அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ரத்தக் கண்ணீர்

27.12.50 ல் சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள், நடித்த, “இரத்தக் கண்ணீர்” நாடகத்திற்கு, தலைமை வகித்த, “திராவிட நாடு” ஆசிரியர், அறிஞர் சி.என்.அண்ணாத்துரை, எம்.ஏ. அவர்கள் பேசியதாவது:

அன்புள்ள நண்பர்களே! தாய்மார்களே!
இந்த நாடகத்தை நான் பார்ப்பது இது முதல் தடவை அல்ல. இந் நாடகத்திற்குத் தலைமை தாங்குவது வேண்டுமானால் முதல் தடவை.

“இரத்தக் கண்ணீர்” நாடகத்தை நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன்.

இந“த நாடகத்தைப் பற்றி தமிழ் நாட்டிலே உள்ள பல ஊர்களிலும் உள்ள மக்கள், எந்த அளவுக்கு, இதன் கருத்துக்களை உணர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் பல ஊர்களுக்குப் போகிற இடங்களில் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். பொதுவாக, நண்பர் இராதா அவர்களுடைய எந்த நாடகமும், திராவிட சமுதாயத்திற்கு சொந்த நாடகமாகும்.

ஆகையால் தான், மாற்றுக் கட்சிக்காரர்களென்று தங்களைக் கருதிக் கொண்டிருப்பவர்கள், நண்பர் இராதா அவர்களுடைய நாடகங்களிலே, குற்றங் குறைகளைக் கூறுகிறார்கள். அவர்களெல்லாம் நண்பர் இராதா அவர்கள் எடுத்துக்காட்டும் குற்றங்குறைகளைப் போக்க முன்வரவேண்டும்.

தமிழ்நாட்டிலே, பத்துப் பதினைந்து ஆண்டுகளாக, இராதா அவர்கள் செய்துவரும் சிறந்த தொண்டு திராவிட இனித்திலே, பற்றுகொண்ட எல்லாருக்கும் தெரியும்.

திராவிட சமூகத்திலே உள்ள சீர்கேடுகளைப் போக்க, நாமெல்லாம் முயற்சி எடுத்துக்கொண்டுவரும் இந்த நாளிலே; புராண, இதிகாசக் கருத்துக்களை, இயல், இசை, நாடகம் மூன்றின் மூலமாக மாற்றித்தந்த பெருமை, நண்பர் இராதா அவர்களுக்குத் தான்.

இராதா அவர்கள் நாடகக் கலையின் மூலம் நாட்டிற்கு, இன்றையதினம் செய்துவரும் நல்ல தொண்டை, நாட்டை ஆளுகிறவர்கள் என்று கருதக்கூடிய ஒரு சாரார் தவறாகக் கருதக்கூடும். இப்படிப்பட்டவர்களிடத்திலே, நாட்டுப் பொறுப்பு ஒப்படைக்கப்படவில்லை என்றுதான் கருதவேண்டும். எவ்வளவு அடக்குமுறைகளாலும் நண்பர் இராதா அவர்களுடைய கலைக்கு நாட்டிலே எந்த வகையிலும், ஒருவித இடையூறும் செய்ய முடியாது என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது.

பொதுவாக நாடகக் கலையிலே இன்று ஏற்பட்டிருக்கிற மறுமலர்ச்சியை நான் எடுத்துக் கூறுவதற்கு முன்னால், இந்த “இரத்தக் கண்ணீர்” நாடகத்தைப் பற்றி, என்னுடைய அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டும் என்று இராதா அவர்கள் கூறினார்கள். நாடகத்திலே இருக்கிற கருத்துக்களைச் சொல்வதற்கு முன்னாலே, நாடகத்தில் நடித்தவர்களைப் பற்றிச் சொல்ல ஆசைப்படுகிறேன். நண்பர் இராதா அவர்கள் நடித்த ‘குஷ்டரோகி’ வேஷத்தை நடிக்கத் தமிழ் நாட்டிலே வேறு எவரும் கிடையாது. அது மட்டும் அல்ல. வட நாட்டிலே இருக்கிற பிரபல நடிகர்களாலும் இத்தகைய வேஷத்தை நடிக்க முடியாது.
இது இராதாவும் நானும் நண்பர்களாக இருக்கிற காரணத்தினாலே சொல்லுகிற புகழுரை அல்ல. நான் அதனைச் சொல்வது, நாடகத்திலே எனக்குப் பற்று இருப்பதினாலே, அனுபவம் இருப்பதினாலே.

