அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


இராமாயண நாடகம்

“இராமராஜ்யப் பெருமைகளை இப்படி ஒன்று திரட்டி, ‘இராமயணத்தை யார் இவ்வாறு தீட்டினார்கள் என்று கேட்கலாம்; நான் சொல்கிறேன். இராதாவின் ‘இராமாயணத்தைத் தீட்டியவன் காலதேவன்.’

“காலதேவன் தீட்டியுள்ள இந்த நாடகத்தை, ‘அவர்கள்’ பார்த்தால், ஏன் தீட்டினோம், ‘இராமாயணம்’ எனும் நாடகத்தை என்றுகூட வருத்தப்படத் தோன்றும்.

“பல வருடங்களுக்கு முன்பே இப்படி நடித்துக் காட்டப்பட்ட வேண“டிய ‘இராமாயணம்’ இப்போது நடைபெறுகிறது. ‘ராமராஜ்யத்தின் அருமை பெருமைகள்’ காமராசரின் காலத்திலாவது நாட்டிலே நடமாட முடிகிறதே! காமராசர் இராதாவின் இராமாயண நாடகத்தை ஏற்றுக்கொண்டார் என்று கொள்ள முடியாது; இராதாவினுடைய இராமாயணமும் நடமாட அனுமதித்தார் என்பதால் நன்றி சொல்கிறேன் அவருக்கு.

காலதேவன் கணக்கு
“ஓர் இனத்தின் கலாச்சாரத்தை, வாழ்க்கை ஏற்பாடுகளை, பண்பாடுகளை, மாறுபட்ட ஒரு கலாச்சாரத்தைப் புகுத்துவதற்காக அழித்தொழிக்க நினைக்கும் இனவெறியில், கலாச்சாரப் போராட்டத்தில் ‘அவர்கள்’ ஈடுபட்டனர். அதன் பலனை இன்று காண்கின்றனர். காலதேவன் இன்று பழிதீர்த்துக் கொள்கிறான்; கணக்கு கேட்கிறான்.

“எங்களால் பழைய இராமாயணத்தை 50 வருடங்கள் தாங்கிக்கொள்ள முடிந்தது; ‘அவர்களால்’ புதிய இராமாயணத்தை 5 வருடம் கூடத்தாங்கிக்கொள்ள முடியாது; முடியுமா என்று அறைகூவிக் கேட்கிறேன்.”

இவ்வாறு பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்கள் 29.9.54 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நடைபெற்ற தோழர் எம்.ஆர்.இராதா அவர்களின் ‘இராமாயணம்’ நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

சென்னை ஒற்றைவாடை தியேட்டரில், இன்று மாலை 6.30 மணிக்கு, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களும், குழுவினரும் நடிக்கும் ‘இராமாயணம்’ நாடகம் தி.மு.கழகப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

ஏராளமான மக்கள் தியேட்டரை நிரப்பி இருந்தனர்.

நடிகவேள் ராதா அவர்கள் இராமர் வேடம் தாங்கி சிறப்புற நடித்தார். குழுவினரின் நடிப்பும் பாத்திரத்திற்கேற்பத் திறம்பட இருந்தது.

இறுதியாகத் தி.மு.கழகப் பொதுச்செயலாளர் அண்ணா அவர்கள் நாடகத்தைப் பாராட்டியும், நாடகம் புதியதாக அமைக்கப்பட்டிருக்கும் முறை குறித்தும், ‘ஏன் இராமாயண நாடகம் இராதா போன்றவர்களால் நடிக்கப்படுகிறது’ என்பதையும் விளக்கி அரியதோர் உரை நிகழ்த்தினார்.
அத்துடன் இரவு 10 மணிக்கு நாடகம் இனிது முடிந்தது.

சுயமரியாதை இயக்கம்
பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்கள் மேலும் தொடர்ந்து பேசியதாவது:-

“நடிகவேள் இராதா, இராமாயணம் நாடகத்தை நடிக்கப் போகிறார் என்றதுமே பலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டதை நாம் கண்டோம்.

சுயமரியாதை இயக்கத்தினர் தான், முதன்முதலில் இராமாயணத்தை எதிர்த்துப் பேசுகிற துணிவைப் பெற்றிருந்தனர்.

நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளைக் கூறுகிற பண்பையும் பெற்றிருந்த சுயமரியாதை இயக்கத்தின் படை வரிசையிலே-பகுத்தறிவு இயக்கத்தின் படை வரிசையிலே நண்பர் இராதாவுக்கு ஓர் இடமுண்டு.

கலை உலகிலேயும் அவர் தனக்கென ஓர் இடம்பெற்று விளங்கினார்.

