜில்லா போர்டு தலைவராக இருந்தவர்! ஆற்காடு முனிரத்தினம், திருப்பத்தூர் திருப்பதி ஆகியவர்கள் ஊராட்சி மன்றத்தில் பொறுப்பேற்றிருப்பவர்கள்! செங்கல்பட்டு விசுவநாதன், சின்னராசு, துரிஞ்சாபுரம் முருகையன், ஆம்பூர் சம்பங்கி ஆகியவர்களெல்லாம் நகராட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள்! மற்றும், வந்தவாசி முத்துலிங்கம் முனுஆதி ஆகியவர்கள் பஞ்சாயத்துத் தலைவர்களாவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனோகரன், செழியன், இராசாராம், ஆகியோர் பட்டதாரிகள்!

நன்மைசெய்ய முன்னணியில் நிற்பர்!

இவர்கள் மூலம் நல்ல பணிகளை நாட்டு மக்கள் எதிர்பார்க்கலாம்.

பக்குவமாக, பாராளுமன்ற பண்பு கெடாமல் இவர்களனை வரும் நடப்பார்கள். ஆளுங்கட்சி நல்லது செய்தால் ஆதரிப்பார்கள் – ஆகாத வழியில் சென்றால் தடுத்து நிறுத்துவார்கள். நாங்கள் செல்லாததால் சட்டமன்றம் சோபை இழக்கும் – சோர்வு தட்டும் என்பதற்கில்லை.

வெற்றிபெற்று வந்திருக்கும் 50 பேரும 50 மணிகளாக உள்ளார்கள். ஆடுதுறையிலிருந்து வந்துள்ள கோ.சி.மணி விவசாயத் தொழிலாளர் சங்கம் வைத்து உழைத்து வருபவர்!

திருச்சி எம்.எஸ்.மணி – ஆலைத் தொழிலாளரிடையே பணியாற்றி நல்ல அனுபவப்பட்டவர்.

அன்பில் தர்மலிங்கம் ஊராட்சியிலும், கூட்டுறவுத் துறையிலும் பங்கு கொண்டு நல்ல பயிற்சி பெற்றவர்!

“எனவே, நமக்கு இந்த அளவுக்கு வெற்றி தேடித் தந்த வாக்காளப் பெருமக்களுக்கும், கழகத் தோழர்கட்கும், முஸ்லீம் லீக் தலைவர்கட்கும், தோழர்கட்கும் நமது கழகச் சார்பில் நன்றியும், வணக்கமும் தெரிவித்துக் கொள்கிறேன்“.

(நம்நாடு - 9-3-1962)