தமிழ்நாட்டிலே, இராதாவின் கம்பெனியைத்தவிர வேறு எந்தக் கம்பெனியாரும், இத்தகைய நாடகத்தை நடத்தவும் முடியாது. நடிக்கவும் முடியாது. இராதாவின் கம்பெனி தான் இத்தகைய நாடகத்தை நடத்த முடியும். குஷ்டரோகியாக, இராதா அவர்கள், கீழே விழுந்து கிடந்த சிகரெட்டை எடுக்க, நடந்து சென்ற காட்சியை மேல்நாட்டுப் படங்களில் நான் பார்த்திருக்கிறேன். அதுகூட அவ்வளவு நன்றாக நடிக்கப்படவில்லை. அந்த நடிப்பை இயற்கையாக நண்பர் இராதா அவர்கள் நடித்துக் காட்டினார்கள்.

தென்னாட்டை எடுத்துக்கொண்டால், மாற்றுக் கட்சிக்காரர்கள் என்று கருதியிருப்பவர்கள், அவர்களைத் துவேஷப்பிரசாரம் செய்கிறார் என்று சொல்லுகிறார்கள். அதை இராதா அவர்களும் மறுப்பது கிடையாது.

அவர், இதே நாடகத்தில் நடிகர்கள் என்றால் யார், என்று விளக்கம் தருகையில் “நடிகர்களுக்குத் திட்டம் வேண்டும். கொள்கை வேண்டும். வாழ்க்கையிலே இலட்சியம் வேண்டும். அவைகளைச் சொல்லி விவாதிக்க வேண்டும். அப்பொழுது எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் சமாளிக்க உள்ள உரம் வேண்டும்” என்று சொன்னார்.

அந்த மாதிரி உள்ள உரம் படைத்த நண்பர் இராதா அவர்களுடைய நாடகத்தில் செய்யப்படுகிற பிரசாரத்தைக் “கேவலம் காசுக்காக நடத்தும் பிரசாரம் என்று யாராவது கருதினால் அதைவிட அறிவில்லாத செய்கை வேறு உண்டா?

நண்பர் இராதா அவர்களுடைய நடிப்பை, ஒரு புராணக் கதையோடு இணைத்து நடித்தால், வசூல் ஆகாது என்று எண்ணுகிறீர்களா?

இந்த நாடகத்திலே, குஷ்டம் ஏற்பட்டதாகக் காட்டப்பட்ட பாத்திரத்தை, ஒரு அவதாரமாக மாற்றியிருந்தால் புராணீகர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதா? ஏன், நண்பர் இராதா அவர்கள் அந்த மாதிரி செய்யவில்லை?

ஏன்? நண்பர், இராதா அவர்கள் அந்தப் பாத்திரத்தில், “நான் கடைசியில், இப்போது இருக்கிற நிலைமையிலேயே சிலையெடுக்க வேண்டும்” என்று கூறுகிறார்; தம் நண்பருக்கு. இதை நீங்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

மனிதனுக்குக் கஷ்டம் வருவதும், சுகம் வருவதும் அவரவர்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தது.

கைகேயியின் சதியினால் இராமனுக்குக் கஷ்டம் வந்தது. தன்னுடைய முரட்டுக் கணவனால் கஷ்டம் வந்தது, தமயந்திக்கு சூதாட்டத்தினால் கஷ்டம் வந்தது பாண்டவர்களுக்கு.