இப்படி ஏககாலத்தில் பகுத்தறிவு உலகிலும், சுயமரியாதை இயக்கத்திலும் இடம்பெற்றிருப்பவர் இராதா; அவர், மிக்கத் துணிவோடு இராமாயண நாடகத்திற்குப் புதுமெருகு கொடுத்துத் திறம்பட நடத்திக் காட்டுகிறார்; அதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.
இராமராஜ்யம்
‘இராம ராஜ்யம்’ எப்படி இருந்தது என்பது இராதாவின் நாடகத்தில் நமக்கு விளக்கப்பட்டது.
பழைய இராமாயண நாடகங்களில் 25 வருடங்களுக்கு முன் நமது ராதா அவர்கள் பாலராமர் வேடம் தாங்கி நடித்திருக்கிறார். ஏன்-நமது நடிக நண்பர் கே.ஆர்.ராமசாமி கூட டி.கே.எஸ். நாடக சபையில் அனுமார் வேடம் தாங்கி அழகாக நடித்ததுண்டு. ஆனால், அவர்கள் இன்று இராமாயண நாடகங்களைப் புதிய முறையில் நடிக்க முற்படுகிறார்கள்.

மேக்கப் போட்ட கிழவி
பழைய, ‘இராமாயணம்’ எனும் வயதான கிழவியை நல்ல சினிமா ‘மேக்-அப்’காரரைக் கொண்டு 18 வயதுக் குமரியாக்கிக் காட்டுவதுபோல், பழைய இராமாயணத்தை நாட்டில் உள்ள பலர் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இராதாவின் இராமாயண நாடகம், ‘பழைய இராமாயணம், குமரி அல்ல; கிழவின்தான்; அவள் ‘மேக்-அப்’ செய்யப்பட்டிருக்கிறாள் குமரிபோல்; அவ்வளவுதான்!’ என்று பழைய இராமாயணம் போட்டிருந்த வேடத்தைக் கலைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
இங்கே இந்த நாடகத்தில் வருகிற முனிபுங்கவர்களைக் கண்டால் சகிக்கவில்லை என்று என்னிடம் நண்பர்கள் கூறினார்கள். ஆனால் நான் சொல்கிறேன்- ‘முனிபுங்கவர்கள் காட்டிலே வாழ்பவர்கள். நாட்டை மறந்தவர்கள்; நாகரிகமறியாதவர்கள், வெயிலிலும், மழையிலும், குளிரிலும், நெருப்பிலும் நின்று தவம் புரிந்தவர்கள்’ என்றெல்லாம் சொல்கிறார்களே; அப்படியானால், அவர்கள் இங்குக் காட்டப்படுகிற கோலத்தில்தான் இருக்க முடியுமே தவிர வேறெப்படி இருந்திருக்க முடியும்?

விட்டுவிட்டால் நல்லது
இதனால் இப்படி முனிவர்கள் அகோரமாகச் சித்தரிக்கப் படுவது கண்டு யாருக்கேனும் மனத்தாங்கல் இருக்குமானால், அந்த மனத்தாங்கலுக்கு ஒரே மாற்றம்தான் உண்டு. அதுதான், ‘அவர்கள்’ நடத்திக்கொண்டிருக்கிற இராமாயண நாடகங்களை விட்டு விடுவது. அவர்கள் விட்டுவிட்டால், நாங்களும் ‘இராமாயணம்’ நடிப்பதை விட்டு விடுகிறோம்.

எத்தனை துணிவும் நெஞ்சழுத்தமும் இருந்தால், படித்த படிப்பையும், பெற்ற பட்டங்களையும், வகித்த பதவிகளையும் எவ்வளவு மறந்திருந்தால், எவ்வளவு வெட்கத்தைவிட்டிருந்தால், ஆச்சாரியார், இராமாயணத்தைத் தூக்கிக் கொண்டு அலைவார் நாடெங்கும்?

யார் தலைவர்கள்?
இங்கிலாந்தில் உள்ள சர்ச்சிலும், அமெரிக்காவில் உள்ள ஐசனோவரும் பைபிள் புத்தகத்தைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு ஏசுநாதரின் பெருமையைக் கூறிக்கொண்டா அந்தந்த நாட்டுத் தலைவர்களாக இருக்கிறார்கள்?

மற்றைய நாடுகளில் எல்லாம், மக்களுக்குச் சேவை செய்து தகுதி பெற்றுத் தலைவர்களாகிறார்களேயன்றி ஆண்டவன் பெயரை உச்சாடனம் செய்து அவன் புகழ் பாடியா தலைவர்களாகின்றனர்! இல்லையே?

இந்த அருமையான பாடத்தைத்தான், ஆச்சாரியார்களுக்கு இராதாவின் இராமாயணம் சொல்லித் தந்து கொண்டிருக்கிறது.

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன், இராமாயணப் பிரியர்கள், இராமாயணத்தைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார்கள். நாட்டிலே பலமான எதிர்ப்பு கிளம்பிற்று.

