அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பொதுச் செயலாளர் – செய்தி!

ஆச்சாரியாரின் அரசாங்க அழைப்பு கிடைத்துவிட்டது. செயற்குழுக் கூட்டத்தை முடித்த நேரத்தில் என்னையும் என் தம்பிமாரில் நால்வரையும் அரசாங்கத் தூதுவர்கள் அழைத்தனர். “புறப்படுங்கள்“ எனப் போலீஸ் அதிகாரி கேட்டுக் கொண்டதும், புன்னகையுடன் நாங்கள் செல்கிறோம். நான்கு தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தோடு, துணிவோடு, பெருமிதத்தோடு! “தம்பியுடையான் படைக்கஞ்சான்“ என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. இன்று நடகக்விருக்கும் போராட்டங்களில் வெற்றி நமக்கே.

தம்பிமார்களுக்கு ஒரு வார்த்தை!

ஆரம்பக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஆச்சாரியார் வீட்டு முன்னிலையில் மறியல், வடநாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து டால்மியாபுரம் போராட்டம், இரு முனைகளில் அறப்போர் துவங்கியுள்ளோம். இந்த இரண்டு போராட்டங்களிலும், கண்ணியமும் அமைதியும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆச்சாரியார் வீட்டு முன்பு அறப்போர் துவங்க இருந்த சம்பத் சிறைக்குச் செல்கிறார். அந்தப் பொறுப்பினைத் தோழியர் சத்தியவாணிமுத்து அம்மையார் ஏற்று நடத்துவார். தொடர்ந்து பல தோழர்கள் ஈடுபடுவார்கள்.

என்னைச் சிறைக்குள் ஆச்சாரியார் தள்ளியிருக்கிறார். ஆனாலும் உங்களுடனேயே நான் இருக்கிறேன். போராட்டத்தை நடத்துங்கள் – கண்ணியத்தை மறக்காமல் அமைதியை இழக்காமல் வணக்கம்.

(நம்நாடு - 14-7-1953)