இப்படிக் கஷ்டங்கள் வந்ததும், அதற்குப் பிறகு அக்கஷ்டங்கள் நீங்குவதும் புராண நாடகங்களிலே சர்வ சாதாரணமான காரியம். கஷ்டங்கள் வரும்; கடைசியில் கடவுளரால் தீர்க்கப்படும். கஷ்டங்கள் மாறும்; புண்ணியம் செய்கின்ற காரியத்தினாலே.

நண்பர் இராதா அவர்களின் இந்த நாடகத்தில் கஷ்டம் வந்தது விதியினாலா?

இதை இராதா அவர்களே, நாடகத்தில் கேட்டார்; “விதியா? இது எல்லாம் தலைவிதியா?” என்று கேட்டு, அவரே பதிலும் கூறினார், “நம்ம திமிருக்குப் பெயர் தலைவிதியா?” என்று.
இந்தப் புரட்சிகரமான கருத்தைப் புராண நாடகங்களிலே கண்டிருக்க முடியாது; சமுதாய நாடகங்களிலே கூட விதியைப் பற்றி இவ்வளவு, தைரியமாகக் கூற பலருக்குத் துணிவு இருக்காது.

மோகன் தான் செய்த கஷ்டங்களினாலே, கொடுமைகளினாலே, அதனுடைய பலனை கடைசிவரையில் அனுபவித்தான். இப்படி இதன் மூலமாக எச்சரிக்கை செய்தார் மக்களுக்கு. தன்னுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு, ஒரு பாடமாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டுப் போனாரே தவிர, கடைசியில், ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, அரசமரத்தைச் சுற்றியதனால், பிள்ளையார் தன் தம்பி சுப்பிரமணியன் மூலம் சிபாரிசு செய்து; “முன்னே இவன் தாசிலோலனா இருந்தான், அது உண்மைதான். ஆனால் இப்பொழுது அவ்வழிவிட்டுத் திரும்பி விட்டான். ஆகையால், ஆலவாய் அப்பனே! அவனை மன்னித்துக் காப்பாற்று” என்று கூறியதும், ஆலவாய் அப்பன் குஷ்டத்தைத் தீர்த்துக் கஷ்டத்தைப் போக்கி, அணைத்துக்கொண்டு, மங்களம்பாடி முடித்து விடவில்லை.

புராணக் கதைகளில் இப்படித்தான் முடிந்திருக்கும். இதை நாம் எல்லாம் போற்றக்கூடும். இத்தகைய நடிப்பை நடிக்கத்தான் நடிகர்கள் இந்நாட்டில் உண்டு.

ஆனால், வாழ்க்கையில், என்ன முடிவோ, அதைத்தான் காட்டுவோம் என்பதை, வாழ்க்கையிலே எந்தப் பாடத்தைப் புகுத்த வேண்டுமோ, அந்தப் பாடத்தைத்தான் புகுத்தவேண்டும் என்ற துணிவு; நண்பர் இராதா அவர்களிடத்திலே தான் இருக்கிறது. ஆகையால் தான் “இரத்தக் கண்ணீர்” கலையுலகத்திலே மாபெரும் புரட்சி. இதனால் பலருக்குச் சங்கடம் ஏற்பட்டிருந்தால், நாம் ஆச்சரியப்படவில்லை.

இந்த மாதிரியான நாடகங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது இங்கு. இந்த நாடு ஒன்றிலேதான் நடிகர்களுக்குப் பயப்படுகிறார்கள். நாடகக்காரன், நாட்டிலே, புரட்சிக் கருத்துக்களைப் புகுத்துகிறான்; பரப்புகிறான் என்று பயப்படுகிறார்கள்.

ரஷ்ய நாட்டிலே, புரட்சிக்கு முன்னால், ஒரு நாடக ஆசிரியர் இருந்தார். அவர், இராதாவைப்போல், நாட்டுச் சமுதாய சீர்கேடுகளைக் கண்டு, ஒரு அரிய நாடகத்தை எழுதினார்.