இறங்கி வந்தார்கள்
பின் அவர்கள் இறங்கி வந்தனர். ‘இராமனை அவதாரப் புருஷனாக ஏற்றுக்கொள்ள வேண்டாம்; கடவுளாக வழிபட வேண்டாம்; மாறாக, அதிலே உள்ள கவிதை அழகை ரசியுங்கள், போதும்’ என்று கூறினார்கள்.

ஆரியத் தர்மத்தை வைத்துக் கொண்டுதான் வாழவேண்டும் எனும் நிலையிலிருப்பவர்கள், இராமாயணத்தை, அதன் கவிதை அழகை, அதனூடே இருக்கும் கடும் விஷத்தை நீக்கிவிட்டுத் தந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

கவிதை அழகு என்ற பெயரில், ‘கடவுட் காதை’ என்ற கடும் விஷம் கலந்திருந்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

ரோம் நாட்டிலே, இன்னும் வேறு பல நாடுகளிலே, இராமனைப் போன்ற கடவுளர்கள் பலரும், இராமாயணம் போன்ற காவியங்கள் பலவும் இருந்ததுண்டு; ஆனால், அவைகள் இன்று இல்லை.

காட்சிப் பொருள்கள்
ரோம் நாட்டில் அன்று இருந்த மினர்வா தார், ஜுபிடர், ஒராலோ இவைகள் இன்று எங்கே போயின? காட்சிப் பொருள்களாகிவிட்டனவே, காலதேவனின் கட்டளையால்!

அதேபோலத்தான், இன்று இந்த நாட்டிலே உலவுகிற ‘இராமன்’ கள் ஆகவேண்டும். அப்படி ஆக்கப்படுவதற்கான முயற்சிதான், இராதாவின் ‘இராமாயண’ நாடகம்.

‘இராதாவின் இராமாயணத்தில் வரும் ‘இராமர்’ எங்கள் இராமர் அல்ல” என்றாராம் மந்திரி சுப்பிரமணியம்.

‘அப்படியானால், பழைய இராமாயணத்தில் வரும் இராமரும், எங்கள் இராமர் அல்ல.”

காலதேவன் வேலை
மந்திரி சுப்பிரமணியம் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இராமன் என்ற ஒரு பாத்திரம் இருதரப்புக் கண்களுக்கும் வேறு வேறாகத்தெரிய வேண்டும்; அதுதான் காலதேவன் வேலை.
“இராமாயணம், நாங்கள் சொல்வது போலத்தான் இருந்தது” என்று ‘அவர்கள்’ சொல்கிறார்கள்; ஆனால் நாங்கள் சொல்லவில்லை. ‘இராமாயணக் கதை எங்கள் நாடகத்தைப் போலத்தான் இருந்தது’ என்று! ஆனால், “இப்படியும் இருந்திருக்கலாம்” என்று கூறுகிறோம்.

ஊசல் சரக்குகள்
இந்த நாடகத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இராமன் நல்லவனா? இராவணன் நல்லவனா? சீதை அழகியா, இல்லையா? சீதை கற்புக்கரசியா, காமாந்த காரியா? என்பதல்ல; மாறாக இந்த இராமாயணத்தை எப்படியும் திருப்பலாம்; திருத்தி அமைக்கலாம்’ என்பதுதான் ஏன் மகாபாரதத்தைக்கூடத்தான் வேறாக மாற்றியமைத்து விட முடியும்’ ஏனென்றால் அவையெல்லாம் ஓட்டைப் பாண்டங்கள், ஊசல் சரக்குகள்!

ஓட்டைப் பாண்டங்களையும் ஊசல் சரக்குகளையும் உரத்த குரலெடுத்துக் கூவி விடுவதாலேயே விற்றுவிட முடியாது.

பழைய இராமாயணம் எனும் ஊசல் சரக்கின் நாற்றத்தை எடுத்துக் காட்டுவதுதான் இராதாவின் இராமாயணம்.

இராமனை ‘அவதாரப் புருஷன்’ என்று நம்பும்படி சொல்கிறார்கள்.

புதிய இராமாயணங்கள்
“இராமன் குதிரையின் மாமிசத்தையும், ‘தேள்கடிப்பு அன்ன, நாள்படு’ மதுவையும் அருந்தினான் என்றும் சேர்த்துக் கூறு” என்று நாம் சொல்கிறோம், ஆதாரங்களுடன்!
எனவே, இராதாவின் இராமாயணத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை; அதிர்ச்சி கொள்ளத் தேவையுமில்லை.

பழைய இராமாயணங்கள் நாட்டில் நடமாடுகிற வரை, புதிய இராமாயணங்கள் தோற்றுவிக்கப்படத்தான் வேண்டும்.

சென்னை மக்கள், கடவுள் என எண்ணி ஏற்றிப் போற்றச் செய்கிற வேலை நடைபெறாது நிற்கிற வரை உண்மையான ‘இராமன்’ களைக் காட்டத்தான் செய்வார்கள்.

(நம்மாடு - 30.9.54)