அந்நாடகத்தை, அச்சடிக்கக் கூடாது என்று உத்தரவு போட்டார்கள். ஆட்சியாளர் அச்சடிக்கக்கூடாது என்றதும், கையாலேயே எழுதிப் படிக்க ஆரம்பித்தனர் மக்கள். இதைக் கண்ட ஆட்சியாளர், நாடகத்தைப் படிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். பொதுமக்கள், நாடகத்தை நடிக்கத் தொடங்கினார்.

ஆட்சியாளர், தங்களுடைய சட்ட திட்டங்கள், தங்களுடைய நடவடிக்கைகள், நாடகத்தினாலே, கேலி செய்யப்படுகின்றதே என்று பயந்து தடுத்து, அதன்மூலம் அறிவுப் பிரசாரத்தைத் தடுத்து விடலாமென்று கருதினால், அவர்கள் நிச்சயமாகத் தோல்வி பெறுவார்கள் என்று நிரூபிக்கப்பட்டது இதனால்.

படவுலகத்திலே இருக்கிறவர்களை, “இந்தக் கதையை எடுக்காமல், வேறு கதையை எடுக்கிறீர்களே” என்று கேட்டார், நண்பர் இராதா அவர்கள். படவுலகம்கூட வெகு சீக்கிரத்தில் இந்த நிலைக்கு வந்து தான் தீரும். நாம் அத்தகைய நிலையைப் பார்க்கத்தான் போகிறோம்.
நண்பர் இராதா அவர்கள் நமக்குக் கிடைத்த ஒரு பெரிய செல்வம். இராதா அவர்களுக்கு, தளபதி அழகிரிசாமி அவர்கள், மற்றவர் எவருக்கும் அளிக்கப்படாத “நடிகவேள்” என்ற பட்டத்தை அளித்தார். “வேள்” என்றால், வீரத்தோடு, அச்சமின்றி, பிறருக்கு வேண்டியதைக் கொடுப்பவர். இத்தகைய பிரசாரத்தை, நாட்டிலே செய்துவரும் இராதா அவர்களையும் அவர் தம் குழுவினரையும் நான் பாராட்டுகிறேன்.

தமிழ் முதுநூல் சான்றுகள்:
“நாடகக் கலையாவது யாது?” அண்மைக்கால வரலாற்றின் படிக்கு, புராணங்களையும், மனித இயற்கைப் பண்புக்கொவ்வா, தேவர்களின் திருவிளையாடல்களையும், தகா வழிகளில் நடந்து வாழ்க்கையில் பட்டழிந்தபின், பரமனருள் பெற்று, பக்தர்களும் முக்தர்களுமானோர் வரலாறுகளையும், அவ்வழி கட்டுக் கதைகளையும் தான் சுட்டுவதாகிறது.

ஆயின் மெய்யோ, இதுவன்று வாழ்க்கைக்கு வழிவகுத்து, அந்த நல்வழிகளைக் கைக்கொள்ளும் முறைகளையும், அம்முறை களினால் ஏற்படும் நலன்களையும், தீயனவற்றின் தீமைகளையும், நடைமுறையில் நம் வாழ்வுக்கும் வசதிக்கும் நடப்புக்கும் ஏற்றமுறைகளில் ஒத்திகை காட்டுவதே நன்னெறி நன்னாடகமாகும். செத்தபின் சுகம் தேடத் தூண்டும் நாடகங்கள், இயற்கைக்கும் நடப்புக்கும் வாழ்க்கைக்கும் எவ்விதம் ஏற்றதாகும் மென்பதை, அக்கதா அறிஞர்களும் தெளிவுபடுத்த இயலாததாகத் தானுள்ளது. இதனை யாரும் மறுக்கவியலாது.

இயல்-இசை-நாடகக் கலைச் செல்வங்கள் பற்றி, தமிழ் மொழி முதுநூல்களாம். அகம்-புறநூல்களும் அய்ம்பெரும் காப்பியங்களும் தெளிவுறக் கூறுகின்றன. இசைக்கும் நாடகத்திற்கும் கூத்து -முதுமொழித் தமிழ் நூல்கள் அதிக முக்கியத்துவம் தந்து, அவற்றின் இலக்கணங்களையும் உரிய இடங்களில் தெளிவு படுத்துகின்றன. கதை வழி அமைப்புகளுடன். நாடகக் கலையென்றால் என்ன என்பதற்கு, அய்ம்பெரும் காப்பியங்களில் சிறந்ததான சிலப்பதிகாரத்தில்.

“நாடகத் தமிழ் என்பது, நிலத்தோடும், நலத்தோடும், கண்டத்தோடும், கருவியோடும், நிலையோடும், இயக்கத்தோடும் இருவகை, பலவகை, விலக்குறுப்புக் கைகால் வட்டணை, பொருள்வருந்தி, சுவை, குறிப்பு, சத்துவம், அபிநயம், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் என்பனவற்றோடும் கதையோடும் கூடிய கூத்து, இதனைக் கூறுங்கால், உய்த்துணர் வில்லார்க்கும் செவிச் சுவை பயக்கக்கூறுவது அமைவு” எனத் தெளிவுரை இலக்கணம் கூறுகிறது.

நாட்டுக்கும் நடப்புக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில், சாதாரணமாக எல்லாரும் புரிந்து கொள்ளச் செய்யும், வாழ்க்கைத் துறை விளக்கம் தான் நாடகம் என்பது இதன் கருத்து.

நாட்டு நலிவு நீங்கி, நல்வழிகண்டு, நல்வாழ்வு வாழச் செய்ய, எளியதும் நம்பகமான பலனளிப்பதுமான சாதனம் இந்த நாடகக் கலைதான் என்பது உலகம் கண்ட மெய்மை.

கவியரசி சரோஜினி நாயுடு அவர்களின் தம்பியார், நடப்புக் கால ஆங்கில நாடகாசிரியரும் பாவலருமான திரு.ஹரீந்தீரநாத் சடோபாத்தியாயா அவர்கள், அண்மையிலே மேனாடுகளுக்குச் சென்று, அந்நாடுகளின் கலைவள நிலவரத்தைக் கணித்தறிந்து வந்துள்ளார். தமது கலைமதி-நடு நிலைமை அறிவு கொண்டு, அய்ரோப்பிய நாட்டுக் கலைவளம் பற்றி இவர் ஆற்றிய சொற்பொழிவுகளில் “கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலே, ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நாடக அரங்கமுள்ளது. நாடகங்கள், சாலைகளின் ஓரங்களிலமைக்கப்படும் அரக்குகளிலே நடித்துக் காட்டப்படுகின்றன” (நம் நாட்டுத் தெருக்கூத்து போன்று) என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். புது சீனாவிலே, ஓராண்டிலே, நாடக அரங்கங்கள், நாட்டுச் சீர்திருத்தப் பணியிலே மாபெரும் முன்னேற்ற மடைந்திருக்கின்றனவாம்.

இதிலிருந்து நாட்டைச் சீர்திருத்த-மக்கள் நல்லறிவு-நல்வாழ்வுத் துறையில் செலுத்த, நாடகக்கலை தான், விரைவில் நம்பகமான பலன் தரத்தக்கது என்பது தெளிவாகிறது. இதனால் தான், தமிழ் நூல்களும் -பண்டைத் தமிழகமும்- “கூத்து” வகைகளைக் கண்ணெனப் போற்றி வந்துள்ளன. உழைத்துத் தளர்ந்த உடலுக்கும் மனதுக்கும், மகிழ்வொளியூட்டி, புதுவூக்கமளிப்பது இந்த நாடகம்தான்.

“கற்கக் கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

என்ற குறள் சித்திரத்தின் அறிவுரையை, நாம் நடைமுறையில் கைக்கொள்ள நடிப்பு, சொல்லாடல், மெய்மொழிகள், உவமைமொழிகள், இசைக்கோவை, நகைச்சுவை, வாழ்க்கை நடப்பு சோகம், வீரம் ஆகிய பண்புகளைக்கொண்டு, கவர்ச்சி மிக்க துறையில் வழிகாட்டுவது இந்த நாடகக் கலையேயாகும்.

நல்வாழ்க்கைக்கு நல்லிணக்கத்தை அமைத்துத் தருகிறது. அறநெறிப்புலவர் வள்ளுவரளித்த அறநூலாம் திருக்குறள்-சொல் சித்திரமாக கருத்துப் பொதிந்த குறள் மொழிகளிலே இந்தக் குறள் மொழிகள் தரும் நல்லறங்களின் கருத்துக்களை, நாம் தெளிவுற உணரவும், நம்மனத்தில் பசுமரத்து ஆணிபோல் அக்கருத்துக்கள் பதியவும் செய்வது நாடகக் கலையே.

“அறம் பொருள் இன்பமுயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்”

இந்த நாடகத் துறையால் அதுவும், நமக்கு மகிழ்ச்சியூட்டி-நம்மனப்பாங்கைப் பண்படுத்தி-அந்த நன் முறைகளில் விருப்பம் ஊட்டி, நம் பண்புக்கும் வாய்ப்புக்கும் ஏற்ற துறையில், நம்மை நல்வழி செலுத்துகிறது. ஏனை மாட்சிகளில் தலைசிறந்ததான, மனைமாட்சிக்கு, நன்னெறி கோலுவதே நலன் மிக்க நல்ல நாடகத்தின் பண்பும் பயனுமாகும்.

இன்பக் கலைகளைப் பார்ப்பதால், கேட்பதால், உள்ளத்திலும் உடலிலும் ஓர்வகை உணர்ச்சி அலைபாய்கிறது. இதனால் மனிதர்கள் மகிழ்வுறுகின்றனர். சொல்லுவதை அழகும், கவர்ச்சியும், பயனுமான முறையில் சொல்லுவதே இன்பக் கலை இன்பக்கலை வளம், கற்பனையால் உண்டாகிறது. வாழ்க்கைக்கு உயிர்ச்சக்தி தருவதே கலையாகும். எனவேதான் கலைஞனுக்கு மற்றல்லாரையும் விட உள்ள உரமும், தெளிவான அறிவோட்டமும், ஆராய்ச்சி சக்தியும், கற்பனை வளமும் அதிகம் தேவைப்படுகின்றன. கலைஞன் ஒரு நீதிபதி. விருப்பு வெறுப்பு, அச்சம், தயவு தாட்சண்யமற்று, நன்னெறியைச் செப்பனிட வேண்டியவன். நீதிபதி தீர்ப்புக் கூறுவதைப் போன்று, ஆய்ந்தோய்ந்து சீர்தூக்கிப் பார்த்து, காலத்திற்கும் நடப்புக்கும் ஏற்ற நன்னெறிகளுக்கு உருவமைத்துத் தரவேண்டியவன் “புதிய எண்ணங்களை உள்ளத்தில் உற்பத்தி செய்வதே மெய்க் கலை. உண்மையை அடிப்படையாகக் கொண்ட கற்பனைச் சித்திரமே சிறந்த கலைச்செல்வம்” என்கிறார் நாடகக் கலைஞர் ஷேக்ஸ்பியர். “கற்பனைக்கு இயற்கையும் இயற்கைக்குக் கற்பனையும் கொண்டதுதான் நன் கலை”யென்பது அறிஞர் டால்ஸ்டாயின் கருத்து. இன்பக் கலைகளில் சிறந்ததான காவியக் கலையில் காட்சிக் கலையும் செவிக் கலையும் சிறந்தவை. செவிக்கலையிலும் காட்சிக் கலை சிறந்தது. செவிக் கலை (இசை) கேட்க மாத்திரமே இன்பம். காட்சிக் கலை (நாடகம்) கண்ணுக்கும் கருத்துக்கும் இன்பம்.

வாழ்க்கை வரலாற்றையும், இன்ப துன்பப் பண்புகளையும் இவற்றால் ஏற்படும் போராட்டங்களையும், அப்போராட்டங்களில் வெற்றிபெறும் வகைகளையும், இயற்கைக்கும் இயல்புக்கும் ஏற்ற சொல்லாடல்கள், பாடல்கள், நடிப்பு ஆகியவற்றினால் விளக்குவதே பலன் மிக்க, வெற்றிகரமான நாடகக் கலையாகும்.

பழங்கால நாடகங்களைக் காணுமிடத்து அவற்றில் சமுதாயப் பழக்க வழக்கங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். எனவே அவ்வக்காலத்து, மக்களைச் சீர்படுத்தும் கருத்துக் கொண்டிருக்கும் சமுக நாடகங்களென்பனதான் எக்காலத்தும் தேவைப்பட்டிருக்கிற தென்பதும் தெளிவு. சமூக நாடகங்கள் எனின் அவை நல்ல சீர்திருத்தக் கருத்துக்கள் மனை வாழ்க்கையில் மாத்திரமன்றி, பொருளாதாரம், படிப்பு, அரசியல், தொழில்வகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டனவாக இருத்தல் அவசியம்.

‘அவதார’ மகிமை கூட்டுவது, நடப்புக் காலத்திற்கேலாத கனவுலகக் கற்பனை-கைமேல் வாழ்க்கைக்குப் பலனளிக்காது. சிறந்த நோக்கம் கொண்டதே நல்லிணக்கண நாடகமாகும். எனவே வாழ்க்கை, நல்லன தீயனவற்றை ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்து தீயனவற்றின், கேடுகளையும், நல்லனவற்றின் நன்மைகளையும் விளக்கிக் காட்டும் அறிவாற்றலும், உடலியல், மன இயல், ஆய்வறிவும், உலகனுபவமும் கொண்டவனே சிறந்த நாடகாசிரியன். வெறும் கற்பனைச் சித்தரமான கதையைத் தொகுத்து விடுபவர் நல்ல நாடகாசிரியராகார்.

இதேபோல் இயற்கைக்கு ஒவ்வாததும், வாழ்க்கையில் கைக்கொண்டு நடக்கவியலாததுமான கற்பனைத் துறையில் நடிப்பவனும் சிறந்த நடிகனாகான். அத்தகையோனை “வெறும் வெறிக் கூத்தன்” என்றுதான் கூறவேண்டும். நகைச்சுவை நடிப்புக்கூட நல்வாழ்க்கைக் கருத்துக்களை கொண்டிருத்தல் அவசியம்.

நாடகாசிரியர்-நாடகம், நடிகர் ஆகியோர் பணி, நாட்டை- நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதே. அவ்வழி இன்பமும், சுவையும், கவர்ச்சியும், அறிவூட்டமும் கொண்டிருத்தல் இன்றியமையாதது.
காலத்திற்கேற்ற முறையில், கற்பனையைப் பாய்ச்சி, உருவமவைப்பவனே உண்மைக் கலைஞன். கலை மனித சமூக வாழ்க்கையின் பிரதிபிம“பம். கண்ணாடி, சிருஷ்டியின் நன்னோக்கத்தை அறிந்து, நல்வழிப்படுதலும்-பிறரை நல்வழி செலுத்துதலும்தான் மக்களின் மாட்சி மிக்க அறிவு கலை-கலைஞன், நீதிபதி ஆகியவர்களின் நோக்கமும் பணியும் இதுவேயாகும்.

நயனவழி உள்ளம்பேசக் கருத்தினைக் கணித்துமே
நயமொழி உடலுறுப் பனைத்தும் காட்டிட
பயனுறு பாங்கின் வாழ்வு தெளிவுறப் பாமரர்க்கும்
இயலிசைக் கூத்தணியில் அளிப்பது நல் நாடகமே.

-பி.வி.ஆர்.
-முதல் பதிப்பு: 1951
வெளியீடு குறள் வண்ணப் பதிப்பகம், சென்னை-2